Friday 15 February 2013

பிளவுபட்ட பூமியில் பெருமூச்சோடு விவசாயி !

கொட்டும் மழையில்...

குளிக்கிறது அருவி
ஆடை அவிழ்க்கிறது காற்று
நிர்வாணமாகிறது வானம்
சிரிக்கிறது செவ்வந்திப்பூக்கள்

குடிசைக்குள் மழை
குடையானது பாத்திரங்கள்

மழலை மழைநீர்
நடை பழகுகிறது நடுவீதியில்

குயிலின் சந்ததிக்கு
கரைந்துகொண்டே
காவல் காக்கிறது காகம்

தெருக்கோடி முனையில்
குறுகி நிற்கிறது ஒற்றை ஆடு
மடியை முட்டிக்குடிக்கிறது
வெள்ளைக் குட்டி

குஞ்சுகள் தஞ்சமடைகிறது
கோழியின் இறகிற்குள்
குளிர்காய்கிறது
தாயின் சூட்டின் மேல்

வாய் திறந்து காத்திருந்த வயல்கள்
தீர்த்துக்கொள்கிறது தாகத்தை

மகிழ்ச்சியின் உச்சத்தில்
எழுந்து நிற்கிறது
எள் கதிர்கள்

மழை பெய்து ஓய்ந்த நேரம்
தனக்கான மெல்லிசையை
ஆரம்பிக்கிறது
கூரையில் இருந்து வடியும் நீர்

வெள்ளைக்கார மேகம்
ஆக்கிரமித்தது கொண்டது
ஆகாயத்தோடு கைகோர்த்த
அரவமற்ற மலையை

நிர்வாண வானத்திற்கு
நெய்தல் நடத்தியது சூரியன்
அரைகுறை ஆடையானது
வானவில்

நிலையில்லா ஆடை
நீர்த்துப்போனது சிலநொடியில்

காயம்பட்ட கதிரவன்
விழிகளை மூடி
விடைகொடுத்தான்
காரிருள் வந்து
கைகொடுத்தான்

கண்முன் நடந்தது கனவா - என
கண்ணீரோடு பார்த்துக்கொண்டு
பிளவுபட்ட பூமியில்
பெருமூச்சோடு விவசாயி !

அன்புடன்,
அகல்



8 comments:

  1. இந்த நிலை மாற வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தனபாலன்... ஏழைகளை இயற்கையும் ஏமாற்றாமல் இருந்தால் நலம்... வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் !

      Delete
  2. இயற்கை கை கொடுத்தால் விவசாயி வாழ்வும் சிறக்கும்.

    கடன்தொல்லையால் விவசாயி மரணம் என்ற செய்திகள்தான் வருகின்றன :((
    அரசாங்கங்களும் உதவிசெய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியே அரசாங்கம் உதவி செய்தாலும் அது முழுவதுமாக விவசாயிகளைச் சேர்வதில்லை.. கருத்திற்கு நன்றிகள் மாதேவி..

      Delete
  3. அழகிய வர்ணணைகள்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ச்சியான கருத்திற்கு மிக்க நன்றி தல...

      Delete
  4. விவசாயிகளுக்கு என்று ஒரு விடியல் எப்போது வரும் என்று தெரியவில்லை...

    கவிதை கணத்தோடு நெருடவைக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. மிகம்பெரும் அரசியல்வாதி முதல் அடிமட்ட சாதாரண அரசு ஊழியர்கள் வரை விவசாயிகளுக்கு செய்யும் கொடுமைகளை களைய வேண்டும்.. கருத்திற்கு நன்றிகள் நண்பரே..

      Delete