Thursday 9 April 2015

20 கூலிகளின் கொலை

மரம் வெட்டுதல் என்பது தொழிலா ?

ஆம், கிராமத்து கூலித் தொழிலாளிகளைப் பொருத்தவரை மரம் வெட்டுவதென்பது ஒரு தொழில்தான். ஆனால் படித்த, நடுத்தர, மேல்தட்டு நகரவாசிகள் நினைப்பதுபோல அது சந்தனமரம், செம்மரம் வெட்டிக் கடத்துவதல்ல. உசிலை மரம், வேப்பமரம், புளியமரம் போன்றவற்றை விறகுக்காக வெட்டும் தொழில். இது தோட்டத்தில் பயிர்களுக்கு களை பறிக்க செல்வதுபோன்று அன்றாடம் நடக்கும் ஒரு தொழில். கிராமத்து பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு இது நன்கு தெரியும்.
கொல்லப்பட்டவர்கள் கடத்தல்காரர்களா ?

இல்லை. கொல்லப்பட்டவர்கள் கூலித் தொழிலாளிகள். ஒரு மாநிலம் விட்டு மற்றொரு மாநிலத்திற்கு பிழைப்பிற்காக சென்றவர்கள். 200 ரூபாய் கூலி சொந்த ஊரில் கிடைகிறது. ஆனால் 400 ரூபாய் பக்கத்து மாநிலத்தில் கிடைக்கிறதென்றால் தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள அந்த வேலையைத் தேடித் கூலிக்குப் போவதென்பது இயல்பு. இதை பேராசை என்று ஒருசாரர் சொல்வார்களேயானால், நல்ல சம்பளத்திற்கு வெளிமாநிலத்திற்கு வேலைக்குப்போகும் படித்த பட்டதாரிகளும் பேராசைக்காரர்கள் தானே ?

தமிழ்நாட்டின் பானிபூரி விற்க வடநாட்டில் இருந்து எதற்கு வருகிறான் ? அங்கு அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அங்குள்ளோர் யாரும் பானிபூரி சாப்பிடுவதில்லை என்று அர்த்தமல்ல. இங்கு விற்பதில் அவனுக்கு சில நன்மைகள் இருக்கிறது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம் என்று அவன் நினைத்திருக்கலாம். அதை தவறு என்று யாரும் சொல்ல முடியாது.

வெட்டுவது செம்மரம், அது சட்டப்படிக் குற்றம் என்பதையெல்லாம் தெரியாதவர்கள், செம்மரங்களின் சர்வதேச மதிப்பு என்னவென்று தெரியாத அப்பாவிகளைத்தான் இந்த கடத்தலுக்குப் பின்னிருக்கும் பண முதலைகள் பயன்படுத்தி இருப்பார்கள். அனைத்து விவரமும் தெரிந்தவர்களை பணியமர்த்த அவர்கள் என்ன முட்டாள்களா ? உண்மையில் யோசித்திபோருங்கள், ஒரு டன் செம்மரம், சர்வதேசச் சந்தையில் ஒரு கோடியைக்கூட எட்டும் என்பது, படித்த எத்தனை பேருக்கு இதற்கு முன்பே தெரிந்திருக்கும் ?

மரம் வெட்டி இயற்கை வளத்தை அழிப்பதை நியாயப் படுத்தவில்லை. ஆனால், மரம் என்பது இயற்கை வளம், அதைப் பாதுகாப்பது அவசியம். மழைவர மரம் காரணம், அது நமது வாழ்வாதாரம் என்றெல்லாம் 200 ரூபாய் கூலிக்குபோகும், கல்வியறிவு கிடைக்கப்பெறாத, அதைப்பற்றி யோசிக்க முடியாத நிலையில், அன்றாட உணவிற்காக போராடும் எளிய மனிதர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஆக, அவர்களின் வறுமையும் அறியாமையும் மட்டுமே இங்கே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அவ்வளவே.
யார்தான் இதற்குக் காரணம் ?

வெளிமாநில ஆட்களை அழைத்து வந்து, ஒரு கொலை செய்வதில் அந்த கொலை செய்யும் கும்பலுக்கு என்னென்ன நன்மை இருக்கிறதோ, அதே போன்ற நன்மைகளுக்கத்தான் விவரம் தெரியாத, மொழி தெரியாத, வெளியாட்களை இறக்குமதி செய்து பணியமர்துகிறார்கள். இதே வேலையைச் செய்ய உள்ளூர்க்காரனை பயன்படுத்தினால் இந்த கும்பல் எளிதாகச் சிக்கும் என்று அவர்களுக்குத் தெரியாமலா போயிருக்கும் ? அதோடு 20 பேரை சுட்ட ஒரு படையால், ஒருவனைகூடவா உயிருடம் பிடிக்க முடியவில்லை ? இந்த கடத்தலின் பின் இருப்பவர்களை அடையாளம் காண முடியவில்லை ?

சுடப்பட்ட இந்த கூலித் தொழிலாளிகளா சர்வதேச சந்தையில் செம்மரங்களை விலைபேசி விற்கிறார்கள் ? ஆலமரத்தின் ஆணிவேரை விட்டுவிட்டு அதன் விழுதை வெட்டுவதால் என்ன பயன் ? இதற்குப் பின், மிகப்பெரும் ஆள் பலம், அரசியல் பலம் இருக்கிறது. அந்த முதலைகளை விட்டுவிட்டு இந்த கூலிகளைக் கொன்றது சரி என்று பேசுபவர்கள் அடிப்படை புரியாதவர்கள் என்றே பொருள் கொள்ளவேண்டும். ஒரு கூலியைச் சுட்டுவிட்டால் இன்னொரு கூலி வராமல் போகமாட்டான். செம்மரம் வெட்டியதாகச் சொல்லி, 20 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியைக் கூட அறியாத கடைக்கோடி இந்திய குடிகள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களை இந்த மாபியா கும்பல் மீண்டும் பணியமர்த்தும். அவர்களின் வறுமையை மீண்டும் பயன்படுத்தும்.

இங்கு ஏதோ ஒரு அரசியல் அழுத்தத்திற்காக, ஒரு சாராரை திருப்திப் படுத்துவதற்காக, ஒரு படுகொலை அரங்கேற்றப் பட்டிருக்கிறது, அப்பாவிகள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இதைப் புரிந்து கொள்ளாமல், கூலிகளின்மீது பழிசுமத்துவதில் குறியாகத் திரியும் ஒரு குறிப்பிட்டோரை நினைத்து, வருத்தப்பட மட்டுமே முடிகிறது. இதன் பின்னணியில் இருக்கும் பெரு முதலாளிகளைப் பற்றி இவர்களால் பேச முடியாதபோதே இவர்களின் நோக்கம் என்ன என்பது புரிந்துவிடும். இந்த அப்பாவிகளின் கொலைகளில்கூட, மனிதாபிமானமற்ற முறையில், சில மதவாதிகள் மதத்தைக் கொண்டு திணிக்கிறார்கள் என்பது உச்சகட்ட வேதனை !

அகல்
10.4.2015

Friday 28 November 2014

வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன்.

நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்கள் கழித்து ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியோடு வலைப்பூ பக்கம் வந்துள்ளேன்.

"நான் அப்பாவானேன் நாங்கள் பெற்றோரானோம்"

ஆம், நவம்பர் 20 தேதியன்று எங்களுக்கு அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் குட்டி "வெண்பா" பிறந்திருக்கிறாள். இந்தக் குட்டிக் கால்களுக்கு நான் அப்பாவாகிவிட்டேன் (இது வெண்பாவின் புகைப்படம் தான்) இந்த செய்தியை முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதையொட்டி எனக்கும் என் நண்பனுக்கும் இடையே நடந்த ஒரு உரையாடலை இந்த மகிழ்ச்சியான செய்தியோடு உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு.

வாழ்த்துக்களோடு ஆரம்பித்த உரையாடலின் ஒரு பகுதி மட்டும் இங்கே.

நண்பன்: முகநூல் பதிவைப் பார்த்தேன். இரண்டு விடயங்களைக் கவனித்தேன். அதில் ஒன்று, வெண்பா எந்தவித சாதிய, மத அடையாளங்களின்றி வளர்வாள் என்பது. அதன் பொருள் என்ன ?

நான்: எந்தவித சாதிய அடையாளங்களும் இல்லாமல் வளர்வாள். மனதளவிலும், அவளது பிறப்பு, மற்றும் பள்ளி கல்லூரி சான்றிதல்கள் என எந்த ஒரு அரசு சான்றிதல்களிலும் சாதியோ, மதமோ குறிப்பிடப்பட மாட்டது.

நண்பன்: அதனால் அவளது எதிர்காலம் பாதிக்கப்படாதா ? நான் சொல்வது இட ஒதுக்கீட்டைப் பற்றி.

நான்: சுயநலமாக, குறுகிய கால பலனாகப்பார்த்தால் பாதிப்பு இருக்கலாம். ஆனால் இடஒதுக்கீடு என்ற ஒன்றை காலப்போக்கில் ஒழித்து, அனைவரும் சமம் என்ற ஒரு நிலையை சமுதாயத்தில் உருவாக்கவேண்டுமானால் இதுபோன்ற முன்னெடுப்புகள் இப்போதிருந்தே தேவைப்படுகிறது.

நண்பன்: கடவுள் நம்பிக்கையையும் மதத்தையும் பிரிக்கமுடியாது. அப்படி இருக்க, நீ மதத்தை மறைத்துவிட்டால் வெண்பா எந்தக் கடவுளை வழிபடுவாள் ?

நான்: நம்பிக்கையின்மையால் நான் எந்தக் கடவுளையும் வழிபடுவதில்லை. ஒருவேளை அவள் கடவுள் நம்பிக்கையோடு வளர்ந்துவிட்டால், அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்காதவாறு சிவன், ஏசு, அல்லா, புத்தர் என்று அவள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் வழிபடலாம். அது அவளது தனிப்பட்ட உரிமை.

நண்பன்: வாழ்த்துக்கள். எனது வட்டாரத்தில் எனக்குத் தெரிந்து சான்றிதழ்கள் உட்பட சாதியப் புறக்கணிப்பை உன் மகளுக்கு நீ மட்டும்தான் செய்திருக்கிறாய்.

நான்: இருக்கலாம் ஆனால் இது புதிதல்ல. பெரியார் வழிவந்தோர் பல வருடங்களாகச் செய்து கொண்டு வரும் காரியம் தான் இது. அதை இலகுவாக மற்றோர் அறியும்படி செய்ய அப்போது அவர்களுக்கு சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் கிடைக்கவில்லை. அதனால் தெரியாமல் போயிருக்கும்.

நண்பன்: இன்றைய படித்த இளைய தலைமுறையினர் சாதியை எதிர்க்கும் மனப்பான்மை கொண்டவர்களாகத்தானே இருக்கிறார்கள்.

நான்: ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து என்றாலும், சாதிய எதிர்ப்புக்கும் சாதிய ஒழிப்புக்கும் வித்தியாசம் உண்டு. சாதிய எதிர்ப்பு என்பது சாதிய ஒழிப்பாக மாறாதவரை, இந்த கட்டமைப்பு மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் குடித்துக் கொண்டேதான் இருக்கும். அதனால் சாதிய ஒழிப்பு என்பது மிக முக்கியம்.

நண்பன்: பெருவாரியாக இல்லாவிட்டாலும், கடந்த சில தலைமுறைகளாக கலப்புத் திருமணங்கள் நடந்து கொண்டுதானே இருக்கிறது ?

நான்: உண்மைதான். ஆனால் கலப்புத் திருமணங்களின் மூலம் சாதிகள் ஒழிக்கப்படுவதில்லை என்பது என் கருத்து. காரணம், குழந்தை பிறந்தவுடன் அம்மாவின் சாதி அடையாளங்கள் புறக்கணிக்கப்பட்டாலும் அது அப்பாவின் சாதிய அடையாளங்களோடே வளர்கிறது என்பதுதான் எதார்த்தம்.

நண்பன்: எனது இரண்டாவது கேள்வி. வெண்பா என்ற பெயர் சுத்த தமிழ் வார்த்தையாகத் தெரிகிறது. ஆனால் பெரும்பாலானோர் சமஸ்கிருத பெயர்களைத்தானே வைக்கிறார்கள். நீ ஏன் அதைச் செய்யவில்லை ?

நான்: எப்படிப் பெயர் வைக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். என்னைப் பொருத்தவரை, பசியாற தாராளமாக தாய்ப்பால் கிடைக்கும்போது, எனக்குப் புட்டிப்பால் வேண்டும் என்று தோன்றவில்லை.

நண்பன்: ஆனால் சம்ஸ்கிருத வார்த்தைகளின் உச்சரிப்பு அழகாக இருக்கிறதே.

நான்: இதுவும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட எண்ணம் தான். ஆனால் நீ சொல்வதுபோல் பெரும்பாலானோருக்கு அது இயற்கையாகவே அழகாகத் தெரியவில்லை மாறாக அழகாகத் தெரிய வைத்தார்கள். அதன் பின் மிகப்பெரும் மொழியரசியல் இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், சில நூறு ஆண்டு வரலாற்றை ஓரளவிற்காவது புரட்ட வேண்டும்.

நண்பன்: சாதிய ஒழிப்பைப் பற்றி நீ இவ்வளவு பேசினாலும், நீயும் உனது சாதியைச் சார்ந்த பெண்ணைத்தானே திருமணம் செய்துகொண்டாய்.

நான்: உனக்கு யார் அப்படிச் சொன்னது ?

அகல்
28.11.2014 

Sunday 21 September 2014

காதலறிந்த கடலலை

கடற்கரை
மணலில்

உன்னை
விருப்புகிறேன்
என்று எழுதுகிறேன்
நான்

உன்னை
வெறுக்கிறேன்
என்று எழுதுகிறாய்
நீ

கணநேர
மௌனத்திற்குப்
பிறகு

நீ எழுதியதைச்
சட்டென்று
அழித்துவிட்டுச்
செல்கிறது
கடலலை !


- அகல் 

சிறை

அந்திவானம்
இளம் தென்றல்
பூக்கள்
பறவைகள்
பட்டாம் பூச்சிகள்
மேகம்
மழை
நிலவு
நட்சத்திரங்கள்
மழலையின் சிரிப்பு
பருவப்பெண்கள்
யாவரும்

காலம் காலமாக
சிறைபட்டுக்
கிடக்கிறார்கள்
கவிஞர்களின்
பேனா நுனியில் !


 - அகல்

பொய்காரன்

எனது
ரயில் பயணத்தில்

அந்த ரயிலையும்
உன் நினைவுகளையும்
அன்றி
யாரையும்
நான் துணைக்கு
அழைத்து வரவில்லை
என்று சொல்லும்
என்னைப் பார்த்து

நீ ஒரு
உலகமாக
பொய்காரன்
என்கிறது

அந்த
ஜன்னல் வழி
இடைவெளியில்
மடிவிரித்துத்
தாலாட்டிய நிலவு !


- அகல்