Friday 28 November 2014

வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன்.

நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்கள் கழித்து ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியோடு வலைப்பூ பக்கம் வந்துள்ளேன்.

"நான் அப்பாவானேன் நாங்கள் பெற்றோரானோம்"

ஆம், நவம்பர் 20 தேதியன்று எங்களுக்கு அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் குட்டி "வெண்பா" பிறந்திருக்கிறாள். இந்தக் குட்டிக் கால்களுக்கு நான் அப்பாவாகிவிட்டேன் (இது வெண்பாவின் புகைப்படம் தான்) இந்த செய்தியை முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதையொட்டி எனக்கும் என் நண்பனுக்கும் இடையே நடந்த ஒரு உரையாடலை இந்த மகிழ்ச்சியான செய்தியோடு உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு.

வாழ்த்துக்களோடு ஆரம்பித்த உரையாடலின் ஒரு பகுதி மட்டும் இங்கே.

நண்பன்: முகநூல் பதிவைப் பார்த்தேன். இரண்டு விடயங்களைக் கவனித்தேன். அதில் ஒன்று, வெண்பா எந்தவித சாதிய, மத அடையாளங்களின்றி வளர்வாள் என்பது. அதன் பொருள் என்ன ?

நான்: எந்தவித சாதிய அடையாளங்களும் இல்லாமல் வளர்வாள். மனதளவிலும், அவளது பிறப்பு, மற்றும் பள்ளி கல்லூரி சான்றிதல்கள் என எந்த ஒரு அரசு சான்றிதல்களிலும் சாதியோ, மதமோ குறிப்பிடப்பட மாட்டது.

நண்பன்: அதனால் அவளது எதிர்காலம் பாதிக்கப்படாதா ? நான் சொல்வது இட ஒதுக்கீட்டைப் பற்றி.

நான்: சுயநலமாக, குறுகிய கால பலனாகப்பார்த்தால் பாதிப்பு இருக்கலாம். ஆனால் இடஒதுக்கீடு என்ற ஒன்றை காலப்போக்கில் ஒழித்து, அனைவரும் சமம் என்ற ஒரு நிலையை சமுதாயத்தில் உருவாக்கவேண்டுமானால் இதுபோன்ற முன்னெடுப்புகள் இப்போதிருந்தே தேவைப்படுகிறது.

நண்பன்: கடவுள் நம்பிக்கையையும் மதத்தையும் பிரிக்கமுடியாது. அப்படி இருக்க, நீ மதத்தை மறைத்துவிட்டால் வெண்பா எந்தக் கடவுளை வழிபடுவாள் ?

நான்: நம்பிக்கையின்மையால் நான் எந்தக் கடவுளையும் வழிபடுவதில்லை. ஒருவேளை அவள் கடவுள் நம்பிக்கையோடு வளர்ந்துவிட்டால், அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்காதவாறு சிவன், ஏசு, அல்லா, புத்தர் என்று அவள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் வழிபடலாம். அது அவளது தனிப்பட்ட உரிமை.

நண்பன்: வாழ்த்துக்கள். எனது வட்டாரத்தில் எனக்குத் தெரிந்து சான்றிதழ்கள் உட்பட சாதியப் புறக்கணிப்பை உன் மகளுக்கு நீ மட்டும்தான் செய்திருக்கிறாய்.

நான்: இருக்கலாம் ஆனால் இது புதிதல்ல. பெரியார் வழிவந்தோர் பல வருடங்களாகச் செய்து கொண்டு வரும் காரியம் தான் இது. அதை இலகுவாக மற்றோர் அறியும்படி செய்ய அப்போது அவர்களுக்கு சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் கிடைக்கவில்லை. அதனால் தெரியாமல் போயிருக்கும்.

நண்பன்: இன்றைய படித்த இளைய தலைமுறையினர் சாதியை எதிர்க்கும் மனப்பான்மை கொண்டவர்களாகத்தானே இருக்கிறார்கள்.

நான்: ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து என்றாலும், சாதிய எதிர்ப்புக்கும் சாதிய ஒழிப்புக்கும் வித்தியாசம் உண்டு. சாதிய எதிர்ப்பு என்பது சாதிய ஒழிப்பாக மாறாதவரை, இந்த கட்டமைப்பு மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் குடித்துக் கொண்டேதான் இருக்கும். அதனால் சாதிய ஒழிப்பு என்பது மிக முக்கியம்.

நண்பன்: பெருவாரியாக இல்லாவிட்டாலும், கடந்த சில தலைமுறைகளாக கலப்புத் திருமணங்கள் நடந்து கொண்டுதானே இருக்கிறது ?

நான்: உண்மைதான். ஆனால் கலப்புத் திருமணங்களின் மூலம் சாதிகள் ஒழிக்கப்படுவதில்லை என்பது என் கருத்து. காரணம், குழந்தை பிறந்தவுடன் அம்மாவின் சாதி அடையாளங்கள் புறக்கணிக்கப்பட்டாலும் அது அப்பாவின் சாதிய அடையாளங்களோடே வளர்கிறது என்பதுதான் எதார்த்தம்.

நண்பன்: எனது இரண்டாவது கேள்வி. வெண்பா என்ற பெயர் சுத்த தமிழ் வார்த்தையாகத் தெரிகிறது. ஆனால் பெரும்பாலானோர் சமஸ்கிருத பெயர்களைத்தானே வைக்கிறார்கள். நீ ஏன் அதைச் செய்யவில்லை ?

நான்: எப்படிப் பெயர் வைக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். என்னைப் பொருத்தவரை, பசியாற தாராளமாக தாய்ப்பால் கிடைக்கும்போது, எனக்குப் புட்டிப்பால் வேண்டும் என்று தோன்றவில்லை.

நண்பன்: ஆனால் சம்ஸ்கிருத வார்த்தைகளின் உச்சரிப்பு அழகாக இருக்கிறதே.

நான்: இதுவும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட எண்ணம் தான். ஆனால் நீ சொல்வதுபோல் பெரும்பாலானோருக்கு அது இயற்கையாகவே அழகாகத் தெரியவில்லை மாறாக அழகாகத் தெரிய வைத்தார்கள். அதன் பின் மிகப்பெரும் மொழியரசியல் இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், சில நூறு ஆண்டு வரலாற்றை ஓரளவிற்காவது புரட்ட வேண்டும்.

நண்பன்: சாதிய ஒழிப்பைப் பற்றி நீ இவ்வளவு பேசினாலும், நீயும் உனது சாதியைச் சார்ந்த பெண்ணைத்தானே திருமணம் செய்துகொண்டாய்.

நான்: உனக்கு யார் அப்படிச் சொன்னது ?

அகல்
28.11.2014 

21 comments:

  1. வெண்பாவிற்கும் வெண்பாவின் பெற்றோக்கும் வாழ்த்துகள்!
    த ம 1

    ReplyDelete
  2. வெண்பாவுக்கும் உங்கள் உயர்ந்த கொள்கைக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு மிக்க நன்றிகள் தோழர் :)

      Delete
  3. வெண்பா என்னும் மிகமிக அழகான பொருத்தமான பெயரைப் பார்த்துக் கவரப்பட்டு, பின்தொடர்வோரில் இணைந்தபின் வந்து உங்கள் பதிவுகளை முதன்முறையாகப் பார்த்தால்.... பின்பற்றுவதற்கான பல செய்திகளை நீங்கள் பதிவிட்டிருப்பது கண்டு மிகமிகவும் மகிழ்ந்தேன் நண்பரே! வெண்பாவிற்கு வாழ்த்துகள், உங்களுக்கு வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி எழுதிக்கொண்டே இருங்கள்... அதற்குத்தான் இந்த த.ம.(4)

      Delete
    2. உங்களது வாழ்த்திற்கு மிக்க நன்றிகள் ஐயா... கண்டிப்பாக தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் :)...

      Delete
  4. வாழ்த்துக்கள் நண்பரே! உங்கள் கொள்கைகள் சிறக்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் தோழர் ...

      Delete
  5. வணக்கம்
    வெண்மதி பிறந்திட்டால்
    விண் மேகம் துள்ளி விளையாட
    கண் அசைக்கும் கால் அசைக்கும்
    சின்ன விளையாட்டு
    உள்ளமது உவகை கொள்ள
    தங்களது கொள்கைகள் சிறக்க
    எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களது அன்பான வாழ்த்திற்கு நன்றிகள் பல தோழர்..

      Delete
  6. குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. குட்டியின் சார்பாக நன்றிகள் :)

      Delete
  7. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. புதிய தோழருக்கு இனிய வரவேற்பு வாழ்த்துக்கள் ... உங்கள் எதிர்கால முன்னெடுத்தலுக்கும் வாழ்த்துக்கள் ... இட ஒதுக்கீடு பெறுபவன்தான் இத்தனை எளிதாக சாதியை குறிப்பிட தவிர்த்து முடிவெடுக்கிறான். சாதி பார்ப்பதில்லை என்று சொல்லும் மேல் சாதியினர் எவரும் எனக்கு தெரிந்து சாதியை குறிப்பிடாமல் என் குழ்ந்தையை பள்ளியில் சேர்ப்பேன் என சொல்வதில்லை ஏன்?

    கமலையும் உதாரணத்துக்கு சொல்லிட வேண்டாம் ..அவர் குழந்தை பள்ளி போகாமலே கூட வாழ்ந்து விட வசதி உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றிகள் தோழர்... மேல் சாதியினர் ஏன் அவ்வாறு முடிவெடுப்பதில்லை என்ற கேள்விக்கு உண்மையில் என்னிடம் சரியான பதில் கிடையாது. அதே போல் மேல் வகுப்பைச் சார்ந்தவர்கள் மட்டும்தான் இந்த முடிவை எடுப்பதில்லை என்றும் கூற முடியாது... ஒவ்வொருவரின் சாதிப் பற்று/வெறி, சமுதாய அக்கறை என பல காரணங்கள் இதில் கலந்திருக்கிறது. அவரவர் அனுபவங்கள், பகுத்தறிவு சிந்தனை இவைகளைப் பொருத்தும் இந்த முடிவுகள் வேறுபடலாம் என்பது எனது கருத்து.

      Delete
  9. செந்தமிழ் பெயருக்கும் , சிறந்த கொள்கைக்கும் என் வாழ்த்துக்கள் நண்பரே ....

    'வெண்பா' என்ற பெயர் பற்றி தேடும் பொழுது கிடைத்து உங்கள் அறிய வலைப்பூ !!!

    மிகவும் அழகான மற்றும் அருமையாக பதிவு.

    என் குட்டி இளவரசிக்கும் இதே பெயர் தான் ! அதே கொள்கை தான் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தோழர்... இந்த அழகான பெயரை நீங்களும் வைப்பதில் மகிழ்ச்சி... உங்கள் இளவரசி எல்லா வளத்துடன் வாழ இயற்கை ஆசிர்வதிக்கட்டும்...

      Delete
    2. மிக்க நன்றி தோழரே

      Delete
  10. மிக்க மகிழ்ச்சி அன்பரே!! வெண்பாவிற்கு எனது மிகவும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரவிருக்கும் மூன்றாவது பிறந்தநாளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
    மிகவும் அருமையான பதிவு தோழரே!
    எனக்கும் பெண் குழந்தை தான் பிறந்துள்ளது.
    நானும் வெண்பா என்ற பெயரையே தேர்ந்தெடுத்து உள்ளேன்.
    சாதி மதம் தவிர்ப்பது பற்றிய உங்கள் முடிவை நானும் பின்பற்ற எண்ணுகிறேன்.
    ஆனால் அரசு சான்றிதழ் அல்லது அடையாள அட்டைகள் பெற பெற்றோரின் தகவல்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் சாதி மதம் புறக்கணிப்பது எப்படி சாத்தியம்? உங்கள் வழிகாட்டுதல் நலம் பயக்கும். நான் கடவுள் நம்பிக்கை உடையவன் தான், ஆனால் கடவுள்கள் நம்பிக்கை கிடையாது :-D
    மிக்க நன்றி.

    ReplyDelete