Monday 25 March 2013

ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும்


ஜோடிப் புறாக்களும் சுட்டிப்பையனுக்குமான காதல் ...



வியாழக்கிழமை மாலை நான்கு மணி...

அது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. ஆசிரியர் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். முகிலன் தமிழ் புத்தகத்தில் உள்ள ஒரு புறாவின் படத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். விளையாட்டு மைதானத்தின் மையத்தில் கட்டப்பட்ட மணியை போட்டி போட்டுக்கொண்டு எட்டாம் வகுப்பு சிறுவர்கள் கற்களைக் கொண்டு அடித்தனர். ஆசிரியர் பாடத்தை நிறுத்தும் முன், முகிலன் புத்தகத்தை பைக்குள் திணித்தான்.

மாணவர்கள் அனைவரும் மைதானத்தில் ஒன்று கூடி பல வரிசைகளாக நின்றனர். ஆசிரியர்களும் அருகில் கூடினர். பள்ளியின் வழக்கப்படி, தேசியகீதம் பாடப்பட்டது. தேசிய கீதத்தை பாடாமல் முகிலன் ஒருநாளும் அமைதியாக இருந்ததில்லை. இன்று அவன் உதடுகள் அசையவில்லை, மற்றவர் பாடுவதும் அவனுக்கு கேட்டதாகத் தெரியவில்லை. அவனது ஒட்டு மொத்த எண்ணமும் அந்த புறாக்கள் மீது சிறகடித்துக் கொண்டிருந்தது. பள்ளி களைந்து மாணவர்கள் வீடு திரும்பினர்.

முகிலன் வீட்டிற்கும் பள்ளிக்குமுள்ள தொலைவு சற்று அதிகம் தான். எப்போதும் பள்ளிச் சிறுவர்களோடு விளையாடிக் கொண்டே குறுக்குப் பாதையில் வீட்டிற்குச் செல்வது வழக்கம். இன்று முகிலனுக்கு விளையாட்டில் கவனம் இல்லை. சுறுசுறுப்பாக மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் முகிலனின் முகத்தில், எதிர் வெயில் எதிர்ப்பைக் காட்டியது. முகிலனின் எண்ணத்தில் இருக்கும் நாளைய அம்மாச்சி ஊர் பாம்பலம்மன் கோவில் திருவிழாவும், கோவில் கோபுரத்தில் தனக்காக காத்திருக்கும் ஜோடி புறாக்களும் அந்த வெயிலை இலகுவாக சமாளித்தது.

தனது மின்னல் வேக நடையாலும் அவ்வப்போதைய ஓட்டத்தாலும், மிகவிரைவில் வீட்டை அடைந்தான் முகிலன். "அம்மா, அம்மாச்சி ஊருக்கு போலாமுல்ல ? " என்று தன உற்சாகக் குரலில் அம்மாவிடம் கேட்டான். அவனது பை இன்னும் தோளில் இருந்து இறக்கப்படவில்லை. "ஹ்ம்ம் போலம்யா" என்றாள் அம்மா. "சரி வா போலாம் " என்றான் முகிலன். "டேய் அண்ணா எங்கடா ? அவனும் வரட்டும் போலாம்" என்றாள் அம்மா. அவனக்கு அப்போதுதான் தனது அண்ணனையும் விட்டுவிடத் வேகமாக வந்தது புரிந்தது.

"சரி சரி, பாத்ரூம்குள்ள தண்ணியெல்லாம் ஊத்தி வச்சுருக்கேன், நீ போயி குளி " என்றாள் அம்மா. "மூஞ்சி கழுவிட்டு வரட்டாம்மா ?" என்றான் முகிலன். "ஏய் ஓதபடுவ" என்றாள் அம்மா. அரைகுறையாக தண்ணீர் ஊற்றி, சோப்பு போட்டு ஒருவழியாக குளித்து முடித்தான் முகிலன். ஊருக்குப் போக தேவையான பொருட்களை அம்மா ஆயத்தமாக வைத்திருந்ததை அவதானித்தான். சற்று நேரத்தில் வந்த முகிலனின் அண்ணனும் குளித்து தயாராகவே, மூவரும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர்.

முகிலன் தனது கையில் ஒரு மஞ்சள் பையை வைத்திருப்பதை பார்த்து அம்மா கேட்டாள், "எதுக்குடா முகில் அந்த பை ?". "சும்மாதாம்மா" என்றான் முகிலன், சிரித்துக்கொண்டே. பேருந்து வந்தது. முண்டியடித்துக் கொண்டு முன் வழியில் ஏறினான் முகிலன். இருக்கைகள் இருந்தும் அவனுக்கு உட்காரும் எண்ணமில்லை. டிக்கெட் டிக்கெட் என்று கண்டக்டர் கேட்டதும், அவங்கதான் என் அம்மா அங்கபோயி வாங்கிக்கங்க என்று கையைக் காட்டினான் முகிலன். சற்று நேரத்தில் பேருந்து நிற்குமிடம் வந்தது.

அடுத்த பேருந்திற்கு சற்று நேரம் காத்திருந்து, அவர்கள் முகிலனின் அம்மாச்சி வீட்டை நெருங்கினான். ஊர் முழுதும் சீரியல் விளக்குகள், ஒளிப்பெருகிகள், பரபரப்பாக இருக்கும் மக்கள் என பார்த்ததும் முகிலனின் உற்சாகம் உச்சத்தைத் தொட்டது. அம்மாச்சி ஊரில் மாமா, அத்தை, அம்மாச்சி என எல்லோருக்கும் முகிலன் செல்லப்பிள்ளை. அம்மாச்சி வீட்டை அடைந்ததும், அனைவரின் கண்ணும் முகிலன் மேல் பட்டது. ஒவ்வொருவரும் அன்பாக தழுவினர். ஆனால் முகிலன் கண்ணில் பல வண்ணங்களில் விளக்குகள் ஒளிரும் பாம்பலம்மன் கோவில் கோபுரம் மட்டுமே.

அன்று இரவு முழுதும் தூக்கம் இழந்து அடுத்தநாள் மாலை, அம்மாச்சி ஊர் நண்பன் சுப்பையாவை கண்டுபிடித்தான் முகிலன். சுப்பையா, முகிலன் இருவரும் ஒன்றாம், இரண்டாம் வகுப்பு இங்கே ஒன்றாகப் படித்தவர்கள். "டேய் சுப்பு, போன வட்டி மாதிரி இந்த வாட்டி ஏமாத்திர மாட்டியே ?" கேட்டான் முகிலன். "டேய் போனவாட்டி உனக்காக தான் புறா குஞ்சு பிடிக்க கோவில் கோபுரத்துக்கு போனேன். ஆனா அத கோவில் பூசாரி பாத்து என் அப்பட்ட சொன்னதால அடிவங்குனேன், அதனால இந்த வாட்டி எல்லாம் முடியாது என்றான் சுப்பு.

முகிலன் கெஞ்சத் தொடங்கினான். "ப்ளீஸ்
டா ப்ளீஸ் டா, எனக்கு ரெண்டே ரெண்டு புறா குஞ்சு மாட்டும் புடிச்சுதாடா, உனக்கு ராட்டினம் சுத்த நான் காசு தாரேன் என்றான்" முகிலன். கையில் ஒரு பைசாவும் இல்லாமல். சுப்பையா பாதி ஓகே சொன்னது போல் தெரிந்தது. எப்படியும் புறா வேண்டும் என்ற வெறியில், மாமா, அத்தை, அம்மாச்சியிடம் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் என்று திரட்டினான். இருவரும் ராட்டினம்சுற்றினர். ஐஸ் கிரீம், பஞ்சு மிட்டாய் என்று சுப்புவிற்கு செலவழித்தான் முகிலன்.


அன்று இரவு, கோவில் முன் கரகாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவில் சுற்றி வெளிச்சம். முகிலன் சுப்பையாவை அழைத்தான். "வாடா போயி புறா பிடிக்கலாம்". சுப்பு முழு தூக்கத்தில் இருந்தான். முகிலன் கோவிலைச் சுற்றினான். மாலைப் பொழுதில் கோவில் கோபுரத்தில் பறந்து திரிந்த புறாக்கள் அவன் மனதில். சுப்புவை நம்பி புண்ணியமில்லை என்று நினைத்துக் கொண்டு முகிலன் களத்தில் குதித்தான். கோவிலின் பின்புறம் சென்றான். ஒன்றை வேப்பமரம், கோவில் சுவற்றின் ஓரத்தில் கோபுரம் வரை படர்ந்திருந்தது.

மரத்தில் ஏற முயற்சித்தான் முகிலன். "யார்டா அது ?" என்ற குரல் கேட்டதும் பயந்து நடுங்கினான். பயத்தில், தானாக புறாக் குஞ்சை பிடிக்கும் திட்டத்தை கைவிட்டான். அடுத்தநாள் மாலை, கோவிலில் கூட்டம் குறைந்தது. சுப்புவுடன் வந்தான். கோவிலின் பின்புறம் இன்று விளக்கு எரியவில்லை. கோபுரத்தை இருள் சூழ்ந்திருந்தது. சுப்பு முன்னே ஏற பின்னாக முகிலனும் மஞ்சள் பையுடன் ஏறினான். இருவரும் கோவில் கோபுரத்தை அடைந்தனர். இவர்களைப் பார்த்து புறாக்கள் பறந்தன.

பயந்து பயந்து இருவரும் புறாக்குஞ்சை காரிருளில் தேடினார்கள். சற்று நேர தேடலுக்குப்பின், உடலின் அங்காங்கே முடி முளைத்த அழகான இரண்டு புறாக் குஞ்சுகளை நிர்வாண சிலைக்கு கீழே உள்ள பொந்தில் முகிலன் பார்த்தான். அவனுக்கு ஆச்சர்யம் கலந்த பரவசம். இதவரை இல்லாத சந்தோசம். புறக்குஞ்சுகளை பிடிக்க சுப்பு பொந்திற்குள் கையை நீட்டினான். "யாருடா கோபுரத்துமேல ?" என்று அதிகாரத்தோடு ஒரு குரல் கேட்டதும். கையை லபக்கென்று வெளியே எடுத்தான் சுப்பு. இருவருக்கும் கண்களில் கலவரம் நிறைந்த பயம்.

தொடரும் ...

கதையின் அடுத்த பாகம்  இங்கே http://kakkaisirakinile.blogspot.com/2013/04/blog-post.html

அன்புடன்,
அகல்

No comments:

Post a Comment