Tuesday, 30 October 2012

இந்திரலோகத்து அரசனும் அவன் இழந்த ஆண்மையும்

வணக்கம் நண்பர்களே... தலைப்பைப் பற்றி பார்ப்பதற்கு முன், அது உருவாவதற்கான காரணத்தைச் சுருக்கமாக பார்ப்போம்.

கட்டுரையைப்பற்றிய சிறிய முன்னுரை...

ஒவ்வொருவருக்கும் சில காரணங்களால் சில புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது சில நேரங்களில் சில காரணங்களால் தட்டிக் கழிக்கப்பட்டு தள்ளிப்போய்க் கொண்டிருக்கும். அப்படி நான் படிக்க நினைத்த சில புராண இலக்கியங்களில் ஒன்று ராமாயாணம். இதைப் படிக்க வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும், சிறுவயதில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டு என்னை மிகவும் கவர்ந்த ஜெயஹனுமான் என்ற நெடும் தொடருக்கு ஒரு முக்கியப் பங்குண்டு (அப்போது பார்த்ததென்னவோ ஹனுமான் ஆகாயத்தில் பறப்பதற்காகவும் அவர் போடும் சண்டைக் காட்சிகளுக்காகவும் மட்டுமே). ஏதோ சில காரணங்களால் நான் இந்த நூலைப் படிப்பது சற்று தள்ளியே போனாலும், சில வாரங்களுக்கு முன், அதைப் படிக்க ஆரம்பித்தேன். புராண காவியம் என்று சொல்லப்படும் இவற்றில் சில அதிர்ச்சி தகவலையும் தெரிந்து கொண்டேன். அவற்றில் ஒன்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மன்னர்களை அவ்வப்போது பெண்கள் மகிழ்விக்க, அனைத்து சுகங்களும் நிறைந்த அந்தப்புரம் அரண்மனையில் ஒரு பகுதியில் இருப்பது என்பது சாதாரண விடயம். யாவரும் அறிந்ததே. ஆனால் அரண்மனையே அந்தப்புரமாக வைத்திருந்தவன் இந்திரலோகத்தை ஆட்சி செய்த "இந்திரன்" என்ற மாமன்னன். இந்த மாமன்னைப் பற்றி ஆண்கள் அறிவார்களோ இல்லையோ பெண்கள் நான்றாகவே அறிவார்கள். நம்முடைய தலைப்பின் மையக்கருத்தும் ராமாயணத்தில் வரும் இந்த மன்னனைப் பற்றியே..

தலைப்பும் அது சொல்லும் கதையும்...

ராமாயணத்தில் ஆறு பாகங்களில் முதல் பாகம் "பால காண்டம்". அதில் மகரிஷி விசுவாமித்திரர் ஒருமுறை கோசல நாட்டின் மன்னன், ராமனின் தந்தை தசரதனைப் பார்க்கச் செல்கிறார். அவர் சென்றதின் நோக்கம், அரக்கர்களின் அரசன் ராவணன் அவர் செய்யும் முக்கியமான யாகத்தை தொடரவிடாமல் களைப்பதாகவும், அதனால் தவம் முடியும்வரை அதற்கு காவலாக மாவீரன் ராமனை அழைத்துச் செல்ல வேண்டும் என்கிறார். வயதை காரணம் காட்டி(அப்போது ராமன் 16 வயதே நிரம்பியவர்) முதலில் ராமனை அனுப்ப மறுக்கும் தசரதன் ரிஷியின் கோபத்தால் பின்பு ஒப்புக்கொள்கிறார். பிறகு ராமன், லக்குமணன் இருவரையும் அழைத்துச் செய்கிறார் ரிஷி. ராமன் லக்குமணன் காவல் காக்க விசுவாமித்திரரின் யாகமும் சிறப்பாக முடிகிறது.

பிறகு மிதிலையின் அரசன் சீதாவின் தந்தை ஜனகர், விசுவாமித்திரர் தலைமையில் ஒரு யாகம் நடத்துகிறார். அதில் கலந்துகொள்ள விசுவாமித்திரர் புறப்படுகிறார். மிதிலை மன்னன் அரண்மனையில் யாருமே அசைத்துப் பார்க்க கூட முடியாத சிவா தனுசு("வில்" - இதை வளைத்தே ராமன் பிறகு சீதா தேவியை மணப்பார்) இருப்பதை நன்கு அறிந்த அவர், அந்த அதிசயமான வில்லைக் காண்பிக்க ராமன், இலக்குமணனையும் அழைத்துச் செல்கிறார்.

வழியில் ராமனுக்கு ஏற்படும் பல சந்தேகங்களை பற்றி விளக்கம் தந்து கொண்டே செல்கிறார் விசுவாமித்திரர். அதே பயணத்தில் பாழடைந்த ஒரு ஆசிரமம் தென்படவே, அது பாழடைந்து கிடப்பதற்கான விளக்கம் கேட்கிறார் ராமர். அந்த கதையை இவ்வாறு விவரிக்கிறார் விசுவாமித்திரர்.

இந்திரனின் காம ஆசையும் அதன் பின்விளைவுகளும் ...

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கௌதமர் என்ற முனிவர் அந்த ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி பெயர் அகலிகை. அவள் கட்டுடல் மேனியுடன் நிலவாகக் காட்சிதரும் மிகச்சிறந்த அழகி. அவள்மேல் இந்திரனுக்கு மிகப்பெரும் இச்சை. அவளது அழகை அடையவேண்டும் என்பது அவனது ஆசை. அதன் விளைவாக, கௌதமர் தவம் செய்ய சென்ற நேரம் பார்த்து, கௌதமர் உருவத்தில் ஆசிரமத்தை அடைகிறான் இந்திரன். அகலிகையை கலவிக்கு அழைக்கிறான். அவன் இந்திரன் தான் என்பதை தன்னுள் அறிகிறாள் அகலிகை. இருந்தும்.. இந்திரனே தன் அழகில் மயங்கி வந்துள்ளான் என்று பெருமிதம் கொள்கிறாள். இது தான் செய்த பாக்கியம் என்று எண்ணி இந்திரனின் ஆசைக்கு மறுப்பேதும் சொல்லாமல் கூடி மகிழ்கிறாள். இந்திரனின் எண்ணமும் இதமாக ஈடேருகிறது.இந்திரன் தனது அந்தப்புர ஆசை அரங்கேறியபின் ஆசிரமத்தை விட்டுச் செல்கிறான். அதே நேரத்தில் அகலிகையின் கணவர் கெளதமரும் தவத்தை முடித்து கங்கையில் நீராடிவிட்டு வந்துவிடுகிறார். நடந்தது யாதென்று தனது சக்தியால் அறிந்த கௌதமர், அடே இந்திரா... நீ செய்யக்கூடாத மிகப்பெரும் தவறு செய்தாய் அதனால் நீ ஆண்மையை இழக்கக் கடவாய் என்று சாபமிடுகிறார். அகலிகையைப் பார்த்து நடத்தை தவறிய நீ, இனி யார் கண்ணிற்கும் தென்படாமல் சாம்பல் குவியலில் புரண்டு காற்றையே உணவாக கொண்டு கிடப்பாயாக. ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு கோசலநாட்டு இளவரசன் ராமன் இங்கு வருவான், அவனை வரவேற்று பூஜித்தால் உன் சாபம் நீங்கப்பெறும் என்று சாபமிடுகிறார். பின் தவம் செய்ய கௌதமர் இமயமலைக்குச் சென்றுவிடுகிறார்.

சாப நீக்கம் ...

ஆயிரம் ஆண்டுகள் கழித்து இப்போது ராமன் வருவதை மனக்கண்ணில் அறிந்த கௌதமர் இமயமலையிலிருந்து வருகிறார். ஆசிரமத்தில் ராமன் பாதம் பட்டதும் சபாம் நீங்கி அகலிகை மீண்டும் உருப்பெருகிறாள். அவளை கௌதமர் சேர்த்துக் கொள்கிறார். இப்படியாக நகர்கிறது இந்த காட்சி.

சில கேள்விகள் ...

புனித காவியம் என்று சொல்லப்படும் ராமாயணத்தின் இப்பகுதியில் இருந்து எனது மனதில் உதித்த விடைகள்அறியாத சில கேள்விகள் இங்கே.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற எண்ணத்தோடு வாழவேண்டும் என்று சொல்லும் ராமாயணத்தில், தசரதனுக்கு 60000 மனைவிகள் என்பது யாவரும் அறிவோம். எதற்கு இப்படி ஒரு இழிவான உதாரணம் என்று கேட்டால், அப்படி மற்றவர் வாழக்கூடாது என்பதைச் சொல்லவே இந்த உதாரணம் என்று சிலர் சொல்கிறார்கள்.

ராவணன்.. அடுத்தவர் மனைவியான சீதா தேவியை அபகரித்து, அவளை தன்னுடய தாக்கிக்கொள்ள ஆசைப்படுகிறானே என்று கேட்டால், அப்படியான எண்ணங்களுடன் எந்த ஒரு மானுடனும் வாழக்கூடாது. மீறியும் வாழ்ந்தால், அவன் சந்திக்கும் அழிவுகள் எப்படி இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட சொல்லப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள்.

சரி மேலே கூறி இரண்டு உதாரணங்களும் இப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதைச் சொல்வதாகவே வைத்துக் கொள்வோம். இந்திரன், முனிவரின் மனைவின் மேல் ஆசை கொள்வதும், அதற்கு அவளும் ஒத்துழைப்பதும் எதற்காக சொல்லப்பட்டது.? மேலே சொல்லப்பட்ட இரண்டு உதாரணங்கள் போதாதா..? (ஒரு பெண் எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதைச் சொல்வதற்காக கூறப்பட்ட உதாரணம் இது என்று சொல்வார்களோ..??).

இந்திரலோகத்து அரசன் என்று சொல்லும் ஒருவனைப் பற்றி எதற்கு இத்தனை கீழ்த்தரமான சித்தரிப்புக்களும் உதாரணங்களும்.?. அரசன் சில கடவுளும் இப்படியானவர்கள் என்று சொல்லிவிட்டு, குடிகள் மட்டும் படு கன்னியமாக வாழ வேண்டுமென புராணங்கள் கூறுவது சற்று சுயநலமாக சொல்லப்பட்டதாகவே தெரிகிறது.

இங்கு நான் எழுதியதைக் கவனித்தீர்களானால், ஆயிரம் ஆண்டுகள் கழித்து அந்த ஆசிரமத்திற்கு ராமன் வருவதை மனக்கண்ணால் உணரும் கௌதமர், அவர் மனைவியை அபகரித்து அவளோடு ஊடல் கொள்ளவரும் இந்திரனைப் பற்றி அறியாமல் போனது ஏன்..? அந்த நிகழ்வை அவர் தடுக்காதது ஏன்.?

இந்திரன் முதலாக கிருஷ்ணர் வரை பெண்கள் மேல் காம ஆசை அதிகம் கொண்டவர்களாகவே இவர்கள் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களை எவ்வாறு கடவுள் என்று ஏற்பது என்பது மிகவும் புரியாத ஒரு விடயம்.

மேலும், ராமாயணம் கற்பனைக் கதையாக இருக்கும் பட்சத்திலேயே இந்த முரண்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது உண்மைச் சம்பவமாக இருக்குமானால்,  கிருஷ்ணர், சிவன் போன்று பெண்கள் மேல் தீர ஆசை கொண்ட சித்தரிப்புகளை கடவுளாக ஏற்க, மனம் முற்றிலும் மறுக்கிறது.

உலகைப் படைத்தவன் ஒருவனே என்று சொல்லும் அதே வேளையில், இமயமலையில் இருந்து இலங்கைக்குள்ளாகவே கடவுள்கள் வளம்வருவதாக சித்தரிக்கப் பட்டிருப்பது சற்று விநோதமாக உள்ளது.

இப்படி முரண்பாடானா பல நிகழ்வுகள், கடவுள் இல்லை என்று சொல்வோருக்கு பயனாகவே விட்டுச் சென்றிருக்கிறது இந்த புராண இலக்கியங்கள்.

தெரிந்தால் சொல்லுங்கள் ...

எனது எண்ணங்களில் சில கேள்விகள் இருந்தாலும் உங்கள் மனதில் ஓடும் ஒரு கேள்வியை என்னால் உணர முடிகிறது. அகலிகை சாபம் நீங்கப்பெற்று முழு உருப்பெற்றாள். ஆனால் இந்திரன் என்ன ஆனான். அவனுக்கு ஆண்மை மறுபடியும் கிடைத்ததா இல்லையா.. என்பதுதானே .? அதை இந்த அடியேனும் அறியேன் அன்பர்களே. ராமாயணத்தில் எங்கேனும் குறிப்பிடப் பட்டிருந்தால் அதைப் பற்றின பதிவை எழுதுகிறேன். உங்களுக்கும் தெரிந்தால் சொல்லுங்கள்.

இந்த கட்டுரையைப்பற்றின உங்கள் கருத்துக்கள், மற்றும் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அவற்றையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

கொலைவெறி தாக்குதல் வேண்டாம் ...

ஒரு மதத்தை குறிவைத்தோ அதை பின்பற்றும் மக்களின் மத/கடவுள் நம்பிக்கையை குறிவைத்தோ இந்த கட்டுரை எழுதப்படவில்லை. இது முழுக்க முழுக்க சிந்தனையின் அடிப்படையில் தவறான சில உதாரணங்களைச் சொல்லும் புராண இலக்கியத்தின் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டும் படியாக எழுதப்பட்டது. ஆகையால், கடவுளைப்பற்றிய வரலாற்றை விமர்சிப்பதாய் எண்ணாமல், ஒரு புராண  இலக்கியத்தின் மீதான பார்வை என்ற முறையில் இங்கு விவாதிக்கலாம். ஆரோக்கியமற்ற தாக்குதல்களைத் தவிர்க்கலாம்.

அடுத்த கட்டுரையில் சந்திப்போம் நண்பர்களே.. வருகைக்கு நன்றி...

20 comments:

 1. Saran Sakti2:03 PM - Limited
  உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/upcoming.php

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,,, பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக அன்பரே...

   Delete
 2. ஏனைய நாடுகளில் இருந்த பிற மதங்ககாரர்களியே ஆட்சி அதிகாரம் இருந்தது. பிற மதகாரர்களால் திட்டமிட்டு நமது மதஇதிகாசங்கள் மற்றும் வரலாறுகள் மறைக்கப்பட்டன அழிக்கப்பட்டன.

  ReplyDelete
  Replies
  1. ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதைக்கும் மற்ற மதத்தவர் ஆட்சி செய்தமைக்கும் பெரிதாக தொடர்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை அன்பரே.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சரவணகுமார்..

   Delete
 3. hope this link will answer all ur questions.

  http://vaithikasri.blogspot.in/2006/06/blog-post_23.html

  ReplyDelete
  Replies
  1. உங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி நண்பரே... ஐயா "ஐயராமன்" மிக அழகாக கதையையும் அது கூறும் விளக்கத்தையும் விவரித்துள்ளார்... ஆனால் எனது கேள்விக்கான விடை முழுவதும் கிடைக்கவில்லை.

   அவர்கூற்றுப்படி....

   //தேவர்கள் நம்மைப்போல கர்மங்களுக்கும், வாசனைகளுக்கும் (ஆசை, வெறுப்பு) உட்பட்டவர்கள். இவர்கள் தெய்வம் இல்லை.//

   அப்படியானால் நமது தெய்வங்கள் விருப்பு வெறுப்பின்றி காட்டப்பட்டுள்ளதா..? அப்படி விருப்பு வெறுப்பு இல்லாதா கடவுளாக சொல்லப்பட்டிருந்தால், சிவனின் ஒருபுறத்தில் பார்வதி இருக்க, தலையில் கங்கை எதற்கு என்பது இன்னும் புரியவில்லை...

   Delete
 4. நல்லதொரு அலசல்
  தசரதன் மனைவி பற்றி இன்றுதான் அறிந்து கொண்டேன்

  ReplyDelete
  Replies
  1. என்னா சிட்டுகுருவி கவுத்திட்டிங்களே :).. நாம இங்க கௌதமரோட மனைவிய பத்தி பேசுனோம் நீங்க தசரதன் மனைவின்னு சொல்லிடிங்க :)...

   Delete
  2. தசரதனுக்கு 60000 மனைவிகள் என்பது யாவரும் அறிவோம்
   //////////////////

   இதைத்தான் நான் சொன்னேன்.......:) 60000 என்று இப்போதுதான் அறிகிறேன்

   Delete
 5. இது ஒரு அந்த காலத்து ஜேம்ஸ் பான்ட் கதை?இப்போது கடவுளாக்கப்பட்டு கதைகளை ரசிக்க முடியா நிலையாகிவிட்டது.கூடவே விமர்சித்தால் கலவரம் வேறு....

  ReplyDelete
  Replies
  1. வருக செல்லத்துரை சார்... நீங்கள் சொல்வதும் உண்மைதான்..கருத்துக்கு மிக்க நன்றி..

   Delete
 6. சகோ! முதலில் ஒரு சிறு விஷயம். கதை எழுதப்பட்ட காலம். அந்த காலத்தில் இருந்த குடும்ப வாழ்க்கை முறை. அதை ஒட்டிய அற முறைகள். மேலாண்மை பொன்னுசாமியின் இந்த என் விகடன் இடுகை பாருங்கள் http://en.vikatan.com/article.php?aid=25825&sid=749&mid=34

  முடிந்தால் ராகுல் ஜியின் வால்கா முதல் கங்கை வரை படியுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக படிக்கிறேன் ஐயா.. வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி..

   Delete
 7. எல்லாம் கற்பனைக் கதைகளே.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி பழனி.கந்தசாமி சார்...

   Delete
 8. முறையான ஒழுங்கமைப்போ ,அல்லது வழிநடத்தலோ இல்லாத எந்த ஒரு கருப்பொருளும் நாளடைவில் வழி கெட்டு போவது என்பது உறுதி ...ராமாயணம் மகாபாரதம் என்பது அன்று எழுத பட்ட அதே நூல் தான் இன்று வரை பாதுகாக்க படுகிறதா ???என்பது சந்தேகமே ..காரணம் இலங்கை மற்றும் இந்தியாவில் எண்ணற்ற கோவில்களின் கர்ண பரம்பரை கதைகளை கேட்பின் ,அவற்றில் இப்புராண நாயகர்கள் வந்து சென்றதாக கூறபடுகிறது.(சஞ்சீவி மலையை தூக்கி செல்லும் பொது அனுமான் எங்கயோ ஓய்வெடுத்தாரம்)...உண்மையான புராணத்தில் இவ்வாறு ஒன்றும் இல்லாத போது தங்கள் கோவில் வருமானங்களை பெருக்கி கொள்ள சிலர் பரப்பிய கதைகளும் காப்பியங்களின் உண்மை(!!!!) தன்மையை சந்தேகம் கொள்ள வைக்கின்றன...

  //உலகைப் படைத்தவன் ஒருவனே என்று சொல்லும் அதே வேளையில், இமயமலையில் இருந்து இலங்கைக்குள்ளாகவே கடவுள்கள் வளம்வருவதாக சித்தரிக்கப் பட்டிருப்பது சற்று விநோதமாக உள்ளது//

  ஆரியம் உலகை தன் நிலபரப்பினுள்ளே மட்டுமே கண்டது..அதனால் தான் அற்புதங்கள் இந்தியா,இலங்கையை தாண்டி இடம் பெறவில்லை....உலகிலேயே புராணம் ஒன்றிற்காக கடல் மார்க்க வளர்ச்சி திட்டங்களை கை விட்டவர்கள் நாமாக மட்டுமே இருப்போம்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜய்..

   Delete
 9. தசரதனுக்கு 60000 மனைவிகள் என்பது யாவரும் அறிவோம்
  //////////////////

  இதைத்தான் நான் சொன்னேன்.......:) 60000 என்று இப்போதுதான் அறிகிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஒ அப்பிடியா நண்பா.. சாரி பாஸ்.. நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன் :)...

   Delete
 10. //

  சில கேள்விகள் ...

  புனித காவியம் என்று சொல்லப்படும் ராமாயணத்தின் இப்பகுதியில் இருந்து எனது மனதில் உதித்த விடைகள்அறியாத சில கேள்விகள் இங்கே.

  ஒருவனுக்கு ஒருத்தி என்ற எண்ணத்தோடு வாழவேண்டும் என்று சொல்லும் ராமாயணத்தில், தசரதனுக்கு 60000 மனைவிகள் என்பது யாவரும் அறிவோம். எதற்கு இப்படி ஒரு இழிவான உதாரணம் என்று கேட்டால், அப்படி மற்றவர் வாழக்கூடாது என்பதைச் சொல்லவே இந்த உதாரணம் என்று சிலர் சொல்கிறார்கள்.

  ராவணன்.. அடுத்தவர் மனைவியான சீதா தேவியை அபகரித்து, அவளை தன்னுடய தாக்கிக்கொள்ள ஆசைப்படுகிறானே என்று கேட்டால், அப்படியான எண்ணங்களுடன் எந்த ஒரு மானுடனும் வாழக்கூடாது. மீறியும் வாழ்ந்தால், அவன் சந்திக்கும் அழிவுகள் எப்படி இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட சொல்லப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள்.

  சரி மேலே கூறி இரண்டு உதாரணங்களும் இப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதைச் சொல்வதாகவே வைத்துக் கொள்வோம். இந்திரன், முனிவரின் மனைவின் மேல் ஆசை கொள்வதும், அதற்கு அவளும் ஒத்துழைப்பதும் எதற்காக சொல்லப்பட்டது.? மேலே சொல்லப்பட்ட இரண்டு உதாரணங்கள் போதாதா..? (ஒரு பெண் எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதைச் சொல்வதற்காக கூறப்பட்ட உதாரணம் இது என்று சொல்வார்களோ..??).

  இந்திரலோகத்து அரசன் என்று சொல்லும் ஒருவனைப் பற்றி எதற்கு இத்தனை கீழ்த்தரமான சித்தரிப்புக்களும் உதாரணங்களும்.?. அரசன் சில கடவுளும் இப்படியானவர்கள் என்று சொல்லிவிட்டு, குடிகள் மட்டும் படு கன்னியமாக வாழ வேண்டுமென புராணங்கள் கூறுவது சற்று சுயநலமாக சொல்லப்பட்டதாகவே தெரிகிறது.

  இங்கு நான் எழுதியதைக் கவனித்தீர்களானால், ஆயிரம் ஆண்டுகள் கழித்து அந்த ஆசிரமத்திற்கு ராமன் வருவதை மனக்கண்ணால் உணரும் கௌதமர், அவர் மனைவியை அபகரித்து அவளோடு ஊடல் கொள்ளவரும் இந்திரனைப் பற்றி அறியாமல் போனது ஏன்..? அந்த நிகழ்வை அவர் தடுக்காதது ஏன்.?

  இந்திரன் முதலாக கிருஷ்ணர் வரை பெண்கள் மேல் காம ஆசை அதிகம் கொண்டவர்களாகவே இவர்கள் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களை எவ்வாறு கடவுள் என்று ஏற்பது என்பது மிகவும் புரியாத ஒரு விடயம்.

  மேலும், ராமாயணம் கற்பனைக் கதையாக இருக்கும் பட்சத்திலேயே இந்த முரண்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது உண்மைச் சம்பவமாக இருக்குமானால், கிருஷ்ணர், சிவன் போன்று பெண்கள் மேல் தீர ஆசை கொண்ட சித்தரிப்புகளை கடவுளாக ஏற்க, மனம் முற்றிலும் மறுக்கிறது.

  உலகைப் படைத்தவன் ஒருவனே என்று சொல்லும் அதே வேளையில், இமயமலையில் இருந்து இலங்கைக்குள்ளாகவே கடவுள்கள் வளம்வருவதாக சித்தரிக்கப் பட்டிருப்பது சற்று விநோதமாக உள்ளது.

  இப்படி முரண்பாடானா பல நிகழ்வுகள், கடவுள் இல்லை என்று சொல்வோருக்கு பயனாகவே விட்டுச் சென்றிருக்கிறது இந்த புராண இலக்கியங்கள்.
  //

  இவற்றிக்கு நான் பதிலளிக்கலாமா?

  ஏனேனில் நீங்கள் கேட்டது 2012 .. நான் படித்ததும் பதிலளிக்க நினைப்பதுன் 2 வருடம் கழித்து அதனால் தான் கேட்கிறென்...

  உங்கள் பிளாகை பயன்படுத்துவதில்லை என்று தெரிகின்றது . எனவே பதில் glomoinc@gmail.com எழுதவும்.

  ReplyDelete