Thursday, 3 January 2013

இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அலசல்

வணக்கம் நண்பர்களே ..!

இது என்னோட 2013 வது புத்தாண்டின் முதல் பதிவு ஆனா பேசப்போறது 2012 ஆண்டு புத்தாண்ட பத்தி. என்னடா சம்மந்தமே இல்லமா ஒருவருஷம் பின்னாடி போயி பேசுறேன்னு பாக்குறிங்களா ..? சம்மந்தம் இருக்குங்க. அதுவும் என்னான்னு கொஞ்சம் பாக்கலாம் வாங்க.

அது என்னவோ தெரியலைங்க. வீட்ல சாம்பார்ல இருந்து பொறியல் வரைக்கும் எதுலயாவது ஒரு சின்ன எறும்பு விழுந்தாகூட வேற யாரு கண்ணுலயும் படாது. என் கண்ணுல மாட்டிக்கும். அதுக்கப்பறம் என்ன, எங்க அம்மா காதுல பஞ்சு வச்சுக்க வேண்டிய தான் பாக்கி. இப்ப நான் வெளியூர்ல இருக்கறதால என் அம்மா கொஞ்சம் சந்தோசமா இருக்கும்னு நெனைக்கிறேன். ஏனா, வீட்ல என் அம்மாவை எப்பவும் திட்ற ஒரே ஜீவன் நானாதான் இருப்பேன் (நீ பக்கத்துல இருந்து திட்டமா இப்பல்லாம் ரொம்ப போர் அடிக்குதுடானு போன்ல அப்பப்ப காலாய்க்க வேற செய்யிறாங்க). இது மாதிரி தான் போன 2012 புதுவருட நீயா நானா ஸ்பெஷல் ஷோல சிலர் என் கண்ணுக்கு மாட்டுனாங்க (சத்தியமா இந்த வாட்டி கோபிய விமர்சிக்கலங்கோ). ஆனா அதப்பத்தி எழுதனும்னா 2012 முடியும் வரை காத்திருந்துதான் ஆகணும். அப்படி ஒரு கட்டாயம். அதுக்கு முன்னாடிஎழுதிருந்தா என்ன முட்டாள்னு முத்திரை குத்தீருப்பாங்க. ஏனா டாபிக் அப்படி.

அது என்ன ஷோ ? தலைப்பு என்ன ? அதுல என்ன பிரச்சன ? யார் அந்த நண்பர்கள்னு பாக்கா அப்படியே ஒருவருஷம் பின்னாடி போலாமா ..?

2012 வருஷ நீயா நானா ஸ்பெசல் ஷோல பேசப்பட்ட தலைப்பு "2012 ஆண்டில் ஜோதிடம் என்ன சொல்கிறது" என்பதுதான். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பலன், ஒவ்வொரு ராசிக்கும் உரிய பலன் அப்படின்னு நெறைய விவாதிச்சாங்க. அதுல, கோபி ஒரு கேள்விய கேட்டாரு. 2012 இல் நான் இதைக் கணித்திருக்கிறேன். அது கண்டிப்பாக நடக்கும் என எந்த நிகழ்வையாவது உங்களால் சொல்ல முடியுமா என்று.

அதுக்கு வந்த பதில்கள் நிறைய. அதுல முக்கியமான ரெண்டு, 2012 முடியறதுக்குள்ள "ராஜபக்சே கட்டாயமாக ஆட்சியை விட்டு இறங்குவார்" , "இந்திய-சீன போர் வரும்" என்பதே.

இதுல எதாச்சும் நடந்ததா ..? அவர்கள் பேசிய பகுதியை மட்டும் இந்த காணொளில் ஒரு முறை பார்க்கவும். மீதியை பிறகு பேசுவோம்.அதுமட்டுமில்லாம, அந்த ஜோசியர்களிடே கூட சரியான உடன்பாடில்லை. ஒருவர் ராஜபக்சே ஆட்சியை விட்டு விலகுவார்னு சொல்றாரு, மற்றொருவர் கண்டிப்பா இல்லன்னு எதிர்கிறாரு. அவங்களுக்குள்ளேயே எது சாரின்னு தெரியல. எல்லாரும் ஒரே ஜாதகத்தத்தான படிச்சிருப்பாங்க.? அப்ப ஏன் இந்த மாறுபட்ட கருத்துக்கள் .? இவர்கள் எப்படி நம்மளுடைய வாழ்கைய ஜாதகம் என்கிற போர்வையில தீர்மானிக்க முடியும். இவர்களை நம்பி நாம் ஏன் போகவேண்டும். இவர்கள் என்ன கடவுளா..? நாமளும் கொஞ்சம் யோசிக்க வேண்டாமா ..?

அதோட இங்க நீங்க இன்னும் ஒன்ன சரியா புரிஞ்சுக்கணும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோசியர்கள் எல்லாரும் தமிழ் நாட்டில் பிரபலமான பெரிய ஜோசியர்கள் என்று சொல்லப்படுபவர்கள். ஷெல்லி என்கிறவர் அடிக்கடி டிவில வாரத பாத்துருப்பிங்க. அவர்தான் ராஜபக்சே 2012 குள்ள ஆட்சியை விட்டு வெளியேற்றப்படுவார்னு சொன்னார். ஆனா நமது உறவுகளை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த அவன் என்னவோ சுகபோகமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஜோசியத்தில் அனைத்தையும் அறிந்த, தமிழ் நாட்டின் பெரிய ஜோசியர்கள் என்று சொல்லப்படும் இவர்கள் வார்த்தைகளே பொய்த்து போகிறதே, அப்ப நம்ம ஊரு அரைகுறை ஜோசியர்களின் கதி என்ன ..? அவர்களை நம்பி நாம ஏன் ஊர் ஊரா கோவில் கோவிலா சுத்தணும், வாழ்க்கைய அழிச்சுக்கணும் ..?

அடுக்கடுக்காக வைக்க என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தது. அந்த கேள்விகளை ஒட்டுமொத்தமாக "சங்கரி ராஜ்குமார்" என்ற இயக்குனர் தன்னோட படத்து கடைசி காட்சில சமூதாயத்திற்கு ஒரு சாட்டையடியாக பதிவு செய்தார். அந்தப் படம் வேற எதுவும் இல்ல. யாருமே பெருசா கவனிக்காத, இப்படி ஒன்னு வந்துச்சானு கூட பலருக்கு தெரியாத படம். "வெங்காயம்". நான் பார்த்த சமூக கருத்துள்ள படங்களில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் படம் இது.

அந்த படத்தின் ஐந்து நிமிட கடைசி காட்சியை இங்கு இணை
க்கிறேன். கட்டாயம் பாருங்கள்.இத்தனை கேள்விகள் உதாரணங்கள் கொடுத்தும், நீ என்ன அவ்ளோ பெரியாளா .? உனக்கு அப்படி என்ன தெரியும் ..? உன்ன பெரிய அறிவாளின்னு காட்டிக்க முயற்சி பண்ட்ரியானு தலைப்ப மட்டும் பாத்துட்டு கல்ல விட்டு அடிக்க நம்ம ஊர்ல பல நண்பர்களும் இருப்பாங்க. அடிக்கறதா இருந்தா கொஞ்சம் சின்ன கல்லா வச்சு அடிங்க பாஸ். ஆனா அடிச்சிட்டு, குறைந்த பட்சம் இந்த மூட நம்பிக்கைகளை விட்டு விலகினா ரொம்ப சந்தோசப்படுவேன்.

இத்தனை சொல்லியும்.. உனக்கு என்ன தெரியும், இந்த கட்டுரை உன்னோட அறியாமையைக் காட்டுது அப்படின்னு நம்மாளுக கமெண்ட் அடிக்காம இருக்க மாட்டாங்க. அவங்களுக்கு மட்டும் என் வாழ்கையை ஒரு உதாரணமாகச் சொல்லி இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன்.

2011 ஆகஸ்ட் 18 தேதி, நான் இந்த உலகில் ஒரு தனிமரம் என்று நினைத்துக் கொண்ட நாள். என் வாழ்க்கையில், ஈடு செய்ய முடியாதா ஒன்றை இழந்த நாள். என் வாழ்வில் இதற்கு மேலும் ஒரு பெரிய இழப்பு வர இயலாத, அந்த இழப்பு என் அண்ணன் என்பதை இன்னும் ஜீரணித்துக் கொள்ள முடியாத நாள். ஒரு விபத்தில் சிக்கி, சில லட்சங்கள் செலவு செய்தும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தபின் 29 வது வயதில் எனது அண்ணனின் உயிர் பிரிந்தது. என் அப்பாவிற்கு ஜாதகத்தில் அதீத நம்பிக்கை. ஆனால் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை.

அந்த நம்பிக்கையால் உயிர் பிரிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னும் என் அப்பா, என் மாமாவிடம் சொல்லி எனது அண்ணனின் ஜாதகத்தைப் பார்க்கச் சொன்னார். ஜோசியர் சொன்னது, "இவரின் ஆயுள் கெட்டியானது. எதற்கும் பயப்படாதீர்கள். இப்போது எதுவும் ஆகாது. கண்டிப்பாக திரும்பிவருவார் என்பதே". என் அண்ணனும் திரும்பி வந்தார், ஆனால் உயிர் மட்டும் இல்லை.


என் அண்ணனின் ஆயுள் ஜாதகம், எங்களுடைய சுற்றுப்புற ஊர்களிலேயே மிகவும் பிரபலமான ஜோசியர் ஒருவரால் முத்தான எழுத்துக்களில் 73 வயதுவரை வாழ்வார் என எழுதப்பட்டு, அதற்கு மேலும் ஆயுள் உண்டு என்ற குறிப்போடு இன்னும் எங்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கிறது.

இத்தனை மாதங்களாகியும் உயிருக்கு இணையான என் அண்ணனைப் பற்றி சிந்திக்கவே எனது மனம் இன்னும் பக்குவப்படவில்லை. இருந்தும் இந்த உதாரணத்தைத் தர காரணம், சிலருக்காவது உதவும் என்ற நம்பிக்கையில்.


பல ஆயிரம் விடயங்களை அறிவியலோடு சேர்த்து நமது முன்னோர்கள் நமக்குச் சொல்லியுள்ளனர். அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஏன்.. இன்றும் அது போன்ற விடயங்கள் எவ்வாறு சொல்லப்பட்டது என்பது பெரும் வியப்பிற்குரியதாக உள்ளது. ஆனால் அவர்கள் சொல்லிய அனைத்துமே சரியென்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜாதகத்தைப் பற்றியும் அவர்கள் சரியான வரைமுறையோடு சிறப்பாக கணித்துச் சொல்லி இருந்தாலும், அதை சரியான முறையில் கற்றுக்கொண்டு முறையாக மக்களை வழிகாட்டும் திறமை கொண்டவர்கள் இப்போது எவருமில்லை. அதோடு, தோஷம் கழிய புண்ணியங்கள் பெற, கோவில்களைச் சுற்றுதல், வழிபடுதல் என்பது ஆதாரமற்றது. 


யோசிப்பீர்கள் என்று நம்புகிறேன்..!

நன்றி,

அன்புடன்,
அகல்

22 comments:

 1. ஜோசியம் என்பது ஒரு அனுமானம்தான்! ஜோசியத்தில் குறிப்பிடும் அனைத்தும் நடக்கும் என்று எண்ணுவது நமது மடமைதான்!

  ReplyDelete
  Replies
  1. எவருமே சரியாக சொல்லாத இதைப் பார்க்காமல் இருந்தாலே, நமது வாழ்கையை அடுத்தவரின் தலையீடு இன்றி நாம் மட்டுமே தீர்மானிக்க முடியும்.. கருத்திற்கு நன்றி நண்பரே...

   Delete
 2. ஜோசியம் மக்களை ஏமாற்றும் செயல்தான்.. அதையே இன்னும் நம்புபவர்களை பார்த்தாதான் பாவமா இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றிகள் பாஸ் :)

   Delete
 3. வணக்கம் நண்பரே,
  அருமை. சோதிடம் என்பது புரட்டு என்பதை விள்க்கிய விதம் பாராட்டுகு உரியது. கல்க்குங்கள்.

  நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் தல ...

   Delete
 4. பொன்னியின் செல்வன் நாவலில் "சோதிடத்தை நம்பினாலும் சோதிடக் காரர்களை நம்ப கூடாது" என்று பெரிய பழுவேட்டரையர் குந்தவையிடம் கூறுவார். எனது நிலையும் இதில் கிட்டத்தட்ட இது தான்.

  என்னால் சோதிடத்தை பொய் என்று முழுதும் ஒதுக்க முடியவில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன என்பதை எதை கொண்டு அறிந்து கொண்டார்கள் என்ற வியப்பு இருக்கிறதல்லவா?, அதில் பூமியை மையமாக கொண்டு அவை சுற்றுகின்றன, சூரியனும் ஒரு கிரகம் போன்ற விஞ்ஞான தவறுகள் இருந்தாலும் கூட.

  சில கேள்விகளுக்கு விடை கிடைப்பது சிறிது கஷ்டம் தான்.

  எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் எனது வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு நம்பிக்கை உண்டு. அவர்கள் பார்த்து நல்லதாக ஏதாவது சொன்னால் உக்கமாக எடுத்துக் கொள்வேன். நல்லது இல்லாதவை சொன்னால் பொய் என்று ஒதுக்கி விடுவேன். என்னுடையது ஒரு மாதிரியான செலக்டிவ் நம்பிக்கை என்று எடுத்துக் கொள்ளலாம்.

  நல்ல பதிவு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய கருத்து கூட உங்களுடைய கருத்திற்கு ஒத்ததுதான். பல ஆயிரம் விடயங்களை அறிவியலோடு சேர்த்து நமது முன்னோர்கள் சொல்லியுள்ளனர் இன்றும் அது வியப்பிற்குரியதாக உள்ளது.. ஆனால் அவர்கள் சொன்னது எல்லாமே சரியென்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜாதகத்தைப் பற்றி அவர்கள் சரியாக சொல்லி இருந்தாலும், அதையும் சரியாக கற்றுக்கொண்டவர்கள் இப்போது எவரும் இல்லை என்பதே எனது கருத்தும்.. நன்றி நண்பரே ..

   Delete
 5. நடக்கும் என்பார் நடக்காது.
  நடக்காது என்பார் நடந்துவிடும்.

  அன்புடன் அமர்க்களம்
  www.amarkkalam.net

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா நல்ல டைமிங் பஞ்ச் பாஸ் :)

   Delete
  2. நன்றி பாஸ்..

   அமர்க்களம் கருத்துக்களம்,
   www.amarkkalam.net

   Delete
 6. மிக நல்ல கட்டுரை. ஆனாலும் நம்பிக்கையாளர்களின் கண்கள் என்னவோ இதனாலெல்லாம் திறக்கப் போவதில்லை என்பதும் நிதர்சன உண்மை!

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றி தருமி ஐயா.. நீங்க சொல்வது உண்மைதான்.. இதை நமது கடைமையாக செய்வோம் ஒரு சிலர் மாறினாலும் நல்லது தானே..

   Delete
 7. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.மிக சமீபமாக உங்கள் பெயர் எனக்கு அறிமுக் மாதிரி தோணுது.

  அரசியல் ஜோஸ்யமாக கார்கில் போருக்குப் பின் பாகிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் முஷ்ரஃப் ஆட்சியைப்பிடித்த பின் இந்தாளுக்கு எவன் எப்ப குண்டு வைப்பான் என எதிர்பார்த்து எவனோ வைத்த குண்டும் வெடிக்காமல் போய் எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்துகிட்டு உலக நடப்புக்களை தொட்டும் தொடாமலும் பார்க்கும் எனக்கே ஒசாமா பின் லாடன் பாகிஸ்தானில்தான் இருப்பான் என்று தெரிந்த போது முஷ்ரஃப் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கே போய் ஒசாமா பாகிஸ்தானில் இல்லை என்று சொல்லி விட்டு வந்தும் நிகழாத பதவி ப்றிபோகும் எதிர்பார்ப்பு இறுதியா பெனாசிர் பூட்டோ சாவால் ஜனநாயக தேர்தல் என்கிற பெயரில் முஷ்ரஃபின் ஆட்சி முடிவுக்கு வந்து இப்பொழுது முஷ்ரஃப் நினைத்தாலும் பாகிஸ்தான் செல்ல முடியாதபடி லண்டனில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்.

  அதே போல் ராஜபக்சே பதவிக்கு கழுத்து மேல் கத்தி என்ற் பல சூழல்கள் தெரிந்தும் அதனையெல்லாம் கடந்து வரும் உலக அரசியல் களம்,தனது வெளியுறவுக்கு கொள்கைக்கு ராஜபக்சே பாதுகாப்பு என்ற கோட்டில் இந்தியா இலங்கை ஆட்சி அநீதிகளுடன் கரம் கோர்க்கும் பலம் போன்றவற்றாலும்,ஐ.நா அறிக்கைகளுக்கெல்லாம் பெப்பே கொடுத்து விட்டு இன்னும் ஆட்சியில் அமர்ந்துள்ளான்.இவற்றையெல்லாம் விட இலங்கையின் உள் நீதித்துறைக்கே சவால் விடும் சூழலில் ஆட்சி புரிந்தாலும் கூட ராஜபக்சேவுக்கு ஆட்சியென்பது நிரந்தரமான ஒன்றல்ல.என்ன நீயா?நானா நிகழ்ச்சி போல ஜோஜ்யம் மட்டும் சொல்ல முடியாது:)

  ReplyDelete
  Replies
  1. புத்தாண்டு வாழ்த்துக்கள் தல.. வருக்கைக்கு மிக்க நன்றி பாஸ்..

   Delete
 8. எதிர்க்காலத்தை கணிக்க முடியுமா.. என்றால் கணிக்க முடியும், எப்போது ஒரே மாதிரியான செயல் மீண்டும் மீண்டும் நடைபெறும் போது, தனி மனிதரின் குண நலங்களை கொண்டு இவர் இப்படி வாழக் கூடும் எனக் கணிக்கலாம், ஆனால் அது ஜோதிடத்தால் கட்டம் பார்த்து முடியாது .. உளவியல், உயிரியல் மற்றும் கணிதம் ஊடாக, ஆனால் அதுக் கூட ஓரளவு மட்டுமே முடியும். ஜோதிடம் எந்த அறிவிய அடிப்படையில் செயல்படுகின்றது என்ற விளக்கம் இல்லை .. அது ஒரு அனுமானக் கூற்றே, அக் கூற்றை நம்பி நமது மனத்தை வசியப் படுத்தி விடும் நிலையே ஜோதிடம் ..

  இன்றையக் காலக்கட்டத்தில் ஜோதிடம் தேவையற்றது என்பேன் .. மாறாக நம் வாழ்க்கை சிக்கல்களுக்கு மருத்துவர், உளவியக் நிபுணர், ஆலோசகர்களை அணுகி பயனடையலாம். நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. மறுக்கமுடியாத்த உண்மை...
   என்னீல் அதிகப்பட்சமாக எனதுமனைவியை மட்டுமே மீற்ற மடிந்த்து

   Delete
 9. kannadasanin arthamulla indhu matham puthagathai padipathu nallathu. mudathanam endru sollapaduvathu ethai enru antha puthagathil kanalam.

  ReplyDelete
 10. அருமையான பதிவு தோழர்

  ReplyDelete
 11. pala andukal mooda nambikai entu iruntha nan kadantha oru mathamai 50% nambikaiudan irunthen....sila nalkaluku munbu ellam sithainthathu....ipothu ellam alzinthathu.. pathivirku mikka nanti
  :)

  ReplyDelete
 12. Padhivirku romba thanks..idha katurai padikarathuku munadium padichadhuku apramum i feel different..Enaku josiyam la nambikai iruku..ippo fulla maralanalum unga padhivu think panna vaikudhu..for tat thank you so much
  :-)

  ReplyDelete