Wednesday, 5 June 2013

தன்மானம் (ஒரு பக்கக் கதை)

ஊர்த் திருவிழாவிற்காக அப்பா, அம்மாவிற்கு துணிகளை வாங்கிவிட்டு, புற்றீசல் போல் கூட்ட நெருக்கமுள்ள அந்த தெருச்சாலையில் காலைப் பதித்தான் யோகன். நீண்ட நேரம் ஏசி அறையில் இருந்துவிட்டு வெளியே வந்ததால், ஞாயிற்றுக் கிழமை நான்குமணி கோடைவெயிலை அவன் உடலால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வியர்வை மொட்டுக்கள் அவன் உடலைவிட்டு வெளியேற ஆரபித்தது. நாளையே ஊருக்கு கிளம்பவேண்டும் என்ற கட்டாயத்தால் வீட்டிற்கு வாங்கிச் செல்லவேண்டிய மத்த பொருட்களை அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் தேடிப்பிடித்து வாங்கிக் கொண்டிருந்தான் யோகன்.

சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கியும், அந்தத் தெருவில் சூடும், வேர்த்துக் கொட்டவைக்கும் வெட்கையும் குறைந்ததாகத் தெரியவில்லை. மதிய உணவை அவன் எடுத்துக்கொள்ள மறந்துபோனதை, அவனது விரல்களைத் தட்டிவிட்ட சிறிய கருங்கல் ஞாபகப்படுத்தியது. இரண்டு கைகளிலும் பைகளை சுமந்துகொண்டு மக்கள் நெரிசல்களுக்கிடையே சற்று தூரம் நடந்துபோனான் யோகன். தெருவின் வலதுபுறத்தில் சிவப்பு பெயர் பலகை வைக்கப்பட்ட பெரிய ஹோட்டல். உள்ளே புகுந்தவன் ஒரு பிளேட் பஜ்ஜி, ஒரு டீக்கு வாங்கிய டோக்கனை கிட்சன் டெலிவரி செய்யும் இடத்தில் நீட்டினான்.

பஜ்ஜியும், டீயும் அவனது வயிறுக்குள் போனவேகம், அவனது பசியின் ஆழத்தைக் சொல்வதாக இருந்தது. டீயைக் குடித்து முடித்தவன் இரண்டு கைகளிலும் பைகளை ஏந்திக்கொண்டு அந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்தான். உள்ளே போகும்போது அந்த இரண்டு பெண் பிச்சைக்காரகளிடம் இருந்து தப்பியவனால் இப்போது முடியவில்லை. ஹோட்டல் படிக்கட்டுகளை விட்டு இறங்கினான். அவர்கள் இடை மறித்தார்கள். 25 முதல் 30 வயதுடைய இரண்டு பெண்களின் கைகளிலும் இரண்டு குழந்தைகள். சோகமான முகத்தை வைத்துக்கொண்டு பிச்சை கேட்டு கெஞ்சினார்கள். யோகன் இல்லை என்று மறுத்தான். அவர்களின் கெஞ்சல் தொடங்கியது, காலைப் பிடிக்க முர்ப்பட்டார்கள். மனதில் இறக்கமற்றவனாய் அவர்களை விரோதிகளாகப் பார்த்தான் யோகன்.

அவர்களும் கெஞ்சலை நிறுத்தவில்லை. உச்சகட்ட கோபத்தில் யோகன் அவர்களைத் திட்டினான். சுற்றி இருந்தோர் அவனை வித்தியாசமாகப் பார்த்தார்கள். பிச்சைக்காரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எதுவும் கிடைக்காது என்று தெரிந்து ஒருவழியாக யோகனைவிட்டு அடுத்த ஆளிடம் நகர்ந்தார்கள். அருகிலிருந்த கூட்டத்தைச் சுற்றி இருந்தவர்களின் ஒருவன்,


"ஒரு ரூபாய் கூட கொடுக்காத இவன் அந்தப் பிச்சைக் காரர்களைக் காட்டிலும் பெரிய  பிச்சைக்காரன்" என்று தனது மனைவியிடன் சொல்லியது யோகனின் காதில் விழுந்துவிட்டது. அவள் சிரித்தாள்.

யோகன் அதைக் கண்டுகொள்ளவில்லை. கோபம் கலந்த இறுக்கமான முகத்துடன் அந்த இடத்தைவிட்டு 100 மீட்டர் தூரத்திற்கு நகர்ந்திருப்பான். சாலையின் இடதுபுறத்தில் போனவன், வலதுபுறத்தில் எதோ ஒன்றை கவனிக்கலானான். ஆங்காங்கே எலும்புகள் முட்டிக்கொண்டிருக்கும் ஒல்லியான உருவம், நரைமுடி, சவரம் செய்யப்படாத வெண்தாடி, தோல்கள் சுருங்கிய உடல், இவற்றோடு குத்தவைத்து அமர்ந்திருந்தார் அந்தப் பெரியவர். சாலையைக் கடந்து அவரை நெருங்கினான் யோகன். அவருக்கு 80 வயதிற்கு குறையாமல் இருக்கும். அந்த பேருந்து நிறுத்தத்தில் சாலையோரம் அமர்ந்திருக்கும் அவரது வலதுபுறத்தில் ஒரு கைத்தடி. இடுப்பில் இறுக்கி சொருகப்பட்ட வெள்ளை வேட்டி, பருத்தி ஆடையில் நெய்யப்பட்ட மேலாடையோடு அமர்ந்திருந்தார்.



அவர் பிச்சைக்காக கை ஏந்தியதாக யோகனுக்குத் தெரியவில்லை. அங்கு துண்டும் விரிக்கப்படவில்லை. ஆனால் அவரின் முன்புறம் ஒரு எடைபார்க்கும் வட்டவடிவ மெசின் மட்டும் வைக்கப்பட்டிருந்தது. அதன் எடை காட்டும் கண்ணாடியில், எடை பார்க்க முடியாத அளவிற்கு கீறல்கள். மெஷினின் பெரும்பகுதி பெயிண்ட் விட்டுபோய் துருப்பிடித்த நிறத்தில் காணப்பட்டது. அவரின் இடது புறம், "எடை பார்க்க ஒரு ரூபாய்" என்ற எழுதப்பட்ட பலகை வைக்கப்பட்டிருந்தது.

அந்த மெஷினுக்கு முன்னே போய் நின்றான் யோகன். இதை அவதானித்த பெரியவர், அவன் எடையைப் பார்ப்பதற்காக மெஷினை கஷ்டப்பட்டு முன்னே தள்ளிவைத்துவிட்டு எடை மெசினைப் பார்த்து கையை நீட்டியபடி அண்ணாந்து பார்த்தார். அவரின் மூக்குக் கண்ணாடி அவரது மூக்கில் இருந்து இரண்டு சென்டிமீட்டர் கீழே நகர்ந்தது. தனது கையில் இருந்த பைகளையும் செருப்பையும் கழட்டிவிட்டு மேஷின்மேல் ஏறி நின்று எடையைப் பார்த்தான் யோகன். கீறல்களுகிடையே உற்றுநோக்கி பார்த்த அவனது கண்களுக்கு அது எம்பது கிலோ காட்டுவதாகத் தெரிந்தது. அவனது எடையைவிட பத்துகிலோ அதிகமாகக் காட்டுகிறது என்பது அவனுக்குத் தெரியும்.

எடை பார்த்துவிட்டு மெசினைவிட்டு இறங்கியவன், அந்தப் பெரியவருக்கு இணையாக கீழே அமர்ந்தான். நூறு ரூபாய்த் தாளை பாக்கட்டில் இருந்து எடுத்து நீட்டினான். அது நூறு ரூபாய் தாள் தான் என்பதை சில வினாடிகள் உற்றுப் பார்த்து தெரிந்துகொண்டார் பெரியவர். பேச முயற்சி செய்தும் அவரின் குரல் காற்றோடு கலக்கவில்லை. முதலில் ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டிவிட்டு, பிறகு ஐந்து விரல்களையும் காட்டி கையை விரித்தார் பெரியவர்.


"ஒரு ரூபாய்க்கு நூறு ரூபாய் கொடுத்தால் சில்லறை எப்படித் தருவது" என்று பெரியவர் சொல்வதை ஓரளவிற்கு புரிந்துகொண்டான் யோகன்.

விரல்கள் விரிக்கப்பட்ட அவரது வலது கையுடன் அவரது இடது கையையும் இணைத்து, அதற்குள் நூறு ரூபாயை நோட்டை வைத்துவிட்டு, சிறிய புன்முறுவலோடு "சில்லறை வேணாம் தாத்தா " என்று சொல்லிவிட்டு அவரது விரல்களை தனது இரண்டு கைகளால் மூடினான் யோகன். மூடப்பட்ட தனது இரண்டு கைகளையும் மெதுவாகத் தூக்கி, யோகனின் தலையில் வைத்தார் பெரியவர்.

முற்றும்...

அன்புடன்,
அகல்

12 comments:

  1. யோகன் அவர்களின் செயல் நெகிழ்ச்சி அடைய வைத்தது... அதே சமயம் அந்த பெரியவரின் நிலையும் வருத்தப் பட வைத்தது...

    ReplyDelete
  2. படத்தைப் பார்த்தால் கதையாக தெரியவில்லை... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்...

      Delete
  3. story padichu mudichadhum,periyavar melaum,yogan melaum mariyadhai yerpadudhu(character manasula nikuranga apdinu solluvangala adhu mari)
    congrats :-)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி தேன்மொழி :)...

      Delete
  4. arumai.....kathaiyaka theriyavilai.manathai thottu vitathu...anupavamo????....but anyway ur narration is awesome...

    ReplyDelete
  5. யோகனின் செயல் நெகிழச் செய்து விட்டது...

    அழகான கதை...

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  6. Arthamulle story. But thathavin nilamaiyai ninaithu manasukku kastama poyirchu. photo paakkum pothu unmaiyaana story matheri theriuthu? vazhthukkal...

    ReplyDelete