Sunday, 9 June 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 17

அம்மா 

விறகடுப்பில்
விறகோடு சேர்ந்து
அவள் நுரையீரலும்
வெந்து கொண்டிருப்பதைப்
பொருட்படுத்தாமல்

"கொஞ்சநேரம்
பொறுத்துக்க சாமி
சோறு வெந்துரும்"

என்று சொல்லிக்கொண்டே

அடுப்பை
ஊதிக்கொண்டிருக்கிறாள்
அம்மா !


புரிதல் 

நான்
அருகிலிருந்தே
சொல்லிக்கொடுத்தும்
உனக்கு
பாடம் புரியவில்லை
என்கிறாய்

நீ அருகிலிருந்து
சொல்லிக்கொடுத்தால்
எப்படிப் புரியும் ?



முடிவுகள் 

அந்த பறவை,
குஞ்சுகளைக் காப்பாற்ற
கூடுகட்டி முடித்தநேரம்

ஆணிவேரை
வெட்டி முடித்தான்
கோடாரிக்காரன் !



விழிகள்

பல ஆயிரம்
டெரா பைட்
தகவல்கள்

உன்
விஞ்ஞான
விழிகளுக்குள் !
 



தூது

நீ மொட்டைமாடியில்
காயவைத்த தாவணியை
அந்த காற்று எதற்காக 
என் காலடியில்
கொண்டுவந்து போட்டது ?



முரண் 

காலையில்
நெல்லைத் தின்றதற்காக
கல்லைவிட்டு அடிக்கப்பட்ட
காகங்கள்

மாலையில்
பலகாரம் படைத்து
கூரையில்
போட்டபோது

தாத்தாவாக மாறி
வரவில்லை !



வேடிக்கை

பல
வண்ணப்
பூக்களுக்கிடையே
ஒரு பளிங்குக் கல்மீது
தலைவைத்து
துயில் கொள்கிறாய்
நீ...

வீசுவதை
நிறுத்திவிட்டு
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது
காற்று !



இறப்பும் சிரிப்பும்

உனது விரல்
நகங்களின் நுனியில்
உயிர்விட்ட சுகத்தில்
வானத்தைப் பார்த்து
சிரித்துக் கொண்டிருக்கிறது

உனது
பூக்கூடையில்
பூக்கள் !



உரையாடல் 

அந்தப் பூக்களோடு
நீயும்
உன்னோடு
அந்தப் பூக்களும்
ஏதோ
உரையாடிக்
கொண்டிருக்கிறீர்கள்

அதை
மூன்றாம்
மாடியில் இருந்து
பார்த்துக் கொண்டிருக்கும்
எனது செவிகள்வரை
அந்த காற்று கொண்டுவந்து
சேர்க்கவில்லை !



அன்புடன்,
அகல்

12 comments:

  1. அனைத்தும் அழகு... அதிலும் அந்த முடிவுகள் கவிதை சிறப்பாக உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே...

      Delete
  2. எல்லாமே அழகு!பூங்கொத்து!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் அருணா..

      Delete
  3. அனைத்தும் அழகு... அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வழக்கம்போல தொடந்து நீங்கள் தரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி தனபாலன் சார்...

      Delete
  4. எதை குறிப்பிட்டு சொல்வது என்று தெரியவில்லை....அனைத்தும் புதுமை...படிக்க தூண்டும் வரிகள்..... உவமைகள் ....மிகவும் பிடித்திருந்தது...
    //நகங்களின் நுனியில்
    உயிர்விட்ட சுகத்தில்// அருமை

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி...

      Delete
  5. Amma kavithai arumai :) matra kavithaigalum azhagu .. Vazhuthukkal agal :)

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி சுதா...

      Delete
  6. "Puridhal,Vizhigal" semma..kavidhai kuda neenga post pandra images kavidhai ah reflect pandradhu azhaga iruku..congrats :-)

    ReplyDelete