Monday, 25 February 2013

உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு எதுக்கு சொன்னாங்க ?

எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...

தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு கொடுக்கும் விலை: 2350

கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்


கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:


ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)

உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000

உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)

கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (
ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)


புல்/களை எடுத்தல்: 2 முறை (குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)

ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650

வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150

ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: 
ரூ 500


ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: 
ரூ 375


லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100

தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.

ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.

எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.


மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாயப் பரப்பு காவேரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை..


இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.

இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?


இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்துக்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.


குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.அன்புடன்,
அகல்

8 comments:

 1. அது சரி...ஒரு ஏக்கருக்கு எவ்ளொ டன் கிடைக்கும் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே...எங்கள் ஊரில் கரூர் உப்பிடமங்கலம் அருகில் கரும்பு பயிருட்டுள்ள நண்பரின் தகவல் இது..
  ஒரு ஏக்கருக்கு தோராயாமாக 35000 ரூபாய் செலவு....
  வண்டி வாடகை என்று வைத்தாலும் 10000 ரூபாய் ஆகும்..
  கிடைக்கும் கரும்பு 50 முதல் 55 டன் ..
  எப்படிபார்த்தாலும் லாபமே...
  எனது நண்பர் 5 ஏக்கரில் கரும்பு பயிருட்டுள்ளார்...
  சரியாக பராமரிக்கப்படும் போது எந்த வித விளைச்சலுமே நல்ல பலனைத்தரும்.

  ReplyDelete
  Replies
  1. எவ்வளவு மகசூல் என்று கேட்டீர்கள். நான் போன வருட மகசூலைச் சொல்கிறேன். 3 ஏக்கருக்கு 95 டன். இந்த வருடன் 4.5 ஏக்கரில் பயிரிட்டோம் (அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், பயிரிலேயே கருகிவிட்டது). மகசூலை வெட்டி முடித்ததும் சொல்கிறேன். அது கண்டிப்பாக குறைவாகத்தான் இருக்கும்.

   போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

   சரியான மின்சாரம் இல்லாமல் நீங்கள் சொல்லும் மகசூல் சாத்தியமற்றது. கருத்திற்கு நன்றிகள் கோவை..

   Delete
  2. அந்த குடும்பத்தில் இருந்து குறைந்தது இரண்டு அல்லது மூன்று நபர்கள் வருடம் முழுவதும் உழைத்தால்தான் மகசூல் கைக்கு கிடைக்கும் ஒரு நபருக்கும் குறைந்த பட்சமாக தினம் 200 ரூ கூலியாக இரண்டு நபர்களுக்கு வைத்துப்பார்த்தால் 400X365=ரூ 146000/- இதையும் கணக்கில் எடுத்துப்பார்க்கவும்.

   Delete
  3. நான் சொல்ல மறந்த முக்கியமான கருத்தை சொல்லிருகிங்க... வருகைக்கு நன்றி பாஸ்...

   Delete
 2. விவசாயம் வெளியிலேருந்து கணக்கு பாக்கறவங்களுக்கு சுலபமாதான் தெரியும்.. உள்ள எறங்கி வேல செஞ்சி பாத்தாதான் தெரியும், வேலைக்கு ஏத்த கூலி விவசாயத்துக்கு எப்பவுமே கெடைக்கறதில்லனு..

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பரே.. இதை உணர்வோரும் சிலரே ..

   Delete
 3. நீயா நானாவில் கௌதம் சொன்னாரே..... மாதத்திற்கு 70000/- சம்பாதிக்கிறேன் என்று.... அது எந்த அளவு / எப்படி சாத்தியம்? - யாரவது விளக்க முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. அந்த நிகழ்ச்சியைப்பற்றிய கட்டுரை இங்கே பாஸ் http://kakkaisirakinile.blogspot.in/2012/12/to.html

   Delete