Sunday, 5 May 2013

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம்


என்னோடு வேலைபார்க்கும் நண்பர் ஒருவரின் ஊர்த் திருவிழாவிற்கு வேலூர் போய்விட்டு ஹைதராபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். காலை ஐந்து மணிக்கு ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் காடுகள் நிறைந்த நெடுஞ்சாலையில் கார் போய்க் கொண்டிருந்தது. சுமார் 5.30 மணிக்கு தேநீர் அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு கடையைப் பார்த்து காரை நிறுத்தினோம்.

நெடுஞ்சாலையில் இருந்து பத்து மீட்டர் தூரமே உள்ள அந்த கடை மிகவும் சிறியது. டீ சொல்லிவிட்டு நின்று கொண்டிருக்கும் எங்களுக்கு டீ தரும்படியாக அந்தக் கடைக்காரர் தனது மகனை அதட்டிக் கூறினார். அவனும் எங்களுக்கு ப்ளாஸ்கில் உள்ள டீயை ஊற்றிக் கொடுத்தான். அவன் மனதின் ஆழத்தில் உள்ள ஏதோ ஒரு வெறுப்பு, அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. அது தூக்கக் கலக்கத்தினால் வந்ததல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

டீயை வாங்கிக் கொண்டு திரும்பியபோது, 40 - 45 வயது மதிக்கத்தக்க இருவர், கடைக்கு முன்னாள் 5 அடி தூரத்தில் இரண்டு சிறிய ஸ்டூலில் அமர்ந்து கொண்டு, மூன்றாவது ஸ்டூலில் உள்ள இரண்டு பிளாஸ்டிக் க்ளாசில் ஒரு குவாட்டரை ஒருவரும், மாசவை மற்றொருவரும் திறந்து சரிபாதியாக ஊற்றினார்கள். அந்த அதிகாலைப் பொழுதில் இதைப் பார்க்க சற்று அதிர்ச்சியாக இருந்தது. இதைப் பார்த்த பிறகு, கடைக்குப் பின்புறம் ஒரு பத்து பேர் வரிசையில் நின்று கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அந்தக் கடைக்காரரும் அவரது மனைவியும் பரபரப்பாக அவர்களுக்கு பாட்டில்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது பாரோ, உரிமம் பெற்ற மதுபானக் கடையோ இல்லை. சாதாரண பெட்டிக்கடை. அவர்கள் மதுபான பாட்டில்களை வைத்திருந்தது கூட மற்ற குளிப்பானங்கள் வைக்கப் பட்டிருக்கும் பிரிட்ஜில் தான். இந்த நேரத்தில் இத்தனை பேர் குடிக்க வரிசையில் நிர்ப்பது கஷ்டமாகவும் கோபமாக இருந்தாலும், இந்த சூழலில் இருக்கும் அந்தச் சிறுவன் எப்படி வளருவான், அவனது மனநிலை எப்படி இருக்கும் என்ற எண்ணமே அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது.

டீயை குடித்துவிட்டு காரை எடுத்தோம். கார் ஒரு 200 மீட்டர் நகர்ந்திருக்கும். என்னோடு இருந்த நண்பர்களிடம், இதையெல்லாம் போலீஸ் கண்டிப்பர்களா இல்லையா, இப்படி அதிகாலையிலேயே இவர்கள் குடித்து அழிந்து கொண்டிருக்கிறார்களே என்று சொல்லிக்கொண்டே, கார் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பெரிய கட்டிடம், அதன் உச்சியில் "காவல் நிலையம், கடப்பா மாவட்டம்" என்று எழுதப்பட்டிருந்தது. 

அன்புடன்,
அகல்

13 comments:

 1. இந்தக் கொடுமை எல்லா ஊர் பெட்டிக் கடைகளிலும் உண்டு... அவர்களுக்கு பணம் கண்ணை மறைக்கும் போது வேறு எந்த சிந்தனையும் வருவதில்லை...

  வரிசையில் போலீஸ்காரர் இருக்க மாட்டார்... முன்னேமே வந்தும் போயிருக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றிகள் தனபாலன் சார்.. நீங்கள் சொன்னதுபோல் பெரும்பாலான இடங்களில் இது நடக்கலாம்.. ஆனால் காவல் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் துரத்தில் அப்பட்டமாக நடப்பதென்பது அவர்களின் துணை இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது...

   Delete
 2. எல்லா ஊருலயும் நடக்குதே..டாஸ்மாக்கே 10 மணிக்கு தான் ஒபன் பண்ணனும்..ஆனா விடிய விடிய சந்துக்கடை நடக்குதே...மாமூல் இல்லாம இதெல்லாம் நடக்காது எங்கயும்...

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றி நண்பரே...

   Delete
 3. கொடுமைதான் .போலீசுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் முரளி சார் 200 மீட்டரில் காவல் நிலையம் இருக்கும் போதே மனம் பதறியது... நன்றிகள்...

   Delete
 4. கொடுமையான விஷயம் தான் இப்படி தான் வளரும் தலைமுறைகள் அழிந்து கொண்டு இருக்கிறது என்ன செய்வது இந்த மது பானம் எப்போது ஒழிக்க போறார்களோ அப்போது தான் இவர்களைப் போன்ற சிறுவர்களுக்கு நல்ல எதிர்காலம் .

  பகிர்வுக்கு நன்றிகள் அகல்

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றிகள் SRH...

   Delete
 5. கொடுமையான விசயம்! காவல்துறை லஞ்சம் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்க்கும்!

  ReplyDelete
  Replies
  1. உண்மை நண்பரே...

   Delete
 6. மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


  தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
  அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
  அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

  ReplyDelete
 7. kandipaka athu police thunaiudan nadaum seyal than....aanalum ithu pontra soolzalil valarum kulanthaikalin nilamai than kavalaikidamanathu...

  ReplyDelete