Sunday, 17 August 2014

நினைவுகள் -1 இடைவெளியைக் குறைத்து விடுங்கள்

இன்று ஆகஸ்ட் 18. என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத நாள். எனது அண்ணன் ஒரு பெரிய விபத்தைச் சந்தித்து, இரண்டு நாட்கள் தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சைப் பலனின்று எங்களைவிட்டுப் பிரிந்த நாள்.

எனக்கும் என் அண்ணனுக்குமான அன்பு என்பது வரையறைகளுக்கு அப்பாற்பட்டது. அது அண்ணன் தம்பி என்ற உறவைத் தாண்டியது. எங்கள் குணங்கள், செய்கைகள் யாவும் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், இருவரின் உணர்வுகளும் ஒரே நேர்கோட்டில் கடைசிவரை பயணித்தவை. எந்த ஒரு விடயத்தையும் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் தயங்கியதில்லை. எங்களுக்குள் பெரிதாக சண்டைகள் வந்தது கிடையாது என்றாலும், எல்லோரையும் போல் சிறு சிறு கருத்து முரண்பாடுகள் வாக்குவாதங்கள் என்று இருவரும் ஈடுபட்டதுண்டு.

இப்படியான எங்கள் வாழ்க்கையில், ஒரு முறை என் அண்ணன் கேட்டதை நான் இருந்த சூழலில் உடனடியாக என்னால் செய்து தரமுடியவில்லை. அதை நான் சரியாக என் அண்ணனிடம் வெளிபடுத்தவில்லை என்பதால் நான் வேண்டுமென்றே செய்யவில்லை என்று எண்ணி என்னிடம் என் அண்ணன் சரியாகப் பேசவில்லை. எங்களுக்குள்ளான தொலைபேசி உரையாடல்கள் குறைந்தது. நான் ஹைதராபாத்தில் இருந்து வீட்டுக் போகும்போதும் அண்ணன் என்னிடம் சரியாக பேசுவதில்லை.

முன்பே இது போன்ற சிறு சிறு இடைவெளிகள் எங்களுக்கிடையே வந்துபோனதால், சூழ்நிலை வரும்போது அண்ணன் புரிந்துகொள்வான் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டு நானும் அடிக்கடி தொலைபேசியில் பேசுவதை நிறுத்திவிட்டேன். பேச்சுவார்த்தைகள் இன்றி நான்கு மாதங்கள் கடந்தோடியது. 2011 ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று திடீரென ஒரு தொலை பேசி அழைப்பு, அண்ணன் விபத்தில் சிக்கிவிட்டான் என்று. சுயநினைவை இழந்தேன். அடித்துப் பிடித்து அடித்த நாள் ஹைதராபாத்தில் இருந்து மதுரை மருத்துவமனைக்குச் சென்றேன்.

அண்ணன் சுயநினைவில் இல்லை. சுற்றி என்ன நடக்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சையில் ஒரு முறைகூட விழித்துப் பார்க்கவில்லை. இரண்டு நாள் சிகிச்சையும் பலனளிக்காமல், ஆகஸ்ட் 18 மாலை 5.15 என் கண் முன்னே 29 வயதில் அண்ணனின் உயிர் பிரிந்தது. நமது இதயத்திற்கு மிக நெருக்கமானவர்களின் உயிர், நம் கண்முன்னே பிரிவதைவிட ஒரு கொடுமையான சம்பவம் இந்த உலகில் வேறு எதுவும் இருக்கமுடியுமா என்று தெரியவில்லை.

அதனால், நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் ஒன்றுதான். உண்மையாக அன்பு செலுத்துவோர்களிடம் அவ்வப்பது சிறு சிறு இடைவெளிகள் வந்துபோவது இயல்புதான் என்றாலும், அதைத் தயவு செய்து தொடர விட்டுவிடாதீர்கள்.

நான்கு மதங்களுக்கு முன் பேசியது தான் அவனிடம் பேசிய கடைசி வார்த்தை என்று நினைக்கும்போது ஏற்படும் வலிக்கு இன்னும் என்னால் மருந்து போடமுடியவில்லை. கடைசிவரை பேச முடியவில்லை என்று மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணமே, ஜீரணிக்க முடியாத ஒரு கொடுமையான வலி தான்.

- அகல்

2 comments:

 1. வணக்கம் சகோதரா !
  தங்களின் சோகக் கதையைக் கேட்கும் போதே எமக்குள்ளும்
  ஏதோ ஓர் இனம் புரியாத வேதனை உண்டாகின்றது அதற்குக்
  காரணம் எங்கள் குடும்பங்களிலும் இவ்வாறு சில சின்னச்
  சின்ன சர்ச்சைகளினால் நீண்ட காலம் பேச்சுவார்த்தையின்றித் தான்
  இருக்கின்றோம் ..தான் பட்ட துன்பத்தை படுகின்ற துன்பத்தை இனி
  எவரும் படக் கூடாது என்று எண்ணும் தங்களின் நல்ல மனதிற்கு
  இறைவன் எப்போதும் துணை நின்று துயர் போக்க வேண்டும் என்று
  வேண்டிக் கொள்கின்றேன் .கடந்தகால (துயர் தரும் )நிகழ்வுகளை
  மறந்து இனியேனும் நீங்கள் சந்தோசமாக வாழ வேண்டும் என்று
  கேட்டுக் கொள்கின்றேன் சகோதரா .

  ReplyDelete
 2. உண்மைதான்! உங்களின் இழப்பும் வேதனையும் புரிகிறது! இடைவெளிகள் இடை வேளைகளாக மாறி மீண்டும் நட்பும் உறவும் சிறக்க முனைதல் வேண்டும்!

  ReplyDelete