Saturday 19 January 2013

வேலைக்குச் செல்லும் தாயால், குழந்தைக்கு நிகழ்ந்த கொடுமை. உண்மைச் சம்பவம்

வணக்கம் ..!

பெண்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு குடும்பத்தையும் குழந்தைகளையும் மட்டுமே கவனித்துக்கொண்ட காலம் மாறி, இன்று பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் பொருளாதார நிலையைச் சாமாளிக்க, தேவைகளை சீராக நிறைவேற்றிக்கொள்ள கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது சாதாரணமான நிகழ்வாகிவிட்டது. இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் பெண்களும் வேலைக்குச் செல்வது ஒரு தேவையாக மாறிவிட்டது என்றே கூறலாம்.

இவ்வாறாக வேலைக்குப்போய் பழகிய பெண்கள், குழந்தை பிறந்து வெகுசில மாதங்களிலேயே தங்கள் குழந்தையை DAY CARE CENTRE அல்லது வேலைக்காரியிடம் விட்டுவிட்டு மீண்டும் வேலைக்குச் செல்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. அப்படி சில மாதங்களே நிறைவு பெற்ற தன் குழந்தையை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு வேலைக்குச் சென்ற ஒரு பெண்ணால், அவள் குழந்தைக்கு நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் உங்கள் முன் நிறுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம். வாருங்கள் பார்ப்போம்.


நடந்தது என்ன ..?


நான் ஹைதராபாத்தில் வேலைபார்த்து வருவது எனது வலைப்பூவை படித்துவரும் பெரும்பாலான நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த சம்பவம் நடந்த இடமும் ஹைதராபாத் தான். நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் என்னோடு வேலைபார்க்கும் ஒரு பெண் எனது தோழி. அவளது தோழியே அந்த குழந்தையின் தாய்.

அந்த பெண், தனது குழந்தை பிறந்து சில மாதங்களில் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள். காலை அலுவலகம் செல்லும்முன் குழந்தையை வேலைக்காரியிடம் தங்கள் வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம். மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன் தொலைபேசியில் வேலைக்காரியிடம் தொடர்புகொண்டு வீட்டிற்கு வருவதாக சொல்வது வாடிக்கையாக இருந்திருக்கிறது.

ஒருநாள் அந்த பெண்ணிற்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், அலுவலகத்தில் இருந்து வெகு சீக்கிரம் கிளம்பி இருக்கிறாள். இந்தமுறை வீட்டிற்கு வரும்முன் வேலைக்காரிக்கு தகவல் சொல்லப்படவில்லை. அதனால் அந்த பெண் வருவதை வேலைக்காரியும் அறிந்திருக்கவில்லை. அவள் வீட்டை அடைந்தாள். வீடு திறக்கப்பட்டது. வேலைகாரி மிகுந்த பயத்துடன் நிதானம் இழந்தவளாய் தெரிகிறாள்.

வீட்டில் வேலைக்காரி மட்டுமே இருக்கிறாள். குழந்தையைக் காணவில்லை. அதிர்ச்சியுற்ற தாய், வேலைக்காரியிடம் குழந்தை எங்கே என்று பதற்றத்துடன் கேட்கிறாள். அவளோ பதில் ஏதும் கூறாமல் மௌனமாக இருக்கிறாள். அந்த தாயிக்கு பயத்துடன் சேர்ந்து சந்தேகமும் வலுக்கவே, வேலைக்காரியை வீட்டின் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, தனது கணவருக்கு தகவல் சொல்கிறாள். கணவனும் வீட்டை அடைகிறார். அவரிடமும் வேலைக்காரி சொல்ல மறுக்கிறாள். காவல் துறைக்கு தகவல் பறக்கிறது.

காவல்துறை அதிகாரிகள் வந்து அவளை மிரட்டிக்கேட்டபின் இவ்வாறு சொல்கிறாள். "குழந்தையை தின வாடகைக்காக பிச்சை எடுக்க அனுப்பிவிட்டேன். தினமும் குழந்தையின் தாயும் தந்தையும் வேலைக்குச் சென்ற பிறகு பிச்சைக்காக வாடகைக்கு வாக்குவோர் வந்து குழந்தையை எடுத்துச் செல்வார்கள். பிறகு, மாலை அவர்கள் அலுவலகத்தில் இருந்து கிளம்பும்முன் குழந்தையை வந்து விட்டுச் செல்வார்கள் என்று கூரியுள்ளாள். மிகுந்த அதிர்சிக்குபிறகு குழந்தை மீட்கப்படுகிறது.


இருபோன்ற போன்ற சம்பவங்களுக்கு காரணம் என்ன ..?


1. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை சில பெண்களை குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குபோக நிர்பந்திக்கிறது.

2. சில குடும்பங்களில், தங்கள் பொருளாதார நிலையைக் காப்பாற்றிக்கொள்ள கணவன்மார்களே மனைவியை வேலைக்குச் செல்ல நிர்பந்திக்கிறார்கள். ஆனால் அதன் எண்ணிக்கை மிக மிக சொற்பமாகவே இருக்கும்.

3. தனியார் துறையில் வேலைபார்க்கும் சில பெண்கள் அதிகப்படியான சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பார்கள். அது வருவது திடீரென நின்றதும், அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் தனது குழந்தையின் சூழ்நிலையை பெரிதாக பொருட்படுத்தாமல் உடனடியாக வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள்.

4. அரசு துறையில் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு சில மதங்களே பிரசவ விடுப்பு இருப்பதால், அது முடிந்தபின் வேறு வழியின்றி வேலையை விட மனமில்லாமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைக்குச் செல்கிறார்கள்.

5. இன்றைய கால சூழ்நிலையில், எவ்வளவு அன்பாக கணவன் மனைவி இருந்தாலும், கணவனின் சம்பாத்யத்தில் தனக்கு பொருட்களை வாங்கிக் கொள்வதை ஒரு அடிமைத்தனமாகவோ அல்லது தனது தேவைகளுக்காக எப்போதும் மற்றவரை சார்ந்து வாழும் சூழலிலே உள்ளதாகவோ பல பெண்கள் நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தின் விளைவாக அவர்கள் குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குச் சென்று தங்களது தேவைகளை யாரையும் சாராமல் பூர்த்தி செய்துகொள்ள முற்படுகிறார்கள்.

6. தனது சொந்தம் அல்லது நண்பர்கள் வட்டாரத்தில் சில பெண்கள் கைநிறைய சம்பளத்துடன் வேலைக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முன், குடும்பத்தைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதை பல பெண்கள் மரியாதை குறைவாக கருதுகிறார்கள். அதன் விளைவாக வேலைக்குச் செல்ல விரும்புகிறார்கள்.

7. அதீத ஆசை, கணவன் மனைவிக்கிடையேயான பொறாமை குணங்கள் என்பன ஒரு சில காரணியாகவும் விளங்குகின்றன.


பெண்களின் பார்வைக்கு


பெண் - உலகின் மிக உன்னதமான படைப்பு. தாய்மை - ஒரு பெண்ணிற்கு கிடைக்கும் மிகப்பெரிய பட்டம், வெகுமதி, பிறவிப்பலன். ஆனால் இத்தனை அழகான உணர்வுகளையும் வெகுமதியையும் இன்று அனைத்துப் பெண்களும் உணர்கிறார்களா என்றால், பதில் அழிப்பது சற்று கடினம் தான்.

இந்த கட்டுரையில் சொன்ன அனுபவத்தில் எனக்கு சற்றும் புரியாத விடயம் ஒன்று உள்ளது. அந்த குழந்தையை தினமும் வேலைக்காரி பிச்சை எடுக்க அனுப்பி இருக்கிறாள். பிச்சை ஏ.சி அறையில் எடுக்கப்போவதில்லை. அவர்கள் சரியான உணவு கொடுக்கப்போவதில்லை. இப்படியான சூழலில், குழந்தையின் உடல் நிலை கண்டிப்பாக நலிந்திருக்கும், மாற்றம் ஏற்பட்டிருக்கும். அதை, பெற்ற தாயால் எவ்வாறு அறிந்துகொள்ள முடியாமல் போகும் என்பதை கடும் கோபம் கலந்த கேள்வியாக வைக்கிறேன்.

குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குப்போகும் பெண்களை எதற்காக இவ்வளவு விரைவில் வேலைக்குப் போகிறீர்கள் என்றுகேட்டால், "என் குழந்தைக்கு வேண்டியைதை வாங்கித்தந்து நல்ல உடல் நலத்துடன் சிறப்பாக வளர்க்க வேண்டும்" என்பதே பெரும்பாலான பெண்களின் பதிலாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒரு அடிப்படையை மறந்து விடுகிறார்கள். நீங்கள் விலையேதும் கொடுக்காமல் தரும் தாய்ப்பால், உங்கள் உடலின் சூட்டோடு அரவணைத்துக் கொள்ளும் அன்பை விட, ஓடி ஓடி சேர்க்கும் பணம் அவர்களை ஒரு விதத்திலும் உயர்த்தி விடப்போவதில்லை.

ஆரம்ப கட்டத்தில் கொடுக்கப்படும் தாய்ப்பாலே குழந்தையின் மூளை, உடல் வளர்ச்சியை நிர்ணயிக்கும் உன்னத மருந்து என்பதை அறியாமல், குழந்தையை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். அதிலும் சிலர் தங்கள் அழகை பாதுகாக்க தாய்ப்பால் தரமறுப்பது அபத்தம் (அதற்கு திருமணம் செய்யாமல் குழந்தையை பெற்றெடுக்காமலே, அழகை பாதுகாத்துக் கொள்ளலாமே !).

இன்றைய காலகட்டத்தில் சில பெண்கள் சிந்திப்பது, குழந்தையை நாங்கள் மட்டும்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமா .? ஏன் ஆண்கள் பார்த்துக்கொள்ளக் கூடாதா ..? என்ற கோணத்தில். இதற்கு பதில் சொல்ல வேண்டுமானால், ஆம் ஆண்களால் முடியாது. விடியவிடிய கண்விழித்து விழுந்து விழுந்து கவனித்து அன்பைக்கொட்டினாலும், ஒரு தகப்பனால் ஒரு தாயின் இடத்தை பூர்த்தி செய்வது அத்தனை எளிதன்று.

பெண்களும் ஆண்களுக்கு இணையானவர்கள் என்று போராட்டங்கள் மூலம் பலர் நிரூபிக்க முற்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, பெண்கள் ஆண்களைவிட உயர்ந்தவர்கள். ஆனால், சில விடயங்கள் பெண்களால் மட்டுமே செய்யமுடியும். சில விடயங்கள் ஆண்களால் மட்டுமே செய்ய முடியும். இது இயற்கையின் நியதி. அப்படி செய்வதே அழகு.



ஆகையால் எந்த ஒரு சமாளிக்க இயலாத பிரச்னையாக இருந்தாலும், ஒரு சில வருடங்களாவது உங்கள் அரவணைப்பின் வளர்வதே குழந்தைக்கும் குடும்பத்திற்கும் நலம்.

இந்த சம்பவம் தாய்மார்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என நம்புகிறேன். ஆகையால் அனைவரும் அறிந்துகொள்ள சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

மீண்டும் சந்திப்போம். நன்றி ..!

அன்புடன்,
அகல்.

5 comments:

  1. இன்றைய சூழலுக்கு ஏற்ற தக்க பகிர்வு மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டிய காலமிது. வேலைக்கு செல்லும் பெண்கள் சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மேடம்.. உணர்ந்தால் நன்றாக இருக்கும்.. கருத்திற்கு நன்றிகள்..

      Delete
    2. சிந்திக்க வேண்டிய விஷயம்தான்

      Delete
  2. பொருளாதார பிரச்சனை மன்னிக்கப் படலாம், ஆனால் வீட்டில் பொழுது போகாது, படித்த படிப்பு வீணாகிடும் என்று பொறுப்பற்ற காரணங்களால் பச்சிலன் குழந்தைகளை வேலைக்காரியிடம் விட்டு விட்டு வேலைக்குப் போகும் பெண்களை என்ன செய்வது.

    ReplyDelete
  3. neenga share pandra idhu pondra katturai romba think panna vaikudhu agal..

    indha padhivu la neenga point out panna reasons rombavey correct..

    ReplyDelete