Sunday 31 March 2013

ஸ்ருதி மாறாத இசை


குஞ்சுகளோடு கொஞ்சிக் பேச
கூடு திரும்பம் பறவைகள்

காற்றின் திசையில் பயணம் செய்யும்
முகவரி இழந்த இலவம் பஞ்சு

அதைக் கட்டிப்போட எட்டிப்பிடிக்கும்
கரையோர மக்கள்

கண்களால் மொழிபெயர்ப்பாகும்
காதல் மொழி
அதைச் சிதைத்து விட்டுப்போகும்
சுண்டல் விற்கும் சிறுவனின் கீச்சுக்குரல்

பிஞ்சுக் குழந்தையோடு
கொஞ்சி விளையாடும் குடும்பம்

படகின் மறைவில்
இதழ்மொழி பேசும் இளசுகள்

அரைகுறை ஆடை, கவ்பாய் தொப்பி,
கறுப்புக் கண்ணாடி, கையில் கேமராவுடன்
கைகோர்த்துச் செல்லும் வெளிநாட்டுக் கூட்டம்

விளையாட்டை நிறுத்திவிட்டு - அதை
வெறித்துப் பார்க்கும் உள்ளூர்க் கூட்டம்

இரவின் மறைவில்
எல்லைமீறத் தயாராகும்
மணிக்கணக்கு மனைவிகள்

ஒரு ருபாய் தந்த வழிப்போக்கனை
உள்ளூரத் திட்டும் பிச்சைகாரன்

உலகை இரண்டாய்ப் பார்க்கும்
டாஸ்மாக் தீவிர-வாதி

உப்புநீரில் கால்ப்பதிக்கும்
இளம்-பெண் பாதங்கள்

கட்டிப்பிடித்து உருளும்
கலகலப்பு இளைஞர்கள்

இயர் போனில் இளையராஜா பாடல்
வெள்ளை உடையில்
வாக்கிங் போகும் மக்கள்

பெற்றோர் கட்டிய மணல் வீட்டை
ஓடி மிதித்து உடைத்துவிட்டு
சிரிப்பைச் சிந்தும் மழலைச் சிறுமி

சிந்திய சிரிப்பை
சிந்தனையில் சேகரித்துக்கொண்டு
அடுத்த அடிவைக்கும்
தனிமை விரும்பி

அரைமணிப் பார்வையில் துளிர்விட்டு
வளரும் அசாத்தியக் காதல்

எலெக்ட்ரானிக் ஹெலிகாப்டரை இயக்கும்
பணக்காரப் பையன்
அதை ஏக்கத்துடன் பார்க்கும்
ஏழைச் சிறுவன்

சாவரிக்கு ஆள் தேடும்
தாடிவைத்த குதிரைக்காரன்
தன் தாகத்தைச் சொல்ல முடியாது
தவிக்கும் வெள்ளைக் குதிரை

மணலில் சண்டையிட்டுக் கொள்ளும்
குப்பத்துத் சிறுவர்கள்
வானில் சண்டையிட்டுக் கொள்ளும்
பச்சை மஞ்சள் பட்டங்கள்

சிவப்புக் கொடியுடன்
நடுக்கடலில் புகைகக்கும்
வெளிநாட்டுக் கப்பல்

குஞ்சு மீனும் கிடைக்காமல்
கரை திரும்பும் கடைசிப் படகு

ஊரை எரித்துவிட்டு
உறங்கப் போகும் சூரியன்

ஆங்காங்கே கண்சிமிட்டும்
அழகிய விண்மீன்கள்

என்று எதையுமே கண்டு கொள்ளாமல்...

ஸ்ருதி மாறாத இசையை
இசைத்துக் கொண்டிருகிறது...

கரையோடு முத்தமிடும்
கடலலை !

அன்புடன்,
அகல் 

7 comments:

  1. சமூக நிகழ்வை கச்சிதமாக படம் பிடிக்கும் அருமைக்கவிதை இசையில் இளையராஜா ஒரு ஞானிதான் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் நண்பரே..

      Delete
  2. காட்சிகள் கண் முன் தெரிந்தன... கடற்கரையில் இருந்தவாறே ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு நன்றிகள் தனபாலன் சார்..

      Delete
  3. கடல் கரையோரம் நடந்துவந்த உணர்வை கணினி முன் அமர்ந்துகொண்டே அனுபவிக்க முடிந்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் நண்பரே NSK..

      Delete
  4. நன்றிகள் பாஸ்...

    ReplyDelete