Friday 12 April 2013

யார் இவள் ? (சிறுகதை)





டீ கலருக்கே மாறிப்போன வெள்ளை க்ளாசில் டீ போட்டுக்கொண்டு, அடுப்பு புகை தாங்காமல் கண்ணைக் கசக்கிக்கொண்டே பார்த்துச் சிரித்தார் டீக்கடை சரவணன். பாக்கெட்டில் பைசா கனமாக இருந்தால் மட்டுமே கலகலப்பாக பேசவும் சிரிக்கவும் செய்பவர் என்னிடம் மட்டும் விதி விளக்காக.

காலை 8.15 க்கே வர வேண்டிய பஸ் 8.30 ஆகியும் வரவில்லை. பஸ் வரும் திசையைப் பார்த்தால் சரவணனை பார்க்க நேரிடும். அவர் சிரித்தால் இன்னொரு முறை சிரிக்க வேண்டும். எனக்கு ஏனோ அதில் விருப்பமில்லை.

10 மணிக்கு எக்ஸாம். அட்லீஸ்ட் ஒம்பதரைக்காவது காலேஜ் போயிடனும். கடைசி மூனு செமஸ்டர் மேத்ஸ் பேப்பர் ஒன்னும் கஷ்டமா தெரிலய. சொல்லப் போனால் மேத்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட். ஆனா இந்த ரேண்டம் புராசஸ் மட்டும் ஏனோ சுத்தமா பிடிக்கல. ஆமா கணக்கு பாடத்துல திப்புசுல்தான் வரலாறு மாதிரி தியரியா இருந்தா எப்டி பிடிக்கும் ? ஆனா இந்த தியரிதான் வானவியல் ஆராட்ச்சில அதிகமா தேவைப்படுதாம். படிச்சிருக்கேன்.

அப்பாடா ஒருவழியா நம்ம கும்பகோணம் கோட்டம் ஆரஞ்சு கலர் பஸ் வந்துருச்சு. இடது தோள்ப்பட்டையில் பேக், வலதுகையில் சுருட்டப்பட்ட ரேண்டம் புராசஸ் நோட்ஸ். முன் படிக்கட்டு வழியாக பஸ்ஸினுள் ஏறினேன். பஸ் கிளம்பியது. அதே கண்டக்டர், அப்பப்ப ஓடும் DVD ப்ளேயரை எப்போதும்போல் தட்டி கொண்டிருந்தார். கொஞ்சம் தாமதமா வந்ததால கூட்ட நெரிசலில் பஸ் சந்தையை போல இருந்தது. உட்கார இடமில்லை.

சற்று சாய்ந்து கொள்ள பஸ்ஸின் மேல்புறத்தை தாங்கிக் கொண்டிருக்கும் கம்பி இடம் கொடுத்தது..

ஏதோதோ செய்தும் பலனில்லாமல் DVD ப்ளேயரை விட்டுவிட்டு டிக்கெட் கேட்டு வந்தார் கண்டக்டர். மிகவும் நல்லவர், பரிச்சயமானவர். இருபதுரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு கேட்டேன்.

"என்னணா இன்னைக்கு இவ்ளோ லேட்"

"அத ஏன் கேக்குற தம்பி, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்ல ஒரே ரகள. எதோ கட்சிகாரன் பேனர கிலிச்சுட்டாங்கலாம். அதுக்கு பஸ்ஸ விடமாற்றானுக. நல்லவனுக்கெல்லாம் சாவு வருது, ஆனா இவனுக நல்லாத்தான் இருக்கானுக"

18.50 பைசா மஞ்சள் டிக்கெட், 1.50 பைசா சில்லறையோடு சலிப்பையும் சேர்த்துக் கொடுத்தார் கண்டக்டர்.

எக்ஸாம் நோட்சை கடைசியில் இருந்து சற்று புரட்ட ஆரம்பித்தேன். பக்கத்தில், நாளிதழ் வாசித்துக்கொண்டிருந்தார் வெள்ளை நரை பெரியவர். சினிமா நடிகையின் பேட்டி பெரிய படத்துடன் பாதி பக்கமும், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணை பற்றிய செய்தி ஓட்டுச் செய்தியாக ஓரமாகவும் இருந்தது. என்ன செய்ய ? சிரித்துக்கொண்டேன். எக்ஸாம் நோட்ஸ் பக்கம் பார்வை மீண்டும் திரும்பியது.

பின்புறம் ஒரே சத்தம்.

"என்னங்க நீங்க... ரெண்டு ஸ்டாப்புக்கு முன்னாடி ஏறி டிக்கெட் எடுத்தேன் ஆனா இன்னும் சில்லறை தரமாட்றிங்க"

"யோ வச்சுகிட்டாயா வஞ்சகம் பண்றேன்... 9.50 பைசா டிக்கெட்டுக்கு பத்து ரூபா கொடுத்த.. அந்த 50 பைசா வச்சுகிட்டு நான் என்ன அம்பானியாவா ஆகப்போறேன்"

"50 பைசா தான் கெடைக்க மாட்டேன்னு தெரியுதுல்ல, பேசமா 9.50 டிக்கெட்டெ பத்துரூபா ஆக்கச் சொல்லலாமுல்ல உங்க அதிகாரிட்ட"

"ஏன்யா... கவர்மெண்ட் 50 பைசா டிக்கெட் ஏத்துனா பரவாயில்ல. ஆனா சில்லரயில்லாம நாங்க தத்தளிச்சாலும் விடாம நச்சரிப்பிங்க"

அவன் மஞ்சள் கறை பல்லைக்காட்டி சிரித்தான்.

கண்டக்டர் 50 பைசாவை தேடிபிடித்து... "இந்தாயா உன் ஐம்பது காசு.. கோபால் பல்பொடி கெடச்சா கொஞ்சம் வாங்கி அந்த பல்ல மூனு நாளைக்கு விடாம தேயி" நக்கலடித்தார்..

மீண்டும் அவனிடம் அதே சிரிப்பு...

கண்டக்டர் நோண்டிப்பார்த்தும் பாடாத DVD, ஒரு பள்ளத்தில் பஸ் இறங்கி ஏறியதும் கரகரப்பான குரலில் கானாவை ஆரம்பித்தது.

பாடலைப்பற்றி அருகில் இரண்டு ஜென்டில் மேன்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"இளையராஜா பாட்ட கேட்டா மனசுக்குள்ள எதோ பண்ணுதுங்க.. என்ன மனுஷன் அவரு. எனக்கு மட்டுமில்ல என் பையனுக்கும் ராஜா பாட்டுன்னா உசுரு. வாழ்நாள்ல ஒரு நாலாவது அவர பாத்தரணும்னு தோனுது"

ஆனால் பாடிக்கொண்டிருந்தது ஜானகி அம்மா பாடிய "விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்" கிளிஞ்சல்கள் படப்பாடல். TR இசையமைத்தது. எழுபது எம்பதுகளில், சந்திரபோஸ், சங்கர் கணேஷ், TR பாடல்களில் சில, இது இளையராஜா பாடலோ என்று யோசிக்க வைக்கும். அவர்களிடமும் தனித்திறமை இருந்தது. அதே காலகட்டதில் இளையராஜா என்ற லெஜண்ட் இருந்ததாலோ என்னவோ அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்று நினைத்த நேரத்தில், பஸ் அடுத்த நிறுத்தத்தை அடைந்தது.

அன்று அந்த ஊர் சந்தை நாள். காலையிலேயே மக்கள் நெரிசல் சாலையின் இருபுறமும் நிறைந்திருந்தது. பேருந்தில் அடித்துப் பிடித்து மக்கள் ஏறினர். பேருந்தின் ஒரு ஜன்னலில் மணப்பாறை முறுக்கும், பக்கத்து ஜன்னலில் வெள்ளரிக்காய் வியாபாரமும் நடந்து கொண்டிருந்தது.

நெரிசலுக்கிடையே கஷ்டப்பட்டு ஒரு பெண்மணி ஏறினாள். முன்னரே ஒரு பெண் அமர்ந்திருக்கும் இருக்கையில்,

"இங்க யாரவது வாரங்கலாம்மா"

"இல்ல..."

"நான் உக்காரலாம்ல" சாந்தமான குரலில் கேட்டாள்.

"ஹ்ம்ம்ம்ம்" தலையை ஆட்டினாள்..

அமர்ந்துகொண்டாள்.

முப்பது வயதிருக்கும். சற்று தடித்த உடல், வெள்ளை நிறம், நல்ல அழகு, காஸ்ட்லியான புடவை, கழுத்து நிறைய நகை, பூந்தோட்டதிற்குள் புகுந்ததுபோல் ஒருவாசம் அவளிடம் இருந்து...

வண்டி புறப்பட்டது...

"தப்பி கொஞ்சம் தள்ளுப்பா.." பின்னிருந்து ஒரு குரல்...

ஒல்லியான ஒரு கிராமத்து பெண். கருத்த உடல், அழுக்குச்சட்டை, சரியாக வாரப்படாத முடி, மூக்கில் கொஞ்சம் சளியோடு ஒரு குழந்தையை இடுப்பில் வைத்திருந்தாள்.

சற்று விலகி இடம் கொடுத்தேன்.

உட்கார இடமில்லாமல் இடதுகையில் குழந்தையை அணைத்துக்கொண்டு வலது கையில் கம்பியைப் பிடித்துக் கொண்டு அந்த அழகான பெண் முன் நின்றாள்.

"உக்காறியாம ?"

"இல்லைங்க பரவாயில்ல"

"எங்க போகணும் ?

"திருச்சிக்கு..."

"போக இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமே.. எவ்ளோ நேரம் கொழந்தய வச்சுட்டு நிப்பிங்க"

"பரவயில்லமா" தயங்கினாள்...

அவளுடைய காஸ்ட்லி லுக் இவளின் தயக்கத்திற்கு காரணமோ என்னவோ ?

"சரி குழந்தைய கொடுமா.."

"பரவாயில்லமா"

"ஐயோ பரவாயில்ல குடுங்க"

ஒரு கூடை ரோஜா ஒட்டு மொத்தமாக மலர்ந்தால் எப்படி இருக்குமோ அத்தனை முக மலர்ச்சியோடு குழந்தையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள்.

"உங்க பேரென்ன ? என்ன படிக்கிறிங்க ?" குழந்தையிடம் அவளின் கேள்விகள் ஆனந்தமாக தொடர்ந்தது.

சாலையின் மேடு பள்ளம் தாலாட்ட, சற்று நேரத்தில் இமைகளை சுருக்கியது குழந்தை. அதன் எண்ணை வடியும் தலையை மார்போடு அணைத்துக்கொண்டு, தண்ணீராக வெளிவந்த சளியை, தனது கருப்புகலர் பேக்கில் இருந்து பாலினும் வெண்மையான கைக்குட்டையை எடுத்து சுத்தமாக துடைத்து விட்டு அவளது தாடையை குழந்தையின் தலையில் மென்மையாக வைத்துக் கொண்டாள்..

சற்று நேரத்தில் குழந்தை எழுந்து அழ ஆரம்பித்து...

"குடுங்கம்மா நான் பாத்துக்குறேன்" குழந்தையின் தாய் சொன்னாள்..

"இல்ல பரவாயில்லமா"

எதையோ அவசரமாக தேடினாள். தனது பேக்கில் இருந்து ஒரு சிவப்பு நிற பிஸ்கட்பாக்கெட்டை எடுத்து மூன்று கிரீம் பிஸ்கட்டை ஒவ்வொன்றாக ஊட்டிவிட்டாள். சுத்தமாக இருக்கும் தனது தண்ணீர்பாட்டிலை எடுத்து, எச்சிலாகவே குடிக்க வைத்தாள். குழந்தை மீண்டும் உறங்க ஆரம்பித்தது. மீண்டும் மார்போடு அணைத்துக்கொண்டு தனது கைகளை குழந்தையின் மேல் படுத்திக் கொண்டாள். வெள்ளைக்காரி ஒருவள் ஆப்ரிக்கா குழந்தையை அணைத்துக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த காட்சி. 

எனக்கு இது வித்தியாசமான உணர்வு... இதுவரை பார்த்திராத உணர்வு... என்னுள் எதை எதையோ சிந்திக்கச் செய்தது.. 

"குழந்தைகள் இல்லாதவர்கள் குழந்தைகளைக் கண்டால் இவ்வாறு பிரியமாக இருப்பார்கள். மாங்கல்யம் கழுத்தில் இருக்கும் இந்த பெண்ணிற்கு ஒருவேளை குழந்தை இல்லையோ ? அந்த ஏக்கத்தில் இப்படி அன்பு காட்டுகிறாளோ ? ச்சே ச்சே இருக்காது. எதுத்த வீட்டு அத்தைக்குந்தான் கொழந்த இல்ல. அவளும் அன்பு காட்டுவா அவளுக்கு ஈகுவலா இருக்கவங்கள்ட மட்டும்.

நம்ம ஊர் கோவில்லையே மேல்ஜாதி கீழ் ஜாதினு இன்னும் தீண்டாமை இருகத்தான செய்யுது. கீழ் ஜாதிக்காரங்க கோவிலுக்குள்ள போகக் கூடாது. ஆனா இவள பாத்தா அந்த அம்மன பாத்த மாதிரி இருக்கு.

ஒருவேள இவ கடவுளின் குழந்தையோ ? அன்னை தெரசாவோ ? யாருனே தெரியாது.. யாரா இருப்பா ? கேட்டுப் பாக்கலாமா ? இவ்வாறு கேள்விகள் என் மனதிற்குள் ஊற்று நீராய் கசிந்துகொண்டு இருந்தது.

திடீரென எதயோ தட்டும் சத்தம் கேட்டது.. தம்பி.. தம்பி.. கண்டக்டர் கத்தினார்..

பஸ் நின்னு ஒரு நிமிஷம் ஆகப்போகுதுப்பா... என்னாச்சு ? காலேஜ் வந்துருச்சு... எறங்குப்பா... 

நினைவுகள் திரும்பியது.. மன நிறைவா, பாரமா தெரியவில்லை. உன்னதமான உணர்வுகளைச் சுமந்துகொண்டு கல்லூரியின் வாசலில் பாதத்தைப் பதித்தேன்.

முற்றும்.

அன்புடன்,
அகல்

21 comments:

  1. //. நல்லவனுக்கெல்லாம் சாவு வருது, ஆனா இவனுக நல்லாத்தான் இருக்கானுக"// சூப்பர்

    அருமையான உணர்வுகளைக் கொண்ட கதை

    ReplyDelete
  2. உணர்வுப் பூர்வமான கதை
    தொடர வாழ்த்துக்கள்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ரமணி ஐயா... தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

      Delete
  3. story padikum podhu nanum bus la travel pandra mari feel irundhuchu..super :-) Vazhthukal boss..

    ReplyDelete
    Replies
    1. கதாப்பாத்திரமாக நீங்களும் மாறியதை கேக்க சந்தோசமா இருக்கு தேன்மொழி... கருத்திற்கு மிக்க நன்றி :) ...

      Delete
  4. அருமையான...
    உணர்வுப் பூர்வமான கதை...

    ReplyDelete
  5. today first time i read post in your blog..



    உணர்வுப் பூர்வமான கதை.

    வாழ்துக்கள்

    ReplyDelete
  6. arumai akal...analum yarume seiyatha uthaviyai aval yatharku seithal? kelviku pathi than puriyavilai .... :)

    ReplyDelete
    Replies
    1. Nandrigal Jabs... Manitham innum vaalkirathu enbathai kurikkum vithamaaka sollappattathu..

      Delete
  7. romba nalla kadai uyirottam kadhaiyil irunthathu

    ReplyDelete
  8. ithey pola ella pengalum irunthaal nandraga irukkum :)

    ReplyDelete
  9. ம்ம்..நல்ல அனுபவம்..கதை சொல்லி இருக்கும் விதமும் அழகு..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அதிரா...

      Delete
  10. http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_19.html
    வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வலைசரத்தில் மீண்டும் ஒருமுறை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் ASIYA OMAR...

      Delete
  11. வணக்கம்
    இன்று வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ அறிமுகம்மாகியுள்ளது சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/09/blog-post_3.html?showComment=1378165049455#c4515847910923155297வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete