Monday, 8 April 2013

ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும்

ஈழம்...


இது வெறும் வார்த்தையல்ல. எலும்புக் கூடுகளும், மண்டை ஓடுகளும் இடைவெளிகள் இன்றி நிறைந்து, மயானமாய் மாறிப்போன மாகாணம். விளைந்த பயிர்களிலும் ரத்தக்கறை வீசும் குட்டி தேசம். உலக வரைபடத்தில் சாத்தான் கைகளில் சிக்கித் தவிக்கும் புண்ணிய பூமிகளுள் ஒன்று. ஊமையைப் போன ஒரு இனத்தின் ஒட்டுமொத்த உணர்வு.

இப்படியான இனத்திற்கு விடுதலைவேண்டி, ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி மாணவர்கள் வரை அந்த உணர்வின் ஆழத்தையும், விவரிக்க இயலாத வலியையும் உள்ளூர புரிந்துகொண்டு, தன்னலமற்ற போராட்டத்தை அரசியல் சாயங்கள் பூசப்படமால் தமிழகத்தில் முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் இத்தகைய எழுச்சியை இந்திய வரலாறு ஒரு சில முறையே கண்டிருக்கும்.

மாணவர்களோடு சேர்ந்து, ஓவியம், இசை, கவிதைகளின் வாயிலாக இந்த விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாகவும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும் பலர் பங்களித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியான பங்களிப்பில் பாடலாசிரியர் பா.விஜயும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆம், ஆட்டோகிராப் படத்தில் வரும் "ஒவ்வொரு பூக்களுமே" என்ற உணர்ச்சி மயமான பாடலை எழுதி தேசிய விருதை தட்டிச் சென்ற கவிதை நாயகன். அந்த பாடலுக்குப் பிறகு அவர் எழுதிய உணர்ச்சிமிகு கவிதை தான் "ரத்தக் காட்டேரி ராஜபக்சே". அருமையான கவிதை. ராஜபக்சே, கொத்தயா போன்ற தமிழின எதிரிகளை\ ஒரு தமிழனாக, ஒரு மனிதனாக கொலை வெறியோடு எழுதி தனது கணீர் குரலில் சாடி இருப்பார்.

அந்த கவிதையின் காணொளி இங்கேசோனியா காந்தி முதல் புலிகளின் துரோகி கருணா வரை, துரோகம் செய்த அனைவரையும் கோபத்தின் உச்சத்திற்கே சென்று கூர்மையான வார்த்தைகளை அம்பாய்த் தொடுத்து குறி வைத்து தாக்கி இருப்பார். இந்தக் கவிதை ஒரு இனத்தின் ஒட்டுமொத்த கோபமாக ஒலித்தது. கண்களில் நீரை வரவழைத்தது. கவிஞர்கள் பெரும்பாலும் நேரடியான கெட்டவார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் ஆதங்கத்தில் அதையும் பயன்படுத்தி இருப்பார் பா.விஜய்.

இது ஒரு உணர்ச்சி பூர்வமான வரிகளின் தொகுப்பு. உறங்கிக் கிடந்த தமிழர்களின் உணர்வுகளை கட்டாயம் தட்டி எழுப்பியிருக்கும். இக்கவிதையை படித்துவிட்டு முகநூல் போன்ற வலை சமூக தளங்களில் ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் பகிர்ந்து கொண்டனர். நானும் படித்து பகிர்ந்துவிட்டு, சில நிமிடங்கள் கழித்து சிந்தித்தேன்.

அது உணர்ச்சி மிகு உண்மை வரிகள் தான். ஆனால் நமது அறிவை மழுங்கச் செய்யும் படியாக எழுதப்பட்டிருக்கிறது. ஆம், நமது தமிழ் கவிஞர்களால் நாம் ரசிக்கும் வரிகள் மட்டுமல்ல, உணர்ச்சிமிக்க வரிகளை எழுதி நமது அறிவின் மீது ஏறி அமர்ந்துகொண்டு சிந்திக்க விடாமல் சாவரி செய்யவும் முடியும் என்பதற்கு ஒரு அத்தாச்சியாக அவரது கவிதை எனக்கு தெரிந்தது.

அப்படி என்ன அந்த கவிதையில் சொல்லப்பட்டிருக்கிறது ?. சொல்லப் படவேண்டியது சொல்லப் படவில்லை என்பதே என் வேதனை. இந்த கட்டுரை முளைக்கக் காரணம்.

நான் முன்பே கூறியதுபோல், சோனியா காந்தி முதல் புலிகளின் துரோகி கருணா வரை அவர்களின் துரோகத்தை சுட்டிக்காட்டிய திரு பா.விஜய் அவர்களுக்கு, தமிழினத்தலைவர் கலைஞர் மட்டும் கண்ணில் படாமல் போனது மிகவும் வியப்பாகவே இருக்கிறது. தேடித்தேடிப் பார்த்தும் அவரைப் பற்றி ஒரு வார்த்தையேனும் அந்தக் கவிதையில் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஈழத்தமிழர்களின் அழிவிற்கு ஈழத்தமிழர்கள் செய்த துரோகத்தைவிட, இந்திய அரசு செய்த துரோகத்தைவிட, உலக நாடுகள் செய்த துரோகத்தைவிட, இந்த தமிழினத் தலைவர் செய்த துரோகம்தான் கொடியது என்பதை நேற்று பால்க்குடி மறந்த பிள்ளையும் அறிந்திருக்கும். ஆனால் யார் யாரையோ சாடிய பா.விஜய், தமிழினத் தலைவரை மட்டும் கவிதையில் இருந்து தப்பிக்க வைத்துவிட்டார். இதற்கு என்ன காரணம் ?

கலைஞரின் வசனத்தில் இன்னுமொரு "இளைஞன்" படத்தில் கதாநாயகனாக முடியாது என்ற பயமா ? அரசியல் மிரட்டல் வரும் என்ற அச்சமா ? கலைஞர் மீது கொண்ட காதலா ? பா.விஜய் அமைதியாக இருந்துவிட்டாரே என்று தமிழர்கள் சொல்லிவிடுவார்கள் என்ற ஆதங்கமா ? கலைஞர் கையால் "வித்தகக் கவிஞர்" பட்டம் போல் இன்னொரு பட்டம் கிடைக்காது என்ற சுயநலவாதமா ? எது தடுத்தது ?

சுயநலமின்றி நடுநிலையாக எழுத இயலாத நீங்கள் கவிதை எழுதவில்லை என்று எந்த ஈழத்தமிழன் அழுதான் ? ஒரு பானை பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் பால் முழுதும் விஷமாகும்போது, தமிழினத்தின் துரோகியை மறைக்க முயலும் நீங்களும் துரோகி இல்லையா ? சுயநலவாதி இல்லையா ? சோற்றில் முழுப் பூசணிக்காயை மட்டுமல்ல, துரோகிகளையும் மறைக்க இயலாது என்பது பா.விஜய்க்கு தெரியாதா ?

பா.விஜயை தனது கலையுலக வாரிசு என்று அறிவித்தவர் காப்பியக் கவிஞர் வாலி. வாலி கூட கலைஞரின் பிரியர் தான் என்றாலும், ஈழத்தைப் பற்றி அவர் எழுதிய கவிதையில், தமிழகம் செய்த துரோகத்தை இவ்வாறு இலைமறைக் காயாய் சொல்லி இருப்பார்.

"அங்கே முள் வேலிக்குள் கிடக்கிறான் ஈழத்தமிழன்
இங்கு கள் வேலிக்குள் கிடக்கிறான் சோழத்தமிழன்
இது இமாலயப் பிழை
இல்லை இதற்கிணையாய் இங்கே இன்னொரு பிழை
அட அச்சுப் பிழையானால் அதை திருத்தலாம்
இது அச்சப்பிலை. யார் இதை திருத்துவது ?"


அவரின் சிஷ்யன், தமிழகத்தை மட்டும் விட்டு விட்டு எங்கொங்கோ ஓடி துரோகத்தை தேடிப்பிடித்து ஈழத்தமிழர் மீது நீங்கள் காட்டிய பரிவு வேதனையளிக்கிறது. பல கவிஞர்கள் நடு நிலை வகிக்க முடியாது என்கிற காரணத்தினாலோ என்னவோ ஈழத்தைப் பற்றி எதையும் எழுதாமல் அமைதியாக இருக்கிறார்கள். உண்மையை மறைப்பதற்கு பதிலாக அவ்வாறு இருந்து விடுவதே உத்தமம்.

பா.விஜய் அவர்களே, கலைஞர் ஒரு தமிழ் இலக்கிய மாமேதை என்பதை உங்களைப் போல் நாங்களும் ஒத்துக் கொள்கிறோம். அதேபோல், அவர் தமிழ் இனத்தின் துரோகி என்பதை சுயநலமில்லாமல் எங்களைப் போல் நீங்களும் ஒத்துக் கொள்ள முயற்சியுங்கள். இல்லை என்றால், மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல், உங்கள் சுயநலவாதக் கவிதைகளை நீங்களே எழுதி படித்துக்கொள்ளுங்கள். அதே வேளையில், அதை வெளியிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தமிழர்களின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு பிரபலத்தை விமர்சித்து பெயர் தேடிக்கொள்ளும் நோக்கில் இதை எழுதியதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். பிரபலங்கள் உண்மையாக எழுதுவதாய் பார்க்கப்படும் எழுத்துக்களில் உள்ள உண்மை நிலையை சுட்டிக் காட்டும் படியாகவே எழுதியுள்ளேன்.

நன்றி !

அன்புடன்,
அகல்

7 comments:

 1. கலைஞர் மட்டும் கண்ணில் படாமல் போனது மிகவும் வியப்பாகவே இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பரே.. எப்படிப்படுவார் "இளைஞனின் கலைஞர்"...

   Delete
 2. இவரைப்போலத்தான் தொல்.திருமாவும்

  சிறுத்தைகள் நடத்திய ஈழ ஆதரவு மாநாட்டு பேனர்களில் 'ஈழம்' என்னும் வார்த்தையை தார்ப் பூசி அழித்தது கருணா அரசு.
  பல சிறுத்தை தோழர்களை சிறையில் அடைத்தது கருணா அரசு.
  அது பற்றி திருமா எங்கும் வாய் திறக்க மாட்டார்.

  ஒருவேளை வருங்காலத்தில் கூட்டணிவிட்டு வெளிவரும்போது சொல்லுவார்.
  அது போதாதென்று 'இந்திராகாந்தி உதவியதால் தான் எம்.ஜி.ஆர் உதவினார்' என்று சொல்லி வரலாற்றைத் திரிக்கிறார்.
  ராஜீவ் புலிகளை எதிர்த்தபோது மத்திய அரசுக்கு தெரியாமல் எம்.ஜி.ஆர் செய்த உதவிகள் திருமா கண்ணுக்குத் தெரியாது.
  அவரது நோக்கம் திமுகவை தூக்கிப் பிடிப்பது.

  பணத்திற்காகவும், பதவிக்காகவும் அலையும் கூட்டத்தால் ஒருபோதும் இனத்தைக் காக்க முடியாது

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பரே... தமிழக அரசியல் பெரும்பாலும் குள்ள நரி கூடங்கள் நிறைந்ததே .. இட்ன்ஹா சுயநலவாத கூட்டங்களைத் திருந்துவது சற்று கடினம் தான்... ஆனால் அவர்களை ஓட ஓட அடிக்கும் திறன் நமது ஓட்டுவங்கியில் உள்ளது...

   Delete


 3. வணக்கம்

  உண்மையை ஊட்டும் உயா்ந்த எழுத்துக்கள்
  திண்மையை ஊட்டும் திரண்டு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கவிஞர் ஐயா... தங்கள் வருக்கைக்கு எனது நன்றிகள்..

   Delete