இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. முடிவுகளைப் பார்த்தவுடன், "நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட... உன்னோட படிச்சவன் எப்படி மார்க் வாங்கிருக்கான் பாரு... எனக்குனு வந்து பொறந்துருக்கே சனியன்... இதெல்லாம் எங்க தேறப்போகுது... உன்னப் பெத்ததுக்கு ஒரு எருமையயாவது பெத்துருக்கலாம், பாலாவது கொடுக்கும்" என்ற குரல் எத்தனை வீட்டில் இன்று ஒலிக்கிறதோ.. அது எத்தனை தற்கொலைகளுக்கு வழிவகுக்கப் போகிறதோ தெரியவில்லை... ஆனால் இதை சற்று ஆராய்ந்து பார்த்தால், நமது சமுதாயத்தில் மூழ்கியுள்ள அறியாமையையின் ஆழத்தையே காட்டுகிறது.
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கட்டாயம் ஒரு தனித்திறமை இருக்கும். அதை அறிந்துகொண்டு ஒரு குழந்தையை வளர்க்க பெரும்பாலான பெற்றோர் முயற்சிப்பதில்லை. அதை வெளிக்கொண்டு வரும் வகையில் நமது கல்விமுறைகளும் கட்டமைக்கப்படவில்லை. அது மதிப்பெண்களில் சகதியாகவே காணப்படுகிறது. அதனால் ஒருவனின் திறமையை தேர்வுகளில் வாங்கும் மதிப்பெண்களை வைத்து எடை போடுவது, மற்றவர்களோடு ஒப்பிடுவது என்பது பெற்றோர், உறவினர்கள் செய்யும் மிகப்பெரும் தவறுகளில் ஒன்றாகவே நீண்டகாலமாக தொடர்கிறது. அவ்வாறே நமது சமுதாயமும் பயிற்றுவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும்.
"தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும் வரை, இதுபோன்ற தற்கொலைகள் தவிர்க்கமுடியாத சாதாரண நிகழ்ச்சிகளாகவே நமது சமுதாயத்தில் உலாவரும். வெவ்வேறு துறைகளில் ஈடுபாடுள்ள வல்லுனர்கள் (மாணவர்கள்) நமக்குக் கிடைக்கப் போவதில்லை. இந்த சமுதாயம் சமச்சீரான பாதையில் முன்னேறப் போவதுமில்லை என்பதே நிதர்சனம். அதோடு மறுமதிப்பீடு என்பது என்ன ? அது எதற்கு தேவைப்படுகிறது ? அது சரியான முறையில் செய்யப்படுகிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
மறுமதிப்பீடு
தேர்வு முடிவுகள் வந்தபிறகு, மதிப்பெண்கள் சரியாக வரவில்லை என்றால் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து (Revaluation) சில மாணவர்கள் தங்களின் சரியான மதிப்பெண்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் தங்களது அலைச்சல், போக்குவரத்து செலவுகள் சேர்க்காமல் ஒவ்வொரு பாடத்திற்கும் 200 முதல் 500 ரூபாய் மறுமதிப்பீட்டிற்கு செலுத்த வேண்டியுள்ளது. இருப்பவன் பணத்தைக் கட்டி மறுமதிப்பீடு செய்கிறான். இல்லாதவன் என்ன செய்வான் ? பணத்தைச் செலுத்த முடியாதவன் தனக்கு நியாயமாக வரவேண்டிய மதிப்பெண்களை இழக்கிறானே. இது யார் குற்றம் ?
நமது நாட்டில் தனியார் பேருந்தில் செல்ல பணம் இல்லாமல் மணிக்கணக்கில் காத்திருந்து நகரப்பேருந்துகளில் செல்லும் மாணவர்களும், தங்கிப் படிக்க வீடில்லாமல் இரவு நேரத்தில் பிளாட்பாரத்தை வீடாக்கிக்கொள்ளும் மாணவர்களும் லட்சக்கணக்கில் இருக்கத்தானே செய்கிறார்கள். இவ்வாறான சூழலில் வளரும் ஒரு மாணவனால் எவ்வாறு தனது மதிப்பெண்களை சரி செய்துகொள்ள முடியும் ?
மறுமதிப்பீட்டிற்கு மாணவன் ஏன் பணம் செலுத்த வேண்டும் ? தவறு அவனுடையதா ? மறு மதிப்பீட்டில் ஒருவன் முன்பைவிட அதிக மதிப்பெண் பெற்றால், இதற்குமுன் மதிப்பீடு செய்த ஆசிரியர் சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்றுதானே பொருள் ? தவறு ஆசிரியரிடமும் அரசிடமும் உள்ளது. உங்களின் தவறுகளை சரி செய்ய மாணவன் ஏன் பணம் செலுத்த வேண்டும் ? உங்கள் தவறுக்கு அவன் ஏன் பலியாகவேண்டும் ?
முதலில் நமது கல்வி முறையே தவறானது. இதில் மறுமதிப்பீடு என்பது கீழ்த்தட்டு மக்களைப் பாதிப்பதாகவே உள்ளது. மறுமதிப்பீடு செய்யும் முறையை கட்டாயம் மாற்றுவது அவசியம் என்றே எனக்குப்படுகிறது.
அன்புடன்,
அகல்
தோல்வி அடைந்தவர் தான் தேர்ச்சி பெற்ற அளவுக்கு எழுதி இருக்கிறோம் என்றால் மறு மதிப்பீடு செய்ய அனுமதிக்கலாம்.மேலும் மறு மதிப்பீட்டில் பெரும்பாலும் பலருக்கு மதிப்பெண்கள் குறைந்தே உள்ளது. ஒரு சிலருக்கு மட்டுமே கோடுதல் மதிப்பெனால் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ReplyDeleteஎனக்குத் தெரிந்தவரை அவரவர் தகுதியை விட கூடுதல் மதிப்பெண்கள்தான் வழங்கப் படுகிறது.
கருத்திற்கு மிக்க நன்றிகள் சார்...
Deleteநிச்சயமாக மறுமதிப்பீடு மாற்றப்பட அல்லது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றே...
ReplyDeleteநல்ல சிந்தனை
மிக்க நன்றி நண்பரே...
Deleteதவறாக மதிப்பீடு செய்த ஆசிரியர்களிடம் மதிப்பீடு செய்ததற்கான பணத்தை திருப்பி வாங்கினால் தான் இந்த நிலை மாறுமோ...? ஆசிரியர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது...
ReplyDelete// தவறாக மதிப்பீடு செய்த ஆசிரியர்களிடம் மதிப்பீடு செய்ததற்கான பணத்தை திருப்பி வாங்கினால் தான் இந்த நிலை மாறுமோ...? // இது நல்ல யோசனையா இருக்கு தனபாலன் சார் :)....
Deleteஉண்மையில் நுணுக்கமாக மதிப்பீடு செய்தால் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனின் மதிப்பெண் கூட 10 சதவீதம் அளவுக்கு நிச்சயமாக குறைக்க முடியும். ஆசிரியர்கள் தவறு காரணமாக மாணவனின் மதிப்பெண்கள் குறைவது என்பது மிக மிக அரிது.அதனால் மறு மதிப்பீடு செய்வது என்பது தவிர்க்கப் பட வேண்டியதே! தேர்வு எழுதியவர்களின் விடைத்தால் நகல் பெற்று ஆய்வு செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்தான் வழங்கப் பட்டிருக்கும்.
Deleteசிறு தவறுகள் நேர்வதற்கு காரணம் ஒரு நாளைக்கு அதிக விடைத்தாள்களை திருத்த செய்வது. குறுகிய காலத்தில் முடிவுகள் வெளியிட வேண்டிய அவசரத்தில் செயல் படுவது போன்றவையே.
முன்பெல்லாம் +2 ரிசல்ட் ஜூன் ஜூலை மாதத்தில்தான் வெளியாகும்.
கல்வித்துறையின் முக்கிய நோக்கம் மாணவன் யாரும் பாதிக்கப் படக்கூடாது என்பதே!
மறு மதிப்பீட்டை
ஒரு மூன்று நாட்களாக தான் உங்களுடைய வலைப்பதிவை எனக்கு தெரியும் . சமுதாய உணர்வோடு எழுதும் உங்களுடைய எழுத்துக்கள் என்னை ரொம்பவே ஈர்த்து விட்டது. நீங்க எழுதி இருக்கற ஒவ்வொரு விஷயங்களும் சிந்திக்க வைக்கிறது. keep writing....
ReplyDeleteகருத்திற்கு நன்றிகள் சுதா... முடிந்தவரை நல்ல பதிவுகளைக் கொடுக்க முயற்சிக்கிறேன்... தொடந்து இணைந்திருங்கள்...
Delete