Thursday 21 November 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 25

***

நிலவின் பிரிவில்
தவிக்கும் இரவு
அமாவாசை !

***

இழவுவீடு
அறியாத உறவு
இருந்தும் அழுகிறது
பறை !

***

உனக்காக நான் என்னை
மாற்றிக் கொள்கிறேன்
என்று நீ சொல்லும்போதெல்லாம்
உனக்காக நான் என்னை
மாற்றிக் கொள்கிறேன் !
 

***

இன்னும்
அதிகாலைச் சோம்பல்
களையவில்லை நீ
உனை ஒளிந்து நின்று
வேடிக்கை பார்க்கிறது
ஜன்னலோரச் சூரியன் !

***

மழை பெய்கிறது
உள்ளே வா 
என்கிறாள் அம்மா
அவள்
கரையான் கூட்டிற்கு
குடைபிடித்துக்
கொண்டிருக்கிறாள் !

***

கீழ்சாதிக்காரன்
நுழைய அனுமதி
இல்லாத கோவில்
உச்சியில் எச்சில்
உமிழ்கிறது காகம் !
 

***

ஒரு கவிதை
எழுதிவிட நினைத்து
காத்திருந்த இரவு
எழுதாமல் நகர்ந்து
கொண்டிருக்கையில்

செல்போன்
வாயிலாக
ஹலோ என்கிறது
ஒரு கவிதை !

***

அந்த நள்ளிரவு நேரத்தில்
என் நெற்றியில்
ஒற்றை முத்தமிட்டுவிட்டு
யாரும் பார்க்கவில்லை
என்று சொல்லி 
புண்முறுவலிடுகிறாய் நீ

வெளிச்சத்தை
அணைத்துவிட்டு
தனது இருப்பை
உறுதி செய்கிறது
மின்சாரவிளக்கு !

***

ஒரு அகதிக்கு
பின்வீட்டை
சுத்தம் செய்து 
கொடுத்தாள் அம்மா

அகதியானது
பல கரப்பான்
பூச்சிகள் !


***

உன்னோடு 
செலவு செய்த
மணித்துளிகளெல்லாம்
கவிதையாகிறது

கவிதையின் தலைப்பாய்
நீயாகிறாய் !

***

8 comments:

  1. அனைத்தும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    (நீண்ட நாட்கள் கழித்து....?)

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க தனபாலன் சார்.. பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு... அமெரிக்காவின் ஒரு மூலையில வேலை, சமையல் அப்டின்னு நேரமில்லாம போயிட்டு இருக்கு.. நன்றி சார்...

      Delete
  2. வணக்கம்
    மனதை கவர்ந்த கவிதை அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்...

      Delete
  3. கவிதைகள் அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க குமார் சார்.. கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி..

      Delete
  4. நல்ல சுவையான காதல் கவிதைகள். அடிக்கடி எழுதுங்கள். அமெரிக்காவில் இருப்பது எங்கே? - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை( சில மாதம் நியூ ஜெர்சி)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் .. இப்போது சாண்டியாகோவில் இருக்கேன்...

      Delete