Thursday, 27 September 2012

வாழ்க்கை வாழ்வதற்கே

பிறப்பில் கருப்பே என்று
காக்கை கவலைப் படவில்லை
ஏறி மிதிக்கிறார்களே என்று
எருது கவலைப் படவில்லை
கோடையில் சபிக்கிரார்களே என்று
ஞாயிறு கவலைப் படவில்லை..!

நாளை நமது என்று
நம்பிக்கையுடன் நடைபோட்டு
எழுது உன் பெயரை இமயத்தில்
எட்டுத் திக்கும் முழங்க...
எவரெஸ்டும் ஏங்கட்டும்
உன் உயரத்தை எட்ட..!

உன்னை ஏளனம் செய்தோர் வீழ்வார்
ஆதவனைக் கண்டு அகலும் பனி போல..!

அவர்கள் எலும்புக்கு அலையும் நாய்கள்.
தாமரையில் நீர் போல,
தண்ணீரில் என்னை போல தழுவிக் கொள்வர்,
பானையில் சோறிருந்தால் சொந்தமாகும்
பூனை போல...!

பாவம்.!
இந்த சபிக்கப்பட்ட உலகத்திற்கு
சாபமிட மட்டுமே தெரியும்...

நீ மேகமாய் இருப்பதால்
காற்றாய் வரும் தோல்விகள் - உன்னை
களைத்து விடுகிற தென்று கவலை கொள்ளாதே.
காற்றால் உன்னை களைக்கத்தான் முடியும்,
எதிர்காலத்தில் அடை மழையாய் அடிக்கப் போகும்
உன்னை அழிக்க முடியாது..!

நீ சிறிய புல்லாயினும்
உன் மீது புயலடித்தாலும் புன்னகை கொள்.
புயலால் புல்லை வளைக்கத்தான் முடியும்
ஒடிக்க முடியாது..!

சிந்தித்து பார்..!
பாலை வனமாக இருந்தாலும்
பனைமரம் வாழ்வதற்கு கற்றுக்
கொள்ள வில்லையா.?

கண்ணுக்கு தெரியாத உயிரணுவும்
கடும் போட்டியிட்டு கருவறை
சேர்வ தில்லையா.?

ஒரு நாள் வாழும் ஈசலே
உயரப் பறக்க ஆசைப் படும் போது,
நீ ஏன் தோல்விகளைக் கண்டு
துவண்டு போகிறாய்..!

தூங்கும் உன் தாகத்தை தட்டி எழுப்பு...
சோகம் உன் இதயத்தைக் கீற வேண்டாம்
உன் வேகம் கீரட்டும்..!

உன் துக்கங்களை தூக்கிலிட்டு
தூளி கட்டித் தொங்க விடு..
உன் சோகத்திற்கு தெருக்கோடி முனையில்
சோறு போட்டு சொல்லாமல் அனுப்பிவிடு..!

முயற்சியை உன் மனதில்
பதர் நீக்கிய விதை யாக்கு...

காலம் உன் கனவிற்கு கை கொடுக்கும்
வானம் உன் நிழலுக்கும் குடை பிடிக்கும்
மூடிய இருளும் உன் முன் முழு நிலவாகும்
தோல்விகள் உனக்கு தொடா வானமாகும்..

அன்று,
உன்னை ஏளனம் செய்தோரை
ஏறி மிதி..
இல்லை யென்று சொல்வோருக்கு
வாரிக் கொடு...

வாழ்க்கை வாழ்வதற்கே
உலகம் வெல்வதர்க்கே..!

No comments:

Post a Comment