Tuesday 26 March 2013

மதவெறி பிடித்த ப்ளாகர்ஸ்


வணக்கம் !

சில மாதங்களாக இந்த வலைப்பூவிலும், எனது முகநூள் பக்கத்திலும் (காக்கைச் சிறகினிலே) கதை, கவிதை, சமூக விழிப்புணர்விற்கான கட்டுரைகள் என எழுதிவருகிறேன். வலைப்பூவில் எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து, மற்ற பதிவர்கள் எழுதும் கலை, சமூகம் சார்ந்த பதிவுகள், கட்டுரைகள், கருத்துக்கள் என நேரம் கிடைக்கும்போது வாசித்துக்கொண்டு வருகிறேன். சில பதிவர்கள் கவிதை, கதையென தங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் படைப்புகளை நாகரீகமாக கொடுக்கிறார்கள்.

சில பதிவர்கள் சமூகப் பிரச்சனைகளைப் பற்றி எழுதாவிட்டாலும், அவர்களின் எழுத்துக்கள் யாரையும் புண்படுத்துவதாக அமையாமல் கண்ணியத்தை கடைபிடிக்கிறது.

வெகு சில பதிவர்கள், மிகவும் சிறப்பாக, நடுநிலையாக, மதம் சாராமல் சமூகப் பிரச்சனைகளை அணுகுகிறார்கள். மத உணர்வுகளை புண்படுத்தாமல் நடுநிலையாக கட்டுரைகளை படைக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் தங்கள் மதங்களையும் மதக் கொள்கைகளையும் கட்டிக்காப்பதாக நினைத்துக் கொண்டு, மதக் கோட்பாடுகளை மீறும் விதமாக பதிவுகளை இடுகிறார்கள். அடுத்தவரை தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள். இங்கு மதப்பற்று, மத வெறியாக மாறுகிறது.

சில பதிவர்கள் தங்கள் மதத்திற்காகவே வலைப்பூக்களையும் முகநூள் பக்கங்களையும் நடத்துகிறார்கள். அவ்வாறு நடத்துவோர், தங்கள் மதத்தின் கொள்கைகளை, நாகரீகமாக, அடுத்த மதங்களை கீழ்த்தரமாக விமர்சிக்காமல் எழுதும் பட்ச்சத்தில் அது வரவேற்கத்தக்கதே. ஆனால் நடுநிலைத் தன்மையோடு அடுத்த மதத்தின் மக்களையும், கொள்கைகளையும் மதித்து எழுதும் மதம் சார்ந்த பதிவர்களை, சொற்ப எண்ணிக்கையில் பார்ப்பதும் அரிதாகவே இருக்கிறது என்பதே எதார்த்தமான உண்மை.

அடுத்த மதத்தை குறைத்துப் பேசுவதற்கும், தங்களை உயர்த்திக் கொடி பிடிக்கவும் மட்டுமே இங்கு பெரும்பான்மையான கூட்டம், மதத்தின் அடிப்படையில் பல பிரிவுகளாகத் திரிகிறது. இவர்கள் எழுதும் கட்டுரையைவிட, அதற்கு இடப்படும் பின்னூடங்கள் (கமெண்ட்) ஒரு மதவாதப் போரை நடத்துவது மட்டுமில்லாது, எதிர் எதிர் விமர்சகர்களின் குடும்பங்களையும் மிகவும் கீழ்த்தரமாக வார்த்தைகளைக் கொண்டு விமர்சிக்கிறார்கள். இவ்வாறு விமர்சிப்போர், தங்கள் மதக் கொள்கைகளை கடைபிடிப்பதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

தவறாக தகவலைப் பதியும் தனது மதத்தைச் சார்ந்த பதிவரை, ஒரு நடுநிலை வாதி சுட்டிக் காட்டும் வேளையில், மதவாதிகள் கூட்டம் ஒன்று சேர்ந்து, இவன் மதத்தின் கொள்கைகளுக்கு புறம்பாகப் பேசுகிறான் என்று அவனை ஒடுக்குவதால், நடுநிலைவாதிகள் இது போன்ற விவாதங்களில் பங்கெடுப்பதில்லை. அதேபோல், நீ இந்த நாட்டைச் சார்ந்தவனல்ல என்றும், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஒருசாரர் கூறுவது மிகவும் அபத்தமாகவே படுகிறது.

நான்கு தலைமுறைக்கு முன்பு போய்ப்பார்த்தால், வேற்று மதத்தில் இருப்பவனும், இந்நாட்டின் மைந்தனாகவே இருந்திருப்பான். சிலர் விரும்பி மதம் மாறியிருப்பார்கள் சிலர் கட்டாயத்தின் பேரில் மாற்றப்பட்டிருப்பர்கள். அவர்களை விமர்சித்து வெளியேறச் சொல்லும் அருகதை எவருக்கும் கிடையாது. அவர்களும் இந்நாட்டின் மைந்தர்களே என்ற அடிப்படையை புரிந்துகொள்ள பலர் மறுக்கிறார்கள். நல்லவர் கெட்டவர் நிறைந்த நாட்டில், ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது, தீவிரவாத முத்திரை குத்தப்படுவதும் ஏற்றுக்கொள்ளப் பட இயலாத ஒன்று.

அதேபோல், ஒரு மதத்தில் இருக்கும் ஒரு சிலர் செய்யும் தவறை சுட்டிக்காட்டினால், எங்கள் மதத்தில் எவரும் தவறே செய்யமாட்டார் என்ற கண்ணோட்டத்தில், சற்றும் யோசிக்காமல், கண்மூடித்தனமாக கடும் விவாதங்களுக்கு வந்து நிற்கிறார்கள். தவறின் ஆழத்தை புரிந்துகொண்டு, அதைச் சுட்டிக்காட்டி திருத்துவதற்கு இவர்கள் முனைவதில்லை. மாறாக அதை மறைக்கவே முற்படுகிறார்கள். சிலர் தீவிரவாத செயல்களையும் ஞாயப்படுத்தும் பதிவுகளை எழுதி, தவறான சிந்தனைகளை மற்றவர்களுக்கு திணிக்கவு
ம் தவறுவதில்லை.


ஒரு மதத்தின் கொள்கைகளை பாராட்டும் போது ஆதரிக்கும் பலர், அதே மதத்தை சார்ந்த சிலர் செய்யும் தவறுகளைச் சுட்டி காட்டினால், தாங்கிக்கொள்ள மனமில்லாமல் தரக்குறைவான வார்த்தைகளை வீசுகிறார்கள். இது அவர்களின் குறுகிய மனப்பான்மையையே காட்டுகிறது. அனைத்து மதத்திலும் நல்லவர், கெட்டவர், தீவிரவாதி என மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் தவறுகளை ஏற்றுக்கொண்டு அதை திருத்திக் கொள்ள முன்வராமல் வீண் விவாதத்தில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது.

எனது ஊர் ஹிந்து மக்கள் நிறைந்தது. அருகில் உள்ள ஊர் மக்கள் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் இந்த வலைப்பூ உலகத்திற்கு வரும்வரை, வேறுபட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் நாங்கள் என்ற எண்ணம் ஒரு முறையேனும் வந்ததில்லை. அவ்வளவு இணக்கமாக சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் இதே நிலைதான். சுயலாபத்திற்காக சில மதவாதக்கட்சிகள் இதைக் குலைக்கிறது. அவர்களோடு சேந்து, இன்றைய இளைய சமுதாயத்தில் பலர், அடிப்படை அறிவை இழந்து இணையதளங்கள் வழியாக செயல்படுகிறார்கள்.

வாழ்வியலை கற்றுக்கொடுத்து மனிதனை நெறிபடுத்தவே மதங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் மதத்தின் கருப்பொருளை உணராமல், சரியாக புரிந்துகொள்ளாமல் இங்கு நடக்கும் மதவாதப் போர்கள் சமூகத்திற்கும் அதன் முன்னேற்றத்திற்கும் மிகப்பெரும் பெரும் பின்னடைவை உருவாக்கி கொண்டிருக்கிறது மக்களின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கிறது என்பதை இவர்கள் அறிவதில்லை. துரதிஷ்ட வசமாக இந்த மதவாதத் தாக்குதல்களை முன்னின்று நடத்துவோர். இக்கால இளைஞர்களே.

வேறு வேறு மதத்தின் கொள்கைகளை அதன் கோட்பாடுகளை, பாராட்டிப் புகழ்ந்த அறிஞர்கள் வாழ்ந்த நாடு இது. அப்படியான நாட்டில், சிலர் ஆயுதம் கொண்டு தீவிரவாதம் செய்கிறார்கள். சிலர் தங்கள் தீவிரவாதத்தை எழுத்தின் வாயிலாக இணையத்தில் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இதைத்தான் இவர்களுக்கு அவரவர் மதம் கற்றுக் கொடுத்ததா ?. எனது கூற்றுப்படி "அடுத்த மதத்தின் கொள்கைகளை எப்போது ஒருவன் தரக்குறைவாக விமர்சிக்கிறானோ, அப்போதே அவன் தனது மதத்தின் கொள்கைகளைச் சரிவர பின்பற்றவில்லை என்றே பொருள்".

மக்களிடையே ஓரளவேனும் அமைதியை நிலைநாட்ட, இந்த மதவாதப் போரும், மதவெறி பிடித்த ப்ளாகர்ஸும் ஒழிய வேண்டும்.

அன்புடன்,
அகல்

29 comments:

  1. இன்னைக்கு தான் உங்க ப்ளாக் வரேன் அருமையான கருத்து சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பரே சக்கரகட்டி... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தல ...

      Delete
  2. மன வளர்ச்சி குறைவானவர்களால் தான் பிற மதங்களை இழிவு
    படுத்த முடியும் என்பது எனது கருத்து .உங்கள் வேதனை புரிகிறது
    இவைகள் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்து விட்டால் அடுத்த
    கட்டமாக மதம் என்னும் பெயரால் இன்னும் ஒரு தவிர்க்க முடியாத
    கொடும் யுத்தம் அப்பாவி மக்களுக்குள்ளும் நுழையாமல் இருக்கும் .
    சிறப்பான பகிர்வு .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்...

      Delete
  3. தங்களுக்கு தெரிந்தவரை, நடுநிலையுடன் எழுத முயன்றுள்ளீர்கள். அருமை.

    ஒரு சாதாரண முஸ்லிம் என்ற முறையில் என் சிறு விளக்கம்.

    எனக்கு தெரிந்தவரை, முஸ்லிம்கள் இணைய / பதிவுலகில் அடி எடுத்து வைத்ததே சற்று தாமதமாக 2005ஆம் ஆண்டு சமீபமாக என்று எண்ணுகிறேன், அதுவும் ஒரு சிலரே. முஸ்லிம் பதிவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது 2009 / 2010 ஆம் ஆண்டு முதல் என்று நினைக்கிறேன்.

    இது ஒரு புறம் இருக்க, (முஸ்லிம்களில்) இன்னமும் சொந்தமாக வலைப்பூ கூட தொடங்காத என் போன்ற, சாதாரண வாசக மனப்பாண்மை கொண்டவர்கள் பதிவுலக விவாதங்களில் பங்கு பெற / மாற்று கருத்துக்களை சொல்ல தூண்டியது எது??

    தமிழ்மணம் / பதிவுலகம் அறிமுகம் ஆகும் முன்பு, 1999ஆம் ஆண்டு தொடக்கமாக திண்ணை போன்ற சமூக (?!) இணைய இதழ்களில் வெளியிடப்பட்ட / திரித்து கூறப்பட்ட, இரு பிரிவினரிடையே காழ்ப்புணர்ச்சியை தூண்டக்கூடிய, வக்கிர சிந்தனையை அதிகரிக்குமாறு எழுதப்பட்ட சில மதம் சார் கட்டுரைகள் மறுப்பு கூற
    ஆளில்லாத நிலையில் என் போன்ற வாசகர்களால் படித்து வரப்பட்டது. இது தொடரவே, நான் அது போன்ற தளங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொண்டேன். ஆனால் அந்த தளங்கள் "அந்த குறிப்பிட்ட" பணியினை இன்றும் தவறாது செய்து வருகின்றன.

    ஆனால், அதே மத துவேஷம் வளர்க்கும் கருத்துக்கள் பதிவுலகிலும் தொடர்வது கொடுமையே.

    நீங்கள் அறிந்த இஸ்லாமிய பதிவர்களின் பதிவுலக வயது அதிக பட்சம் 6 முதல் 7 ஆண்டுகள் வரை இருக்கக்கூடும் (அதற்க்கு முந்தைய கால கட்டமோ இன்னும் கொடுமை, மாற்று கருத்துக்களை கூற கூட சொந்த ஊடகங்கள் இல்லை), ஆனால் இஸ்லாமிய எதிர் பதிவர்களின் இணைய வயது குறைந்தபட்சம் 12ஆண்டுகள் முதல் இருக்கும். நான் அறிந்த பல இஸ்லாமிய எதிர் பதிவர்கள் சிலர் இறந்தும், பலர் ஓய்விலும் இருக்கிறார்கள். இன்றைய கால கட்டத்தில் பல புதிய இஸ்லாமிய எதிர் பதிவர்கள் வரத்தொடங்கியுள்ளார்கள். இது தவிர நாத்தீகம் என்ற போர்வையில் இஸ்லாத்தை தரம் தாழ்ந்து, நாகரீகமற்ற முறையில் விமர்சிக்கும் கூட்டம் வேறு.

    இப்படி ஆகிவிட்ட சூழ்நிலையில் இன்றும் பதிவுலகம் வருவது சிறந்த வாசிப்பு அனுபவம் பெறவா, அல்லது மதம் சார்ந்த கருத்து மோதல்களில் ஈடுபடவா என்றே தெரியவில்லை.

    நான் யாருக்கேனும் இந்த பதிவுலகை வாசிப்பதற்கு அறிமுகப்படுத்துவேனா என்று யாரேனும் கேட்டால் நிச்சயமாக மாட்டேன் என்று கூறுவேன். இந்த குப்பை கூளங்களை விட்டும் அவர்களாவது விலகி இருக்கட்டும்.

    என் போன்ற இஸ்லாமியர்கள் எதிர் வாதம் புரிவது இஸ்லாத்தை வளர்க்கவா, அல்லது அது போன்ற பதிவர்களின் காழ்ப்புணர்ச்சியை தூண்டும் கருத்துக்களை தர்க்கரீதியாக எதிர்க்கவா?

    // மக்களிடையே ஓரளவேனும் அமைதியை நிலைநாட்ட, இந்த மதவாதப் போரும், மதவெறி பிடித்த ப்ளாகர்ஸும் ஒழிய வேண்டும். //

    உங்கள் கருத்துதான் என் கருத்தும். மக்களிடையே ஓரளவேனும் அமைதியை நிலைநாட்ட, இந்த மதவாதப் போரும், மதவெறி பிடித்த, மத துவேஷத்தை வளர்க்கும் ப்ளாகர்ஸும் ஒழிய வேண்டும்.

    பிற மதத்தை / அதன் கடவுள்(கள்) ஐ தரம் தாழ்ந்து விமர்சிப்போர் யாராகிலும் அவர் ஒரு சமூக விரோதியே.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நெருக்கமான முஸ்லிம் நண்பர்கள் எனக்கும் இருக்கிறார்கள்.. ஒத்த கருத்தை அழகாக பதிந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே... ஆம் மதத்தின் பெயரால் நமது மக்களை பிரிக்க பலர் போட்டிபோடுவதை அறியாமல், இங்கு சிலர் வக்கிரமாக எழுதுவது வருந்தத்தக்கதே... இணக்கமுடன் இந்த சமுதாயம் வாழ இவர்களை முதலில் ஒழிக்க வேண்டும்...

      Delete
  4. நடு நிலையான அருமையான பகிர்வுக்கு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ரமணி ஐயா..

      Delete
  5. மதங்களை ஒப்பிடுவது சரியல்ல.எல்லா மதத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்துதான் இருக்கிறார்கள்.இது போன்ற பதிவுகளை தவிர்ப்பது நல்லதுதான்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி முரளி சார்..

      Delete
  6. /// அடுத்த மதத்தின் கொள்கைகளை எப்போது ஒருவன் தரக்குறைவாக விமர்சிக்கிறானோ, அப்போதே அவன் தனது மதத்தின் கொள்கைகளைச் சரிவர பின்பற்றவில்லை என்றே பொருள் ///

    இதை அவரவர் உணர வேண்டும்... திருந்த வேண்டும்... திருந்த விட மாட்டார்கள் அவர்களுக்கு அற்புதமான சுட்டிகளுடன் பின் தொடர்பவர்கள்... துணைக்கு ஆள் சேர்ந்து விட்டால் இன்னும் வெறி அதிகமாகும்...

    நாம் செல்லாமல் இருப்பதே உத்தமம்... பல தளங்களை இது போல் dashboard-லிருந்து உடனே எடுத்து விடுவேன்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவும் சரியாய் சொன்னிங்க தனபாலன் சார்... வருகைக்கு நன்றி...

      Delete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அகல்,

    மிக அழகாக சொல்லியிருக்கிண்றீர்கள். well done...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரா...

      Delete
    2. இங்க என்ன நடக்குது கொஞ்சம் அறிவோடு நடக்கனும் தமிழ்ல வணக்கம் என்று ஒரு அழகான வார்த்தை இருக்கும் போது பொது கருத்தில் வலிய வந்து மதத்தை சொறுகுவதில் என்ன வெங்காயம் வந்து விடப்போகிறது .

      Delete
  8. சலாம் சகோ.அகல்,
    அருமையான & அவசியமான ஆக்கம்.
    ஒரு குறிப்பிட்ட சமயத்தை பற்றி அந்த சமயத்தை கடுமையாக எதிர்ப்போரால் மட்டுமே பொய்யும் புரட்டுமாக காழ்ப்புணர்வோடு இணையத்தில் பதிக்கப்படும் விஷங்கள் பதிவுகளாக மிகுதியாகும் வேளையில், பின்னாளில் அவையே உண்மை போல அச்சமயம் பற்றிய தேடல் கொண்ட புதியவர்களுக்கு தோன்றிவிட வாய்ப்புண்டு. எனவே, இது போன்ற குப்பைகளுக்கு பெரும்பாலும் விளக்கம் சொல்லவே இணையத்தில் அந்த குறிப்பிட்ட சமயத்தில் இருந்து பதிவர்கள் வர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே, தங்கள் பதிவுகளில் சமயம் சாராத பொதுவான விஷயங்களை எழுத இவர்கள் நினைத்தாலும் கூட, பொய்களுக்கு எதிரான உண்மை விளக்கமும் ஆதாரத்துடன் தக்க பதிலும் தரவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இவர்கள் அவர்களால தள்ளப்படுகிரார்கள் என்பதுதான் நிதர்சனம்..!

    /// அடுத்த மதத்தின் கொள்கைகளை எப்போது ஒருவன் தரக்குறைவாக விமர்சிக்கிறானோ, அப்போதே அவன் தனது மதத்தின் கொள்கைகளைச் சரிவர பின்பற்றவில்லை என்றே பொருள் ///---சரிதான்..!

    //// மக்களிடையே ஓரளவேனும் அமைதியை நிலைநாட்ட, இந்த மதவாதப் போரும், மதவெறி பிடித்த ப்ளாகர்ஸும் ஒழிய வேண்டும். ////----சரிதான். மாற்றுக்கருத்து இல்லை..!

    இன்னொரு முக்கியமான விஷயம் மட்டும் உங்கள் பதிவில்... விடுபட்டுள்ளது. அதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    பிற சமயம் பற்றி தூற்றி எழுதி அமைதியை குலைத்து மத சண்டையை மூட்டுவோர்... அதிகமாக நாத்திகவாதிகளே..! இவர்களே தற்போது பதிவுலகில் எல்லா பிரச்சினைக்கும் ஆணிவேர்..! மதஎதிர்வெறி பிளாக்கர்ஸ் ஒழிந்து விட்டாலே போதும்... மதவெறி பிளாக்கர்ஸ் அவர்ளோடு கூடவே ஒழிந்து விடுவார்கள்..!

    ReplyDelete
    Replies
    1. என்னைப் பொருத்தவரை, நாத்திகத்தின் உச்சகட்டம், அனைத்து மதத்தையும், மத மக்களையும், மதம் சொல்லும் நல்ல கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வது (கடவுளைத் தவிர)... கருத்திற்கு மிக்க நன்றி ஆஷிக்... இதுபோன்ற செல்களை செய்வோர், திருந்துவார்கள் என்று நம்புவோமாக...

      Delete
  9. நல்ல கருத்துக்கள் அகல்.
    // இந்த மதவாதப் போரும், மதவெறி பிடித்த ப்ளாகர்ஸும் ஒழிய வேண்டும்.

    இது நடந்தால் நன்றாக இருக்கும், ஆனால் சிந்திப்பார்களா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி ஜீவா பரமசாமி சார்...

      Delete
  10. என்ன ?»»»»»த்துக்கு இங்கு ஒரு கூமுட்டஅரபி யில் நன்றியை தமிழ் எழுத்தில சொல்கிறான் அரபி யிலே எழுத்து இல்லையா ? இல்லை உங்களுக்குதமிழில்சொன்னால்புரியாதா?

    ReplyDelete
  11. என்ன ?»»»»»த்துக்கு இங்கு ஒரு கூமுட்டஅரபி யில் நன்றியை தமிழ் எழுத்தில்சொல்கிறான் அரபி யிலே எழுத்து இல்லையா ? இல்லை உங்களுக்குதமிழில்சொன்னால்புரியாதா?

    ReplyDelete
  12. சலாம்,

    நல்லதொரு அலசல் சகோ அகல். வலைப்பூக்களிலும், பேஸ்புக்கிலும் ஆக்கத்திற்கு கீழாக தொடரும் சில பின்னூட்டங்களை பார்க்கும் போது உங்கள் கருத்தில் மாற்று எண்னங்கொள்ள முடியவில்லை. தவறுதலான புரிதலுடன் சிலரும், வேண்டுமென்ற சிலரும் வீசும் வார்த்தைகளின் விளைவால் 'வரம்பிற்குள் உட்பட்டு எழுதுவோர் சிலரின் மீதும் மதவாத முத்திரை' குத்தப்படுவது தான் உண்மையில் வேதனையானதும் கூட..

    அருமையான நடுநிலை பதிவிற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு எனது நன்றிகள் குலாம்..

      Delete
  13. // சங்கர் ಶಿಪಮೊಗ್ಗ26 March 2013 13:06

    என்ன ?»»»»»த்துக்கு இங்கு ஒரு கூமுட்டஅரபி யில் நன்றியை தமிழ் எழுத்தில்சொல்கிறான் அரபி யிலே எழுத்து இல்லையா ? இல்லை உங்களுக்குதமிழில்சொன்னால்புரியாதா? //

    சகோ அகல், ஒரு மதசார்பற்ற பதிவிற்கே இப்படியான பின்னூட்டமென்றால்... ?????????
    பதில் தரும் பொறுப்பை உங்களிடமே விடுகிறேன்.

    ReplyDelete
  14. ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு இப்பதிவு.

    அமைதியான வாழ்வுக்கு இம்மாதிரிப் பதிவுகள் இன்னும் தேவை.

    பிரர் மனம் நோகாத வகையில், கருத்துகளைச் சொல்லும் மனப் பக்குவம் ஒரு சிலருக்கு இல்லை என்பது உண்மைதான்.

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி பரமசிவம் சார்...

      Delete
  15. அனைத்தையும் தனி மனிதத் தாக்குதல் இல்லாமல் விவாதிக்கவும், கருத்துரைக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு, இஸ்லாமோ, கிறித்தவமோ, இந்துவோ என்னவோ அவரவர் கருத்தை பதிய அவரவருக்கு உரிமை உண்டு நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவரை நிறுத்துச் சொல்லு என சொல்ல முடியாது. தரக்குறைவின்றி பிரச்சனைகளை, சிக்கல்களை, அறிவுக்கு ஒவ்வாதவைகளை சுட்டிக் காட்டவும், பிழைகளை திருத்திக் கொள்ளவும் வலைப்பூ வழி சமைக்கும். உதா. நேரில் மாற்று மதத் தோழர்கள் இதை எல்லாம் விவாதிக்கத் தொடங்கினால் மனக் கசப்பே மிஞ்சும், அங்கு பேச முடியாதவற்றை வலைப்பூ ஊடாக விவாதிப்பது நல்லது. ஒருமையில் விளிப்பது, அசிங்கப்படுத்துவது, தனி மனிதரை, அவரது குடும்பத்தாரை இழிவு படுத்துவது, கோபமாக பேசுவது போன்றவை தவிர்க்கப் பட வேண்டியவை... மதம் சார்ந்த பதிவர்களில் சிலர் கண்ணியத்தோடும், சில மூளைக் கெட்டுப் போயும் உள்ளதை கவனித்துள்ளேன். மூளைக் கெட்டுப் போனவர்கள் வெகு நாட்கள் நிலைத்து நிற்க மாட்டார்கள், அவர்களது கருத்துக்களும் தான். வாய்மையே வெல்லும். நன்றிகள் !

    ReplyDelete
    Replies
    1. // தரக்குறைவின்றி பிரச்சனைகளை, சிக்கல்களை, அறிவுக்கு ஒவ்வாதவைகளை சுட்டிக் காட்டவும், பிழைகளை திருத்திக் கொள்ளவும் வலைப்பூ வழி சமைக்கும். உதா. நேரில் மாற்று மதத் தோழர்கள் இதை எல்லாம் விவாதிக்கத் தொடங்கினால் மனக் கசப்பே மிஞ்சும், அங்கு பேச முடியாதவற்றை வலைப்பூ ஊடாக விவாதிப்பது நல்லது //

      இதில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு.. மதம் சார்ந்த பதிவுகளை முடிந்தால் நேரில் விவாதிப்பது நல்லது. அங்கே வேறொருவரின் தலையீடு இருக்காது.. ஆகையால் விவாதம் செய்வோருக்கிடையே நல்ல புரிதல் இருக்கும்.. ஆனால் வலைப்பூவில், எப்படியும் ஒருவர் அல்லது மற்றொருவர் விவாதத்தை திசை திருப்பி பின்னூட்டம் இடுவர், இது மேலும் மேலும் வளர்ந்து மதப்போரை உருவாக்கும் சூழலே மேலோங்கி நிற்கிறது... வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் இக்பால் செல்வன்...

      Delete