Monday 1 April 2013

ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - கடைசி பாகம்

கதையின் முதல் பாகம்  இங்கே http://kakkaisirakinile.blogspot.com/2013/03/blog-post_25.html




புறாக் குஞ்சுகளை பிடிக்க சுப்பு பொந்திற்குள் கையை நீட்டினான். "யாருடா கோபுரத்துமேல ?" என்று அதிகாரத்தோடு ஒரு குரல் கேட்டதும். கையை லபக்கென்று வெளியே எடுத்தான் சுப்பு. இருவருக்கும் கண்களில் கலவரம் நிறைந்த பயம்.

"டேய் யாரோ வாரங்க, அந்த ஒல்லி பூசாரியா இருந்தா வீட்ல போட்டுக் குடுதுடுவார்டா வாடா போயிடலாம்..." சொன்னான் சுப்பு.

"ஏய் போடா, எனக்கு புறாக்குஞ்சு வேணும்" அடம்பிடித்தான் முகிலன்.

"போடா என் அப்பா பெல்ட்டெடுத்து அடிப்பாரு... நான் போறன்ப்பா" சொல்லிவிட்டு வேப்பம் கொம்பைப் பிடித்து வேகமாக இறங்கினான் சுப்பு.

"டேய் மாட்டிக்காதடா இருடா..." குரலைக் கட்டுபடுத்தி சொன்னான் முகிலன். இருந்தும் அதைக்கேட்காதவனாய், சுப்பு இடத்தைவிட்டு நகர்ந்தான்.

கருமை சூழ்ந்த கோபுரத்தில், பத்துநிமிடம் அமைதியாக அமர்ந்திருந்தான் முகிலன்.கோபுரத்தை சுற்றி குரல் சத்தம் குறைந்ததும், புறாக் குஞ்சுகளை திரும்பிப்பார்த்தான்.

இளம் குஞ்சுகள்... ஒன்றின் மீது ஒன்று படுத்திருந்தது...

புறாவைப் பார்த்த ஆனந்தத்தில், அதைச் சுற்றி கிடக்கும் புறாக் கழிவுகளின் துர்நாற்றம் முகிலனின் மூக்கைத் துளைத்ததாய் தெரியவில்லை. மண்டியிட்டு அமர்ந்துகொண்டு மெல்லச் சிரித்தான்..

இடது கையில் இருந்த மஞ்சள் நிற துணிப்பையை விரித்தான். புறாக் குஞ்சைப் பிடிக்க பொந்திற்குள் பொறுமையாக கையை நீட்டினான். முடி கூட வளராத இளம் குஞ்சுகளின் சூடு, முகிலனின் கையில் பாய்ந்தது. இரண்டு குஞ்சுகளும் மஞ்சள்பைக்குள் தஞ்சம் அடைந்தது.

எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, மெதுவாக இறங்கினான்.வேப்பம் பட்டை கிழித்து, அவன் நெஞ்சில் பட்ட சிறிய காயத்தைச் சுற்றி ரத்தம் கட்டியது. அதை அவன் கண்டு கொள்ளவில்லை. அந்த எரிச்சலும் அவன் பொருட்படுத்தவில்லை.

பைக்குள் இருக்கும் இரண்டு குஞ்சுகளையும்,உள்ளங்கைகளில் வைத்து கழுத்தோடு அனைத்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தான்.

முகிலனின் மாமா, அத்தை, அம்மா எல்லோரும் வீட்டு வாசலில் உட்காந்து பேசிக்கொண்டிருந்தனர். பையை பின் புறமாக ஒழித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். நெல் மூட்டை அடுக்கிருக்கும் சந்தில் புறக்குஞ்சுகளை வைத்துவிட்டு வெளியே வந்த முகிலனை பார்த்து

"முகில் சாப்புடிறியா ?.."என்றாள் அத்தை.

"ஹ்ம்ம் என்னா கொழம்பு ?"

"சொன்னாத்தான் வருவியா ?" சிரித்துக் கொண்டே கேட்டாள் அத்தை.

ஐந்து நிமிடத்தில், முட்டைப் பொறியல், அவரைக்காய் சாம்பார் மற்றும் ரசத்துடன் வாசலில் போடப்பட்ட பாயில் அமர்ந்துகொண்டு சாப்பிட ஆரம்பித்தான். ஒரு கரண்டி சோறில் பாதி முடித்திருப்பான். திடீரென எழுந்தான் முகிலன்.

"என்னையா ஆச்சு ?" ஒன்றன் பின் ஒன்றாக எல்லோரும் கேட்டனர். அனைவருக்கும் சேர்த்து

"எனக்குப் போதும்" என்ற பதிலை காற்றில் கலந்துவிட்டு ஓடினான்.

உண்மையில் அவனுக்கு பசி அடங்கவில்லை. ஆனால் அவன் உன்னும் போதே, பசியோடிருக்கும் புறாக் குஞ்சுகளுக்கு உணவூட்ட வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது.

அங்கும் இங்குமாய்த் தேடி, அரிசி மூட்டையை கண்டுபிடித்தான். அவன் தோட்டத்தில் வளரும் கோழிகள், குஞ்சுகளுக்கு இரையூட்டும் போது, இரையை உடைத்து குருனையாக்குவதை அவதானித்ததாலோ என்னவோ, இளம் குஞ்சுகளால் முழு அரிசியை உண்ண முடியாதென்பதை உணர்ந்திருந்தான்.

கையளவு அரிசியை அள்ளி, அம்மாச்சி அரைக்கும் அம்மியில் குருனைகளாக நுணுக்கினான்...

ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் நுணுக்கப்பட்ட அரிசியுடன் குஞ்சுகளை நெல் மூட்டை சந்தில் இருந்து வெளியே எடுத்து, மடியில் வைத்து இரையும் நீரும் ஊட்டி விட்டு, பின்பு ஒருவழியாக உறங்கப் போனான்.

அதிகாலையில் எழுந்து முகிலனின் அம்மா ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். முகிலனையும் கிளம்பச் சொன்னாள்.அவனுக்கு தாளாத சந்தோசம், புறாக்குஞ்சுகளை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதில்..

தடபுடலாக தயாராகினான். பேருந்து நிறுத்தத்திற்கு வரும்வழியில்,
"அம்மா ஒன்னுக்கு போனும்..."

"சரி பைய கொண்டா.. " அம்மா சொன்னாள். முகிலனுக்கோ தயக்கம்.

"அதுல என்ன தாண்டா இருக்கு ?... இத கைலவச்சுட்டி எப்டி போவ.. குடு.." என்று பிடிங்கினாள் அம்மா...

"அதுல ஒண்ணுமில்ல..." சொல்லிவிட்டு சிறுநீர் கழிக்க சற்று தொலைவில் போனான் முகிலன்.

பையைத் திறந்துபார்த்தாள் அம்மா... அழகான புறாக்குஞ்சுகள்.

"இளம் குஞ்சுகளை கொன்றுவிடுவானோ ?" என்ற பயம் அவளுக்கு.

ஆனால் புறாக்களைப் பற்றி அவ்வப்போது வீட்டில் அவன் பாடும் புராணங்களும் அதன் மீது அவன் அளவற்ற பற்றும், அவளை சற்று ஆறுதல் படுத்தியது. அதோடு அவனது பிடிவாதத்தை அவள் நன்கு அரிவாள். அதனால் புறக்குஞ்சுகளைப் பற்றி அவனிடம் வாய் திறக்கவில்லை.

ஒருவழியாக இரண்டு பேருந்துகள் மாறி, வீட்டை வந்து சேந்தனர்.

முன்பொருநாள், கதுவாரிக் குஞ்சுகளுக்கு செய்யப்பட்ட கூட்டை, வேட்டைக்கார தாத்தாவிடம் புறாக்களுக்கு வேண்டி வாங்கி வைத்திருந்ததை தேடி எடுத்து, அதனுள் புறாக் குஞ்சுகளை குடியமர்த்தினான்.

தோட்டத்தில் விளைந்த கம்பு, சோளம், அரிசி இவற்றை மாற்றி மாற்றி குருனையாக்கி புறாக்களுக்கு இறையிட்டான்.

பள்ளி போகும் நாட்களில், காலையில் முதல் வேலையாக புறாக்களுக்கு உணவிட்டு விட்டு, குருனைகளை கூண்டிற்குள்ளும் இறைத்து விடுவான். மாலையில் கூண்டை சுத்தம் செய்து மறுபடியும் இறை வைப்பான்.

இவ்வாறாக நாட்கள் நகர்ந்தது...

புறாக் குஞ்சுகளும் பெரிதானது. ஜோடிப் புறாக்களுக்கும் முகிலனுக்கும் மட்டுமே புரியும் ஒரு மொழி இருவருக்குள்ளும் எப்படியோ வளந்தது.

முகிலன் பள்ளி செல்லும் போது, புறாக்களை கூண்டிலிருந்து வெளியே விட ஆரம்பித்தான். எங்கு போனாலும் மாலைப்பொழுதில் வீடு திரும்பும் வழக்கத்தை புறாக்களும் கடைபிடித்தன.

முகிலன் உணவுன்னும் போது, அவன் தோள், மடி உச்சந்தலை என பறந்து வந்து அமர்ந்து புறாக்கள் பாசத்தைக் காட்டும். இறங்கச் சொன்னால் பறந்து கீழே அமரும். அவனோடு சேர்ந்து அவன் வீட்டு நாயும் புறாக்களுடன் விளையாடும். அவர்களின் மொழிப் பரிமாற்றம் அழகிய உணர்வுகளைக் கொண்டு பிணையப்பட்டிருந்தது.

முகிலனின் ஊரில், அவனுக்கு முன் புறா வளர்த்தோர், புறாக்கள் நீண்ட தூரம் பறந்து போகாமல் இருக்க இறகு நுனியை அவ்வப்போது வெட்டிவிடும் வழக்கத்தை வைத்திருந்தனர். முகிலனும் அதையே தொடந்து கடை பிடித்தான்.

அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை...

ஒரு புறாவைப் பிடித்து, இறகு நுனியை கத்தரிக்கோல் கொண்டு வெட்டிக்கொண்டிருந்தான். அவன் மடியில் இருந்த சோளத்தை, இரண்டு புறாக்களும் தின்று கொண்டு இருந்தது. நுனி இறகுகளை ஒரு புறாவிற்கு வெட்டி முடித்தான்.

இரண்டாவது புறாவை கையில் எடுத்தான் முகிலன். இறை தின்று கொண்டிருந்த முதல் புறா, திடீரென பறந்து சமயலறைக்கும் போனதும், அருகில் படுத்திருந்த முகிலன் வீட்டு நாய், விளையாட்டு நோக்கில் வழக்கம்போல் புறாவுடன் சேந்து ஓடியது.

30 வினாடிகளில் நாயும் புறாவும் சமயலறையில் இருந்து வெளியில் வந்தது. நாயில் வாயில் புறா. புறாவை நாய் கீழே போட்டது. என்ன ஆனதென்று தெரியாமல் முகிலன் எழுந்து ஓடினான்.

நாயின் பற்கள் பதிந்து அந்த புறா இறந்து போனதை அறிந்தான். ஓ.. வென்று அழுதான். உருண்டு புரண்டான். என்ன நடந்ததென்பதை அறியாத இரண்டாவது புறா, முகிலனின் தோளில் பறந்து வந்து அமர்ந்து, அவன் காதை செல்லமாக கொத்தியது.

அம்மா சாமாதனப் படுத்தினாள். இருந்தும் அவன் அழுகை சில இரவுகள் நீண்டன. இரண்டு புறாக்களின் மீது வைத்த அன்பையும் ஒரு புறாவின் மீது செலுத்த ஆரம்பித்தான்.

முகிலன் புறாக்கள் மீதும், புறாக்கள் முகிலன் மீதும் வைத்த அன்பை, அவன் நன்கு அறிவான். ஆனால் ஒரு புறா மற்றொன்றின் மீது வைத்திருக்கும் புறாக்களுக்கிடையேயான அன்பை அவன் அறிந்திருக்கவில்லை.

ஒரு நாள் காலை...

இறை வைத்த சற்று நேரத்தில் புறாவைக் காணவில்லை. முகிலன் தேடினான். அந்த ஒற்றை புறா பறந்து கொண்டிருந்தது. சொல்ல இயலாத அதீத அன்பினாலும், தன் துணையை இழந்த துயரத்தினாலும் பறந்து போன புறா மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்த நிகழ்வு முகிலன் மனதை முழுவதும் உடைத்து நொறுக்கியது.

வருடங்கள் கடந்தன...

அன்று, கோவில் கோபுரத்தில் குஞ்சுகளைப் பிரித்து தவிக்கவிட்டு வந்த தாய்ப் புறாவையும், ரெட்டைப் புறாக்களைப் பிரித்த ஒற்றைச் சிறுவனாகவும், ஆழ்ந்த துயரங்கள் ஆறாத வடுக்களாய் இன்றும் அவன் மனதில்...

முற்றும்.

அன்புடன்,
அகல்

4 comments:

  1. அழகான கதை. சொந்த அனுபவமோ? என் நண்பன் ஒருவன் புறாக்கள் வளர்ப்பதில் அதீத ஈடுபாடு உடையவன்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி முரளி சார்... ஆம் ஏறக்குறைய சொந்த அனுபவம் தான்...

      Delete
  2. மிக்க நன்றி நண்பரே சதீஷ்...

    ReplyDelete
  3. nice story..... athu yana boss yerakuraiya sontha anupavam????

    but really good....short film karppanaiyil parthen... :)...kathai solum vitham romba alzaka iruku..

    ReplyDelete