Friday 5 April 2013

அடுத்த பிறவியிலாவது ஆணா பொறக்கணும் - யாழினியின் கதை !

பெங்களுர் வந்து ஐஞ்சு மாசம் ஆச்சு. ஒரு வழியா இன்னும் ரெண்டு நாள்ல ட்ரைனிங் முடிஞ்சிரும். ஒரு மூனு நாள் லீவு போட்டு ஊருக்குப் போயிட்டு வரணும். தஞ்சாவூர் தெப்பக்குளம், எப்பவும் திட்டும் அம்மா, எதிர்வீட்டு இமயா குட்டி எல்லாத்தையும் பாக்காம இருக்க முடியல. தங்கைக்கு பன்னெண்டாவது பரிட்ச முடிஞ்சது. தம்பிக்கு இந்த வாரத்துல பத்தாவது பரிட்ச முடிஞ்சிரும். அவங்களோட நேரத்த கழிக்க இது தான் சரியான நேரம்.

போறதுக்கு முன்னாடி வீட்டுக்கு நெறைய வாங்க வேண்டி இருக்கு.

எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து, அம்மா காஸ்ட்லியா ஒரு நல்ல சேல கூட கட்டுனதில்ல. அவங்களுக்கு ஒரு நல்ல பட்டுப்பொடவ வாங்கணும். தம்பிக்கு ஒரு பிராண்டேட் ஜீன்ஸ் பேன்ட், டீ ஷர்ட். அந்த கிரிகெட் பைத்தியம், போன் பண்றப்பல்லாம் பேட் கேக்குது. அதுவும் ஒன்னு வாங்கணும்.

இந்த வருஷம் தங்க காலேஜ் போவா. ஒரு மொபைல் வேணும்னு வேலைக்கு வாரப்பவே சொன்னா. அவள்ட்ட மொபைல் இருக்கறதும் தேவைதான். நல்லதா ஒரு மொபைல் வாங்கணும். அப்பறம் இமயா குட்டிக்கு கண்டிப்பா ஒரு கவுன்.

அப்பாவேற ரொம்பநாள் வைத்தியம் பாக்காம படுத்த படுக்கையா இருக்காரு. அவர நல்ல டாக்டர்ட காட்டனும். நமக்காக ரொம்ப உழைச்சாரு. அவர் படுத்த பின்னாடி அம்மா தான் எல்லா சுமையும் அஞ்சு வருசமா தாங்குறா.

எல்லாத்துக்கும் மேல, காலேஜ் படிப்புக்கு பாங்குல வாங்குன கடனுக்கு இன்னும் ஒரு தவண கூட கட்டல. அதுக்கு ஒரு பெரிய தொகைய கட்டணும்..

என்று எதிர்காலத்தில் தான் செய்யவேண்டியதை மனத்திரையில் ஓட்டிக் கொண்டே, காலை ஐந்து மணியைக் காட்டும் அலாரத்தை தலையணையில் சாய்வாக தலையை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி...

யாழினி...

தேவியின் மூத்த மகள் . அம்மாவிடம் அடிவாங்காமல் படுக்கைவிட்டு எழதா அளவிற்கு படு சுறுசுறுப்பானவள். இன்று அனைவருக்கும் முன்பே விழித்துவிட்டாள். தூங்கி எழுந்த முகம்.. இருந்தும் புதியதாய் மொட்டு விரித்த மலரைப்போல் பளபளப்பு குறையவில்லை. அரை உடல் போர்த்தப்பட்ட போர்வையும், அதன் மேல் கிடக்கும் தங்கையின் காலையும் நகர்த்திப் போட்டுவிட்டு படுக்கையில் இருந்து எழுந்தாள்.

நேற்றே இவளது கல்லூரி படிப்பின் கடைசி நாள். படிப்பில் படு சுட்டி. பொறியியல் மூன்றாம் வருடமே கேம்பஸ் தேர்வில் வேலை கிடைத்து விட்டது. பெரிய கம்பெனி, கை நிறைய சம்பளம். இன்னும் 20 நாட்களில் பெங்களூரில் வேலைக்குச் சேர வேண்டும். ஒரே சந்தோசம். மென்பொருள் கம்
பெனியின் சூழல் எப்படியிருக்கும் என்ற உற்சாகமும் பரபரப்பும் அவளுக்குள்.


நாம் வேலைக்குச் சேர்ந்ததும், ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கும் அம்மாவிற்கு முதலில் ஓய்வு தரவேண்டும் என்று நினைத்துக் கொண்டே பல் தேய்த்தாள்.


பொழுது விடிந்தது...

அரிசியை முறத்தில் போட்டு புடைத்துக்கொண்டே அம்மா சமயலறையில் இருந்து வெளியே வந்தாள். "அம்மா...." என்று தேவியை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தாள் யாழினி. தேவி திட்டினாள்.

"ஏய் உனக்கு என்னடி ஆச்சு.. மொதல்ல பல்தேச்சியா ?"

"ஹ்ம்ம் அதெல்லாம் அப்பவே ஆச்சே"

"சரி சரி... இமையா, தம்பி அப்டி இப்டினு யார் கூடயும் ஊர்சுத்த போயிடாத. நாலு மணிக்கு உன்ன பொண்ணு பாக்க வாரங்க"

"ஏம்மா உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா"

"நான் எதுக்குடி விளயாடனும்.. நேத்து முந்தாநாள் உன் அப்பாவழி சொந்தம் ஒருத்தர பாத்தேன். உன்ன எங்கயோ பாத்தாங்களாம். அவர் பையனுக்கும் உன்ன ரொம்ப புடிச்சிருக்காம். அவங்க குடும்பத்த எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். அவர் பையனும் கூட ரொம்ப நல்லவர்" என்று கூறிய தேவியை இடைமறித்தாள் யாழினி..

"அம்மா..."

"ஏய் இருடி... உனக்கு கண்டிப்பா பொருத்தமா இருப்பார். நாளைக்கு அந்த பையன் பெங்களூர் போறதால, இன்னைக்கு பொண்ண பாக்க முடியுமான்னு கேட்டாங்க. சரின்னு சொல்லிட்டு துணியெல்லாம் வாங்க கடைக்கு போயிட்டு வரதுக்குள்ள நேத்து நீங்க தூங்கிட்டிங்க. அதான் ராத்திரியே சொல்ல முடில" என்றாள் தேவி...

அருகில் குறுகிப் படுத்திருந்த அப்பாவிடம் ஓடினாள் தேவி.

"அப்பா என்னப்பா சொல்றாங்க அம்மா ?"

"ஏய்... இதெல்லாம் பண்ண சொன்னதே உன் அப்பாதான். அவர்ட்ட என்னா பிராது சொல்ற..."

யாழினி கண்களில் நீர் முட்டியது. இப்படி நடக்கும் என்று அவள் நினைத்துப் பார்க்கவில்லை. கிணற்றிற்குள் போடப்பட்ட கல்லாய் நொடிபொழுதில் சோகத்தில் மூழ்கினாள்.

"இதுக்கு இப்ப என்ன அவசரம். நான் வேலைக்குப் போகணும், நம்ம குடும்பத்துக்கு ஒரு விடிவு பொறக்கணும்" கோபத்தோடே சொல்லிவிட்டு அழுதாள்.

"பாருமா... உணகப்பறம் தங்கச்சி இருக்கா, அப்பறம் தம்பி.. அவங்கள படிக்க வைக்கணும், அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும். இந்த குடும்பம் மாதிரி இன்னொன்னு கெடைக்குமான்னு எனக்கு தெரில. ஜாதகப்பொருத்தம் அத்தனையும் அம்சமா இருக்கு. அதோட அப்பாவுக்கு எதாச்சும் ஆகறதுக்கு முன்னாடி உனக்கு நல்லது பண்ணி பாக்கனும்னு அடிக்கடி சொல்றாரு..."

என்று தன் நிலையைச் சொல்லி அவளை தேற்ற மட்டுமே முயற்சித்தாள் தேவி.

யாழினியின் அழுகை அடைமழையாய் தொடர்ந்தது..

தேவி அவளை அணைத்துக் கொண்டே சொன்னாள்..

"உனக்கு வேலைக்குதான போகணும்..? பையன் பெங்களூர்ல தான வேல பாக்குறாரு.. நீயும் கல்யாணத்துக்கப்பறம் அங்க போ.. வேல பாரு.. பணம் அனுப்பு.. யாரு வேண்டாம்னா" என்றாள் தேவி.. அவளை சாமாதனப்படுத்த..

யாழினிக்கு கல்யாண ஆசை இல்லை. அவளுக்கு அதில் சற்றும் ஈடுபடும் இல்லை என்றாலும், இந்த வார்த்தை யாழினியை கொஞ்சம் தேற்றுவதாய் இருந்தது.

மாலை 3 மணி...

இளைய மகளின் உதவியுடன் சமையல், பலகாரம் செய்துவிட்டு, தூசிகள் பறந்து கொண்டிருக்கும் ஹாலை சுத்தம் செய்து முடித்தாள் தேவி.

வராத கன்றுக் குட்டியை வம்படியாக இழுப்பதுபோல், புது சேலை, சில நகைகளை கட்டாயமாக உடுத்தி யாழினியை அறைக்குள் அலங்கரித்துக் கொண்டிருந்தாள் தேவி.

மாலை மணி நான்கு...

மணமகன் வீட்டார் ஐந்தாறு பேர், திறந்திருக்கும் வாசல் கதவைத் தட்டி உள்ளே நுழைந்தனர்.தேவியின் மகன் ஓடிப்போய் அவர்களின் வருகையை அம்மாவிடம் சொன்னான். நடக்க முடியாமல் தனியறையில் படுத்திருக்கும் தந்தையை அனைத்துப் பிடித்து அனைவர் முன்னும் கொண்டு அமர்த்தினான்.

அறையைவிட்டு வெளியே வந்தாள் தேவி...

"வாங்க வாங்க.. உக்காருங்க... எல்லாரும் சௌக்கியமா.. பாப்பாவ கொஞ்சம் ரெடி பண்ணிட்டு இருந்தேன். அதான்" என்றாள் தேவி..

"ஹ்ம்ம் பரவால்ல பரவால்ல.. பொறுமையா வாங்க... அவரசரமில்ல" என்று சிரித்தார் மாப்பிள்ளையின் தந்தை.

அவர்களின் குடும்ப வரலாற்றை பேசிக்கொண்டே நேரம் கடந்தது...

அனைவரும் டீ, பலகாரங்கள் கொடுத்துவிட்டு அனைவர் முன்னும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினால் யாழினி. மணமகன் லட்சணமாக இருந்தாலும், அவனை கடனுக்காகவே பார்த்துவிட்டுப் போனாள். யாழினியை பேருந்து நிலையத்தில் சுடிதாரில் பார்த்துவிட்டு இன்று சேலைக் கோலத்தில் பார்த்தது மணமகனுக்கு பூரிப்பாய் இருந்தது. அவனுக்கு முழு சம்மதம். இரட்டைச் சந்தோசம்.

பேச்சு வார்த்தை தொடந்தது. மணமகனின் தந்தை பேசினார்.

"பாருமா தங்கச்சி... எங்க குடும்பத்த பத்தி உனக்கே நல்லாத் தெரியும். வசதி வாய்ப்புக்கு எந்த குறையுமில்ல. இவன் போயி சம்பாதிச்சுதான் குடும்பம் நடத்தனும்னு ஒண்ணுமில்ல. ஆனா அவன் ஆசப்பட்டதால வேல பாக்குறான். எங்களுக்கு உங்கள்ட இருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்ல." என்று சொன்னதை வழிமறித்து...

"என்னால முடிஞ்சத செய்றேன் அண்ணே" என்றாள் தேவி.

"பொம்பளையா, உறவுக்காரங்க உதவி கூட இல்லமா தனியா இருந்து எல்லாத்தையும் கர சேக்குறீல்ல, அந்த தைரியத்துல சொல்றே. அதுதாம்மா உன்ட எனக்கு ரொம்ப புடிச்சது. ரொம்ப சந்தோசமம்மா. நீ முடிஞ்சத செய் செய்யாம போ, அதெல்லாம் எனக்கு தேவையில்ல." என்ற அவரின் அசாதாரணமான வார்த்தைக்கு அனைவரும் சிரித்தனர்..

"ஆனா ஒரே ஒரு கண்டிசன்மா. பொண்ணுக்கு பெரிய கம்பனில வேல கெடச்சிருக்குனு கேள்விப்பட்டேன். சந்தோசம்.. ஆனா, எனக்கு இவன் ஒரே பையன். தாயில்லாம வளந்தவன். அதோட பொண்ணு போயி சம்பாதிச்சு தான் குடும்பம் நடத்தனும்ங்ற தேவையும் இல்ல. அதனால பொண்ணு வேலைக்கு போகாமா, இவனுக்கு மனைவியா மட்டுமில்ல தாயாவும் அன்பு காட்டணும்னு பையன் நெனைக்கிறான்." என்றார் எதார்த்தம் மீறாத ஒரு சராசரி தகப்பனாக.

இதைக் கேட்ட யாழினிக்கு தலையில் இடி விளுந்ததது போல் இருந்தது. மயக்கம் வருவதாய் உணர்ந்தாள். தன்னால் பேச முடியாமல், அம்மாவிடம் வேண்டாம் என்று சைகை காட்டினாள்.

யாழினியின் அப்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு "அதெல்லாம் ஒன்னும் பிரச்சன இல்லண்ணே" என்று தனது கணவரின் நிலையையும், ஒரு பெண்ணாக தான் படும் கஷ்டத்தையும் மனதில் கொண்டு சொன்னாள் தேவி..

"அப்ப ரொம்ப சந்தோசம். சரிமா அப்ப ஒரு நல்ல நாள் பாத்துட்டு தகவல் சொல்றோம், கூடிய சீக்கிரத்துல கல்யாணத்த வச்சுக்குவோம்" என்று கூறிவிட்டு அனைவரும் கிளம்பினர்.

தனது மன நிலையை அம்மாவிடம் எப்படி சொல்வதென்று தெரியாமல் இரவு முழுதும் அழுதாள் யாழினி.

நடு இரவு நகர்ந்து வெகு நேரமானது..

ஹாலில் சட சட வென்று ஐந்து மணிக்கு சத்தம் கேட்டது.

யாழினி எழுந்தாள். குனிந்தே வேலை செய்து சற்று வளைந்துபோன முதுகுடன், வலது புறத்தில் துணியை குவியலாகப் போட்டுவிட்டு தையல் மெசினை ஓட்டிக் கொண்டிருக்கும் தன் தாயைப் ஏக்கத்தோடே பார்த்தாள்.

தையல் மெசினுக்கு ஓய்வு, அம்மாவிற்கு பட்டுப்புடவை, தம்பிக்கு கிரிக்கெட் பேட், தங்கைக்கு மொபைல், அப்பாவிற்கு வைத்தியம் என்று எதையுமே தனது கையால் செய்ய முடியாத இயலாமையையும், இந்த சபிக்கப்பட்ட சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும் ஒரு சொட்டி கண்ணீர் விட்டு, ஒட்டுமொத்த வெறுப்பில் உள்ளூர சொல்லிக் கொண்டாள்.

"அடுத்த பிறவியிலாவது நான் ஒரு ஆண்பிள்ளையா பொறக்கணும்"

முற்றும்...

அன்புடன்,
அகல்

13 comments:

  1. படித்துவிட்டு பாராட்டாமல் செல்ல மனமில்லை...
    அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. வலைப்பூக்களின் வசந்தங்களை நுகரும் வாசகன் நான்.
      ஆர்வக்கோளாற்றில் நானும் ஒரு ப்ளாக் உருவாக்கி ப்ளாக்கராக உலாவுகிறேன். ஜெயகாந்தனின் எழுத்தில் மோகம் கொண்டதால் அவரது படத்தை போட்டுள்ளேனே தவிர இருபதைக்கூட எட்டாதவன் நண்பரே..
      ஐயா என்ற அடையாளம் அன்னியமாக படுகிறது..
      நட்போடு நமது இணைய சேவையை தொடர்வோமே :)

      Delete
    4. ஒ அப்பா சரி நண்பரே... ஜெயகாந்தன் அவர்களை படத்தைப் பார்த்துவிட்டு, அதே அளவு வயது மதிக்கத்தக்கவராக இருப்பீர்களோ என்று நினைத்துவிட்டேன் :) ... மன்னிக்கவும் தல..

      Delete
    5. ஏன் பாஸ் மன்னிப்பெல்லாம்? உங்களுடனான இந்த புதிய நட்புக்கு மிகுந்த மகிழ்ச்சி... நமது மகிழ்ச்சிகள் தொடரட்டும்

      Delete
    6. கண்டிப்பாக :)

      Delete
  2. ஆணாக பிறந்தால் என்ன நடக்கும்ம்ன்னு நமக்கு தான தெரியும் ....

    ReplyDelete
  3. pennaka piranthathil perumai pala nerankalil...

    analum sila neram varunthukirom sila mirukamkalal....

    alzakiya kathai.intru pala vedukalzil nadakum kathai... :(

    ReplyDelete
  4. இந்த கதை படித்து பல பெண்கள் ... தன் கதை போல் உள்ளது என்று மனம் கனத்து கமெண்ட் செய்யாமல் போயிருக்கலாம் .... அவர்கள் சார்பாக..
    பெண்ணாக பிறக்க மாதவம் செய்திடவேண்டும்...
    ஆம் நாங்கள் வரம் பெற்றவர்கள் தான் ..
    வரமே சாபம் ஆகாமல் இருக்க ... நம் சமுகம் தான் ஆதரவா இருக்கனும்..

    ReplyDelete
    Replies
    1. //பெண்ணாக பிறக்க மாதவம் செய்திடவேண்டும்...
      ஆம் நாங்கள் வரம் பெற்றவர்கள் தான் .. வரமே சாபம் ஆகாமல் இருக்க ... நம் சமுகம் தான் ஆதரவா இருக்கனும்.. // உண்மை...

      Delete