Friday 23 November 2012

கசாப் தூக்கிலிடப்பட்டதால் தீவிரவாதம் அழிந்துவிடுமா..!?

வணக்கம் நண்பர்களே..!


தீவிரவாதி கசாப் தூக்கிலிடப்பட்டதை பல ஊடகங்கள், இணையதளங்களில் விவாதிக்கப் பட்டிருந்தாலும் இந்த மரணதண்டனையைப் பற்றிய எனது பார்வையைப் பதிவு செய்வது மட்டுமே இந்த கட்டுரையின் நோக்கம். தங்களது கருத்துக்கள் மாற்றுக் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்க வேண்டுகிறேன்.


அஜ்மல் கசாப்



லஷ்கர்-ஏ-தொய்பா என்ற பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் 2008 இல் மும்பையில் நடத்தி தோராயமாக 156 (மொத்தம் 166 - தீவிரவாதிகளையும் சேர்த்து) அப்பாவி மக்களின் உயிரைக்குடித்த தீவிரவாத தாக்குதலில் பங்கெடுத்த 11 தீவிரவாதிகளில் உயிரோடு பிடிக்கப்பட்ட ஒரே ஒருவன் அஜ்மல் கசாப். பாகிஸ்தானின் பஞ்சாப் மாவட்டத்தில் உள்ள பரீத்கோட் என்ற கிராமத்தில் 1987 ஜூலை மாதம் பிறந்தவன். 2005 க்கு பிறகு லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு அதற்காக பயிற்சி பெற்று பணியாற்றியவன். தாக்குதலில் பிடிபட்ட கசாப் மீது 80 குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவற்றில் பல நிரூபிக்கப்பட்டு, அவனது 25 ஆம் வயதில், 2012 ஆம் வருடம் நவம்பர் மாதம் 21 ம் தேதி காலை 7.30 மணியளவில் புனே நகரில் உள்ள எரவாடா மத்தியச் சிறைச்சாலை தூக்கிலிடப்பட்டான்.


2005 இல் இஸ்லாமின் புனித ஈகை திருநாளன்று அவன் தந்தையிடம் கசாப் புதுத்துணி வாங்கித்தர கோரியதாகவும், அவரால் வாங்கித்தர இயலாததால் சண்டையிட்டுக்கொண்டு வீட்டைவிட்டு கசாப் வெளியேறியதாக சொல்லப்படுகிறது. தனது குடும்ப பணத்தேவைக்காக லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தில் சேர்ந்து செயல்பட கசாப்பின் தந்தையே கூறியதாக மற்றொரு கருத்தும் உண்டு. தனது நண்பருடன் சேந்து பல குற்றங்களை புரிந்தபின் லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தில் இணைந்துள்ளான் கசாப்.


கசாப்பிர்க்கு தூக்கு தேவையா..?


இந்த கேள்விக்கு இல்லை என்று நான் பதிலளிக்கும் பட்சத்தில் என்னை தண்டிக்க துடிக்கும் நண்பர்களின் பட்டியல் மிக நீளமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதில் தவறேதுமில்லை. ஆனால் இயற்கையாக படைக்கப்பட்ட உயிர் அவ்வாறே பிரியவேண்டும் என்பது என்பார்வை. தண்டனைக்காக ஒருவன் தூக்கிலிடப்பட்டால் அதுவும் திட்டமிட்ட படுகொலையே. இதில் தீவிரவாதிகளுக்கும் சட்டத்திற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. தண்டிப்பதற்காக தண்டனையல்ல அது திருத்துவதற்காக மட்டுமே.


இங்கு கசாப்பின் தீவிரவாத செயலை நியாயப்படுத்துவது என் நோக்கமல்ல. எந்த சூழ்நிலையிலும் கசாப் செய்தது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம், அவன் தண்டனைக்கு உரியவன். ஆனால் மரணதண்டனையா என்பதே கேள்வி. அதே நேரம், சட்டங்கள் கடுமையாக இல்லாத வேளையில் குற்றங்கள் குறையாது என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் சட்டங்கள் கடுமையாக இருந்தும் குற்றங்கள் குறைவதற்கு மாறாக அதிகரித்து வருவதைப் பார்த்தால், குற்றங்கள் குறைய சட்டங்களைத் தாண்டியும் பல சமூக சீர்திருத்தங்கள் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவே எனக்குப்படுகிறது. குற்றமற்ற பலர், எதிரிகளின் சதிவேளைகளால் தாங்கள் குற்றமற்றவர் என்று நிரூபிக்க விடாமலே தூக்கிலிடப்பட்ட வழக்குகளை நமது வரலாறு அறியும். ஆகையால் இது போன்ற சட்டங்களால் பல தவறுகளும் நேரிடுகிறது.


கசாப்பின் தண்டனை குறைக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்..?


கசாப்பிர்க்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு அவன் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் பல விளைவுகளைச் சந்திக்க நேரிட்டிருக்கும். நான்கு வருடங்களுக்கு 50 கோடி செலவில் 1000 போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டவன் இன்னும் பல நூறு கோடி செலவுசெய்து பாதுகாப்பை தொடர நேரிட்டிருக்கும். அப்படியே ஆயுள் தண்டனை முடியும் காலகட்டத்தில் அவன் விடுவிக்கப்பட்டாலும், தாக்குதலில் ஈடுபட்ட பலரைக் காட்டிக்கொடுத்த கசாப்பை, லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு எப்படியும் உயிரோடு விட்டுவைத்திருக்காது. அப்படியான ஒரு தீர்ப்பின் மீது மக்களின் எதிர்ப்பு வலுத்திருக்கும். பல போராட்டங்கள் நடந்திருக்கும் பொதுச் சொத்துகள் வீணடிக்கப்பட்டிருக்கும். ஆகையால் மரண தண்டனைக்கு எதிராக நான் கருத்து தெரிவித்தாலும் கசாப்பின் வழக்கில் அதைத் தவிர வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை.


இந்திய அரசு செய்வது சரியா..?


கசாப்பிர்க்கு கொடுக்கப்பட்டது சரியான தீர்ப்பே என்று கருதினாலும் இந்திய அரசு 1.4 லட்சம் மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து விருந்தளிப்பது, கேரள மீனவர்களைக் கொன்ற இத்தாலி அரசு, பல நூறு தமிழ் மீனவர்களைக் கொன்ற இலங்கை அரசு என யாவரையும் கண்டுகொள்ளாமல் இருப்பதைப் பார்த்தால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொன்றால் மட்டுமே உயிர் மற்றவர்கள் கொள்ளும்பட்சத்தில் அது துச்சமான வெறும் பிண்டம் எனும் பாணியில் அரசு பொறுப்பின்றி இருப்பதாக தோன்றுகிறது. மிகவும் வருந்தச் செய்கிறது.


பல ஆயிரம் மக்களின் உயிர்களைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு, சமீபத்தில் சீனாவில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களுக்காக மட்டும் போராடி ஆயுள் தண்டனையாக குறைத்தது ஒருதலை பட்சமான சுயநல போக்கைக் காட்டுகிறது. சட்டம் அனைவருக்கும் சமம் என்ற போக்கை கடைபிடிப்பதாகவும் தெரியவில்லை.


கசாப் தூக்கிலிடப்பட்டதால் தீவிரவாதம் அழிந்துவிடுமா..!?


ஏதார்த்தத்தைச் சொன்னால், தீவிரவாதம் எப்போதுமே அழிக்க முடியாத ஒரு  வைரஸ் கிருமி. அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்கலாம் ஆனால் ஒட்டு மொத்தமாக ஒழிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே எனக்குப்படுகிறது. கசாப் போன்ற இளைஞர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தீவிரவாத இயக்கங்களை வேரோடு அழிக்கும்வரை இது போன்ற தூக்குதண்டனைகளிலும் பெரிதாக எந்த மாற்றமும் வரப்போவதில்லை.


சொல்லப்போனால் கசாப் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்காக செயல்படும் பல இளைஞர்கள் அப்பாவிகளே.. காரணம்., சிறு வயதிலேயே அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி தீவிரவாத இயக்கங்களில் சேர்த்துகொண்டு தாங்கள் செய்வது மட்டும் தான் சரி என்ற மனநிலையில் இருந்து வெளியேறவிடாமல் பல இயக்கங்கள் அவர்களுக்கு போதிக்கிறது. நல்லது கெட்டதை பிரித்தறியும் சூழ்நிலைக்கு போகவிடாமல் அவர்களை மூழ்கடிக்கிறது. இந்த இயக்கங்களிடம் பல இளைஞர்கள் சிக்கிக்கொண்டு அப்பாவி மக்களை இரக்கமின்றி அழிப்பது மட்டுமின்றி தங்களையும் அழித்துக்கொள்வதை நினைத்தால் வேதனையளிக்கிறது.


கசாப் தூக்கிலிடப்பட்டதில் நாம் மகிழ்ந்தாலும், அதன் பின்விளைவுகளில் இருந்து அப்பாவி இந்திய மக்களை காப்பாற்றும் கட்டாயத்தில் உள்ளோம் என்பதையும் மறுக்க முடியாது. இதுவரை பாகிஸ்தானுக்குள் மட்டுமே தீவிரவாத செயல்களில் ஈடுபட் டலஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புடன் நெருங்கிய உறவு கொண்ட தலிபான் அமைப்பு, கசாப்பின் மரணத்திற்கு எதிராக இந்திய மக்களின்மீது உலகின் பல முனைகளில் தாக்குதல் நடத்தி அழிப்போம். அவர்களின் உடல்களையும் தரமாட்டோம் என திமிராக தரும் பேட்டிகள் இதற்கான ஒரு சான்று.


கசாப்பின் தூக்கு தீவிரவாதத்தை துளியும் அழித்து விடப்போவதில்லை. ஏனென்றால் அழிக்கப்பட்டது அம்பைத்தான் எய்தவனை அல்ல..! 

17 comments:

  1. "எய்தவனை வேரோடோ எரித்து வேட்டையாடும் வரை இதுபோன்ற தூக்குத்தண்டனைகள் எந்த பலனையும் அளிக்கப் போவதில்லை."

    எய்தவனை கொல்வது இதில் அடங்காதா! அதுவும் ஒரு மனித உயிர் தானே. ஏன் கொல்ல வேண்டும்? அவனையும் பிடித்து அவனுக்கு புத்திமதி கூறி திருத்த முயற்சிக்கலாமே! உங்கள் வாதப்படி இவனைக் கொன்றாலும் இன்னொரு தீவிரவாத அமைப்பு உருவாகாமல் இருக்கப் போகிறதா!

    அதாவது தண்டனை கொடுத்து கொல்லக்கூடாது ஆனால், இவர்கள் குண்டு போட்டு அப்பாவி மக்களை கொல்வது போல நாம் (எய்தவனை) மொத்தமாக காலி செய்தால் சரி என்கிறீர்கள்.

    இந்தப் பிரச்னைக்கு தான் அப்பவே போட்டு தள்ளியிருக்கணும், விசாரித்து தூக்கில் போட்டால் மனித உரிமை ஆர்வலர்கள் வந்து விடுகிறார்கள்.

    எனக்கு ஒரே ஒரு பெரிய சந்தேகம் உள்ளது. அது ஏன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பரிந்து பேசுவதை விட இவர்களைப் போல தீவிரவாதிகளுக்கு அதிகம் பரிந்து பேசுகிறீர்கள்? மனித உரிமை என்பது இவர்களைப் போன்ற தீவிரவாதிகளுக்கு மட்டும் தானா! பொது மக்களுக்கு இல்லையா!!

    ஜெயிலில் போட சொல்கிறீர்கள்.. அங்கே போட்டு நாலு வருசத்துல அவனுக்கு 50 கோடி செலவு செய்தது தான் தண்டம். நல்ல பிரியாணியா சாப்பிட்டு ஜாலியா இருந்தான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பரே கிரி.. உங்களின் இந்த கேள்விகள் நியாயமானது தான்.. ஏற்றுக் கொள்கிறேன்.. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை விட தீவிரவாதிகளுக்கு பரிந்து பேசுகிறேன் என்று சொல்வதில் மட்டும் உடன்பாடு இல்லை... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பாஸ்...

      Delete
  2. குற்றவாளி ஒருவனை தூக்கிலிடுவதால் தீவிரவாதம் அழிந்துவிடும் என்பது கேள்விக்குறியதொன்றுதான்...
    அரசு பல இலட்சங்கள் செலவளித்ட்து இவ்வளவு காலமும் பாதுகாத்து தூக்குத்தண்டனை வழங்குவதென்பட்து அரசின் பொருப்பற்ற செயல் என்றுதான் சொல்ல வேண்டும்...
    தனி ஒரு குற்றவாளிக்கு செலவிட்ட பணத்தினை நாஅட்டு மக்களின் வருமையைப் போக்க செலவிட்டிருக்கலாம்..

    கசாப்பிற்குத் தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டுமென்றிருந்தால் அவரைப் பிடித்த சில காலங்களில் அதனை செய்திருக்க வேண்டும்.....
    என்னைக் கேட்டால் இதில் பல அரசியல் விளையாட்டுக்கள் அரங்கேறியிருக்கும் என்று சொல்வேன்..

    கொலைக்குக் கொலைதான் முடிவு என்ற கொல்கையில் இருப்பவன் நான்

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லும் அரசியல் விளையாட்டு இருப்பதாகவே எனக்கும் தோன்றுகிறது... ஏதாவது ஒன்றிலாவது நல்ல பெயர் வாங்கி தேர்தல் சமயத்தில் வாக்கு வங்கியைச் சேகரிக்க இத்தனை காலம் தண்டனையைத் தள்ளிப்போட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவே நானும் கருதுகிறேன்... கருத்திற்கு மிக்க நன்றி பாஸ்..

      Delete
  3. தூக்கிலிடுவதால் தீவிரவாதம் குறைய வாய்ப்பில்லை! அதே சமயம் சிலருக்கு தூக்கு தண்டனை தருவதை தவிர்க்க முடிவதில்லை! அதில் கசாப்பும் அடக்கம்! இதில் சிலர் தப்பிப்பது வேடிக்கை!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றதும் உண்மைதான் பாஸ்.. கருத்திற்கு நன்றி..

      Delete
  4. எய்தவனைத் தேடிக் கிடைக்கும் வரையில்
    அம்புக்கு கோடிக் கோடியாய் செலவழித்துக் கொண்டும்
    அம்புகளுக்கு எப்போதும் ஆபத்தில்லை என்ற
    கருத்தை உருவாக்கி அதிகமான அம்புகள் உருவாகக்
    காரணமாய் இருப்போமா ?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கேள்வி நியாயமானது ஐயா... ஆனால் இவர்களை இயக்குபவர்களை ஒடுக்காமல் இவர்களைக் மட்டும் கொல்வதில் பெரிய மற்றம் நிகழ வாய்ப்பில்லை என்பது எனது கருத்து.. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா...

      Delete
  5. விவாதம் இரு மாதிரி வைக்கவேண்டும்:

    முதலில் தூக்கு தன்டானையே இருக்கனுமா?

    ஆம், என்றால், தூக்கு சரி!

    எதற்கும் தூக்கு கிடயாது என்று முடிவேடுக்காதவரை இந்த விவாதம் தொடரும்!

    அமெர்க்கா இந்தியா மாதிரி அல்ல! ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு சாட்டம். இங்கு சில மாகாணங்கலில் மரண தண்டனை கிடையாது; ஆனால், அமேரிக்கா முழுவதும் Federal Crimes உண்டு; இந்தக் குற்றம் இதன் கீழே வரும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நம்பள்கி..

      Delete
  6. குற்றம் புரிந்தவனுக்கு அளிக்கப் படும் தண்டனை எல்லோரும் பார்க்கும்படி அளிக்கப் படவேண்டும் அதைப் பார்த்த பின்னர் குற்றம் புரியலாம் என்ற தங்கள் எண்ணத்தை மாற்றிகொள்வார்கள் குற்றங்கள் குறையும். இவன் ஒருத்தனை கொள்வதால் என்ன ஆயிடப்போவது என்பது சரியான வாதமே இல்லை. மரண தண்டனையும் இல்லைன்னா, என்ன பண்ணினாலும் என்னடா ஆயிடப் போவுது போட்டுத் தள்ளுங்கடா என்று இன்னமும் அப்பாவிகள் உயிரைப் பறிப்பார்கள். இது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இந்த தண்டனை இருந்தும் குற்றங்களின் எண்ணிக்கை சிறிதும் குறையாமல் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது... அதன்படியாக பார்த்தால், கடுமையான சட்டம் மட்டுமே குற்றங்களைக் குறைத்துவிடாது என்பது எனது கருத்து... தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே ஜெயதேவ்...

      Delete
  7. நீங்க சொல்ல வருவது கருணை இல்லாமல் கொன்றவனை கருனையோடோ சிறையில் வைத்து பிரியாணி கொடுத்து பாதுகாக்க சொல்லுகிறீர்கள் அப்படி தானே.

    நீங்கள் சொல்லுவது இது : "இயற்கையாக படைக்கப்பட்ட உயிர் அவ்வாறே பிரியவேண்டும் என்பது என்பார்வை."

    மும்பையில் இவன் கொன்றானே அப்பாவி பொது மக்களுக்கு ஏன் உங்கள் இந்த விதி பொருந்தாது - அவர்களை ஏன் இயற்கையாக சாக விடாமல் இவன் கொன்றதை எப்படி ஒத்து கொள்வது ?

    ஒரு மனிதனுக்கு தூக்கு தண்டனை என்பது அவனோட உச்ச கட்ட தண்டனை. இது ஒருவன் தன்னுடைய சுய நினைவு இல்லாமல் எதோ ஒரு உந்துதனால் செய்து பின் வருந்துவனுக்கு தவறு தான்.

    ஆனால் இவன் என்ன செய்கிறோம் என்று தெரிந்து சந்தோசத்தோட செய்தவன் - அதுவும் இல்லாமல் அவன் பிடிபடாமல் இருந்து இருந்தால் இன்னும் பல அப்பாவி மக்களை கொன்று இருக்க கூடியவன் தான். அதனால் தெரிந்தே எந்த விதமான இரக்கமும் இல்லாமல் மனிதர்களை கொன்றவனை வேறு என்ன செய்ய சொல்லுகிறீர்கள்.

    இங்கே நாம் பார்க்க வேண்டியது அவன் செய்த கொலையோட நோக்கமும் அவனுடைய மனோ நிலையும் தான். இங்கே அவன் செய்ததை கொலை என்று சொல்வதை காற்றிலும் ஒரு கருணை அற்ற செயல் என்று தான் சொல்ல வேண்டும். அதற்க்கு இது சரியான தண்டனை தான். இதனால் தீவிரவாதம் ஒளியாவிட்டலும் - அவர்களுடைய மனதில் இந்தியாவில் உயிரோட பிடி பட்டால் கவலை இல்லாமல் பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருக்கலாம் என்ற தப்பான என்னமாவது போகும். அதற்காவது இந்த தண்டனை முக்கியம்.



    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே விஸ்வநாதன் ராம்கணேஷ்... நான் மேல சொன்னதுபோல் இந்த தண்டனை இருந்தும் குற்றங்களின் எண்ணிக்கை சிறிதும் குறையாமல் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது என்பது தங்களுக்கும் தெரிந்திருக்கும்.. அதன்படியாக பார்த்தால், கடுமையான சட்டம் மட்டுமே குற்றங்களைக் குறைத்துவிடாது என்பது எனது கருத்து..

      Delete
  8. இங்கு மரணதண்டனை வேணுமா? வேண்டாமா? என்ற விவதாம் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது; பல இடங்களில் படித்திருக்கிறேன மரன தண்டனையினால் கொலைக் குற்றங்கள் குறைவதில்லை என்று...அதனால் ஒரு பலனும் இல்லை என்றுதான் தீர்ப்பு...வேண்டியவர்கள் கூகுளில் authentic sites - களில் தேடிக்கண்டுபிடித்து படிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. // மரன தண்டனையினால் கொலைக் குற்றங்கள் குறைவதில்லை என்று...அதனால் ஒரு பலனும் இல்லை என்றுதான் தீர்ப்பு...// இந்த கருத்தைதான் நானும் கூற முனைகிறேன் நம்பள்கி... நன்றி..

      Delete
  9. வந்தது அம்பாயினும் மீண்டும் மீண்டும் அம்புகள் வராமல் தடுக்க, அதன் முனைகள் கண்டிப்பாக முறிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete