Monday 11 March 2013

நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் !

நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள். கட்டாயம் படிக்க வேண்டுகிறேன் !

ஈழப்பிரச்சனை தொடர்பான பதிவுகள் மற்றும் ஏனைய சமூகம் அவலங்களைப் பற்றிய பதிவுகளை உண்மையான உணர்வுகளோடு பகிர்ந்துகொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் முதலில் எனது நன்றிகள் !

எவன் எவனோ சம்பாதிக்கும் திரைப்படங்கள் சபலத்தை உண்டாக்கும் நடிகையின் புகைப்படங்கள் என எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் நம்மில் பலர், பெரும்பாலும் ஏனோ சமூக பிரச்சனைகள் சம்மந்தமான பதிவுகளை பகிர்வதும் இல்லை அதை எதிர்த்து குரல் கொடுப்பதில்லை. கண்டும் காணாமலும் ஒதுங்கிக் கொள்கிறோம். நமக்கு வரும்வரை அந்த பிரச்சனையின் ஆழமும், அதன் பின்னணியில் ஆயிரக்கணக்கில் மக்கள்படும் துயரமும் அதன் வலியும் நம்மில் பலருக்குத் தெரிவதுமில்லை. அப்படியாகவே பெரும்பாலோனோர் இந்த ஈழப் பிரச்சனையையும் பார்கிறார்கள்.

ஈழம் சார்ந்த தமிழ்ப்பதிவுகளை என் முகநூளில் பகிரையில், நான் ஒரு தமிழ் இனவெறி பிடித்தவன் என்ற வகையில் எனது நண்பர்கள் வட்டாரத்திலேயே பார்த்ததை கண்கூடாக கவனித்திருக்கிறேன். சிலர் சொன்னார்கள் பலர் சொல்லவில்லை. தாய்மொழியை மறப்பதும் தாயை மறப்பதும் ஒன்றுதான் ஆகையால் அவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஏன் இந்தப் பக்கத்திலேயே நான் எழுதும் காதல் கவிதைகள் பகிரப்படும் அளவிற்கு சமூக அவலங்களைச் சொல்லும் கவிதைகள், கட்டுரைகள் பகிரப்படுவதில்லை.

நமது தங்கையை, மனைவியை ஒருவன் கேலி செய்தாலே பொறுத்துக்கொள்ள இயலாத நம்மில் பலர், அங்கே மிருகங்கள்போல் கற்பழிக்கப்பட்டு, இறந்த உடல்களில் மார்பை அறுத்து சூறையாடும் இனவெறி மனிதர்களை தட்டிகேட்க மனமற்றவர்களாக இருப்பது வேதைனையைத் தருகிறது. நாம் ஏன் இப்படி இருக்கிறோம், சுயநலவாதமா ? இதை எப்படி வரையறுப்பது ? இதைப் பார்க்கையில், மனதிற்குள் ஆயிரம் ஆயுதப்போராட்டம்.

எனது அறிவுக்கு எட்டியவரை, என்று ஒரு மொழியும் மொழி சார்ந்த மக்களும் நசுக்கப்படுகிறார்களோ அன்றிலிருந்தே அந்த மக்களின் அடையாளங்கள், பண்பாடு, பழக்கவழக்கங்கள் அழிவுக்கு உட்படுத்தப்படுகிறது. அங்கே கற்பழித்து கொல்லப்பட்டது தமிழர்கள் அல்ல, தமிழ்.

இவ்வாறு கருவருக்கப்படும் ஈழத் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி தேவை என்ற நோக்கில் போராடும் மாணவர்களை ஆதரிக்க, களத்திற்கு செல்ல இயலாவிட்டாலும், குறைந்தபட்சம் அது சார்பான பதிவுகளை பகிர்ந்துகொள்ளுங்கள். அது இன்னும் பத்துபேருக்கு விழிப்புணர்வையாவது ஏற்படுத்தும். இப்போது களத்தில் போராடும் மாணவர்கள் அவர்களுக்காக போராடவில்லை.

மாறாக அவர்களின் போராட்டம் நமக்கானது, நமது இனத்திற்கானது, மொழிக்கானது, தொப்புள்கொடி உறவுகளுக்கானது, வருங்கால சந்ததிக்களுக்கானது என்பதை தயவு செய்து மனதில் வையுங்கள். அப்படி நாம் செய்யத்தவறினால், நமது சந்ததிகளும் வரலாறும் நம்மை இழிவாகப் பேசலாம்.

எதையும் அறியாத எறும்புதானே என்று நசுகிப்பாருங்கள். அது சாகும்வரை எதிர்த்துப் போராடியே சாகும். நாம் அன்பு, பாசம், கோபம், இறக்கம், பற்று என எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கிய மனிதர்கள். நம்மால் இயன்றதை இயன்றபோது செய்யாமல், நல்லது வேண்டி கடவுளின் சன்னதியில் காத்துக்கிடப்பதில் புண்ணியமில்லை.

மாணவர் சக்தி மகத்தானது. அது ஒரு முறை ஒடுக்கப்பட்டு மறுமுறை எழுந்துள்ளது. மீண்டும் நசுக்க இடம் தராதீர்கள். இது நமக்கான போராட்டம். ஈழ மக்களின் நீதிக்கான போராட்டம், அவர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம். இந்த போராட்டத்திற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆதரவு திரட்டுங்கள்.

நன்றி !

அன்புடன்,
அகல்


2 comments:

  1. உங்கள் ஆதங்கம் உண்மை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. தமிழர்கள் நசுக்கப்பட்டால் அது தமிழ் நசுக்கப்பட்டது போல
    தமிழை நசுக்க விடமாட்டோம்
    போராடுவோம்
    போராடுவோம்
    தமிழீழம் கிடைக்கும் வரை
    போராடுவோம்

    ReplyDelete