Monday 8 July 2013

மனிதம் எங்கே போகிறது ??

ஜூலை ஒன்றாம் தேதி சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ வில் சண்முகம் என்பவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்கிறார். கீழே விழுந்தவர் ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார். முதல் உதவி ஏதும் கொடுக்காமல், அவரை காப்பாற்ற நினைத்த பொது மக்களையும் நெருங்கவிடாமல் சுமார் 20 நிமிடம் ஷாப்பிங் மால் நிர்வாகம் போலீஸ் வரட்டும் என்று தட்டிக் கழிக்கிறது. பிறகு பொதுமக்களின் நெருக்கடியால் வழிவிடுகிறது அந்த நிர்வாகம். அந்த இளைஞன் யார் என்றே தெரியாத ஒரு பெண்மணி உதவி செய்ய முற்பட்டு மருத்துவமனை வரை செல்கிறார்.

ஆனால் அந்த இளைஞர் இறந்துவிடுகிறார். அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு, ஷாப்பிங் மால் நிர்வாகத்தின் அலச்சியத்திற்கு நீதி வேண்டி மனிதத்தின் அடிப்படையில் துடிக்கிறார். அதைக் காவல்துறையோ ஷாப்பிங் மால் நிர்வாகமோ கவனித்ததாகத் தெரியவில்லை. காவல்துறை அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணை கேவலமாகத் திட்டுகிறார். கோடி கோடியாய் வருமானம் ஈட்டித் தரும் பொதுமக்களை துச்சமாக மதிக்கும் பணக்கார முதலைகளுக்கு மத்தியில் இந்தப் பெண்ணைப் பார்க்கையில் கண்கள் கலங்குகிறது. அந்த வீடியோ இங்கே:




ஏறக்குறைய இதே மனநிலையில் தான் மே 17 ஆம் தேதியன்று நானும் இருந்தேன். பைக்கில் வந்த இருவரை கார்க்காரன் தட்டிவிட்டுச் செல்கிறான். பைக்கில் வந்த இளைஞனில் ஒருவன் தலையில் பலத்த அடிபட்டு நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். 20 நிமிடத்திற்கும் மேலாக அந்த இளைஞனைத் தொடக்கூட மனமில்லாது, மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அந்த ஹைதராபாத்தின் மும்பை தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கில் மக்கள் பார்த்துக் கொண்டே போகிறார்கள்.

அந்த நேரத்தில் அங்கே வந்த நான், அந்த இளைஞனின் கோர சூழலைப் பார்த்து இதேபோல் கதற நேரிடுகிறது. பல ஆட்டோகாரர்களை கெஞ்சியும் வராமல், ஒரு நல்லவரின் உதவியுடன், 
அந்த மாலை நேர வாகன நெரிசலில் ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறேன். நிலை மோசமாக உள்ளது, அந்த மருத்துவமனையில் அவரைக் காப்பாற்ற தேவையான உபகரங்கள் இல்லை என்று சொல்லவே, அடுத்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறேன். முடிவில் அந்த இளைஞனும் இறந்து போகிறான்.

அந்த அனுபவம் இங்கே: எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !


இந்த இரண்டு சம்பவங்களின் ஒரு பொதுவான சாராம்சம் என்னவென்றால், அந்த இளைஞர்கள் 20 நிமிடங்களுக்கும் மேலாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் உதவி செய்ய முன்வராத மனிதாபிமானமற்ற நமது சமூகம் மட்டுமே.


மனிதம் மரித்துத்தான் போனதோ ??

அகல்

6 comments:

  1. உங்களின் உடனடி முயற்சி - மனிதம் என்றோ செத்து விட்டது என்று சொல்ல முடியவில்லை... நவீனம் அடையாத ஊர்களில் இன்னும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தனபாலன் சார்..

      Delete
  2. இல்லை அகல். இன்னமும் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கு. ஆனா, அதுக்கப்புறம் வரும் இம்சைக்கு பயந்துதான் எல்லாம் தள்ளி நிக்குறாங்க

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ராஜி... ஆனால் இதுபோன்ற சூழலில் எதிர்பார்ப்புகள் பின் விளைவுகளை நாம் பார்ப்போமேயானால், நாம் இதே நிலையில் கிடக்கும்போது மற்றவர்களும் பார்க்கத்தான் செய்வார்கள்... அதோடு எனது எண் விலாசம் எல்லாவற்றையும் காவல்துறை வாங்கிக்கொண்டார்கள். ஆனால் இதுவரை ஒருமுறைகூட என்னை அழைத்து எந்தக் கேள்வியும் கேட்கவில்லை..

      Delete
  3. ஆங்காங்கே வாழ்ந்து கொண்டு இருக்கின்றது மனிதம்...

    ReplyDelete
    Replies
    1. அப்படி இருந்தால் அது வாழும் என்று நம்புவோம் சார்...

      Delete