Thursday, 27 June 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 19

இயலாமை 

உன் விரல்களின்
பிடியில்
ஒற்றைக்காலை
சிக்கவைத்துக்கொண்டு
சிறகடிக்கும் 
சிட்டுக்குருவி என் காதல்

இருக்கவும் முடியாமல்
பறக்கவும் முடியாமல் !




இறக்கம்

உண்ணும் உணவில்
ஒரு உப்புக்கல்
குறைவு என்கிறான்
உழவன்

வடிந்து விழுகிறது
வியர்வைத்துளி !




காரணம் 

உன்னை
எதற்காகக் பிடிக்கும்
என்று எப்போதும்
கேட்பவர்களிடம்
எப்படிச் சொல்ல

அந்த
காரணமறியா
காரணத்தை !




ஏமாற்றம் 

அந்த பாழடைந்த வீட்டில்
அந்தனை விழிகளையும்
திறந்து யாருக்கோ
காத்துக் கொண்டிருக்கிறது
ஜன்னல்

அதிகாலையில் வந்து
ஆறுதல் சொல்லிவிட்டுப்
போகிறது
சூரிய கதிர்கள் !




காலம்

அவனோடு ஏற்பட்ட
ஊடலில்

சிறுபிள்ளைபோல்
அழுது கொண்டிருக்கிறாள்
அவள்

அதைப்பார்த்து
சுவற்றில் சிரித்துக்
கொண்டிருக்கிறது
அவளது திருமணநாள்
புகைப்படம் !




நெருக்கம்

நள்ளிரவில்
உன் மலர்ந்த முகமும்
அதிகாலையில்
உன் உதிர்ந்த முடியும்

புதைந்து கிடக்கிறது
என் மார்பின்மேல் !




விடுதலை 

உன் பார்வையால்
கட்டிப்போடப்பட்டிருக்கும்
என்னை
பரோலிலாவது
விடுதலை செய்யேன்

கொஞ்சம் ஓய்வு
எடுத்துக்கொள்கிறேன் !




மழலை 

நடுவீதியில்
நடைபழகிய மழலை
மழைநீர்
தடுக்கி விழுந்தது

யாரோ தோண்டிவைத்த
குழிக்குள் !




புயலுக்குள் பூ

கொத்துக் குண்டுகளால்
தலைகள் வீழ்ந்து
கொண்டிருக்கும்
கலவர பூமியின்
ஏதோ ஒரு மூலையில்

கூட்டிற்குள்
குஞ்சுகளுக்கு இரை
ஊட்டிக் கொண்டிருக்கிறது
கரையான் !




இதழ்கள் 

கிளி கொத்திய
கோவைப்பழம்
அதிகாலையில்
அவள் இதழ்கள் !




அன்புடன்,
அகல்

14 comments:

  1. விடுதலையும் ஏமாற்றத்தையும் மிகவும் ரசித்தேன்..

    (யோரோ --> யாரோ )

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கும் எழுதுப் பிழையைச் சுட்டிக்காட்டியதற்கும் நன்றிகள் தனபாலன் சார்...

      Delete
  2. ஏமாற்றம் ,நெருக்கம்,விடுதலை அருமை அகல்... படிக்க தூண்டும் வரிகள்... .பாகம் 19 வந்தாச்சு..ஒரு குட்டி புக் சீக்கிரம் போடுங்க :)

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி ஜான்சி...

      Delete
  3. காரணமறியா காரணம்...
    உழவனின் வியர்வைத்துளி....

    சூப்பர் கவிதைகள்... வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றிகள் தோழர்...

      Delete
  4. அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல... கருத்திற்கு நன்றிகள்...

      Delete
  5. அனைத்து கவிதையும் அருமை. அதிலும் நெருக்கம்,காலம் கவிதைகள் மீண்டும் படிக்க வைத்தது. உழவனின் வியர்வைத்துளி அருமை ... வாழ்த்துக்கள் அகல் :-)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுதா... பிடித்த கவிதைகளைக் கூறிய அனைவருக்கும் நன்றிகள்...

      Delete
  6. அத்தனை குறுங் கவிதைகளும் மிக நன்று...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பா...

      Delete
  7. எல்லாக் கவிதைகளும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பரே...

      Delete