Sunday, 30 June 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 20

குறுங்கவிதைகள் என்ற தலைப்பில் இது இருபதாவது பாகம்... இந்த தலைப்பின் கீழ் சுமார் 200 கவிதைகள் பதியப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். தொடந்து ஊக்கப்படுத்தி ஆதரவுதரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

புரிதல் 

வீதியின் மூலையைநோக்கி
நடந்து கொண்டிருந்தேன்
அங்கே நிறைமாதக்
கர்ப்பிணி ஒருவள்
வயிற்றைத் தடவியபடி
தன் மழலையை உணர்ந்தாள்

அவள் இதழ்களின்
பிரிதலில்
நான் அவளது
தாய்மையை உணர்ந்தேன் !




வெட்கம் 

அவள் விரல்கள் தீண்டியதில்
வெட்கப்பட்டு சிவந்துபோனது
மருதாணி !


விரல்களும் மீன்களும்

கோவில் குளத்தின்
கடைசிப் படிக்கட்டில்
காலை நனைத்தபடி
இரை தூவுகிறாய் நீ

இரையை விட்டுவிட்டு
உன் விரல்களைக் கடிக்கிறது
மீன்கள் !



நீயும் வெட்டுக்கிளியும் 

பரந்த காட்டின்
ஒற்றையடிப்பாதையில்
துள்ளிக் குதிக்கிறாய் நீ

சேர்ந்து குதிக்கிறது
வெட்டுக்கிளிகள் !



முரண்

மழைப் பெய்தால்
கடவுளின் வரம்

வெள்ளம் வந்து
அடித்துச் சென்றால்
இயற்கைச் சீற்றம்

இப்படியாக மனிதன் !




இயலாமை 

கொசுவலையின்
இடுக்கிற்குள் கொசுவும்
கொசுவலைக்குள்
மனிதனுமாய்
தத்தளிக்கிறது
தமிழகம் !




ஏழ்மை

ஏர் பிடிக்கும் உழவன்
விதை விதைக்கும் மனைவி
பசியில் குழந்தையும் கன்றுக்குட்டியும் !




மழை

அவசர வருகையைச்
சொல்லி அனுப்புகிறது மழை
தூது போகிறது காற்று !




கடவுள் இருக்கட்டும் 

அந்த வேப்பமரத்தை
வெட்ட நெருங்கிய
கோடாரிக்காரனுக்குச்
சொல்லப்பட்டது

அதைச் சுற்றியுள்ள
புற்றில் கடவுள்
குடிகொண்டுள்ளார் என்று

கோடாரிக்காரன் விட்டு
ஓடினான்
மரமும் தப்பித்தது

நம்பிக்கையோ
மூட நம்பிக்கையோ
அந்த ஒரு மரத்தை
காப்பாற்றிய கடவுள்
அந்த புற்றிலேயே
குடி இருக்கட்டும் !




அகராதியில் அகதி

"அகதி" என்றால்
அடுத்த நாட்டில்
தஞ்சம் புகுந்தவன்
என்று அகராதியில்
சொல்லப்பட்டிருக்கிறதா ?
அது தவறாக இருக்கும்...

"தமிழன்" என்று
திருத்தி எழுதுங்கள் !




அன்புடன்,
அகல்

11 comments:

  1. அழகான கவிதைகள்...

    தமிழ் மனம் ஓட்டு போட்டுட்டேன்... வாழ்த்துகள். ஆதிலும் அந்த மருதாணி கவிதை அழகு...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் நண்பா...

      Delete
  2. எல்லாக் கவிதைகளுமே மிக அழகு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் சார்...

      Delete
  3. azhagana kavithaigal..adhuvum "vetkam,muran" romba pidichu iruku..
    vazthukal :-)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தேன்மொழி...

      Delete
  4. அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்... சிலது நச்...!

    ReplyDelete
  5. அத்தனை குறுங்கவிதைகளும் அருமை. குறிப்பாக வெட்கம்
    விரல்களும் மீன்களும். நீயும் வெட்டுக்கிளியும் கவிதைகளை வெகுவாக ரசித்தேன். பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. பிடித்த கவிதைகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள் முரளி சார்...

      Delete

  6. //இரையை விட்டுவிட்டு
    உன் விரல்களைக் கடிக்கிறது
    மீன்கள் !// செம...

    எல்லாக் கவிதைகளும் அழகு.....(8)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே...

      Delete