Tuesday, 16 September 2014

சகாயம் IAS க்கு எதிரான மேல்முறையீடும் காரணங்களும்

தமிழகத்தில் நடக்கும் தாதுமணல் கொள்ளை, கிரனைட் முறைகேடுகளை விசாரித்து, இரண்டு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கலெக்டர் சகாயம் தலைமையில் சென்னை உயர்நீதி மன்றம் அமைத்த குழுவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு கூறும் விளக்கம், இதுவரை 88 கிரானைட் குவாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட குத்தகை ரத்து செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக நடத்தப்பட்ட குவாரிகளுக்கு எதிராக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, கிரனைட் ஏற்றுமதியை நிறுத்திவிட்டோம் என்பதே அது.

மாநிலத்தில் நலனுக்காக அமைக்கப்பட்ட இந்தக் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரசர அவசரமாக தமிழக அரசு ஏன் மேல் முறையீடு செய்துள்ளது ? குவாரிகளின் குத்தகை ரத்து செய்யப்பட்டாலும், வழக்குகள் பதியப்பட்டாலும் அதை மறு ஆய்வு செய்வதில் தமிழக அரசு ஏன் உடன்படவில்லை என்பதையும் இங்கே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழக அரசிடம் எந்தக் கருத்தும் கேட்காமல் இந்தக் குழு அமைக்கப்பட்டது அரசை அவமதிப்பதுபோல் இருப்பதாக தமிழக அரசின் சார்பில் சொல்லப்பட்டாலும் அது ஒரு சப்பைக்கட்டு காரணமாகவே நம்மால் பார்க்க முடிகிறது.

தமிழக அரசால் குத்தகை ரத்து செய்யப்பட்ட குவாரிகள் யாருடையது என்ற பட்டியலையும், இப்போது குவாரிகளை நடத்துவோரின் பட்டியலையும் எடுத்தால் நமக்கு இதில் விடை கிடைக்கலாம். அதோடு, பாலாற்றுப் படுக்கையில் நடைபெற்ற முறைகேடுகளைப் பற்றியும், அதில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு பற்றியும், IAS அதிகாரி சகாயம் தமிழக அரசிடம் சமர்பித்த அறிக்கையில், யார் யாருடைய பெயர் இருந்தது என்ற பட்டியல் பெறப்பட்டாலும் இந்த மேல் முறையீட்டிக்குக்கான காரணங்கள் விளங்கிவிடும்.

சகாயம் அவர்கள், தாது மணல் கொள்ளை, கிரனைட் முறைகேடுகளைப் பற்றி நன்கு அறிந்தவர். அந்த முறைகேடுகளைப் பற்றியும் அதில் ஈடுபட்டோர் பற்றியும் முன்னரே ஆய்வு செய்தவர். முக்கியமாக மிகவும் நேர்மையானவர் என்பது தமிழக அரசுக்கு நன்கு தெரியும். அவரிடம் மீண்டும் இந்த வேலையை ஒப்படைத்தால் இன்னும் பல அயோக்கியத் தனங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார். அந்த முறைகேடுகள் தமிழக அரசின் பார்வைக்கு வரும் முன்னர், உயர்நீதி மன்றத்திற்கு போய்விடும். அது தமிழக அரசுக்கும் அதன் பெயருக்கும் பாதகமாக அமையலாம். அல்லது ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் அந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்பது போன்ற சில காரணங்கள் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்பிருக்கிறது.

தமிழக அரசின் மேல் முறையீட்டிற்கு இது போன்ற ஒரு சில காரணங்களை நம்மால் யூகிக்க முடிந்தாலும், மாநிலத்தில் நடக்கும் எந்த ஒரு செயலும் தனது கட்டளைப்படியே நடக்கவேண்டும் தன்னை மீறி எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற எண்ணமும், பழிவாங்கலும் அவ்வப்போது ஜெயலலிதாவிடம் இருந்து அப்பட்டமாக வெளிப்படும் ஒரு குணம். அதுவே அவருடைய பலவீனமும் கூட.

அகல்
17.09.2014

5 comments:

 1. எல்லாவற்றிலும் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார் அம்மா!

  ReplyDelete
  Replies
  1. வரவேற்கத்த தீர்ப்பு...

   தாதுமணல் கொள்ளை மற்றும் கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ய, சென்னை உயர்நீதி மன்றம் அமைத்த சகாயம் IAS குழுவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதி மன்றம். ஒருசில நல்ல விடயங்களைகூட நடக்கவிடாமல், தமிழகத்தில் எது நடந்தாலும் தனது கட்டுப்பாட்டில் தான் நடக்கவேண்டும் என்ற செயலலிதாவின் குணம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பாதகமாகவே அமையும். தன்னிசையாக செயல்படுதல் என்பது ஒரு முதல்வருக்கு அழகல்ல.

   இந்த வழக்கைப் பதிவு செய்த ட்ராபிக் ராமசாமி மற்றும் ஆய்வு செய்யப்போகும் சகாயம் அவர்களுக்கு நன்றிகள். எத்தனை கொள்ளையர்கள் எத்தனை ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது என்ற விவரத்தை பொறுத்திருந்து பார்ப்போம்.

   Delete
 2. எல்லாமே அம்மா அரசியலாகிவிட்டது...
  நல்ல அதிகாரி இவர்களால் காயப்படுத்தப்படுகிறார்...
  ஊழலுக்கே அரசு முக்கியத்துவம் கொடுப்பதுதான் வருத்தமான விஷயம்...

  ReplyDelete
 3. எல்லாமே அம்மா அரசியலாகிவிட்டது...
  நல்ல அதிகாரி இவர்களால் காயப்படுத்தப்படுகிறார்...
  ஊழலுக்கே அரசு முக்கியத்துவம் கொடுப்பதுதான் வருத்தமான விஷயம்...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தோழர்.. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு சாதகமாக அமைந்தது ஒரு நல்ல விடயம்..

   Delete