Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Sunday, 10 August 2014

எதற்காக ஒரு மொழியும் கலாச்சாரமும் காக்கப்பட வேண்டும் ?

ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சேர்ந்த மக்கள், ஒரு வலுவான நேர்கோட்டில் உணர்வுகளால் பிணைப்பட்டிருப்பார்களேயானால், அது அவர்களுடைய மொழி, கலாச்சாரம், பண்பாடு என்ற நேர்கோடாக மட்டுமே இருக்க முடியும். எப்பொழுது அந்த மொழி, கலாச்சாரம் என்ற நேர்கோடு உடைக்கப்படுகிறதோ, அப்பொழுதே அவர்களுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான பிணைப்பும் உடைக்கப்படுகிறது.

இப்படியான ஒரு சூழ்நிலையை உருவாக்கும்போது, அந்த நிலப்பரப்பைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக ஒற்றுமையாக இருக்கும் வாய்ப்பு குறைந்து இடைவெளி அதிகரிக்கிறது. அந்த நிலப்பரப்பு, மொழியைச் சேர்ந்த ஒருவனை அடித்தால் இன்னொருவன் வந்து கேள்வி கேட்கப்போவதில்லை என்ற நிலைமை உருவாகிறது.

இந்த இடைவெளியை உருவாக்குவதும், அதைப் பயன்படுத்திக்கொண்டு அந்த மக்களை ஆதிக்கம் செய்வதுமே வெளியிலிருந்து வருபவனின் முதல் குறிக்கோளாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் நம்மை ஆழ பயன்படுத்திய சூத்திரங்களில் இதுவும் ஒன்று என்பதை அறிந்தவர்கள், தங்கள் மொழியும் பண்பாடும் எவ்வளவு முக்கியம், அதைக் கட்டிக்காப்பது எவ்வளவு அவசியம் என்பதை உணர்வார்கள். இதை அறியாதவர்கள், இந்த மொழியைக் கட்டிக்கொண்டு அழுவதில் என்ன பயன் என்று பிதற்றுவார்கள்.

நமது மக்களில் ஒற்றுமையைக் குலைத்து அவர்களை ஆள்வதைக் குறிக்கோளாகக் கொண்டே இந்த மேலைநாட்டு கார்பரேட் நிறுவனங்கள் முதல், வட இந்திய இந்தித்துவவாதிகள் வரை குறிக்கோளாக வைத்து திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். தங்களின் எண்ணங்களைச் செயல்படுத்த இன்றைய ஆதிக்க சக்திகள் முதலில் விலைக்கு வாங்குவது, அந்த நிலப்பரைப்பைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் ஊடகங்களை.

இந்த ஆதிக்க சக்திகளை முதலில் அடித்து விரட்ட வேண்டும் என்ற அடிப்படை, மேலைநாட்டு மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழர்களுக்கு என்று புரியப்போகிறதோ அன்றே நமது மக்களின் விடுதலைக்கான பாதை திறக்கப்படுகிறது


- அகல்

Sunday, 24 March 2013

தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல !



வணக்கம் !

கடந்த சில நாட்களில் ஈழ விடுதலைக்காக ஒரு பெண் உட்பட சில தமிழ் உணர்வாளர்கள் தீக்குளித்து இறந்துள்ளனர். பண்டார நாயக்க முதல் ராட்சச மிருகம் ராஜபக்சே வரை இலங்கையில் தமிழனை சிங்களவன் தொடர்ந்து அடித்தான், துன்புறுத்திக் கொன்றான். ஈழத் தமிழனே காட்டிக் கொடுத்தான். இது போததென்று தமிழனை அழிக்க தமிழகம் துணைபோனது. இந்தியா துணைபோனது. இதுவெல்லாம் போதாதென்று இப்போது உலக அரசியல் துணைபோகிறது.

இத்தனை பேரையும் சமாளித்து வெல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் நீங்களும் இப்படி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டால் யாரடா போராடுவது ? உயிரைக் காவல் கொடுக்க இது என்ன ஊர்த் திருவிழாவா ? உண்மைக்கும் பொய்மைக்கும் இடையேயான போராட்டம். நமது போராட்ட வடிவம் மாறலாம், ஆனால் உயிர் போகக் கூடாது. சாக வேண்டியவன் எல்லாம் சாதாரணாமாக உலா வரும்போது அவர்களை சாகடிக்கப் பிறந்த நாம் ஏன் சாகவேண்டும்.

நீங்கள் உயிரை மாய்த்துக் கொண்டாலும் அதை ஒட்டுச் செய்தியாக போடக்கூட ஊரில் ஒரு ஊடகம் இல்லை. நீ செய்யும் உயிர்த் தியாகத்திற்கு உலகில் ஒரு துளியேனும் மதிப்பில்லை. இத்தனை சொல்லியும் சாக வேண்டுமென்று எண்ணினால், வாடா தோழா வா, களத்தில் நின்று களமாடிச் சாவோம். தற்கொலை செய்துகொண்டு சாக தமிழன் என்றும் கோழையல்ல !


இனம் படும் வலி, இளம் ரத்தம், இவ்வளவு பெரிய போராட்டம், நினைத்திருந்தால் பொதுச் சொத்துக்களை எரித்திருக்கலாம், அலுவலகங்களை ஆயிரம் துண்டுகளாய் உடைத்திருக்கலாம், ஆனால் அகிம்சை வழியில் உலகை உலுக்கியது நம் மாணவர் போராட்டம். இங்கே கண்ணியம் காத்த எம் கட்டபொம்மன், கரிகாற் பெருவளத்தானின் பேரன்களுக்கு எனது வீர வணக்கம். இது ஒரு சரித்திரத்தின் ஆரம்பம். எழுதப்படும் வரலாறின் முதல் வரி !


போராட்டம் தொடரட்டும்...


அன்புடன்,

அகல்