Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, 9 April 2015

20 கூலிகளின் கொலை

மரம் வெட்டுதல் என்பது தொழிலா ?

ஆம், கிராமத்து கூலித் தொழிலாளிகளைப் பொருத்தவரை மரம் வெட்டுவதென்பது ஒரு தொழில்தான். ஆனால் படித்த, நடுத்தர, மேல்தட்டு நகரவாசிகள் நினைப்பதுபோல அது சந்தனமரம், செம்மரம் வெட்டிக் கடத்துவதல்ல. உசிலை மரம், வேப்பமரம், புளியமரம் போன்றவற்றை விறகுக்காக வெட்டும் தொழில். இது தோட்டத்தில் பயிர்களுக்கு களை பறிக்க செல்வதுபோன்று அன்றாடம் நடக்கும் ஒரு தொழில். கிராமத்து பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு இது நன்கு தெரியும்.
கொல்லப்பட்டவர்கள் கடத்தல்காரர்களா ?

இல்லை. கொல்லப்பட்டவர்கள் கூலித் தொழிலாளிகள். ஒரு மாநிலம் விட்டு மற்றொரு மாநிலத்திற்கு பிழைப்பிற்காக சென்றவர்கள். 200 ரூபாய் கூலி சொந்த ஊரில் கிடைகிறது. ஆனால் 400 ரூபாய் பக்கத்து மாநிலத்தில் கிடைக்கிறதென்றால் தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள அந்த வேலையைத் தேடித் கூலிக்குப் போவதென்பது இயல்பு. இதை பேராசை என்று ஒருசாரர் சொல்வார்களேயானால், நல்ல சம்பளத்திற்கு வெளிமாநிலத்திற்கு வேலைக்குப்போகும் படித்த பட்டதாரிகளும் பேராசைக்காரர்கள் தானே ?

தமிழ்நாட்டின் பானிபூரி விற்க வடநாட்டில் இருந்து எதற்கு வருகிறான் ? அங்கு அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அங்குள்ளோர் யாரும் பானிபூரி சாப்பிடுவதில்லை என்று அர்த்தமல்ல. இங்கு விற்பதில் அவனுக்கு சில நன்மைகள் இருக்கிறது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம் என்று அவன் நினைத்திருக்கலாம். அதை தவறு என்று யாரும் சொல்ல முடியாது.

வெட்டுவது செம்மரம், அது சட்டப்படிக் குற்றம் என்பதையெல்லாம் தெரியாதவர்கள், செம்மரங்களின் சர்வதேச மதிப்பு என்னவென்று தெரியாத அப்பாவிகளைத்தான் இந்த கடத்தலுக்குப் பின்னிருக்கும் பண முதலைகள் பயன்படுத்தி இருப்பார்கள். அனைத்து விவரமும் தெரிந்தவர்களை பணியமர்த்த அவர்கள் என்ன முட்டாள்களா ? உண்மையில் யோசித்திபோருங்கள், ஒரு டன் செம்மரம், சர்வதேசச் சந்தையில் ஒரு கோடியைக்கூட எட்டும் என்பது, படித்த எத்தனை பேருக்கு இதற்கு முன்பே தெரிந்திருக்கும் ?

மரம் வெட்டி இயற்கை வளத்தை அழிப்பதை நியாயப் படுத்தவில்லை. ஆனால், மரம் என்பது இயற்கை வளம், அதைப் பாதுகாப்பது அவசியம். மழைவர மரம் காரணம், அது நமது வாழ்வாதாரம் என்றெல்லாம் 200 ரூபாய் கூலிக்குபோகும், கல்வியறிவு கிடைக்கப்பெறாத, அதைப்பற்றி யோசிக்க முடியாத நிலையில், அன்றாட உணவிற்காக போராடும் எளிய மனிதர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஆக, அவர்களின் வறுமையும் அறியாமையும் மட்டுமே இங்கே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அவ்வளவே.
யார்தான் இதற்குக் காரணம் ?

வெளிமாநில ஆட்களை அழைத்து வந்து, ஒரு கொலை செய்வதில் அந்த கொலை செய்யும் கும்பலுக்கு என்னென்ன நன்மை இருக்கிறதோ, அதே போன்ற நன்மைகளுக்கத்தான் விவரம் தெரியாத, மொழி தெரியாத, வெளியாட்களை இறக்குமதி செய்து பணியமர்துகிறார்கள். இதே வேலையைச் செய்ய உள்ளூர்க்காரனை பயன்படுத்தினால் இந்த கும்பல் எளிதாகச் சிக்கும் என்று அவர்களுக்குத் தெரியாமலா போயிருக்கும் ? அதோடு 20 பேரை சுட்ட ஒரு படையால், ஒருவனைகூடவா உயிருடம் பிடிக்க முடியவில்லை ? இந்த கடத்தலின் பின் இருப்பவர்களை அடையாளம் காண முடியவில்லை ?

சுடப்பட்ட இந்த கூலித் தொழிலாளிகளா சர்வதேச சந்தையில் செம்மரங்களை விலைபேசி விற்கிறார்கள் ? ஆலமரத்தின் ஆணிவேரை விட்டுவிட்டு அதன் விழுதை வெட்டுவதால் என்ன பயன் ? இதற்குப் பின், மிகப்பெரும் ஆள் பலம், அரசியல் பலம் இருக்கிறது. அந்த முதலைகளை விட்டுவிட்டு இந்த கூலிகளைக் கொன்றது சரி என்று பேசுபவர்கள் அடிப்படை புரியாதவர்கள் என்றே பொருள் கொள்ளவேண்டும். ஒரு கூலியைச் சுட்டுவிட்டால் இன்னொரு கூலி வராமல் போகமாட்டான். செம்மரம் வெட்டியதாகச் சொல்லி, 20 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியைக் கூட அறியாத கடைக்கோடி இந்திய குடிகள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களை இந்த மாபியா கும்பல் மீண்டும் பணியமர்த்தும். அவர்களின் வறுமையை மீண்டும் பயன்படுத்தும்.

இங்கு ஏதோ ஒரு அரசியல் அழுத்தத்திற்காக, ஒரு சாராரை திருப்திப் படுத்துவதற்காக, ஒரு படுகொலை அரங்கேற்றப் பட்டிருக்கிறது, அப்பாவிகள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இதைப் புரிந்து கொள்ளாமல், கூலிகளின்மீது பழிசுமத்துவதில் குறியாகத் திரியும் ஒரு குறிப்பிட்டோரை நினைத்து, வருத்தப்பட மட்டுமே முடிகிறது. இதன் பின்னணியில் இருக்கும் பெரு முதலாளிகளைப் பற்றி இவர்களால் பேச முடியாதபோதே இவர்களின் நோக்கம் என்ன என்பது புரிந்துவிடும். இந்த அப்பாவிகளின் கொலைகளில்கூட, மனிதாபிமானமற்ற முறையில், சில மதவாதிகள் மதத்தைக் கொண்டு திணிக்கிறார்கள் என்பது உச்சகட்ட வேதனை !

அகல்
10.4.2015

Friday, 28 November 2014

வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன்.

நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்கள் கழித்து ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியோடு வலைப்பூ பக்கம் வந்துள்ளேன்.

"நான் அப்பாவானேன் நாங்கள் பெற்றோரானோம்"

ஆம், நவம்பர் 20 தேதியன்று எங்களுக்கு அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் குட்டி "வெண்பா" பிறந்திருக்கிறாள். இந்தக் குட்டிக் கால்களுக்கு நான் அப்பாவாகிவிட்டேன் (இது வெண்பாவின் புகைப்படம் தான்) இந்த செய்தியை முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதையொட்டி எனக்கும் என் நண்பனுக்கும் இடையே நடந்த ஒரு உரையாடலை இந்த மகிழ்ச்சியான செய்தியோடு உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு.

வாழ்த்துக்களோடு ஆரம்பித்த உரையாடலின் ஒரு பகுதி மட்டும் இங்கே.

நண்பன்: முகநூல் பதிவைப் பார்த்தேன். இரண்டு விடயங்களைக் கவனித்தேன். அதில் ஒன்று, வெண்பா எந்தவித சாதிய, மத அடையாளங்களின்றி வளர்வாள் என்பது. அதன் பொருள் என்ன ?

நான்: எந்தவித சாதிய அடையாளங்களும் இல்லாமல் வளர்வாள். மனதளவிலும், அவளது பிறப்பு, மற்றும் பள்ளி கல்லூரி சான்றிதல்கள் என எந்த ஒரு அரசு சான்றிதல்களிலும் சாதியோ, மதமோ குறிப்பிடப்பட மாட்டது.

நண்பன்: அதனால் அவளது எதிர்காலம் பாதிக்கப்படாதா ? நான் சொல்வது இட ஒதுக்கீட்டைப் பற்றி.

நான்: சுயநலமாக, குறுகிய கால பலனாகப்பார்த்தால் பாதிப்பு இருக்கலாம். ஆனால் இடஒதுக்கீடு என்ற ஒன்றை காலப்போக்கில் ஒழித்து, அனைவரும் சமம் என்ற ஒரு நிலையை சமுதாயத்தில் உருவாக்கவேண்டுமானால் இதுபோன்ற முன்னெடுப்புகள் இப்போதிருந்தே தேவைப்படுகிறது.

நண்பன்: கடவுள் நம்பிக்கையையும் மதத்தையும் பிரிக்கமுடியாது. அப்படி இருக்க, நீ மதத்தை மறைத்துவிட்டால் வெண்பா எந்தக் கடவுளை வழிபடுவாள் ?

நான்: நம்பிக்கையின்மையால் நான் எந்தக் கடவுளையும் வழிபடுவதில்லை. ஒருவேளை அவள் கடவுள் நம்பிக்கையோடு வளர்ந்துவிட்டால், அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்காதவாறு சிவன், ஏசு, அல்லா, புத்தர் என்று அவள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் வழிபடலாம். அது அவளது தனிப்பட்ட உரிமை.

நண்பன்: வாழ்த்துக்கள். எனது வட்டாரத்தில் எனக்குத் தெரிந்து சான்றிதழ்கள் உட்பட சாதியப் புறக்கணிப்பை உன் மகளுக்கு நீ மட்டும்தான் செய்திருக்கிறாய்.

நான்: இருக்கலாம் ஆனால் இது புதிதல்ல. பெரியார் வழிவந்தோர் பல வருடங்களாகச் செய்து கொண்டு வரும் காரியம் தான் இது. அதை இலகுவாக மற்றோர் அறியும்படி செய்ய அப்போது அவர்களுக்கு சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் கிடைக்கவில்லை. அதனால் தெரியாமல் போயிருக்கும்.

நண்பன்: இன்றைய படித்த இளைய தலைமுறையினர் சாதியை எதிர்க்கும் மனப்பான்மை கொண்டவர்களாகத்தானே இருக்கிறார்கள்.

நான்: ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து என்றாலும், சாதிய எதிர்ப்புக்கும் சாதிய ஒழிப்புக்கும் வித்தியாசம் உண்டு. சாதிய எதிர்ப்பு என்பது சாதிய ஒழிப்பாக மாறாதவரை, இந்த கட்டமைப்பு மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் குடித்துக் கொண்டேதான் இருக்கும். அதனால் சாதிய ஒழிப்பு என்பது மிக முக்கியம்.

நண்பன்: பெருவாரியாக இல்லாவிட்டாலும், கடந்த சில தலைமுறைகளாக கலப்புத் திருமணங்கள் நடந்து கொண்டுதானே இருக்கிறது ?

நான்: உண்மைதான். ஆனால் கலப்புத் திருமணங்களின் மூலம் சாதிகள் ஒழிக்கப்படுவதில்லை என்பது என் கருத்து. காரணம், குழந்தை பிறந்தவுடன் அம்மாவின் சாதி அடையாளங்கள் புறக்கணிக்கப்பட்டாலும் அது அப்பாவின் சாதிய அடையாளங்களோடே வளர்கிறது என்பதுதான் எதார்த்தம்.

நண்பன்: எனது இரண்டாவது கேள்வி. வெண்பா என்ற பெயர் சுத்த தமிழ் வார்த்தையாகத் தெரிகிறது. ஆனால் பெரும்பாலானோர் சமஸ்கிருத பெயர்களைத்தானே வைக்கிறார்கள். நீ ஏன் அதைச் செய்யவில்லை ?

நான்: எப்படிப் பெயர் வைக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். என்னைப் பொருத்தவரை, பசியாற தாராளமாக தாய்ப்பால் கிடைக்கும்போது, எனக்குப் புட்டிப்பால் வேண்டும் என்று தோன்றவில்லை.

நண்பன்: ஆனால் சம்ஸ்கிருத வார்த்தைகளின் உச்சரிப்பு அழகாக இருக்கிறதே.

நான்: இதுவும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட எண்ணம் தான். ஆனால் நீ சொல்வதுபோல் பெரும்பாலானோருக்கு அது இயற்கையாகவே அழகாகத் தெரியவில்லை மாறாக அழகாகத் தெரிய வைத்தார்கள். அதன் பின் மிகப்பெரும் மொழியரசியல் இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், சில நூறு ஆண்டு வரலாற்றை ஓரளவிற்காவது புரட்ட வேண்டும்.

நண்பன்: சாதிய ஒழிப்பைப் பற்றி நீ இவ்வளவு பேசினாலும், நீயும் உனது சாதியைச் சார்ந்த பெண்ணைத்தானே திருமணம் செய்துகொண்டாய்.

நான்: உனக்கு யார் அப்படிச் சொன்னது ?

அகல்
28.11.2014 

Sunday, 10 August 2014

எதற்காக ஒரு மொழியும் கலாச்சாரமும் காக்கப்பட வேண்டும் ?

ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சேர்ந்த மக்கள், ஒரு வலுவான நேர்கோட்டில் உணர்வுகளால் பிணைப்பட்டிருப்பார்களேயானால், அது அவர்களுடைய மொழி, கலாச்சாரம், பண்பாடு என்ற நேர்கோடாக மட்டுமே இருக்க முடியும். எப்பொழுது அந்த மொழி, கலாச்சாரம் என்ற நேர்கோடு உடைக்கப்படுகிறதோ, அப்பொழுதே அவர்களுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான பிணைப்பும் உடைக்கப்படுகிறது.

இப்படியான ஒரு சூழ்நிலையை உருவாக்கும்போது, அந்த நிலப்பரப்பைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக ஒற்றுமையாக இருக்கும் வாய்ப்பு குறைந்து இடைவெளி அதிகரிக்கிறது. அந்த நிலப்பரப்பு, மொழியைச் சேர்ந்த ஒருவனை அடித்தால் இன்னொருவன் வந்து கேள்வி கேட்கப்போவதில்லை என்ற நிலைமை உருவாகிறது.

இந்த இடைவெளியை உருவாக்குவதும், அதைப் பயன்படுத்திக்கொண்டு அந்த மக்களை ஆதிக்கம் செய்வதுமே வெளியிலிருந்து வருபவனின் முதல் குறிக்கோளாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் நம்மை ஆழ பயன்படுத்திய சூத்திரங்களில் இதுவும் ஒன்று என்பதை அறிந்தவர்கள், தங்கள் மொழியும் பண்பாடும் எவ்வளவு முக்கியம், அதைக் கட்டிக்காப்பது எவ்வளவு அவசியம் என்பதை உணர்வார்கள். இதை அறியாதவர்கள், இந்த மொழியைக் கட்டிக்கொண்டு அழுவதில் என்ன பயன் என்று பிதற்றுவார்கள்.

நமது மக்களில் ஒற்றுமையைக் குலைத்து அவர்களை ஆள்வதைக் குறிக்கோளாகக் கொண்டே இந்த மேலைநாட்டு கார்பரேட் நிறுவனங்கள் முதல், வட இந்திய இந்தித்துவவாதிகள் வரை குறிக்கோளாக வைத்து திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். தங்களின் எண்ணங்களைச் செயல்படுத்த இன்றைய ஆதிக்க சக்திகள் முதலில் விலைக்கு வாங்குவது, அந்த நிலப்பரைப்பைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் ஊடகங்களை.

இந்த ஆதிக்க சக்திகளை முதலில் அடித்து விரட்ட வேண்டும் என்ற அடிப்படை, மேலைநாட்டு மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழர்களுக்கு என்று புரியப்போகிறதோ அன்றே நமது மக்களின் விடுதலைக்கான பாதை திறக்கப்படுகிறது


- அகல்

Monday, 8 July 2013

மனிதம் எங்கே போகிறது ??

ஜூலை ஒன்றாம் தேதி சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ வில் சண்முகம் என்பவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்கிறார். கீழே விழுந்தவர் ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார். முதல் உதவி ஏதும் கொடுக்காமல், அவரை காப்பாற்ற நினைத்த பொது மக்களையும் நெருங்கவிடாமல் சுமார் 20 நிமிடம் ஷாப்பிங் மால் நிர்வாகம் போலீஸ் வரட்டும் என்று தட்டிக் கழிக்கிறது. பிறகு பொதுமக்களின் நெருக்கடியால் வழிவிடுகிறது அந்த நிர்வாகம். அந்த இளைஞன் யார் என்றே தெரியாத ஒரு பெண்மணி உதவி செய்ய முற்பட்டு மருத்துவமனை வரை செல்கிறார்.

ஆனால் அந்த இளைஞர் இறந்துவிடுகிறார். அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு, ஷாப்பிங் மால் நிர்வாகத்தின் அலச்சியத்திற்கு நீதி வேண்டி மனிதத்தின் அடிப்படையில் துடிக்கிறார். அதைக் காவல்துறையோ ஷாப்பிங் மால் நிர்வாகமோ கவனித்ததாகத் தெரியவில்லை. காவல்துறை அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணை கேவலமாகத் திட்டுகிறார். கோடி கோடியாய் வருமானம் ஈட்டித் தரும் பொதுமக்களை துச்சமாக மதிக்கும் பணக்கார முதலைகளுக்கு மத்தியில் இந்தப் பெண்ணைப் பார்க்கையில் கண்கள் கலங்குகிறது. அந்த வீடியோ இங்கே:




ஏறக்குறைய இதே மனநிலையில் தான் மே 17 ஆம் தேதியன்று நானும் இருந்தேன். பைக்கில் வந்த இருவரை கார்க்காரன் தட்டிவிட்டுச் செல்கிறான். பைக்கில் வந்த இளைஞனில் ஒருவன் தலையில் பலத்த அடிபட்டு நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். 20 நிமிடத்திற்கும் மேலாக அந்த இளைஞனைத் தொடக்கூட மனமில்லாது, மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அந்த ஹைதராபாத்தின் மும்பை தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கில் மக்கள் பார்த்துக் கொண்டே போகிறார்கள்.

அந்த நேரத்தில் அங்கே வந்த நான், அந்த இளைஞனின் கோர சூழலைப் பார்த்து இதேபோல் கதற நேரிடுகிறது. பல ஆட்டோகாரர்களை கெஞ்சியும் வராமல், ஒரு நல்லவரின் உதவியுடன், 
அந்த மாலை நேர வாகன நெரிசலில் ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறேன். நிலை மோசமாக உள்ளது, அந்த மருத்துவமனையில் அவரைக் காப்பாற்ற தேவையான உபகரங்கள் இல்லை என்று சொல்லவே, அடுத்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறேன். முடிவில் அந்த இளைஞனும் இறந்து போகிறான்.

அந்த அனுபவம் இங்கே: எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !


இந்த இரண்டு சம்பவங்களின் ஒரு பொதுவான சாராம்சம் என்னவென்றால், அந்த இளைஞர்கள் 20 நிமிடங்களுக்கும் மேலாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் உதவி செய்ய முன்வராத மனிதாபிமானமற்ற நமது சமூகம் மட்டுமே.


மனிதம் மரித்துத்தான் போனதோ ??

அகல்

Friday, 5 July 2013

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

திவ்யாவின் காதல் கணவன் தர்மபுரி இளவரசனின் இறப்பு யாவரும் அறிந்த ஒரு விடயம். இந்த சம்பவத்திற்கு சாதிவெறி முக்கிய காரணம் என்றாலும் ஊடகங்களுக்கும் அதில் பக்கு உண்டு. இதற்கிடையே சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது இளவரசனின் இறப்பு கொலையா ? தற்கொலையா ? என்ற ஒரு பெரிய கேள்வி மனதில் குடிகொள்ள காரணங்கள் கண்முன்னே கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் அதைப் பற்றிய எனது பார்வையை மட்டும் பதிவு செய்ய கனத்த மனதுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.
1. நீதிமன்ற விசாரணையின் போது இளவரசன் தன்னை வற்புறுத்தி கூட்டிச் சென்றார், மிரட்டினார், கடத்தினார் என்ற எந்த பழியையும் இளவரசன் மீது திவ்யா போடவில்லை. இரண்டு தினங்களுக்கு முன், எனது தாயாரின் நலன் கருதி அவருடன் வாழ்வேன், இளவரசனுடன் இனி வாழப்போவதில்லை என்று நீதி மன்றத்தில் திவ்யா கூறினார். ஆனால் இளவரசனை வெறுத்து விலகியதாகக் கூறவில்லை. திவ்யா தன்னை முற்றிலும் வெறுத்திருக்கும் பட்சத்தில் இளவரசன் தற்கொலை முயற்சி செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் திவ்யா தன்னுடன் வாழப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிய பிறகும் அவர் எனக்குக் கிடைப்பார், நம்பிக்கை இருக்கிறது. திவ்யாவைச் சுற்றி இருப்போர் அவரை சுயமாக முடிவெடுக்க விடாமல் தடுக்கிறார்கள் என்று சலமில்லாமல் தனது கடைசிப் பேட்டியில் சொல்லி இருக்கிறார். 
2. இளவரசனின் முந்தய பேட்டிகளைப் பார்த்தல் அவரின் தெளிவும், தைரியம் நமக்குத் தெரியும். அதோடு திவ்யாவை விட்டுவிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள இளவரசனுக்கு திவ்யா வெறும் காதலியல்ல, மனைவி. தனக்குச் சொந்தமானவள். திவ்யா வார்த்தையளவில் வேண்டாம் என்று கூறியிருந்தாலும், அவள் தனது மனைவி என்பதால் சட்டம் இருக்கிறது எப்படியும் சேரமுடியும் என்ற நம்பிக்கை இளவரசனுக்கு இருந்திருக்கும்.
3. அப்படியே திவ்யாவின் வார்த்தைகளால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக வைத்துக் கொண்டாலும், புகைப்படங்களில் காணப்படும் இளவரசனின் உடல், ரயில்முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவில்லை. காரணம், அவ்வளவு வேகமாக வரும் ரயிலின்முன் விழுந்து தற்கொலை செய்துகொள்பரின் உடல் இவ்வாறு சில காயங்களுடன் தப்பி இருக்க வாய்ப்பில்லை. ஒரு பக்க முகமும், தலையும் மட்டும் காயம் அடைந்திருக்கிறது, சட்டைகூட பெரிதாக கசங்கவில்லை என்று செய்திகளில் படிக்க முடிகிறது. ரயில் விபத்தில் பெருத்த காயங்கள் இல்லாமல், சட்டை கசங்காமல் தலையில் மட்டும் காயங்களுடன் சாவது பெரும் ஆச்சர்யத்திற்குரியது.
4. சாதிய சக்திகள் ஒன்றுகூடி இளவரசனுடன் வாழபோவதில்லை என்று திவ்யாவைக் கூற வைத்த பிறகு, அவர்களின் அடுத்த நோக்கம் தங்களது சாதியைச் சேர்ந்த ஒரு ஆணிற்கு அந்தப் பெண்ணை கூடியவிரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இளவரசன்-திவ்யாவின் திருமணம் நாடறிந்தது. அதற்கான ஆதாரங்கள் இருப்பதால் அது சட்டப்படி செல்லக்கூடிய திருமணம்.
மறுமணம் செய்து வைக்க வேண்டுமானால் விவாகரத்துப் பெறவேண்டும். அதற்கு அந்தப் பெண்ணை ஒத்துக் கொள்ளவைத்தாலும், இளவரசன் இருந்த நிலைப்பாட்டில் அவர் திவ்யாவைப் பிரிய ஒத்துக் கொண்டிருக்க மாட்டார். அப்படியே ஒத்துகொண்டாலும் குறைந்தது ஒருவருடம் விவாகரத்திற்காக காத்திருக்கவேண்டும். அதற்குள் திவ்யா மீண்டும் தனது மனதை மாற்றிக்கொண்டு இளவரசனுடன் போனால் இதுவரை தங்கள் சாதியைக் காக்க செய்த போராட்டங்கள் வீணாகிவிடும் என்று அவர்கள் கருதி இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. இளவரசன் இறந்துவிட்டால் உடனடி மறுமணம் சாத்தியம் என்ற எண்ணம் தலைதூக்கி இருக்கலாம். அதனால் இந்த அவலமும் அரங்கேற்றப் பட்டிருக்கலாம்.
திவ்யா தனது தாயுடன் போக மிக முக்கியமான காரணம் அவர் தந்தையின் இறப்பு. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் என்பது அவரது பேச்சில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அந்த ஒரு காரணத்தை வைத்தே சாதிய சக்திகள் திவ்யாவை உணர்வுப் பூர்வமாக அணுகி, அவரது சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கி இருப்பார்கள். இளவரசனோடு போனால் நானும் இறந்துவிடுவேன் என்று அவரது தாயும் பயமுறுத்தி இருப்பார். என்ன செய்வதென்று தெரியாத பேதையாய், மன அழுத்தம், சாதிய நிர்பந்தம் இவற்றிற்கிடையே வேறு வழியில்லாமல் திவ்யா இளவரசனுடன் இனி வாழப்போவதில்லை என்று வார்த்தையளவில் மட்டுமே சொல்லி இருக்க வேண்டும்.
இதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா ? இல்லை இது தற்கொலையானால் அதற்கான சரியான காரணங்கள் என்ன என்பதை சாதிய/அரசியல் ஈடுபாடில்லாத, முறையான விசாரணை நடத்தப்பட்டால் வெளிச்சத்திற்கு வரும் என்று நம்புகிறேன். அப்படி நடக்குமா என்பதும், அப்படியே நடத்தாலும் விசாரணையை முடிக்க எத்தனை வருடங்கள் இழுப்பார்கள் என்பதும் பெரும் கேள்விக்குறியே !
"சாதி வெறியால் இளம் காதலர்களை இந்த நிலைக்குத் தள்ளிய நமது சமூகத்தை நினைத்து, ஒரு தமிழனாய் வெட்கித் தலை குனிகிறேன்"

அகல்

Thursday, 4 July 2013

தருமபுரி இளவரசன் செத்தான்.. சாதியம் ஜெயித்தது...

சாதிவெறிபிடித்த
பஞ்சப் பரதேசிகளே

சாதிய போதையை
குருதியில் குதிரைபோல்
ஓடவிடும்
அயோக்கிய ஆசாமிகளே


தருமபுரி இளவரசன் செத்தான்

இப்போது சொல்லுங்கள்
உங்கள் சாதியால்
நீங்கள் சாதிச்சது என்ன ?

பல கிராமத்தை எரித்ததும்
ஒரு உன்னதமான
காதலைப் பிரித்ததும்தானே

முண்டாசுக் கவிஞனே

முறுக்கு மீசைக்காரனே 
சாதிகள் இல்லையடி பாரதியே
மன்னித்துக்கொள்

நீ பிறந்த மண்ணில்
மீண்டுமொருமுறை
சாதியம் ஜெயித்தது


சாதியால் கட்டுண்ட கயவர்களே

ஈயிக்கும் இணையற்ற ஈனர்களே
இளவரசன் பாடை ஏறினான்
அவன் இறந்தும் வாழ்வான்

ஆனால்
நீங்கள் இருந்தும்

அழுகிப்போன
பிணத்திற்குச் சமம் !


கனத்த மனதுடன்,
அகல்

Friday, 31 May 2013

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட..

மாற்றம் தேவை

இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. முடிவுகளைப் பார்த்தவுடன், "நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட... உன்னோட படிச்சவன் எப்படி மார்க் வாங்கிருக்கான் பாரு... எனக்குனு வந்து பொறந்துருக்கே சனியன்... இதெல்லாம் எங்க தேறப்போகுது... உன்னப் பெத்ததுக்கு ஒரு எருமையயாவது பெத்துருக்கலாம், பாலாவது கொடுக்கும்" என்ற குரல் எத்தனை வீட்டில் இன்று ஒலிக்கிறதோ.. அது எத்தனை தற்கொலைகளுக்கு வழிவகுக்கப் போகிறதோ தெரியவில்லை... ஆனால் இதை சற்று ஆராய்ந்து பார்த்தால், நமது சமுதாயத்தில் மூழ்கியுள்ள அறியாமையையின் ஆழத்தையே காட்டுகிறது.

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கட்டாயம் ஒரு தனித்திறமை இருக்கும். அதை அறிந்துகொண்டு ஒரு குழந்தையை வளர்க்க பெரும்பாலான பெற்றோர் முயற்சிப்பதில்லை. அதை வெளிக்கொண்டு வரும் வகையில் நமது கல்விமுறைகளும் கட்டமைக்கப்படவில்லை. அது மதிப்பெண்களில் சகதியாகவே காணப்படுகிறது. அதனால் ஒருவனின் திறமையை தேர்வுகளில் வாங்கும் மதிப்பெண்களை வைத்து எடை போடுவது, மற்றவர்களோடு ஒப்பிடுவது என்பது பெற்றோர், உறவினர்கள் செய்யும் மிகப்பெரும் தவறுகளில் ஒன்றாகவே நீண்டகாலமாக தொடர்கிறது. அவ்வாறே நமது சமுதாயமும் பயிற்றுவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும்.


"தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும் வரை, இதுபோன்ற தற்கொலைகள் தவிர்க்கமுடியாத சாதாரண நிகழ்ச்சிகளாகவே நமது சமுதாயத்தில் உலாவரும். வெவ்வேறு துறைகளில் ஈடுபாடுள்ள வல்லுனர்கள் (மாணவர்கள்) நமக்குக் கிடைக்கப் போவதில்லை. இந்த சமுதாயம் சமச்சீரான பாதையில் முன்னேறப் போவதுமில்லை என்பதே நிதர்சனம். அதோடு மறுமதிப்பீடு என்பது என்ன ? அது எதற்கு தேவைப்படுகிறது ? அது சரியான முறையில் செய்யப்படுகிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.




மறுமதிப்பீடு

தேர்வு முடிவுகள் வந்தபிறகு, மதிப்பெண்கள் சரியாக வரவில்லை என்றால் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து (Revaluation) சில மாணவர்கள் தங்களின் சரியான மதிப்பெண்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் தங்களது அலைச்சல், போக்குவரத்து செலவுகள் சேர்க்காமல் ஒவ்வொரு பாடத்திற்கும் 200 முதல் 500 ரூபாய் மறுமதிப்பீட்டிற்கு செலுத்த வேண்டியுள்ளது. இருப்பவன் பணத்தைக் கட்டி மறுமதிப்பீடு செய்கிறான். இல்லாதவன் என்ன செய்வான் ? பணத்தைச் செலுத்த முடியாதவன் தனக்கு நியாயமாக வரவேண்டிய மதிப்பெண்களை இழக்கிறானே. இது யார் குற்றம் ?

நமது நாட்டில் தனியார் பேருந்தில் செல்ல பணம் இல்லாமல் மணிக்கணக்கில் காத்திருந்து நகரப்பேருந்துகளில் செல்லும் மாணவர்களும், தங்கிப் படிக்க வீடில்லாமல் இரவு நேரத்தில் பிளாட்பாரத்தை வீடாக்கிக்கொள்ளும் மாணவர்களும் லட்சக்கணக்கில் இருக்கத்தானே செய்கிறார்கள். இவ்வாறான சூழலில் வளரும் ஒரு மாணவனால் எவ்வாறு தனது மதிப்பெண்களை சரி செய்துகொள்ள முடியும் ?

மறுமதிப்பீட்டிற்கு மாணவன் ஏன் பணம் செலுத்த வேண்டும் ? தவறு அவனுடையதா ? மறு மதிப்பீட்டில் ஒருவன் முன்பைவிட அதிக மதிப்பெண் பெற்றால், இதற்குமுன் மதிப்பீடு செய்த ஆசிரியர் சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்றுதானே பொருள் ? தவறு ஆசிரியரிடமும் அரசிடமும் உள்ளது. உங்களின் தவறுகளை சரி செய்ய மாணவன் ஏன் பணம் செலுத்த வேண்டும் ? உங்கள் தவறுக்கு அவன் ஏன் பலியாகவேண்டும் ?

முதலில் நமது கல்வி முறையே தவறானது. இதில் மறுமதிப்பீடு என்பது கீழ்த்தட்டு மக்களைப் பாதிப்பதாகவே உள்ளது. மறுமதிப்பீடு செய்யும் முறையை கட்டாயம் மாற்றுவது அவசியம் என்றே எனக்குப்படுகிறது.

அன்புடன்,
அகல்

Sunday, 19 May 2013

இதோ எனது ஆசை !




உனது ஆசை என்ன என்று என் நண்பர் ஒருநாள் கேட்டார்... இதோ எனது ஆசை...

எப்போது இறப்பேன் என்று தெரியாது அதனால் நீண்டநாள் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையில்லை. ஆனால் இறப்பதற்கு முன்னால், என்னால் முடிந்ததை இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டும். மக்கள் வெவ்வேறு மதத்தை தழுவினாலும், மனதளவில் உள்ள மதப் பாகுபாட்டையும், ஏழை-பணக்காரன், ஜாதி-மத-இனவாத மோதல்களையும் களைய வேண்டும். எந்த வித்தியாசமும் இல்லாமல் உலகில் பிறந்த நாம் முதலில் மனிதர்கள், சமமானவர்கள் என்பதை ஒவ்வொருவரின் மனதிலும் விதைக்க வேண்டும்.

சாதிகளையும் அதன் பெயரில் ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அரசியல் அயோக்கியர்களையும் இளைய சமுதாயத்தின் துணைகொண்டு அழிக்கவேண்டும். சமுதாயத்தில் மாற்றம் மேல்மட்டத்தில் இருந்து வராது, அது ஒவ்வொரு தனிமனிதனிடம் இருந்து பிறக்கவேண்டும் என்பதை அழுத்தமாக மக்கள் மனதில் பதியவைக்க வேண்டும். குழந்தைகளை இயந்திரம் போல் நடத்தும் பள்ளிகளையும் அதன் கல்வி முறைகளையும் மாற்றவேண்டும்.

வியாபாரமாகப் போய்விட்ட உயிர்காக்கும் மருத்துவத்துறையை முடிந்த அளவு மாற்றவேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு சமூகச் சித்தனைகளைப் புகுத்தி வளர்க்கவேண்டும் என்பதை உணர வைக்கவேண்டும். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் கல்விமுறை அனைவருக்கும் சமம் என்ற நிலை வரவேண்டும். சுயநலப் போர்வையில் உறங்கிக்கொண்டிருக்கும் மனிதத்தை தட்டி எழுப்பவேண்டும்.

தனித் தமிழீழம் மலர வேண்டும். என் தாய்த் தமிழ் காக்கப்பட வேண்டும். 

இவை அனைத்திற்கும் எனது எழுத்துக்களும் செயல்களும் ஒரு துளியேனும் உதவ வேண்டும்.

இது பேராசையாகத் தெரியலாம். ஆனால் இதுதான் எனது ஆசை. தமிழகம் அறியப்பட்ட பெரிய எழுத்தாளன் அல்ல நான். ஆனால் எனது எழுத்துக்கள் எனது ஆசையை நோக்கியே பயணிக்கும்.

எனது தளத்தில் http://kakkaisirakinile.blogspot.in/ இதற்கான பதிவுகள் சேர்ந்துகொண்டே இருக்கும்.


அன்புடன்,
அகல்

Friday, 17 May 2013

எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !


இன்று மாலை (17/5/13) 5.15 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு கிளம்பினேன். 5.30 மணியளவில் ஹைதராபாத்தில் நாங்கள் தங்கி இருக்கும் கச்சிபோவ்லி என்னும் இடத்தில் (வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில்) வாகன நெரிசல் மிகுதியாகக் காணப்பட்டது. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வேகமாகச் சென்று பார்த்தேன்.

சாலையில் ஒரு பாதியில், வானத்தைப் பார்த்து ஒரு உடல் சரிந்து கிடந்தது. பின்தலையில் அடி. அவரின் தலை இருக்கும் இடத்தில் இருந்து ஒன்றரை மீட்டர் தூரத்திற்கு ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. காது, வாய், மூக்கு இவற்றிலும் ரத்த ஓட்டம் குறையாமல் வெளிவந்து கொண்டிருந்தது. சட்டை, கைகள் முழுதும் ரத்தம். ஆனால் இதயத்துடிப்பு நிற்கவில்லை. பெருமூச்சு விட்டுக்கொண்டு இன்னும் உயிர் இருந்தது.

ஒரு நீர் குமிழியில் நீர் கொப்பளித்தால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறே கொப்பளித்துக் கொண்டு வெளிவந்தது மூக்கில் இருந்து சுவாசக் காற்றுடன் கலந்துவந்த ரத்தம். அதை ஒரு மிகப்பெரும் கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரின் இதயத்துடிப்பு நிற்காமல் இருக்க, நெஞ்சை பிடித்து அழுத்தினேன். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அவரை காப்பாற்ற முதலில் 108 ஆம்புலன்சிற்கு அழைத்து சொல்லிவிட்டு, வீட்டில் இருக்கும் என் நண்பனை அந்த இடத்திற்கு வரச்சொன்னேன். சுட்டெரிக்கும் சூட்டில், வாகன நெரிசலுக்கிடையே நடுரோட்டில் கிடக்கும் அவரை ஓரமாக தூக்கிவைத்து முதலுதவி ஏதேனும் செய்ய நினைத்தேன். 

நான் கெஞ்சி கேட்டுக்கொண்டதில் கைகளைப் பிடித்து தூக்க ஒருவர் முன்வந்தார். அடிபட்டுக் கிடந்த அவரின் இரண்டு கால்களையும் பிடித்து நான் தூக்கினேன். ஆனால் அருகில் இருந்தவன், போலீஸ் வரட்டும் தொடாதீர்கள் என்று சொல்லியதும், கைகளைப் பிடித்தவர் விட்டுவிட்டார்.

என்ன செய்ய ? போலீஸ் வருவதற்குள் இவன் செத்தால் பரவாயில்லையா என்று என்னை அறியாமல் நடு ரோட்டில் கத்தினேன். சிறிது நேரத்தில் ஒரு போலீஸ் கான்ச்டபுள் அந்த இடத்திற்கு வந்தார். எப்படியும் இந்த நெரிசலில் அம்புலன்ஸ் வருவது அவ்வளவு எளிதல்ல என்று எண்ணி, ஓரத்தில் போய்க் கொண்டிருக்கும் ஆட்டோக்களை வலி மறித்து அருகில் உள்ள ஏதேனும் ஒரு மருத்துவ மனையில் முதலுதவி செய்ய முயற்சித்தேன். போலீஸ்காரரும் தன் பங்கிற்கு ஆட்டோக்களை வழிமறித்தார். அவரையும் மதிக்காமல் பலர், விட்டால் போதும் என்று முறுக்கிப் பிடித்து ஓடினார்கள். ஒருகூட்டம் பார்த்துக் கொண்டே போனது.

கடைசியில் ஒரு இளம் ஓட்டோ ஓட்டுனர் உதவ முன்வந்தார். இருவரின் உதவியுடன் அவரை தூக்கி ஆட்டோவின் பின்புறத்தில் படுக்க வைத்தேன். எனக்கு ஹிந்தி, தெலுங்கு தெரியாது, அதனால் இங்கு வசிக்கும் யாரேனும் என்னுடன் வாருங்கள் என்று கேட்டேன். ஒருவரும் முன்வரவில்லை. 

அந்த உடல் உயிருக்கு போரட்டிக்கொண்டு ஆட்டோவில் கிடந்தது. அந்த இடத்தில் குறைந்தது 5 நிமிடம் விரயமானது. கடைசியில் ஒருவர் முன்வந்தார். ஆட்டோ டிரைவர், போலிஸ்காரர், நான் மூவரும் முன் சீட்டில் அமர்ந்து கொண்டோம். அந்த ஒருவர் பின் சீட்டில் அமர்ந்துகொண்டு அடிபட்டவரின் தொல்ப்பட்டையை பிடித்துகொண்டார்.

அடிபட்டது பின்தலை என்பதால் நடம்புமண்டலம் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கும் போல் தெரிந்தது. காரணம் அவரின் கால்களை மடக்கி ஆட்டோவின் உள்ளே வைக்க முடியவில்லை. முற்றிலும் விரைத்தபடி இருந்தது. அதனால் முன்சீட்டில் அமர்ந்துகொண்டு பின்புறம் திரும்பி அவரின் கால்கள் தரையில் படாமல் தூக்கிப் பிடித்துக்கொண்டேன். அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

இருந்தும் முயற்சி செய்து பிடித்துகொண்டு, பின்புறம் அமர்ந்திருபவரிடம் அடிபட்டவரின் நெஞ்சை அழுத்தச் சொன்னேன். அந்த நபர் அடிபட்டவரைப் பார்த்து எனது கசின் என்றார். யாரோ தகவல் கொடுத்ததின் பேரில் அவர் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இருவரின் பெயரையும் கேட்டேன். இரண்டு முஸ்லிம் பெயர்களைச் சொன்னார் (அந்த நேரத்தில் சொல்லப்பட்டதை என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை).

ஒரு வழியாக ஒரு சிறிய மருத்துவமனையைப் பார்த்து முதலுதவிக்காக ஆட்டோக்காரர் நிறுத்தினார். ஓடிப்போய் ரிசப்சனில் அவசரத்தை போலீஸ்காரரும், நானும் சொன்னோம். நான்கு சக்கர வண்டியில் அவரை உள்ளே தூக்கி கொண்டு சென்றோம். ஆனால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று மருத்துவர் சொன்னார்.

அடிபட்டவரின் சகோதரனும் நண்பரும் அப்போது அங்கே வந்துவிட்டார்கள். மாருதி ஆம்னி காரின் பின்புறத்தில், அடிபட்டவரை அவரின் கசின் மற்றும் சகோதரன் தாங்கிப் பிடித்துக்கொள்ள, நான் மற்றும் போலீஸ்காரர் முன்னே அமர்ந்து கொண்டோம். அவரின் நண்பர் காரை வேகமாக இயக்கினார். அப்போது மணி 6.15 இருக்கும். போலீஸ்காரர் அந்த நேரத்து கடும் வாகன நெரிசலை வண்டியில் அமர்ந்துகொண்டு விசிலடித்து விளக்க முடிவு செய்தார். நான் எனது கை வெளிப்புறம் எட்டிய அளவிற்கு காரை பலமாக தட்டிக்கொண்டே போனேன். 

கார் வேகமாக வந்து பிரிமியர் மருத்துவமனையை அடைந்தது. அவர் ICU அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். முதலுதவி அளிக்கப்பட்டது. போலீஸ்காரர் என்னைப் பற்றிய ஆதாரங்களை திரட்டிக்கொண்டார். திடீரென எங்களை மருத்துவர் அழைத்தார். ICU விற்குள் சென்றோம். அடிபட்டவரின் கை, கால் நரம்புகள் முற்றிலும் முறுக்கிக் கொண்டிருந்தது.

கையுறை அணிந்திருக்கும் மருத்துவரின் கையில் ரத்தம் நிறைந்த ஏதோ ஒரு சிறிய துண்டு இருந்தது. அதைக் காண்பித்து மூளையில் பலத்த அடிபட்டுள்ளது, ஏறக்குறைய முற்றிலும் சிதைந்து விட்டது, அதன் சிறிய பாகம் தான் இது என்று ஆங்கிலத்தில் கூறினார். அப்போது என்னை அறியாமல் ஏதோ ஒரு உலகத்தில் இருப்பதாக மட்டும் உணர முடிந்ததது. சற்று நேரம் கழித்து மீண்டும் அழைத்தார். அவரின் அறைக்குள் போனோம்.

0% மட்டுமே இவரால் உயிர்வாழ முடியும் என்றார். அடிபட்டவரின் சகோதரனுடன் சேர்ந்து நானும்

"எப்படியாவது காப்பாற்றுங்கள்" என்றேன். 

"நான் ஒன்று சொல்லவா ? நீங்கள் மிகவும் தாமதமாக வந்திருக்கிறீர்கள்.  அதோடு இவர் இருக்கும் நிலைக்கு உலகில் உள்ள எந்த நரம்பியல் மருத்துவராலும் காப்பாற்ற முடியாது. அதிகபட்சம் ஒரு மணிநேரம் உயிர்வாழ்வார்" என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்போது என் நண்பனும் மருத்துவமனைக்கு வந்துவிட்டான். அவனிடம் மருத்துவர் சொன்னதை சொல்லிவிட்டு அங்கு இருக்க மனமில்லாமல் அவனிடம் போகலாம் என்றேன்.

போலீஸ்காரரிடம் நான் கிளம்புறேன் சார் என்றேன். அவர் கையைக் குலுக்கி "மனிதாபிமனத்தொடு வந்ததற்கு நன்றி, என்னிடம் உங்களுடைய தகவல் இருப்பதால் பயப்படவேண்டாம்" இது வெறும் சாட்சிக்கே என்றார்.

காய்ந்துபோன சில துளி ரத்தக் கரைகள் படிந்த கைகளோடு நண்பனுடன் 7 மணியளவில் வீடு திரும்பினேன்.

இதில் கவனிக்கப் படவேண்டிய சில விடயங்கள்:

1. விபத்து நடந்தது நான்கு சாலைகள் இணையும் இடம். ஒவ்வொருநாளும், அந்த இடத்தில் சிறு குழந்தைகளை ஏற்றிவரும் பள்ளி வாகனம் முதல் அனைவரும் கண்மூடித்தனமாக ஓட்டுவார்கள். அது ஹைதராபாத் நகரின் ஓரமாகச் செல்லும் மும்பை தேசிய நெடுஞ்சாலை. மக்கள் நெருக்கம் நிறைந்த அந்த இடத்தில் ஒரு சிக்னல் இல்லை. அந்த இடத்தில் முன்பெல்லாம் இருந்த ட்ராபிக் போலிஸ் சில நாட்களாக இருக்கவில்லை (இருந்தாலும் சாலையின் ஓரமாக உட்காந்து அவன் மொபைலை நோண்டிக் கொண்டிருப்பான் - பல முறை பார்த்திருக்கிறேன்). இது முதல் தவறு.

2. ஒரு கார்க்காரன் மோதிவிட்டு ஓடிவிட்டதாகச் சொன்னார்கள். அதோடு அடிபட்டவர், அவரோடு வந்த ஒருவர், யாரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை (யார் ஒட்டியது என்று எனக்குத் தெரியாது, கூட வந்தவருக்கு காலிலும் வயிறிலும் பலத்த காயம்)

3. 43 டிகிரி சுடும் மே மாத வெயிலில், சமமாக இருக்கும் சாலையில் ஒன்றரை மீட்டர் அளவிற்கு ரத்தம்போக குறைந்தது அரைமணி நேரம் ஆகாமல் இருந்திருக்காது. அந்த வெப்பத்தில் விரைவாக உறையும் ரத்தம் ஒன்றரை மீட்டர் அளவிற்கு போகும் வரை உயிர்க்குப் போராடிக் கொண்டிருக்கும் அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். இவர்களை என்ன செய்ய ? தனக்கு வந்தால்தான் உயிரின் அருமை தெரியுமா ?

4. விபத்து என்று தெரிந்ததும் பல ஆட்டோக்காரர்கள் அந்த இடத்தைவிட்டு தப்பிக்கவே முயற்சி செய்தார்கள். உதவ முன்வரவில்லை. அவர்களுக்கு இந்த நிலை வராதா ?

5. எனது வேண்டுகோளுக்கிணங்க ஒருவர் அடிபட்டவரை சாலையின் ஓரமாகத் தூக்கிவைக்க முன்வந்தார். போலீஸ் வரட்டும் என்று சொல்லி அதையும் ஒருவன் தடுத்தான். அவனது மண்டையை அடித்து உடைத்து படுக்கவைத்து போலீஸ் வரட்டும் என்று சொன்னால் நன்றாக இருக்காதா ?

6. அவரவர் ஐடியா கொடுத்தார்களே தவிர, ஒருவர்கூட ஆட்டோவில் ஏற முன்வரவில்லை. ஒவ்வொருவரையும் கெஞ்சி வரச்சொன்ன அந்தப் போராட்டத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் வீணானது. அந்த நேரம் மிக முக்கியானது என்பது இந்த மனிதர்களுக்கு தெரியாமலா போய்விடும் ?

7. விழுந்துகிடந்தது ஒரு முஸ்லிம் சகோதரன். ஆனால் அந்த கூட்டத்தில் இருந்த இரண்டு முஸ்லிம்கள் இதைச்செய் அதைச்செய் என்று மொழிதெரியாத என்னிடம் முன்மொழிந்தார்களே ஒழிய, அவனை காப்பாற்ற முன்வரவில்லை.

மனிதம் போதிக்கும் மதக்கொள்கைகளைப் பின்பற்றாமல் மதத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பதில் என்ன பயன் ? (இதை எல்லாரும் செய்கிறார்கள் என்று பொதுமைப் படுத்தவில்லை. அதனால் இதைப் படிப்பவர்கள் தயவு செய்து இஸ்லாம் சகோதர்கள் மீது தாக்குதல்களைத் தொடுக்கவேண்டாம். அனைத்து மதத்திலும் நல்லவர் கெட்டவர் உண்டு)

ஒரே ஒரு மன நிம்மதி. எப்போதும் நாம் குறைசொல்லும் போலீஸ்காரர்களில் மனிதாபிமானமிக்க ஒருவரையும், மனிதம் நிறைந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரையும் சந்தித்ததில்.

எது எப்படியோ மனிதாபிமானமற்ற பலரின் செயலால் முன்பின் தெரியாத ஒரு சகோதரனை கண்முன்னே இழந்தேன். இங்கே தெரிந்தது அவர்களின் இன, மொழிப்பற்றும் கேடுகெட்ட நகர கலாச்சாரமும்.

இதே விபத்து எனது கிராமத்திற்கு அருகே நடந்திருந்தால், அடிபட்ட அடுத்த நிமிடமே மடியில் ஏந்தி சோடா கொடுத்திருப்பான் ஒருவன். அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல தனது வண்டியை எடுத்துக்கொண்டு வந்திருப்பான் மற்றொருவன். எதை எதையோ எதிர்பார்த்து பல பட்டங்கள் பெற்ற இவர்களை விட, எதையும் எதிர்பார்க்காமல் ஓடிவரும் படிக்காத அந்தப் பாமரன் எவ்வளவோ மேல்.

இதே போன்று முன்பொருமுறை எனக்குக் கிடைத்த அனுபவம் இங்கே இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள்

தயவு செய்து கட்டாயம் இதைப் பகிருங்கள். இது போன்ற விபத்துக்கள் அடுத்தவருக்கு மட்டுமே வராது, நமக்கும் வரும் என்பதை இந்த உலகம் உணரட்டும்.

கனத்த மனதுடன்,
அகல்

Monday, 13 May 2013

பணத்தால் நிச்சயிக்கப்படும் இன்றைய திருமணம்


ஒரு பெண் தனக்கு வரும் எதிர்கால கணவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை ஒரு திருமண (மேட்ரிமோனி) இணையதளத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன் என் நண்பன் காட்டினான். அவள் ஒரு MBBS பட்டதாரி. ஆனால் வேலை செய்யவில்லை. மணமகனிடம் அவளுடைய எதிர்பார்ப்புகள் கீழே உள்ளவாறு குறிப்பிடப்பட்டிருந்தது. 

"மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற, வெளிநாட்டில் பெரிய அளவில் செட்டில் ஆனா அல்லது இந்தியாவில் சொந்தமாக பெரிய மருத்துவமனை வைத்துள்ள அல்லது வருடம் குறைந்தது ஒரு கோடி வருமானம் உடைய ஒரு வரன் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது"

திருமண வாழ்க்கைக்கு முக்கிய கருப் பொருளான வரனின் குண நலன்களையோ, குடும்பத்தையோ பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடாமல், இவ்வாறு அந்தப் பெண் சொல்லியதைப் பார்த்தவுடன் எனக்கு மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்...

"உனது எதிர்பார்ப்பிற்கு நீ திருமணம் செய்துகொள்ள வேண்டியது பணம் அச்சடிக்கும் மெசினே தவிர ஒரு ஆணை அல்ல"

[இந்த கூற்று, பணம்/வரதட்சணை எதிர்பார்த்து பெண் தேடும் அத்தனை ஆண்களுக்கும் பொருந்தும்]


அன்புடன்,
அகல்

Sunday, 12 May 2013

அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும்


மளிகைக் கடைக்கே சில கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய வசதியற்ற சிறு கிராமம் அது. 1983 ம் வருடம், நாள் கணக்காக தொடரும் அடைமழை காலத்தில் மருத்துவச்சி துணையுடன் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. தாய் வீட்டில் பிரசவம் பார்க்க வந்த தனது கணவனின் தங்கைக்கு அதே வீட்டில் ஒருவார இடைவெளியில் ஒரு பெண்குழந்தை பிறக்கிறது.

இரண்டு குழந்தைகளும் நல்ல உடல் நலத்துடன் இருந்தது. ஆனால் அடைமழையின் தாக்கத்தாலும், சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த உடல் என்பதாலும் அந்த இரண்டு பெண்களின் உடல்நிலை தற்போது இருக்கும் கால நிலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாறி மாறி படுத்த படுக்கையாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஒரு பெண்ணின் உடல் நிலை சரியாக இருக்கும் நேரத்தில் மற்றொரு பெண்ணிற்கு உடல்நிலை குன்றியது.

வீட்டைவிட்டு வெளியில் வராத அளவிற்கு மழையும் பல நாட்களாகப் தொடந்தது. குழந்தை பிறந்து சில நாட்களே ஆனதால், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய கட்டாயம். தனது மகனுக்கு அந்த தாய் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். தனது நாத்தனார் (பெண் குழந்தையின் தாய்) படுக்கையில் இருந்தாள். அவளது பெண் குழந்தை பக்கத்து அறையில் அழுது கொண்டிருந்தது. உடல்நலக் குறைவால் உணவு கூட உட்கொள்ள முடியாமல் இருக்கும் அந்த தாயால் பெண்குழந்தைக்கு பால் தர முடியாத நிலை.

ஒரு மார்பில் பால் குடித்த ஆண் குழந்தை, பாதி வயிர் பசியாறியவுடன் அதைப் பாயில் கிடத்தினாள் குழந்தையின் தாய். பிறகு அழுது கொண்டிருக்கும் நாத்தனாரின் பெண் குழந்தையை தூக்கி தனது மற்றொரு மார்போடு அணைத்தாள். அந்தக் குழந்தையும் பாதி வயிர் பசியாறியது.

பெண் குழந்தையின் தாய் உடல் நிலை தேறியபோது, ஆண் குழந்தையின் தாயிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. பிறகு தனது நாத்தனார் அவளது பாலை குழந்தைகளுக்கு பகிர்ந்தளித்தது போல் அவளும் பகிர்ந்தளிக்க முடிவு செய்தாள். பாதிப் பசியுடன் குழந்தைகளின் நாட்கள் இவ்வாறே நகர்ந்தது. மழை விட்டது. இருவரின் உடல் நிலையும் தேறியது.

குறிப்பு:

இது கதையல்ல. உண்மைச் சம்பவம். அந்த ஆண் குழந்தையின் தாய் எனது தாய். அந்த ஆண் குழந்தை எனது அண்ணன். பெண் குழந்தையின் தாய் எனது அத்தை. உறவு முறைகளையும் தன் குழந்தை மட்டும் முழுப் பசியாற வேண்டும் என்ற சுயநலத்தையும் தூக்கி எறிந்துவிட்டு மருமகளுக்கும், மருமகனுக்கும் பால் கொடுத்து வளர்த்த அந்த இரண்டு தாய்களின் தாய்மையை எனது அம்மா அவ்வப்போது கதையாகச் சொல்லி கேட்டிருக்கிறேன். சற்று வியந்திருக்கிறேன்.

எனது தாய்க்கும், உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அகல்

Sunday, 5 May 2013

காலை 5.30 மணிக்கு கடப்பாவில் - மனம் பாதித்த அனுபவம்


என்னோடு வேலைபார்க்கும் நண்பர் ஒருவரின் ஊர்த் திருவிழாவிற்கு வேலூர் போய்விட்டு ஹைதராபாத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். காலை ஐந்து மணிக்கு ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் காடுகள் நிறைந்த நெடுஞ்சாலையில் கார் போய்க் கொண்டிருந்தது. சுமார் 5.30 மணிக்கு தேநீர் அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு கடையைப் பார்த்து காரை நிறுத்தினோம்.

நெடுஞ்சாலையில் இருந்து பத்து மீட்டர் தூரமே உள்ள அந்த கடை மிகவும் சிறியது. டீ சொல்லிவிட்டு நின்று கொண்டிருக்கும் எங்களுக்கு டீ தரும்படியாக அந்தக் கடைக்காரர் தனது மகனை அதட்டிக் கூறினார். அவனும் எங்களுக்கு ப்ளாஸ்கில் உள்ள டீயை ஊற்றிக் கொடுத்தான். அவன் மனதின் ஆழத்தில் உள்ள ஏதோ ஒரு வெறுப்பு, அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. அது தூக்கக் கலக்கத்தினால் வந்ததல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

டீயை வாங்கிக் கொண்டு திரும்பியபோது, 40 - 45 வயது மதிக்கத்தக்க இருவர், கடைக்கு முன்னாள் 5 அடி தூரத்தில் இரண்டு சிறிய ஸ்டூலில் அமர்ந்து கொண்டு, மூன்றாவது ஸ்டூலில் உள்ள இரண்டு பிளாஸ்டிக் க்ளாசில் ஒரு குவாட்டரை ஒருவரும், மாசவை மற்றொருவரும் திறந்து சரிபாதியாக ஊற்றினார்கள். அந்த அதிகாலைப் பொழுதில் இதைப் பார்க்க சற்று அதிர்ச்சியாக இருந்தது. இதைப் பார்த்த பிறகு, கடைக்குப் பின்புறம் ஒரு பத்து பேர் வரிசையில் நின்று கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அந்தக் கடைக்காரரும் அவரது மனைவியும் பரபரப்பாக அவர்களுக்கு பாட்டில்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அது பாரோ, உரிமம் பெற்ற மதுபானக் கடையோ இல்லை. சாதாரண பெட்டிக்கடை. அவர்கள் மதுபான பாட்டில்களை வைத்திருந்தது கூட மற்ற குளிப்பானங்கள் வைக்கப் பட்டிருக்கும் பிரிட்ஜில் தான். இந்த நேரத்தில் இத்தனை பேர் குடிக்க வரிசையில் நிர்ப்பது கஷ்டமாகவும் கோபமாக இருந்தாலும், இந்த சூழலில் இருக்கும் அந்தச் சிறுவன் எப்படி வளருவான், அவனது மனநிலை எப்படி இருக்கும் என்ற எண்ணமே அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது.

டீயை குடித்துவிட்டு காரை எடுத்தோம். கார் ஒரு 200 மீட்டர் நகர்ந்திருக்கும். என்னோடு இருந்த நண்பர்களிடம், இதையெல்லாம் போலீஸ் கண்டிப்பர்களா இல்லையா, இப்படி அதிகாலையிலேயே இவர்கள் குடித்து அழிந்து கொண்டிருக்கிறார்களே என்று சொல்லிக்கொண்டே, கார் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பெரிய கட்டிடம், அதன் உச்சியில் "காவல் நிலையம், கடப்பா மாவட்டம்" என்று எழுதப்பட்டிருந்தது. 

அன்புடன்,
அகல்

Friday, 26 April 2013

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்

IPL இல் சன் ரைசர் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் இலங்கை கிரிகெட் வீரர் குமர சங்ககராவை சென்னையில் நேற்று நடைபெற்ற IPL போட்டியில் விளையாட அனுமதிக்காததற்கு இன்று காலை எழுத்தாளர் ஞானி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டார். அதைப் பற்றிய எனது பார்வையே இந்த கட்டுரைக்குக் காரணம். வாருங்கள் அது என்னவென்று பார்ப்போம்.




ஞானியின் முகநூல் ஸ்டேடஸ்....

இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ‘தமிழர்கள்’ என்று சொல்லிக் கொள்வோரின் ஆர்ப்பாட்டம் அறிந்து வருத்தப்படுகிறேன். 1983 இனக்கலவரத்தின்போது சங்ககாரா ஆறு வயது சிறுவன். அவரது தந்தையும் வழக்கறிஞருமான சிக்சானந்த சங்ககாரா தன் வீட்டில் 35 தமிழர்களுக்கு ( குறிப்பாக பல சிறுவர்களுக்கு) அடைக்கலம் கொடுத்து கலவர காலம் முழுவதும் அவர்களைக் காப்பாற்றியவர். ஈழத் தமிழர்களின் இன்றைய அசல் எதிரிகள், இங்கே சிங்களவர்களுக்கு எதிராக அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் செய்வோர்தான் என்ற என் கருத்து வலுப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

எனது கருத்தும் கேள்வியும்...

உங்களை நல்ல எழுத்தாளர் என்று சொல்லும் பலரிடம், நீங்கள் சூழலுக்கேற்ப பேசும் அரசியல் தந்திரவாதி, என்று சொல்லிய என் கருத்தும் இப்போது வலுப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஞானி அவர்களே ஒன்றை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இந்தத் தடை சங்ககராவிற்கு மட்டுமான தடையல்ல. ஒட்டுமொத்த இலங்கை வீரர்களுக்கான தடை. இலங்கை என்ற நாட்டிற்கான தடை. இந்தத் தடையால் இதுவரை என்ன நடந்துவிட்டது ? என்று நீங்கள் கேட்கலாம்.

இதுவரை தமிழக மாணவர்கள் எதற்காக போராடுகிறார்கள் என்ற காரணத்தை தமிழகம் தாண்டி வேறெந்த மாநில மக்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. இலங்கையில் 1,40,000+ தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. வெளிமாநிலத்திலும் நாடுகளிலும் வாழும் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்கள் அதற்கு சாட்சி.

இந்தத் தடைமூலம், மற்ற மாநில இளைஞர்கள் அதன் காரணத்தை தெரிந்துகொள்ள முற்படுகின்றனர். சக தமிழ் நண்பர்களிடம் கேட்கிறார்கள். இதைப் பற்றிய செய்தியும், தமிழர்களின் இனப்படுகொலையை செய்யப்பட்டதின் பின்னணியும் மற்றவருக்கும் புரியும்படியான ஒரு துருப்புச் சீட்டாக இது அமைகிறது. ஒரு வகையில் இது இலங்கை மீது சர்வதேச அழுத்தம் தேவை என்ற கருத்தை வலுப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கையாக இருக்கிறது.  

அதோடு உங்கள் ஸ்டேடஸ் பார்க்கையில் எனக்கு சில கேள்விகள் மனதில் உதிக்கிறது. முடிந்தால் பதில் அளிக்க முயற்சிக்கவும்.

1. இது சங்ககராவிற்கு மட்டுமேயான தடை இல்லை என்பது உங்களுக்கும் தெரியும். சங்ககராவை நாங்கள் கெட்டவன் என்றும் சொல்லவில்லை. இருந்தும், ஒரு தகப்பன் நல்லவன் என்பதால் அவனுக்கு பிறக்கும் மகனும் நல்லவனாகவே இருப்பான் என்று நீங்கள் நினைப்பது மிகவும் குழந்தைத் தனமாகவே இருக்கிறது. நல்ல தந்தைக்கு பிறந்த மகன்கள் பலர் சுயநல வாதியாக, ஊதாரியாக, சமூகப் பொறுப்பில்லாமல் திரிவதை உங்கள் வீடு எனது வீட்டின் பக்கத்திலேயே பார்க்கலாம்.

உங்கள் கூற்றுப்படி, சக்ககரா நல்ல தந்தைக்குப் பிறந்ததால் நல்லவர், அவருக்கு தடைவிதிக்கக் கூடாது என்றால், தவறான தந்தைக்குப் பிறந்த மகனும் தவறானவன் என்று சொல்வீர்களா ?

2. இதேபோல் இனப்படுகொலை, நிறவெறியில் ஈடுப்பட்ட பல நாடுகளை சர்வேதேச அரங்கம் நிராகரித்திருப்பதற்கு தேவைக்கு அதிகமாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளது. உதாரணமாக, தென் ஆப்பிரிக்கா அணியை 22 வருடங்கள் சர்வேதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதையை உலகம் அறியும்.

இப்போது தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை சங்ககராவிற்கு எதிரானதென்றால், தென் ஆப்பிரிக்காவிற்கு விதிக்கப்பட்ட தடை அந்த பதினோரு வீரர்களுக்கு மட்டுமே எதிரான தடை, நாட்டிற்கு எதிரானதல்ல என்பீர்களா ? இல்லை என்றால் உங்களின் நிலைப்பாடுதான் என்ன ?

3. தென் ஆபிரிக்க மக்கள் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் அல்ல. இருந்தும் நிறவெறி பிடித்த அந்த நாட்டோடு இந்திய அணியை அந்த காலகட்டத்தில் விளையாட அனுமதிக்கவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியாதா ?

4. தமிழகத்தில் பல பிரச்சனைகள் இருக்கையில் ஈழப் பிரச்னையை இங்கு பேச வேண்டியதில்லை என்ற கண்ணோட்டத்தில் உங்களது கமெண்ட் பார்த்தேன். அப்படியானால் நீங்கள் இதுவரை எழுதியது தமிழகத்தைப் பற்றி மட்டும் தானா ? வேறு நாடுகளைப் பற்றி எழுதியதே இல்லையா ? சூழலுக்கேற்ற வேடம் ஏன் ?

5. மற்ற இலங்கை வீரகளுக்கான தடையைப் பற்றி வாய்திறக்காத நீங்கள், சன் ரைசர் சங்ககராவைப் பற்றிமட்டும் பேசுவது ஏன் ? (அவரின் அப்பா நல்லவர் என்பதாலா ? இல்லை சன் ரைசர் என்பதாலா ?). இதில் பெருத்த உள்நோக்கம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பெருமளவில் புதைந்து கிடக்கின்றன.

6. சில விதமான தடைகள் மூலமே, ஒரு நாட்டிற்கு அழுத்தம் கொடுத்து சர்வதேச அரங்கம் அடிபணிய வைக்க முடியும் என்பதை பாமரனும் அறிவான், இனபடுகொலை செய்த அரசை அடிபணியவைக்க இது துளியேனும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியாதா ?

7. ஈழத்தமிழர்களுக்காக போராடும் தமிழர்கள்தான் அவர்களுக்கு அசல் எதிரி என்றால், அவர்களுக்காக போராடாத நண்பர் நீங்கள் என்னத்தை வாரி வாரி நல்லது செய்துவிட்டீர்கள் ? அவர்களுக்கு எதிராக எழுதுவதா ? இல்லை உணர்வுகளை கொச்சைப் படுத்துவதா ?

8. ஈழத்தில் என்ன வேண்டும் என்பதை ஈழத்தமிழர்களே முடிவு செய்ய வேண்டும் தமிழர்கள் அல்ல என்று சொல்லும் நீங்கள், எத்தனை ஈழத்தமிழர்களின் கருத்துக்களை கேட்டிருக்கிறீர்கள் ? வெளிநாடுகளில் தனி ஈழம் வேண்டும் என்று போராடும் ஈழத்தமிழர்கள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ? இல்லை அவர்களின் வாசகம் உங்களுக்கு புரியவில்லையா ?

9. இலங்கையில் எங்களுக்கு சாப்பிட மட்டுமே வாய்திறக்க அனுமதி உண்டு எனச் சொல்லும் ஈழத்தமிழர்களை உங்களுக்கு தெரியுமா ? எங்களுக்குத் தெரியும். வெட்டி வசனம் பேசுவதை விட்டுவிட்டு அவர்களோடு பேசிப்பாருங்கள், உங்களுக்கும் தெரியும்.

முறைப்படி இந்தியா முழுவதும் இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க போராடி இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தடை கோரியது தமிழர்கள் செய்த தவறு என்று இப்போது எனக்குப்படுகிறது.

பல ஆண்டுகளாக எழுதும் நீங்கள், சற்று அடிப்படையை ஆராய்ந்து எழுதுங்கள். அரசியல் விமர்சகர் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதலாம், இஷ்டத்திற்கு விமர்சிக்கலாம் என்பதல்ல. இனியேனும் உங்கள் உள்நோக்கத்தை ஓரம் கட்டிவிட்டு உண்மையை எழுத முயற்சி செய்யுங்கள்.

நன்றி ! 

அன்புடன்,
அகல்