Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, 9 April 2015

20 கூலிகளின் கொலை

மரம் வெட்டுதல் என்பது தொழிலா ?

ஆம், கிராமத்து கூலித் தொழிலாளிகளைப் பொருத்தவரை மரம் வெட்டுவதென்பது ஒரு தொழில்தான். ஆனால் படித்த, நடுத்தர, மேல்தட்டு நகரவாசிகள் நினைப்பதுபோல அது சந்தனமரம், செம்மரம் வெட்டிக் கடத்துவதல்ல. உசிலை மரம், வேப்பமரம், புளியமரம் போன்றவற்றை விறகுக்காக வெட்டும் தொழில். இது தோட்டத்தில் பயிர்களுக்கு களை பறிக்க செல்வதுபோன்று அன்றாடம் நடக்கும் ஒரு தொழில். கிராமத்து பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு இது நன்கு தெரியும்.
கொல்லப்பட்டவர்கள் கடத்தல்காரர்களா ?

இல்லை. கொல்லப்பட்டவர்கள் கூலித் தொழிலாளிகள். ஒரு மாநிலம் விட்டு மற்றொரு மாநிலத்திற்கு பிழைப்பிற்காக சென்றவர்கள். 200 ரூபாய் கூலி சொந்த ஊரில் கிடைகிறது. ஆனால் 400 ரூபாய் பக்கத்து மாநிலத்தில் கிடைக்கிறதென்றால் தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள அந்த வேலையைத் தேடித் கூலிக்குப் போவதென்பது இயல்பு. இதை பேராசை என்று ஒருசாரர் சொல்வார்களேயானால், நல்ல சம்பளத்திற்கு வெளிமாநிலத்திற்கு வேலைக்குப்போகும் படித்த பட்டதாரிகளும் பேராசைக்காரர்கள் தானே ?

தமிழ்நாட்டின் பானிபூரி விற்க வடநாட்டில் இருந்து எதற்கு வருகிறான் ? அங்கு அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அங்குள்ளோர் யாரும் பானிபூரி சாப்பிடுவதில்லை என்று அர்த்தமல்ல. இங்கு விற்பதில் அவனுக்கு சில நன்மைகள் இருக்கிறது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம் என்று அவன் நினைத்திருக்கலாம். அதை தவறு என்று யாரும் சொல்ல முடியாது.

வெட்டுவது செம்மரம், அது சட்டப்படிக் குற்றம் என்பதையெல்லாம் தெரியாதவர்கள், செம்மரங்களின் சர்வதேச மதிப்பு என்னவென்று தெரியாத அப்பாவிகளைத்தான் இந்த கடத்தலுக்குப் பின்னிருக்கும் பண முதலைகள் பயன்படுத்தி இருப்பார்கள். அனைத்து விவரமும் தெரிந்தவர்களை பணியமர்த்த அவர்கள் என்ன முட்டாள்களா ? உண்மையில் யோசித்திபோருங்கள், ஒரு டன் செம்மரம், சர்வதேசச் சந்தையில் ஒரு கோடியைக்கூட எட்டும் என்பது, படித்த எத்தனை பேருக்கு இதற்கு முன்பே தெரிந்திருக்கும் ?

மரம் வெட்டி இயற்கை வளத்தை அழிப்பதை நியாயப் படுத்தவில்லை. ஆனால், மரம் என்பது இயற்கை வளம், அதைப் பாதுகாப்பது அவசியம். மழைவர மரம் காரணம், அது நமது வாழ்வாதாரம் என்றெல்லாம் 200 ரூபாய் கூலிக்குபோகும், கல்வியறிவு கிடைக்கப்பெறாத, அதைப்பற்றி யோசிக்க முடியாத நிலையில், அன்றாட உணவிற்காக போராடும் எளிய மனிதர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஆக, அவர்களின் வறுமையும் அறியாமையும் மட்டுமே இங்கே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அவ்வளவே.
யார்தான் இதற்குக் காரணம் ?

வெளிமாநில ஆட்களை அழைத்து வந்து, ஒரு கொலை செய்வதில் அந்த கொலை செய்யும் கும்பலுக்கு என்னென்ன நன்மை இருக்கிறதோ, அதே போன்ற நன்மைகளுக்கத்தான் விவரம் தெரியாத, மொழி தெரியாத, வெளியாட்களை இறக்குமதி செய்து பணியமர்துகிறார்கள். இதே வேலையைச் செய்ய உள்ளூர்க்காரனை பயன்படுத்தினால் இந்த கும்பல் எளிதாகச் சிக்கும் என்று அவர்களுக்குத் தெரியாமலா போயிருக்கும் ? அதோடு 20 பேரை சுட்ட ஒரு படையால், ஒருவனைகூடவா உயிருடம் பிடிக்க முடியவில்லை ? இந்த கடத்தலின் பின் இருப்பவர்களை அடையாளம் காண முடியவில்லை ?

சுடப்பட்ட இந்த கூலித் தொழிலாளிகளா சர்வதேச சந்தையில் செம்மரங்களை விலைபேசி விற்கிறார்கள் ? ஆலமரத்தின் ஆணிவேரை விட்டுவிட்டு அதன் விழுதை வெட்டுவதால் என்ன பயன் ? இதற்குப் பின், மிகப்பெரும் ஆள் பலம், அரசியல் பலம் இருக்கிறது. அந்த முதலைகளை விட்டுவிட்டு இந்த கூலிகளைக் கொன்றது சரி என்று பேசுபவர்கள் அடிப்படை புரியாதவர்கள் என்றே பொருள் கொள்ளவேண்டும். ஒரு கூலியைச் சுட்டுவிட்டால் இன்னொரு கூலி வராமல் போகமாட்டான். செம்மரம் வெட்டியதாகச் சொல்லி, 20 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியைக் கூட அறியாத கடைக்கோடி இந்திய குடிகள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களை இந்த மாபியா கும்பல் மீண்டும் பணியமர்த்தும். அவர்களின் வறுமையை மீண்டும் பயன்படுத்தும்.

இங்கு ஏதோ ஒரு அரசியல் அழுத்தத்திற்காக, ஒரு சாராரை திருப்திப் படுத்துவதற்காக, ஒரு படுகொலை அரங்கேற்றப் பட்டிருக்கிறது, அப்பாவிகள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இதைப் புரிந்து கொள்ளாமல், கூலிகளின்மீது பழிசுமத்துவதில் குறியாகத் திரியும் ஒரு குறிப்பிட்டோரை நினைத்து, வருத்தப்பட மட்டுமே முடிகிறது. இதன் பின்னணியில் இருக்கும் பெரு முதலாளிகளைப் பற்றி இவர்களால் பேச முடியாதபோதே இவர்களின் நோக்கம் என்ன என்பது புரிந்துவிடும். இந்த அப்பாவிகளின் கொலைகளில்கூட, மனிதாபிமானமற்ற முறையில், சில மதவாதிகள் மதத்தைக் கொண்டு திணிக்கிறார்கள் என்பது உச்சகட்ட வேதனை !

அகல்
10.4.2015

Friday, 28 November 2014

வெண்பா பிறந்துவிட்டாள், நான் அப்பாவாகிவிட்டேன்.

நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்கள் கழித்து ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியோடு வலைப்பூ பக்கம் வந்துள்ளேன்.

"நான் அப்பாவானேன் நாங்கள் பெற்றோரானோம்"

ஆம், நவம்பர் 20 தேதியன்று எங்களுக்கு அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் குட்டி "வெண்பா" பிறந்திருக்கிறாள். இந்தக் குட்டிக் கால்களுக்கு நான் அப்பாவாகிவிட்டேன் (இது வெண்பாவின் புகைப்படம் தான்) இந்த செய்தியை முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதையொட்டி எனக்கும் என் நண்பனுக்கும் இடையே நடந்த ஒரு உரையாடலை இந்த மகிழ்ச்சியான செய்தியோடு உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு.

வாழ்த்துக்களோடு ஆரம்பித்த உரையாடலின் ஒரு பகுதி மட்டும் இங்கே.

நண்பன்: முகநூல் பதிவைப் பார்த்தேன். இரண்டு விடயங்களைக் கவனித்தேன். அதில் ஒன்று, வெண்பா எந்தவித சாதிய, மத அடையாளங்களின்றி வளர்வாள் என்பது. அதன் பொருள் என்ன ?

நான்: எந்தவித சாதிய அடையாளங்களும் இல்லாமல் வளர்வாள். மனதளவிலும், அவளது பிறப்பு, மற்றும் பள்ளி கல்லூரி சான்றிதல்கள் என எந்த ஒரு அரசு சான்றிதல்களிலும் சாதியோ, மதமோ குறிப்பிடப்பட மாட்டது.

நண்பன்: அதனால் அவளது எதிர்காலம் பாதிக்கப்படாதா ? நான் சொல்வது இட ஒதுக்கீட்டைப் பற்றி.

நான்: சுயநலமாக, குறுகிய கால பலனாகப்பார்த்தால் பாதிப்பு இருக்கலாம். ஆனால் இடஒதுக்கீடு என்ற ஒன்றை காலப்போக்கில் ஒழித்து, அனைவரும் சமம் என்ற ஒரு நிலையை சமுதாயத்தில் உருவாக்கவேண்டுமானால் இதுபோன்ற முன்னெடுப்புகள் இப்போதிருந்தே தேவைப்படுகிறது.

நண்பன்: கடவுள் நம்பிக்கையையும் மதத்தையும் பிரிக்கமுடியாது. அப்படி இருக்க, நீ மதத்தை மறைத்துவிட்டால் வெண்பா எந்தக் கடவுளை வழிபடுவாள் ?

நான்: நம்பிக்கையின்மையால் நான் எந்தக் கடவுளையும் வழிபடுவதில்லை. ஒருவேளை அவள் கடவுள் நம்பிக்கையோடு வளர்ந்துவிட்டால், அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்காதவாறு சிவன், ஏசு, அல்லா, புத்தர் என்று அவள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் வழிபடலாம். அது அவளது தனிப்பட்ட உரிமை.

நண்பன்: வாழ்த்துக்கள். எனது வட்டாரத்தில் எனக்குத் தெரிந்து சான்றிதழ்கள் உட்பட சாதியப் புறக்கணிப்பை உன் மகளுக்கு நீ மட்டும்தான் செய்திருக்கிறாய்.

நான்: இருக்கலாம் ஆனால் இது புதிதல்ல. பெரியார் வழிவந்தோர் பல வருடங்களாகச் செய்து கொண்டு வரும் காரியம் தான் இது. அதை இலகுவாக மற்றோர் அறியும்படி செய்ய அப்போது அவர்களுக்கு சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் கிடைக்கவில்லை. அதனால் தெரியாமல் போயிருக்கும்.

நண்பன்: இன்றைய படித்த இளைய தலைமுறையினர் சாதியை எதிர்க்கும் மனப்பான்மை கொண்டவர்களாகத்தானே இருக்கிறார்கள்.

நான்: ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து என்றாலும், சாதிய எதிர்ப்புக்கும் சாதிய ஒழிப்புக்கும் வித்தியாசம் உண்டு. சாதிய எதிர்ப்பு என்பது சாதிய ஒழிப்பாக மாறாதவரை, இந்த கட்டமைப்பு மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் குடித்துக் கொண்டேதான் இருக்கும். அதனால் சாதிய ஒழிப்பு என்பது மிக முக்கியம்.

நண்பன்: பெருவாரியாக இல்லாவிட்டாலும், கடந்த சில தலைமுறைகளாக கலப்புத் திருமணங்கள் நடந்து கொண்டுதானே இருக்கிறது ?

நான்: உண்மைதான். ஆனால் கலப்புத் திருமணங்களின் மூலம் சாதிகள் ஒழிக்கப்படுவதில்லை என்பது என் கருத்து. காரணம், குழந்தை பிறந்தவுடன் அம்மாவின் சாதி அடையாளங்கள் புறக்கணிக்கப்பட்டாலும் அது அப்பாவின் சாதிய அடையாளங்களோடே வளர்கிறது என்பதுதான் எதார்த்தம்.

நண்பன்: எனது இரண்டாவது கேள்வி. வெண்பா என்ற பெயர் சுத்த தமிழ் வார்த்தையாகத் தெரிகிறது. ஆனால் பெரும்பாலானோர் சமஸ்கிருத பெயர்களைத்தானே வைக்கிறார்கள். நீ ஏன் அதைச் செய்யவில்லை ?

நான்: எப்படிப் பெயர் வைக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். என்னைப் பொருத்தவரை, பசியாற தாராளமாக தாய்ப்பால் கிடைக்கும்போது, எனக்குப் புட்டிப்பால் வேண்டும் என்று தோன்றவில்லை.

நண்பன்: ஆனால் சம்ஸ்கிருத வார்த்தைகளின் உச்சரிப்பு அழகாக இருக்கிறதே.

நான்: இதுவும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட எண்ணம் தான். ஆனால் நீ சொல்வதுபோல் பெரும்பாலானோருக்கு அது இயற்கையாகவே அழகாகத் தெரியவில்லை மாறாக அழகாகத் தெரிய வைத்தார்கள். அதன் பின் மிகப்பெரும் மொழியரசியல் இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், சில நூறு ஆண்டு வரலாற்றை ஓரளவிற்காவது புரட்ட வேண்டும்.

நண்பன்: சாதிய ஒழிப்பைப் பற்றி நீ இவ்வளவு பேசினாலும், நீயும் உனது சாதியைச் சார்ந்த பெண்ணைத்தானே திருமணம் செய்துகொண்டாய்.

நான்: உனக்கு யார் அப்படிச் சொன்னது ?

அகல்
28.11.2014 

Monday, 1 September 2014

தமிழக மாணவர்களும் ஈழ வியாபாரமும் - ஒரு அனுபவம்

தமிழ் மீனவர் உரிமை, தனித் தமிழீழம் போன்ற கோரிக்கையை முன்வைத்து, லயோலா கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் என தீயாய்ப் பரவிக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது ஹைதராபாத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னோடு தங்கி இருந்த இரண்டு கல்லூரி நண்பர்களின் துணையோடு, தமிழகத்தில் மாணவர்கள் நடத்திக் கொண்டிருந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக ஹைதராபாத்தில் ஒரு போராட்டத்தை முகநூல் வழியாக அறிவித்தோம்.

தமிழன் என்ற எண்ணத்தைத் தாண்டி, மனிதன் என்ற உணர்வோடு அங்கே எதிர்பாராத அளவிற்கு இளைஞர்கள் கலந்துகொண்டார்கள். சில நெருக்கடிகளோடு போராட்டம் நன்றாக நடந்து முடிந்தது. சில தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளிலும் இந்தப் போராட்டம் பதிவு செய்தது.

இந்தப் போராட்டம் முடிந்தவுடன், அடுத்த கட்ட போராட்டத்தைப் பற்றி நாங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், சென்னையில் உள்ள ஒரு தமிழர் அமைப்பிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நீங்கள் திடீரென அறிவித்து நடத்திய போராட்டம் எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது, செய்திகளைப் பார்த்தே தெரிந்துகொண்டோம். இதுபற்றி முன்பே தெரிந்திருந்தால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அரசியல் முதுகலை பிரிவை எடுத்துப் படித்துக் கொண்டிருக்கும் தமிழ் மாணவர்களை உங்களது போராட்டத்தில் கலந்துகொள்ள வைத்திருப்போம். அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். போராட்டத்தை ஒருங்கிணைக்க அவர்களும் சரியான இளைஞர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.

அதோடு, தனித் தெலுங்கானாவிற்காக போராடிக் கொண்டிருந்த ஒரு பல்கலைக் கழக மாணவர்களையும், தமிழ் மாணவர்கள் போராட்டத்திற்காக அழைத்து வருவார்கள் என்றார் தொலைபேசியில் என்னோடு உரையாடிய அந்தப் பெண். அடுத்த கட்ட போராட்டம் இன்னும் வலுவாக இருக்க வேண்டும் என்று கருதியதால், அவர் கூறிய யோசனையை ஒப்புக்கொண்டேன். அந்த தமிழ் மாணவர்களோடு பேசலாம் என்று நானும் எனது நண்பனும் தீர்மானித்தோம்.

சில முறை கைபேசி உரையாடல்களுக்குப் பிறகு, அந்த தமிழ் மாணவர்கள் எங்களை நேரில் சந்தித்து போராட்ட வடிவம் பற்றி பேச அழைத்தார்கள். நாங்கள் இருவரும் அவர்களின் கல்லூரி வளாகத்திற்கு அன்றிரவு போனோம். அன்று அவர்களது கல்லூரி ஆண்டுவிழா வெகு விமர்சியாக நடந்துகொண்டிருந்தது. அவர்களோடு பேசினோம். அரசியல் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அவர்கள். நல்ல அரசியல் அறிவு இருந்ததை உணர முடிந்தது.

இரண்டு மணிநேர உரையாடல். அடுத்த கட்ட போராட்டத்திற்கு குறைந்தது 3000 மாணவர்களை நாங்கள் அழைத்து வருகிறோம். இந்தியா மிகவும் அறிந்த எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அருந்ததிராயை போராட்டத்திற்கு அழைக்கிறோம். அவர் எங்களுக்கு நல்ல பழக்கமானவர். நாங்கள் அழைத்தால் வருவார் என்று அந்த மாணவர்கள் கூறினார்கள். போராட்டத்திற்கு மாணவர்களைத் திரட்டுவது எங்களது பொறுப்பு, ஒருகிணைப்பை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.

3000 மாணவர்கள், அருந்ததிராய் என்றெல்லாம் அவர்கள் கூறியபோதே அவர்கள் மேலிருந்த நம்பிக்கை சற்று குறைய ஆரம்பித்தது. இருந்தாலும் இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று புரிந்துகொள்ள அவர்களோடு இன்னும் சற்றுநேரம் நேரத்தைக் கழிக்க முடிவு செய்தோம். எங்களது சந்தேகத்திற்கு வலுச்சேர்க்கும்விதமாக அவர்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அமைந்தது.

அது பல்கலைக்கழக ஆண்டுவிழா. அந்த நிகழ்ச்சி ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, யாரும் இல்லாத மைதானத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். சாப்பாடு வரவழைத்து சாப்பிட்டுக்கொண்டே, நீண்ட நேரம் பேசினோம். தங்கள் கல்லூரி, அதன் கலாச்சாரம் என்று பேச ஆரம்பித்தவர்கள், மது வாங்கி வந்து குடித்துக் கொண்டே, அங்குள்ள பெண்களைப் பற்றி கேவலமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். போதையில் அவர்கள் பேசியதை கேட்கும்போது அவர்கள் கஞ்சா போன்ற மற்ற போதைப் பொருட்களை உபயோகிப்பவர்கள் என்று வெளிப்படையாகவே தெரிந்தது.

குடித்துக் கொண்டிருந்த மது தீர்ந்துவிடவே, மது வாங்க எனது வண்டியைக் கேட்டார்கள். மணி எப்படியும் குறைந்தது இரவு பன்னிரண்டு இருக்கும். குடித்திருக்கும் ஒருவனிடம் எனது வண்டியை அந்த நேரத்தில் கொடுக்க எனக்கு உடன்பாடில்லை. அதனால், நானே அவர்களோடு போனேன். மூடி இருந்த மதுக்கடையின் பின்வாசல் வழியாக எனது பணத்தையும் போட்டு, மது வாங்கிக் கொடுக்கவேண்டிய சூழ்நிலையெல்லாம் உருவானது. திரும்பி வந்தபிறகு எனது நண்பனிடம் நடந்தவற்றைக் கூறினேன். உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறுவது என்று தீர்மானித்தோம்.

அவர்களோடு பேசியதில் எங்களால் ஒன்றைத் தெளிவாக புரிந்ததுகொள்ள முடிந்தது. அவர்களுக்கு ஈழ அரசியல் வரலாறு தெரியும். ஆனால் அவர்கள் படும் வழிகளைப் பற்றிக் கவலையில்லை. அவர்கள் உதவித்தொகையில் படிக்கும் மாணவர்கள் என்பதால், IT யில் வேலை செய்து கொண்டிருக்கும் எங்களைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களை முன்னிறுத்திக் கொள்ள நினைத்தார்கள். அதன்மூலம் விளம்பரம் தேடவோ அல்லது அவர்களுக்கு கொடுத்த ப்ரொஜெக்டை முடிக்க வேண்டும் என்பதோ அவர்களின் எண்ணமாக இருந்தது.

அவர்களின் வார்த்தையில் மனிதாபிமானமோ, இது செத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கான போராட்டம் என்ற குறைந்த பட்ச அக்கறையோ இருந்ததாகத் தெரியவில்லை. தமிழக அரசியல் கட்சிகளுக்கும் இந்த மாணவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பது தெளிவாகப் புரிந்தது. அன்று இரவு அவர்களோடு தங்கச் சொல்லி எங்களை வற்புறுதினார்கள். போராட்டத்தைப் பற்றி பிறகு பேசலாம் என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தைவிட்டு வெளியேறினோம்.

அடுத்த ஒரு வாரத்திற்கு அந்த மாணவர்களும் இருந்து மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்பு, நான் எடுக்கவில்லை. சென்னையில் இருக்கும் அந்த தமிழர் அமைப்பு என்னை மீண்டும் அழைத்து அவர்களிடம் பேசினீர்களா என்று கேட்டார்கள். இந்த மாணவர்கள் எப்படியானவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாதா, இல்லை பரஸ்பர ஒப்பந்தத்தோடு விளம்பரத்திற்காக அவர்கள் வேலை செய்தார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. அதனால் அந்த தமிழர் அமைப்பிடம் இந்த மாணவர்களின் எண்ணங்களைப் பற்றி எதுவும் பேசாமல் வேறுசில காரணங்களைச் சொல்லிவிட்டு அவர்களது வட்டத்திற்கும் இருந்து வெளியேறினோம். ஆனால் தமிழர்களுக்கு முதல் எதிரி தமிழன் தான் என்று வரலாறு நமக்குச் சொல்லித் தந்ததை இவர்கள் மீண்டும் ஞாயபகப்படுத்தினார்கள்.

நாங்கள் நடத்திய முதல் போராட்டத்தில் ஆயிரக்காணக்கான மக்கள் கலந்துகொள்ளவில்லை என்றாலும், அது மிகவும் கண்ணியமாக, உணர்வுப் பூர்வமாக நடந்த ஒன்று. இவர்களை அழைத்து, அடுத்த போராட்டத்தை நடத்தி, அப்பாவி ஆத்மாக்களை நாங்கள் கொச்சை
ப்படுத்த விரும்பவில்லை. அதனால் தவிர்த்து விட்டோம். இந்த சம்பவத்தைப் பற்றி அப்போது நான் எழுதவுமில்லை. 

அப்போதே எழுதவேண்டியதானே ? இப்போது எதற்கு இந்த கட்டுரை என்று நீங்கள் கேட்கலாம். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக, பல தமிழ் மாணவர்கள் உயிரின் விளிம்புவரை சென்று போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில், இப்படி ஒரு கட்டுரை எழுதினால் தமிழ் மாணவர்கள் சமுதாயத்தையும் அவர்கள் நடத்தும் போராட்டத்தையும் தவறான கண்ணோட்டத்தில் காட்டும் என்ற ஐயம் எனக்குள் இருந்ததால், சூழ்நிலை கருதி அப்போது தவிர்த்துவிட்டேன்.

ஆனால் இதை எழுதாமல் விட்டுவிட்டால், தமிழ் நாட்டில் ஈழ வியாபாரம் செய்ய, இப்படி ஒரு மாணவர் சமுதாயமும் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்யாமல் போய்விடும் என்ற எண்ணத்தால் இப்போது பதிவு செய்கிறேன். நன்றி !

அகல்

1.9.2014

Sunday, 17 August 2014

நினைவுகள் -1 இடைவெளியைக் குறைத்து விடுங்கள்

இன்று ஆகஸ்ட் 18. என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத நாள். எனது அண்ணன் ஒரு பெரிய விபத்தைச் சந்தித்து, இரண்டு நாட்கள் தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சைப் பலனின்று எங்களைவிட்டுப் பிரிந்த நாள்.

எனக்கும் என் அண்ணனுக்குமான அன்பு என்பது வரையறைகளுக்கு அப்பாற்பட்டது. அது அண்ணன் தம்பி என்ற உறவைத் தாண்டியது. எங்கள் குணங்கள், செய்கைகள் யாவும் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், இருவரின் உணர்வுகளும் ஒரே நேர்கோட்டில் கடைசிவரை பயணித்தவை. எந்த ஒரு விடயத்தையும் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் தயங்கியதில்லை. எங்களுக்குள் பெரிதாக சண்டைகள் வந்தது கிடையாது என்றாலும், எல்லோரையும் போல் சிறு சிறு கருத்து முரண்பாடுகள் வாக்குவாதங்கள் என்று இருவரும் ஈடுபட்டதுண்டு.

இப்படியான எங்கள் வாழ்க்கையில், ஒரு முறை என் அண்ணன் கேட்டதை நான் இருந்த சூழலில் உடனடியாக என்னால் செய்து தரமுடியவில்லை. அதை நான் சரியாக என் அண்ணனிடம் வெளிபடுத்தவில்லை என்பதால் நான் வேண்டுமென்றே செய்யவில்லை என்று எண்ணி என்னிடம் என் அண்ணன் சரியாகப் பேசவில்லை. எங்களுக்குள்ளான தொலைபேசி உரையாடல்கள் குறைந்தது. நான் ஹைதராபாத்தில் இருந்து வீட்டுக் போகும்போதும் அண்ணன் என்னிடம் சரியாக பேசுவதில்லை.

முன்பே இது போன்ற சிறு சிறு இடைவெளிகள் எங்களுக்கிடையே வந்துபோனதால், சூழ்நிலை வரும்போது அண்ணன் புரிந்துகொள்வான் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டு நானும் அடிக்கடி தொலைபேசியில் பேசுவதை நிறுத்திவிட்டேன். பேச்சுவார்த்தைகள் இன்றி நான்கு மாதங்கள் கடந்தோடியது. 2011 ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று திடீரென ஒரு தொலை பேசி அழைப்பு, அண்ணன் விபத்தில் சிக்கிவிட்டான் என்று. சுயநினைவை இழந்தேன். அடித்துப் பிடித்து அடித்த நாள் ஹைதராபாத்தில் இருந்து மதுரை மருத்துவமனைக்குச் சென்றேன்.

அண்ணன் சுயநினைவில் இல்லை. சுற்றி என்ன நடக்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சையில் ஒரு முறைகூட விழித்துப் பார்க்கவில்லை. இரண்டு நாள் சிகிச்சையும் பலனளிக்காமல், ஆகஸ்ட் 18 மாலை 5.15 என் கண் முன்னே 29 வயதில் அண்ணனின் உயிர் பிரிந்தது. நமது இதயத்திற்கு மிக நெருக்கமானவர்களின் உயிர், நம் கண்முன்னே பிரிவதைவிட ஒரு கொடுமையான சம்பவம் இந்த உலகில் வேறு எதுவும் இருக்கமுடியுமா என்று தெரியவில்லை.

அதனால், நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் ஒன்றுதான். உண்மையாக அன்பு செலுத்துவோர்களிடம் அவ்வப்பது சிறு சிறு இடைவெளிகள் வந்துபோவது இயல்புதான் என்றாலும், அதைத் தயவு செய்து தொடர விட்டுவிடாதீர்கள்.

நான்கு மதங்களுக்கு முன் பேசியது தான் அவனிடம் பேசிய கடைசி வார்த்தை என்று நினைக்கும்போது ஏற்படும் வலிக்கு இன்னும் என்னால் மருந்து போடமுடியவில்லை. கடைசிவரை பேச முடியவில்லை என்று மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணமே, ஜீரணிக்க முடியாத ஒரு கொடுமையான வலி தான்.

- அகல்

அன்புள்ள அண்ணனுக்கு தம்பி எழுதுவது...

அண்ணா...
எப்படி இருகிறாய்..?

பார்த்துப் பேசி மூன்று
வருடங்கள் ஆகிப்போனது
நலமாக இருக்கிறாயா..?

சொர்க்கம், நரகம்
என்றெல்லாம்
சொல்கிறார்களே
நீ எங்கு இருகிறாய்..?

ஊருக்கே நல்லவனாயிற்றே
நீ எப்படி நரகத்தில் இருப்பாய்..!?

எத்தனை மருந்திட்டாலும்
எதையும் மறக்க முடியவில்லை
அண்ணா...

உன்னோடு நான் பிறந்த ஊர்
நம் இருவரையும் பெற்றெடுத்த தாய்
இருவரும் சேர்ந்து உணவு 
உட்கொண்ட வட்டில்
நாம் ஒன்றாக ஊர்சுற்றிய நாட்கள்

பள்ளிப் பருவத்தில்
நடந்து என் கால் வலிக்கும் நேரம்,
குதிரையாய் மாறிய நீ
பொதியாய் மாறிய நான்

எனக்கு உடல் நிலை
சரியில்லையாயின்
துடித்துப் போகும்
உன் மனது

எனக்காக மற்றவர்களிடம்
நீ சண்டையிட்ட தருணங்கள்

நாம் இருவரும் போட்டுக் 
கொண்ட ஒரு நாள் சண்டை

அதன் விளைவாக
என் உடலோடு இன்றும் 
ஒட்டிகொண்டிருக்கும்
ஒற்றைத் தழும்பு 

இவ்வுலகில் 
நினைவிழந்து நீ வாழ்ந்த
இரண்டு நாட்கள்

உன் உயிர்(என் உயிர்) இந்த உலகைப்
பிரிந்த அந்த கொடிய நொடிப் பொழுது

விறகின் மேல் வீற்றிருந்த நீ
உனது நெற்றியில்
நான் கொடுத்த கடைசி முத்தம்

உன் உடல் நெருப்பிற்கு
இரையான வேளையில்
நான் உருண்டு புரண்ட 
அந்த மயானக் காடு

உனைப் பிரிந்த இரவுகளில்
எனது ஓலங்கள்

உனது நினைவுகள் மட்டுமே 
நிறைந்து கிடக்கும் நமது வீடு

எதையும் மறக்க
முடியவில்லை அண்ணா..

ஊமையின் கனவுகளாய்
அத்தனையும் என் நினைவுகளில்..

சிலமுறை காற்றோடு 
தேடித் பார்க்கிறேன்
கைகளுக்கு அகப்படுவாயென..

அந்த கோர விபத்து
நமது வாழ்கையின் 
திசைகளைத்
திருப்பிப் போட்டது

அது ஆயிரம் விடயங்களை
எனக்கு கற்றும் கொடுத்தது

இவ்வுலகில் விபத்திற்கு
ஏதும் விபத்து வராதா..?

நீ விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து
விமான நிலையம் நோக்கி ஓடிய எனக்கு
திருவிழாக் கூட்டமாய் இருந்த அந்த இடம்
ஏனோ மேகமில்லா வானமாய்
வெறிச்சோடித்தான் தெரிந்தது

வாழ்க்கையில் இத்தனை 
மணிப் பொழுதுகள்
எதற்காகவும் என் கண்ணீர்த்
துளிகள் கரைந்ததாய்
எனக்கு ஞாபகம் இல்லை..

இருந்தும்...

எப்படியும் உனைக் காப்பாற்ற 
முடியும் என்ற நம்பிக்கையில்
விமானம் ஏறி அமர்ந்துவிட்டு
அதை இன்னும் வேகமாகச் செல்லச் 
சொல்லி மனம் பரிதவித்தது...

தட்டுத் தடுமாறி 
உன்னை அடைந்தேன்..

ஆனால், 
நீ என்னைப் பார்க்கமுடியவில்லை
நான் உன்னோடு பேசமுடியவில்லை

நடப்பதறியாது
மற்றவரோடு பேசாது
வாழ்நாளில் நீ
மௌனம் காத்த நாட்கள்
அந்த இரண்டு நாட்களாகத்தான்
இருக்கும்...

இவ்வுலகில்
தாங்க முடியாத வலிகளில் ஒன்று
உயிராய் நேசிப்பவரின் உயிர்
நேசிப்பவர் கண்முன்னே பிரிவது

அந்த கொடிய வலியையும்
எனக்கு கொடுத்து விட்டாய்..!

உனை
இந்த மண் எடுத்துக்கொண்ட நாளில்
இனி வாழ்ந்து பயனேது என்றெண்ணி

தற்கொலை முயற்சிக்கும்
தயாரானேன் - இருந்தும்
தவிர்த்து விட்டேன்

என்ன செய்வது...

இன்று நீ இல்லை
நம்மைப் பெற்றோருக்கு
என்னை விட்டால்
வேறு நாதி இல்லை

27 ஆண்டுகள்
உன்னோடு வாழ்ந்த வீட்டில்
இன்று 27 நிமிடங்களும்
இமயமாய்ப் போனது

உனைப் பிரிந்த நாட்களில்
சிரிக்கப் பழகிக் கொண்டேன்

சொல்லப் போனால்
உண்மையை மறைக்கப் 
பழகிக் கொண்டேன்..

என்னைத் தவிக்க விட்டுப் போனாய்
பரவாயில்லை...
ஒரு பெண்ணையும் தவிக்க 
விட்டுப் போனாயே..!

நிரந்தரமாகப் பிரிவைக் கொடுத்து 
விட்டோம் என்று - நீ
நினைத்துக் கொள்ளாதே

என் நாடித் துடிப்பின்
கடைசி நொடிப் பொழுதும்
உன் நினைவுகளில் நானிருப்பேன்
என் நிழலிலும் நீ இருப்பாய்

உயிர் பிரிந்த பின்னும்
என் ஆன்மா உன் நினைவுகளை
அசை போட்டிக் கொண்டிருக்கும்..

மறு ஜென்மம் இருப்பது
உண்மையானால்

நீ இப்போதே பிறந்து விடாதே
முதலில் நான் இறந்து விடுகிறேன்

பின்பு
அதே வயிற்றில்
மீண்டும் பிறப்போம்

நீ அண்ணனாக
நான் தம்பியாக..!

உன் நினைவுகளோடு,
தம்பி

இன்று ஆகஸ்ட் 18 - எனது வாழ்வில் மிகப்பெரும் பேரிழப்பைச் சந்தித்த நாள். பிரிவின் வலி என்னவென்று எனக்கு உணத்திய நாள். என் அன்பு அண்ணனின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள்.

Saturday, 21 December 2013

என்னை மன்னிப்பாயாக...

எத்தனைப் பேரக்குழந்தைகள் இருந்தும் என்மீது உயிரையே வைத்திருந்தாய். விவரம் தெரிந்த நாள் முதல் பொத்திப் பொத்தி வளர்த்தாய். வீட்டிற்குப் போகும்போதும் வரும்போதும் என் கண்ணுகுல்லையே இருக்கற சாமி என்று சொல்லி கட்டிபிடித்து சில துளி கண்ணீர் வடிக்காமல் நீ இருந்ததில்லை.

நீ எனக்கு அருகே இருந்தால் பத்துபேர் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் இருக்கும் என்று சொல்வாய். இது எனக்கும் அவளுக்குமான பந்தம். இந்த பந்தத்தை உயிர்பித்துக் கொண்டு சில மணி நேரத்திற்கு முன்வரை உயிரோடு இருந்தாள். இப்போது இல்லை. அவளின் கடைசி நிமிடங்களில் அவளது கண்கள் என் முகம் பார்க்க ஏங்கி இருக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

எனது செல்லப் பேரனின் திருமணத்தைப் பார்த்துவிட்டால் நிம்மதியாகப் போய்விடுவேன் என்று எப்போதும் சொல்வாள். 80 வருடங்களுக்கு மேலாக இருந்தவளுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்க முடியாமல் பாதகத்தி என் பாட்டி போய்ச் சேர்ந்துவிட்டாள்.

எனது தந்தைக்கும் அவரது தாயிக்குமான 55 வருட உறவை, அவர் பேசியபோது தடுமாறி விழுந்த வார்த்தைகளில் புரிந்துகொள்ள முடிந்தது.

எந்தனை நாள் அவளோடு பேசி இருப்பேன். அவளின் கரம்பிடித்து எத்தனை நாள் நடந்திருப்பேன். அவள் எனக்காக எத்தனை நாள் உழைத்திருப்பாள், தூக்கம் கலைத்திருப்பாள். நினைத்துப் பார்க்கையில் நெஞ்சம் கனத்துப் போகிறது.

வேலைக்காக பெங்களூர் போனாய் பிறகு ஹைதராபாத் போனாய் இப்போது அமெரிக்கா போகிறாய் நான் இறந்துபோனால் எங்கு வரப்போகிறாய் என்று சொல்லியவளின் வாக்கு பலித்துவிட்டது. என்னால் உன்னைப் பார்க்க வரமுடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் காலம் என்னை அண்ணனிடம் இருந்து பிரித்தது இப்போது உன்னிடம் இருந்து பிரித்துவிட்டது.

உறவுகளுக்காக நாடுவிட்டு நாடு வந்து உழைத்து என்ன பயன்
 ? இது போன்ற தருணங்களில் நான்கு சுவரிற்கு நடுவே அழ மட்டுமே முடிகிறது என்றெண்ணும்போது வாழ்க்கை அர்த்தமற்றதாகவே தெரிகிறது.

நீ பாட்டியாக இல்லை... என் தாயாகவும் இருந்தாய்... இன்று உனது மூச்சு உலகை விட்டுப் பிரிந்துவிட்டது. இருந்தும் எனது இறுதி மூச்சுவரை உனது நினைவுகளோடு நான் இருப்பேன். உனது இறுதி ஊர்வலத்தில் இல்லாமல் இருக்கப்போகும் இந்த இயலாத பேரனை தயவு செய்து மன்னிப்பாயாக என் தாயே.

Monday, 8 July 2013

மனிதம் எங்கே போகிறது ??

ஜூலை ஒன்றாம் தேதி சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ வில் சண்முகம் என்பவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்கிறார். கீழே விழுந்தவர் ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார். முதல் உதவி ஏதும் கொடுக்காமல், அவரை காப்பாற்ற நினைத்த பொது மக்களையும் நெருங்கவிடாமல் சுமார் 20 நிமிடம் ஷாப்பிங் மால் நிர்வாகம் போலீஸ் வரட்டும் என்று தட்டிக் கழிக்கிறது. பிறகு பொதுமக்களின் நெருக்கடியால் வழிவிடுகிறது அந்த நிர்வாகம். அந்த இளைஞன் யார் என்றே தெரியாத ஒரு பெண்மணி உதவி செய்ய முற்பட்டு மருத்துவமனை வரை செல்கிறார்.

ஆனால் அந்த இளைஞர் இறந்துவிடுகிறார். அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு, ஷாப்பிங் மால் நிர்வாகத்தின் அலச்சியத்திற்கு நீதி வேண்டி மனிதத்தின் அடிப்படையில் துடிக்கிறார். அதைக் காவல்துறையோ ஷாப்பிங் மால் நிர்வாகமோ கவனித்ததாகத் தெரியவில்லை. காவல்துறை அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணை கேவலமாகத் திட்டுகிறார். கோடி கோடியாய் வருமானம் ஈட்டித் தரும் பொதுமக்களை துச்சமாக மதிக்கும் பணக்கார முதலைகளுக்கு மத்தியில் இந்தப் பெண்ணைப் பார்க்கையில் கண்கள் கலங்குகிறது. அந்த வீடியோ இங்கே:




ஏறக்குறைய இதே மனநிலையில் தான் மே 17 ஆம் தேதியன்று நானும் இருந்தேன். பைக்கில் வந்த இருவரை கார்க்காரன் தட்டிவிட்டுச் செல்கிறான். பைக்கில் வந்த இளைஞனில் ஒருவன் தலையில் பலத்த அடிபட்டு நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். 20 நிமிடத்திற்கும் மேலாக அந்த இளைஞனைத் தொடக்கூட மனமில்லாது, மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அந்த ஹைதராபாத்தின் மும்பை தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கில் மக்கள் பார்த்துக் கொண்டே போகிறார்கள்.

அந்த நேரத்தில் அங்கே வந்த நான், அந்த இளைஞனின் கோர சூழலைப் பார்த்து இதேபோல் கதற நேரிடுகிறது. பல ஆட்டோகாரர்களை கெஞ்சியும் வராமல், ஒரு நல்லவரின் உதவியுடன், 
அந்த மாலை நேர வாகன நெரிசலில் ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறேன். நிலை மோசமாக உள்ளது, அந்த மருத்துவமனையில் அவரைக் காப்பாற்ற தேவையான உபகரங்கள் இல்லை என்று சொல்லவே, அடுத்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறேன். முடிவில் அந்த இளைஞனும் இறந்து போகிறான்.

அந்த அனுபவம் இங்கே: எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !


இந்த இரண்டு சம்பவங்களின் ஒரு பொதுவான சாராம்சம் என்னவென்றால், அந்த இளைஞர்கள் 20 நிமிடங்களுக்கும் மேலாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் உதவி செய்ய முன்வராத மனிதாபிமானமற்ற நமது சமூகம் மட்டுமே.


மனிதம் மரித்துத்தான் போனதோ ??

அகல்

Friday, 5 July 2013

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

திவ்யாவின் காதல் கணவன் தர்மபுரி இளவரசனின் இறப்பு யாவரும் அறிந்த ஒரு விடயம். இந்த சம்பவத்திற்கு சாதிவெறி முக்கிய காரணம் என்றாலும் ஊடகங்களுக்கும் அதில் பக்கு உண்டு. இதற்கிடையே சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது இளவரசனின் இறப்பு கொலையா ? தற்கொலையா ? என்ற ஒரு பெரிய கேள்வி மனதில் குடிகொள்ள காரணங்கள் கண்முன்னே கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் அதைப் பற்றிய எனது பார்வையை மட்டும் பதிவு செய்ய கனத்த மனதுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.
1. நீதிமன்ற விசாரணையின் போது இளவரசன் தன்னை வற்புறுத்தி கூட்டிச் சென்றார், மிரட்டினார், கடத்தினார் என்ற எந்த பழியையும் இளவரசன் மீது திவ்யா போடவில்லை. இரண்டு தினங்களுக்கு முன், எனது தாயாரின் நலன் கருதி அவருடன் வாழ்வேன், இளவரசனுடன் இனி வாழப்போவதில்லை என்று நீதி மன்றத்தில் திவ்யா கூறினார். ஆனால் இளவரசனை வெறுத்து விலகியதாகக் கூறவில்லை. திவ்யா தன்னை முற்றிலும் வெறுத்திருக்கும் பட்சத்தில் இளவரசன் தற்கொலை முயற்சி செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் திவ்யா தன்னுடன் வாழப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிய பிறகும் அவர் எனக்குக் கிடைப்பார், நம்பிக்கை இருக்கிறது. திவ்யாவைச் சுற்றி இருப்போர் அவரை சுயமாக முடிவெடுக்க விடாமல் தடுக்கிறார்கள் என்று சலமில்லாமல் தனது கடைசிப் பேட்டியில் சொல்லி இருக்கிறார். 
2. இளவரசனின் முந்தய பேட்டிகளைப் பார்த்தல் அவரின் தெளிவும், தைரியம் நமக்குத் தெரியும். அதோடு திவ்யாவை விட்டுவிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள இளவரசனுக்கு திவ்யா வெறும் காதலியல்ல, மனைவி. தனக்குச் சொந்தமானவள். திவ்யா வார்த்தையளவில் வேண்டாம் என்று கூறியிருந்தாலும், அவள் தனது மனைவி என்பதால் சட்டம் இருக்கிறது எப்படியும் சேரமுடியும் என்ற நம்பிக்கை இளவரசனுக்கு இருந்திருக்கும்.
3. அப்படியே திவ்யாவின் வார்த்தைகளால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக வைத்துக் கொண்டாலும், புகைப்படங்களில் காணப்படும் இளவரசனின் உடல், ரயில்முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவில்லை. காரணம், அவ்வளவு வேகமாக வரும் ரயிலின்முன் விழுந்து தற்கொலை செய்துகொள்பரின் உடல் இவ்வாறு சில காயங்களுடன் தப்பி இருக்க வாய்ப்பில்லை. ஒரு பக்க முகமும், தலையும் மட்டும் காயம் அடைந்திருக்கிறது, சட்டைகூட பெரிதாக கசங்கவில்லை என்று செய்திகளில் படிக்க முடிகிறது. ரயில் விபத்தில் பெருத்த காயங்கள் இல்லாமல், சட்டை கசங்காமல் தலையில் மட்டும் காயங்களுடன் சாவது பெரும் ஆச்சர்யத்திற்குரியது.
4. சாதிய சக்திகள் ஒன்றுகூடி இளவரசனுடன் வாழபோவதில்லை என்று திவ்யாவைக் கூற வைத்த பிறகு, அவர்களின் அடுத்த நோக்கம் தங்களது சாதியைச் சேர்ந்த ஒரு ஆணிற்கு அந்தப் பெண்ணை கூடியவிரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இளவரசன்-திவ்யாவின் திருமணம் நாடறிந்தது. அதற்கான ஆதாரங்கள் இருப்பதால் அது சட்டப்படி செல்லக்கூடிய திருமணம்.
மறுமணம் செய்து வைக்க வேண்டுமானால் விவாகரத்துப் பெறவேண்டும். அதற்கு அந்தப் பெண்ணை ஒத்துக் கொள்ளவைத்தாலும், இளவரசன் இருந்த நிலைப்பாட்டில் அவர் திவ்யாவைப் பிரிய ஒத்துக் கொண்டிருக்க மாட்டார். அப்படியே ஒத்துகொண்டாலும் குறைந்தது ஒருவருடம் விவாகரத்திற்காக காத்திருக்கவேண்டும். அதற்குள் திவ்யா மீண்டும் தனது மனதை மாற்றிக்கொண்டு இளவரசனுடன் போனால் இதுவரை தங்கள் சாதியைக் காக்க செய்த போராட்டங்கள் வீணாகிவிடும் என்று அவர்கள் கருதி இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. இளவரசன் இறந்துவிட்டால் உடனடி மறுமணம் சாத்தியம் என்ற எண்ணம் தலைதூக்கி இருக்கலாம். அதனால் இந்த அவலமும் அரங்கேற்றப் பட்டிருக்கலாம்.
திவ்யா தனது தாயுடன் போக மிக முக்கியமான காரணம் அவர் தந்தையின் இறப்பு. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் என்பது அவரது பேச்சில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அந்த ஒரு காரணத்தை வைத்தே சாதிய சக்திகள் திவ்யாவை உணர்வுப் பூர்வமாக அணுகி, அவரது சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கி இருப்பார்கள். இளவரசனோடு போனால் நானும் இறந்துவிடுவேன் என்று அவரது தாயும் பயமுறுத்தி இருப்பார். என்ன செய்வதென்று தெரியாத பேதையாய், மன அழுத்தம், சாதிய நிர்பந்தம் இவற்றிற்கிடையே வேறு வழியில்லாமல் திவ்யா இளவரசனுடன் இனி வாழப்போவதில்லை என்று வார்த்தையளவில் மட்டுமே சொல்லி இருக்க வேண்டும்.
இதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா ? இல்லை இது தற்கொலையானால் அதற்கான சரியான காரணங்கள் என்ன என்பதை சாதிய/அரசியல் ஈடுபாடில்லாத, முறையான விசாரணை நடத்தப்பட்டால் வெளிச்சத்திற்கு வரும் என்று நம்புகிறேன். அப்படி நடக்குமா என்பதும், அப்படியே நடத்தாலும் விசாரணையை முடிக்க எத்தனை வருடங்கள் இழுப்பார்கள் என்பதும் பெரும் கேள்விக்குறியே !
"சாதி வெறியால் இளம் காதலர்களை இந்த நிலைக்குத் தள்ளிய நமது சமூகத்தை நினைத்து, ஒரு தமிழனாய் வெட்கித் தலை குனிகிறேன்"

அகல்

Wednesday, 12 June 2013

மதமும் குரோமோசோமும்

மதம்

ஒவ்வொரு மதத்திலும் ஒருவர் மற்றவருடன் உரையாடலைத் தொடரும்முன், அவர்களைக் கடவுளின் பெயரால் ஆசிர்வதிக்க ஒரு சில வார்த்தைகள் பயன்படுத்தப்படும். இதில் தவறேதும் இல்லை என்றாலும், நமக்கு எதிரே கேட்டுக்கொண்டிருப்பவர் கடவுள் நம்பிக்கை உடையவரா ? இவ்வாறு கூறுவதை அவர் விரும்புவாரா, இல்லையா ? அவர் இதை எவ்வாறு எடுத்துக்கொள்வார், என்பதை சிந்திக்காமல் இந்த செயல் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.

ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் வேறு வேறு மதத்தைச் சார்த்தவர், நடுநிலைவாதிகளுக்கு இதில் விருப்பம் இல்லாமல் போகலாம். இது ஒரு மதத்திணிப்பாக அவர்களுக்குத் தெரியலாம். அவ்வாறு தங்கள் மதக்கடவுளின் பெயரால் உரையாடலை ஆரம்பிப்பவரிடம் அவர்கள் ஆரம்பத்திலேயே உரையாடலைத் துண்டிக்க நினைப்பதற்கு இது ஒரு காரணமாகக்கூட அமைந்துவிடலாம்.

அதனால் நண்பர்களுடன் உரையாடலை ஆரம்பிக்க "வணக்கம்" என்ற அழகான தமிழ் வார்த்தை உள்ளது அதைப் பயன்படுத்தலாம். அப்படியும் முடியாத இறை நம்பிக்கை அதிகம் உடையவர்கள் தங்கள் மத அடையாளங்களைக் குறிப்பிடாமல் "கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். கடவுள் என்ற வார்த்தை யாரையும் முகம் சுளிக்க வைக்கப்போவதில்லை. மத பேதங்கள் இன்றி அனைவருடன் இயல்பாகப் பழக இந்த மாற்றம் தேவை என்பது எனது தாழ்மையான கருத்து.



குரோமோசோம் 

புள்ளிவிவரங்களின்படி ஒருபுறம் ஆண்களின் எண்ணிக்கையும் மறுபுறம் பெண்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே போகிறதாம். இதைப்பார்க்கையில், பிறக்கப்போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதைத் தீர்மானிக்கும் - ஆண்களின்  அணுவில் உள்ள XY குரோமோசோம்கள் பிரித்தெடுக்கப்பட்டு, பெண்களின் XX குரோமோசோமுடன் சேர்த்து, தேவைப்படும் பாலினத்தைச் சார்ந்த குழந்தையைப் பெற்றெடுக்கும் தொழில்நுட்பம் விரைவில் அமலுக்கு வந்தாலும் வரலாம் என்பது எனது அவதானிப்பு. இது வருங்காலத்தின் ஆண் பெண் சதவீதத்தை சரியான முறையில் நிர்ணயிக்கும் கருவியாக அமையலாம்.


அன்புடன்,
அகல்

Friday, 17 May 2013

எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !


இன்று மாலை (17/5/13) 5.15 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு கிளம்பினேன். 5.30 மணியளவில் ஹைதராபாத்தில் நாங்கள் தங்கி இருக்கும் கச்சிபோவ்லி என்னும் இடத்தில் (வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில்) வாகன நெரிசல் மிகுதியாகக் காணப்பட்டது. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வேகமாகச் சென்று பார்த்தேன்.

சாலையில் ஒரு பாதியில், வானத்தைப் பார்த்து ஒரு உடல் சரிந்து கிடந்தது. பின்தலையில் அடி. அவரின் தலை இருக்கும் இடத்தில் இருந்து ஒன்றரை மீட்டர் தூரத்திற்கு ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. காது, வாய், மூக்கு இவற்றிலும் ரத்த ஓட்டம் குறையாமல் வெளிவந்து கொண்டிருந்தது. சட்டை, கைகள் முழுதும் ரத்தம். ஆனால் இதயத்துடிப்பு நிற்கவில்லை. பெருமூச்சு விட்டுக்கொண்டு இன்னும் உயிர் இருந்தது.

ஒரு நீர் குமிழியில் நீர் கொப்பளித்தால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறே கொப்பளித்துக் கொண்டு வெளிவந்தது மூக்கில் இருந்து சுவாசக் காற்றுடன் கலந்துவந்த ரத்தம். அதை ஒரு மிகப்பெரும் கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரின் இதயத்துடிப்பு நிற்காமல் இருக்க, நெஞ்சை பிடித்து அழுத்தினேன். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அவரை காப்பாற்ற முதலில் 108 ஆம்புலன்சிற்கு அழைத்து சொல்லிவிட்டு, வீட்டில் இருக்கும் என் நண்பனை அந்த இடத்திற்கு வரச்சொன்னேன். சுட்டெரிக்கும் சூட்டில், வாகன நெரிசலுக்கிடையே நடுரோட்டில் கிடக்கும் அவரை ஓரமாக தூக்கிவைத்து முதலுதவி ஏதேனும் செய்ய நினைத்தேன். 

நான் கெஞ்சி கேட்டுக்கொண்டதில் கைகளைப் பிடித்து தூக்க ஒருவர் முன்வந்தார். அடிபட்டுக் கிடந்த அவரின் இரண்டு கால்களையும் பிடித்து நான் தூக்கினேன். ஆனால் அருகில் இருந்தவன், போலீஸ் வரட்டும் தொடாதீர்கள் என்று சொல்லியதும், கைகளைப் பிடித்தவர் விட்டுவிட்டார்.

என்ன செய்ய ? போலீஸ் வருவதற்குள் இவன் செத்தால் பரவாயில்லையா என்று என்னை அறியாமல் நடு ரோட்டில் கத்தினேன். சிறிது நேரத்தில் ஒரு போலீஸ் கான்ச்டபுள் அந்த இடத்திற்கு வந்தார். எப்படியும் இந்த நெரிசலில் அம்புலன்ஸ் வருவது அவ்வளவு எளிதல்ல என்று எண்ணி, ஓரத்தில் போய்க் கொண்டிருக்கும் ஆட்டோக்களை வலி மறித்து அருகில் உள்ள ஏதேனும் ஒரு மருத்துவ மனையில் முதலுதவி செய்ய முயற்சித்தேன். போலீஸ்காரரும் தன் பங்கிற்கு ஆட்டோக்களை வழிமறித்தார். அவரையும் மதிக்காமல் பலர், விட்டால் போதும் என்று முறுக்கிப் பிடித்து ஓடினார்கள். ஒருகூட்டம் பார்த்துக் கொண்டே போனது.

கடைசியில் ஒரு இளம் ஓட்டோ ஓட்டுனர் உதவ முன்வந்தார். இருவரின் உதவியுடன் அவரை தூக்கி ஆட்டோவின் பின்புறத்தில் படுக்க வைத்தேன். எனக்கு ஹிந்தி, தெலுங்கு தெரியாது, அதனால் இங்கு வசிக்கும் யாரேனும் என்னுடன் வாருங்கள் என்று கேட்டேன். ஒருவரும் முன்வரவில்லை. 

அந்த உடல் உயிருக்கு போரட்டிக்கொண்டு ஆட்டோவில் கிடந்தது. அந்த இடத்தில் குறைந்தது 5 நிமிடம் விரயமானது. கடைசியில் ஒருவர் முன்வந்தார். ஆட்டோ டிரைவர், போலிஸ்காரர், நான் மூவரும் முன் சீட்டில் அமர்ந்து கொண்டோம். அந்த ஒருவர் பின் சீட்டில் அமர்ந்துகொண்டு அடிபட்டவரின் தொல்ப்பட்டையை பிடித்துகொண்டார்.

அடிபட்டது பின்தலை என்பதால் நடம்புமண்டலம் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கும் போல் தெரிந்தது. காரணம் அவரின் கால்களை மடக்கி ஆட்டோவின் உள்ளே வைக்க முடியவில்லை. முற்றிலும் விரைத்தபடி இருந்தது. அதனால் முன்சீட்டில் அமர்ந்துகொண்டு பின்புறம் திரும்பி அவரின் கால்கள் தரையில் படாமல் தூக்கிப் பிடித்துக்கொண்டேன். அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

இருந்தும் முயற்சி செய்து பிடித்துகொண்டு, பின்புறம் அமர்ந்திருபவரிடம் அடிபட்டவரின் நெஞ்சை அழுத்தச் சொன்னேன். அந்த நபர் அடிபட்டவரைப் பார்த்து எனது கசின் என்றார். யாரோ தகவல் கொடுத்ததின் பேரில் அவர் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இருவரின் பெயரையும் கேட்டேன். இரண்டு முஸ்லிம் பெயர்களைச் சொன்னார் (அந்த நேரத்தில் சொல்லப்பட்டதை என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை).

ஒரு வழியாக ஒரு சிறிய மருத்துவமனையைப் பார்த்து முதலுதவிக்காக ஆட்டோக்காரர் நிறுத்தினார். ஓடிப்போய் ரிசப்சனில் அவசரத்தை போலீஸ்காரரும், நானும் சொன்னோம். நான்கு சக்கர வண்டியில் அவரை உள்ளே தூக்கி கொண்டு சென்றோம். ஆனால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று மருத்துவர் சொன்னார்.

அடிபட்டவரின் சகோதரனும் நண்பரும் அப்போது அங்கே வந்துவிட்டார்கள். மாருதி ஆம்னி காரின் பின்புறத்தில், அடிபட்டவரை அவரின் கசின் மற்றும் சகோதரன் தாங்கிப் பிடித்துக்கொள்ள, நான் மற்றும் போலீஸ்காரர் முன்னே அமர்ந்து கொண்டோம். அவரின் நண்பர் காரை வேகமாக இயக்கினார். அப்போது மணி 6.15 இருக்கும். போலீஸ்காரர் அந்த நேரத்து கடும் வாகன நெரிசலை வண்டியில் அமர்ந்துகொண்டு விசிலடித்து விளக்க முடிவு செய்தார். நான் எனது கை வெளிப்புறம் எட்டிய அளவிற்கு காரை பலமாக தட்டிக்கொண்டே போனேன். 

கார் வேகமாக வந்து பிரிமியர் மருத்துவமனையை அடைந்தது. அவர் ICU அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். முதலுதவி அளிக்கப்பட்டது. போலீஸ்காரர் என்னைப் பற்றிய ஆதாரங்களை திரட்டிக்கொண்டார். திடீரென எங்களை மருத்துவர் அழைத்தார். ICU விற்குள் சென்றோம். அடிபட்டவரின் கை, கால் நரம்புகள் முற்றிலும் முறுக்கிக் கொண்டிருந்தது.

கையுறை அணிந்திருக்கும் மருத்துவரின் கையில் ரத்தம் நிறைந்த ஏதோ ஒரு சிறிய துண்டு இருந்தது. அதைக் காண்பித்து மூளையில் பலத்த அடிபட்டுள்ளது, ஏறக்குறைய முற்றிலும் சிதைந்து விட்டது, அதன் சிறிய பாகம் தான் இது என்று ஆங்கிலத்தில் கூறினார். அப்போது என்னை அறியாமல் ஏதோ ஒரு உலகத்தில் இருப்பதாக மட்டும் உணர முடிந்ததது. சற்று நேரம் கழித்து மீண்டும் அழைத்தார். அவரின் அறைக்குள் போனோம்.

0% மட்டுமே இவரால் உயிர்வாழ முடியும் என்றார். அடிபட்டவரின் சகோதரனுடன் சேர்ந்து நானும்

"எப்படியாவது காப்பாற்றுங்கள்" என்றேன். 

"நான் ஒன்று சொல்லவா ? நீங்கள் மிகவும் தாமதமாக வந்திருக்கிறீர்கள் அதோடு இவர் இருக்கும் நிலைக்கு உலகில் உள்ள எந்த நரம்பியல் மருத்துவராலும் காப்பாற்ற முடியாது. அதிகபட்சம் ஒரு மணிநேரம் உயிர்வாழ்வார்" என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்போது என் நண்பனும் மருத்துவமனைக்கு வந்துவிட்டான். அவனிடம் மருத்துவர் சொன்னதை சொல்லிவிட்டு அங்கு இருக்க மனமில்லாமல் அவனிடம் போகலாம் என்றேன்.

போலீஸ்காரரிடம் நான் கிளம்புறேன் சார் என்றேன். அவர் கையைக் குலுக்கி "மனிதாபிமனத்தொடு வந்ததற்கு நன்றி, என்னிடம் உங்களுடைய தகவல் இருப்பதால் பயப்படவேண்டாம்" இது வெறும் சாட்சிக்கே என்றார்.

காய்ந்துபோன சில துளி ரத்தக் கரைகள் படிந்த கைகளோடு நண்பனுடன் 7 மணியளவில் வீடு திரும்பினேன்.

இதில் கவனிக்கப் படவேண்டிய சில விடயங்கள்:

1. விபத்து நடந்தது நான்கு சாலைகள் இணையும் இடம். ஒவ்வொருநாளும், அந்த இடத்தில் சிறு குழந்தைகளை ஏற்றிவரும் பள்ளி வாகனம் முதல் அனைவரும் கண்மூடித்தனமாக ஓட்டுவார்கள். அது ஹைதராபாத் நகரின் ஓரமாகச் செல்லும் மும்பை தேசிய நெடுஞ்சாலை. மக்கள் நெருக்கம் நிறைந்த அந்த இடத்தில் ஒரு சிக்னல் இல்லை. அந்த இடத்தில் முன்பெல்லாம் இருந்த ட்ராபிக் போலிஸ் சில நாட்களாக இருக்கவில்லை (இருந்தாலும் சாலையின் ஓரமாக உட்காந்து அவன் மொபைலை நோண்டிக் கொண்டிருப்பான் - பல முறை பார்த்திருக்கிறேன்). இது முதல் தவறு.

2. ஒரு கார்க்காரன் மோதிவிட்டு ஓடிவிட்டதாகச் சொன்னார்கள். அதோடு அடிபட்டவர், அவரோடு வந்த ஒருவர், யாரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை (யார் ஒட்டியது என்று எனக்குத் தெரியாது, கூட வந்தவருக்கு காலிலும் வயிறிலும் பலத்த காயம்)

3. 43 டிகிரி சுடும் மே மாத வெயிலில், சமமாக இருக்கும் சாலையில் ஒன்றரை மீட்டர் அளவிற்கு ரத்தம்போக குறைந்தது அரைமணி நேரம் ஆகாமல் இருந்திருக்காது. அந்த வெப்பத்தில் விரைவாக உறையும் ரத்தம் ஒன்றரை மீட்டர் அளவிற்கு போகும் வரை உயிர்க்குப் போராடிக் கொண்டிருக்கும் அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். இவர்களை என்ன செய்ய ? தனக்கு வந்தால்தான் உயிரின் அருமை தெரியுமா ?

4. விபத்து என்று தெரிந்ததும் பல ஆட்டோக்காரர்கள் அந்த இடத்தைவிட்டு தப்பிக்கவே முயற்சி செய்தார்கள். உதவ முன்வரவில்லை. அவர்களுக்கு இந்த நிலை வராதா ?

5. எனது வேண்டுகோளுக்கிணங்க ஒருவர் அடிபட்டவரை சாலையின் ஓரமாகத் தூக்கிவைக்க முன்வந்தார். போலீஸ் வரட்டும் என்று சொல்லி அதையும் ஒருவன் தடுத்தான். அவனது மண்டையை அடித்து உடைத்து படுக்கவைத்து போலீஸ் வரட்டும் என்று சொன்னால் நன்றாக இருக்காதா ?

6. அவரவர் ஐடியா கொடுத்தார்களே தவிர, ஒருவர்கூட ஆட்டோவில் ஏற முன்வரவில்லை. ஒவ்வொருவரையும் கெஞ்சி வரச்சொன்ன அந்தப் போராட்டத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் வீணானது. அந்த நேரம் மிக முக்கியானது என்பது இந்த மனிதர்களுக்கு தெரியாமலா போய்விடும் ?

7. விழுந்துகிடந்தது ஒரு முஸ்லிம் சகோதரன். ஆனால் அந்த கூட்டத்தில் இருந்த இரண்டு முஸ்லிம்கள் இதைச்செய் அதைச்செய் என்று மொழிதெரியாத என்னிடம் முன்மொழிந்தார்களே ஒழிய, அவனை காப்பாற்ற முன்வரவில்லை.

மனிதம் போதிக்கும் மதக்கொள்கைகளைப் பின்பற்றாமல் மதத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பதில் என்ன பயன் ? (இதை எல்லாரும் செய்கிறார்கள் என்று பொதுமைப் படுத்தவில்லை. அதனால் இதைப் படிப்பவர்கள் தயவு செய்து இஸ்லாம் சகோதர்கள் மீது தாக்குதல்களைத் தொடுக்கவேண்டாம். அனைத்து மதத்திலும் நல்லவர் கெட்டவர் உண்டு)

ஒரே ஒரு மன நிம்மதி. எப்போதும் நாம் குறைசொல்லும் போலீஸ்காரர்களில் மனிதாபிமானமிக்க ஒருவரையும், மனிதம் நிறைந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரையும் சந்தித்ததில்.

எது எப்படியோ மனிதாபிமானமற்ற பலரின் செயலால் முன்பின் தெரியாத ஒரு சகோதரனை கண்முன்னே இழந்தேன். இங்கே தெரிந்தது அவர்களின் இன, மொழிப்பற்றும் கேடுகெட்ட நகர கலாச்சாரமும்.

இதே விபத்து எனது கிராமத்திற்கு அருகே நடந்திருந்தால், அடிபட்ட அடுத்த நிமிடமே மடியில் ஏந்தி சோடா கொடுத்திருப்பான் ஒருவன். அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல தனது வண்டியை எடுத்துக்கொண்டு வந்திருப்பான் மற்றொருவன். எதை எதையோ எதிர்பார்த்து பல பட்டங்கள் பெற்ற இவர்களை விட, எதையும் எதிர்பார்க்காமல் ஓடிவரும் படிக்காத அந்தப் பாமரன் எவ்வளவோ மேல்.

இதே போன்று முன்பொருமுறை எனக்குக் கிடைத்த அனுபவம் இங்கே இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள்

தயவு செய்து கட்டாயம் இதைப் பகிருங்கள். இது போன்ற விபத்துக்கள் அடுத்தவருக்கு மட்டுமே வராது, நமக்கும் வரும் என்பதை இந்த உலகம் உணரட்டும்.

கனத்த மனதுடன்,
அகல்