Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, 9 April 2015

20 கூலிகளின் கொலை

மரம் வெட்டுதல் என்பது தொழிலா ?

ஆம், கிராமத்து கூலித் தொழிலாளிகளைப் பொருத்தவரை மரம் வெட்டுவதென்பது ஒரு தொழில்தான். ஆனால் படித்த, நடுத்தர, மேல்தட்டு நகரவாசிகள் நினைப்பதுபோல அது சந்தனமரம், செம்மரம் வெட்டிக் கடத்துவதல்ல. உசிலை மரம், வேப்பமரம், புளியமரம் போன்றவற்றை விறகுக்காக வெட்டும் தொழில். இது தோட்டத்தில் பயிர்களுக்கு களை பறிக்க செல்வதுபோன்று அன்றாடம் நடக்கும் ஒரு தொழில். கிராமத்து பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு இது நன்கு தெரியும்.
கொல்லப்பட்டவர்கள் கடத்தல்காரர்களா ?

இல்லை. கொல்லப்பட்டவர்கள் கூலித் தொழிலாளிகள். ஒரு மாநிலம் விட்டு மற்றொரு மாநிலத்திற்கு பிழைப்பிற்காக சென்றவர்கள். 200 ரூபாய் கூலி சொந்த ஊரில் கிடைகிறது. ஆனால் 400 ரூபாய் பக்கத்து மாநிலத்தில் கிடைக்கிறதென்றால் தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள அந்த வேலையைத் தேடித் கூலிக்குப் போவதென்பது இயல்பு. இதை பேராசை என்று ஒருசாரர் சொல்வார்களேயானால், நல்ல சம்பளத்திற்கு வெளிமாநிலத்திற்கு வேலைக்குப்போகும் படித்த பட்டதாரிகளும் பேராசைக்காரர்கள் தானே ?

தமிழ்நாட்டின் பானிபூரி விற்க வடநாட்டில் இருந்து எதற்கு வருகிறான் ? அங்கு அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அங்குள்ளோர் யாரும் பானிபூரி சாப்பிடுவதில்லை என்று அர்த்தமல்ல. இங்கு விற்பதில் அவனுக்கு சில நன்மைகள் இருக்கிறது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம் என்று அவன் நினைத்திருக்கலாம். அதை தவறு என்று யாரும் சொல்ல முடியாது.

வெட்டுவது செம்மரம், அது சட்டப்படிக் குற்றம் என்பதையெல்லாம் தெரியாதவர்கள், செம்மரங்களின் சர்வதேச மதிப்பு என்னவென்று தெரியாத அப்பாவிகளைத்தான் இந்த கடத்தலுக்குப் பின்னிருக்கும் பண முதலைகள் பயன்படுத்தி இருப்பார்கள். அனைத்து விவரமும் தெரிந்தவர்களை பணியமர்த்த அவர்கள் என்ன முட்டாள்களா ? உண்மையில் யோசித்திபோருங்கள், ஒரு டன் செம்மரம், சர்வதேசச் சந்தையில் ஒரு கோடியைக்கூட எட்டும் என்பது, படித்த எத்தனை பேருக்கு இதற்கு முன்பே தெரிந்திருக்கும் ?

மரம் வெட்டி இயற்கை வளத்தை அழிப்பதை நியாயப் படுத்தவில்லை. ஆனால், மரம் என்பது இயற்கை வளம், அதைப் பாதுகாப்பது அவசியம். மழைவர மரம் காரணம், அது நமது வாழ்வாதாரம் என்றெல்லாம் 200 ரூபாய் கூலிக்குபோகும், கல்வியறிவு கிடைக்கப்பெறாத, அதைப்பற்றி யோசிக்க முடியாத நிலையில், அன்றாட உணவிற்காக போராடும் எளிய மனிதர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஆக, அவர்களின் வறுமையும் அறியாமையும் மட்டுமே இங்கே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அவ்வளவே.
யார்தான் இதற்குக் காரணம் ?

வெளிமாநில ஆட்களை அழைத்து வந்து, ஒரு கொலை செய்வதில் அந்த கொலை செய்யும் கும்பலுக்கு என்னென்ன நன்மை இருக்கிறதோ, அதே போன்ற நன்மைகளுக்கத்தான் விவரம் தெரியாத, மொழி தெரியாத, வெளியாட்களை இறக்குமதி செய்து பணியமர்துகிறார்கள். இதே வேலையைச் செய்ய உள்ளூர்க்காரனை பயன்படுத்தினால் இந்த கும்பல் எளிதாகச் சிக்கும் என்று அவர்களுக்குத் தெரியாமலா போயிருக்கும் ? அதோடு 20 பேரை சுட்ட ஒரு படையால், ஒருவனைகூடவா உயிருடம் பிடிக்க முடியவில்லை ? இந்த கடத்தலின் பின் இருப்பவர்களை அடையாளம் காண முடியவில்லை ?

சுடப்பட்ட இந்த கூலித் தொழிலாளிகளா சர்வதேச சந்தையில் செம்மரங்களை விலைபேசி விற்கிறார்கள் ? ஆலமரத்தின் ஆணிவேரை விட்டுவிட்டு அதன் விழுதை வெட்டுவதால் என்ன பயன் ? இதற்குப் பின், மிகப்பெரும் ஆள் பலம், அரசியல் பலம் இருக்கிறது. அந்த முதலைகளை விட்டுவிட்டு இந்த கூலிகளைக் கொன்றது சரி என்று பேசுபவர்கள் அடிப்படை புரியாதவர்கள் என்றே பொருள் கொள்ளவேண்டும். ஒரு கூலியைச் சுட்டுவிட்டால் இன்னொரு கூலி வராமல் போகமாட்டான். செம்மரம் வெட்டியதாகச் சொல்லி, 20 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியைக் கூட அறியாத கடைக்கோடி இந்திய குடிகள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களை இந்த மாபியா கும்பல் மீண்டும் பணியமர்த்தும். அவர்களின் வறுமையை மீண்டும் பயன்படுத்தும்.

இங்கு ஏதோ ஒரு அரசியல் அழுத்தத்திற்காக, ஒரு சாராரை திருப்திப் படுத்துவதற்காக, ஒரு படுகொலை அரங்கேற்றப் பட்டிருக்கிறது, அப்பாவிகள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இதைப் புரிந்து கொள்ளாமல், கூலிகளின்மீது பழிசுமத்துவதில் குறியாகத் திரியும் ஒரு குறிப்பிட்டோரை நினைத்து, வருத்தப்பட மட்டுமே முடிகிறது. இதன் பின்னணியில் இருக்கும் பெரு முதலாளிகளைப் பற்றி இவர்களால் பேச முடியாதபோதே இவர்களின் நோக்கம் என்ன என்பது புரிந்துவிடும். இந்த அப்பாவிகளின் கொலைகளில்கூட, மனிதாபிமானமற்ற முறையில், சில மதவாதிகள் மதத்தைக் கொண்டு திணிக்கிறார்கள் என்பது உச்சகட்ட வேதனை !

அகல்
10.4.2015

Tuesday, 16 September 2014

சகாயம் IAS க்கு எதிரான மேல்முறையீடும் காரணங்களும்

தமிழகத்தில் நடக்கும் தாதுமணல் கொள்ளை, கிரனைட் முறைகேடுகளை விசாரித்து, இரண்டு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கலெக்டர் சகாயம் தலைமையில் சென்னை உயர்நீதி மன்றம் அமைத்த குழுவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு கூறும் விளக்கம், இதுவரை 88 கிரானைட் குவாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட குத்தகை ரத்து செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக நடத்தப்பட்ட குவாரிகளுக்கு எதிராக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, கிரனைட் ஏற்றுமதியை நிறுத்திவிட்டோம் என்பதே அது.

மாநிலத்தில் நலனுக்காக அமைக்கப்பட்ட இந்தக் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரசர அவசரமாக தமிழக அரசு ஏன் மேல் முறையீடு செய்துள்ளது ? குவாரிகளின் குத்தகை ரத்து செய்யப்பட்டாலும், வழக்குகள் பதியப்பட்டாலும் அதை மறு ஆய்வு செய்வதில் தமிழக அரசு ஏன் உடன்படவில்லை என்பதையும் இங்கே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழக அரசிடம் எந்தக் கருத்தும் கேட்காமல் இந்தக் குழு அமைக்கப்பட்டது அரசை அவமதிப்பதுபோல் இருப்பதாக தமிழக அரசின் சார்பில் சொல்லப்பட்டாலும் அது ஒரு சப்பைக்கட்டு காரணமாகவே நம்மால் பார்க்க முடிகிறது.

தமிழக அரசால் குத்தகை ரத்து செய்யப்பட்ட குவாரிகள் யாருடையது என்ற பட்டியலையும், இப்போது குவாரிகளை நடத்துவோரின் பட்டியலையும் எடுத்தால் நமக்கு இதில் விடை கிடைக்கலாம். அதோடு, பாலாற்றுப் படுக்கையில் நடைபெற்ற முறைகேடுகளைப் பற்றியும், அதில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு பற்றியும், IAS அதிகாரி சகாயம் தமிழக அரசிடம் சமர்பித்த அறிக்கையில், யார் யாருடைய பெயர் இருந்தது என்ற பட்டியல் பெறப்பட்டாலும் இந்த மேல் முறையீட்டிக்குக்கான காரணங்கள் விளங்கிவிடும்.

சகாயம் அவர்கள், தாது மணல் கொள்ளை, கிரனைட் முறைகேடுகளைப் பற்றி நன்கு அறிந்தவர். அந்த முறைகேடுகளைப் பற்றியும் அதில் ஈடுபட்டோர் பற்றியும் முன்னரே ஆய்வு செய்தவர். முக்கியமாக மிகவும் நேர்மையானவர் என்பது தமிழக அரசுக்கு நன்கு தெரியும். அவரிடம் மீண்டும் இந்த வேலையை ஒப்படைத்தால் இன்னும் பல அயோக்கியத் தனங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார். அந்த முறைகேடுகள் தமிழக அரசின் பார்வைக்கு வரும் முன்னர், உயர்நீதி மன்றத்திற்கு போய்விடும். அது தமிழக அரசுக்கும் அதன் பெயருக்கும் பாதகமாக அமையலாம். அல்லது ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் அந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்பது போன்ற சில காரணங்கள் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்பிருக்கிறது.

தமிழக அரசின் மேல் முறையீட்டிற்கு இது போன்ற ஒரு சில காரணங்களை நம்மால் யூகிக்க முடிந்தாலும், மாநிலத்தில் நடக்கும் எந்த ஒரு செயலும் தனது கட்டளைப்படியே நடக்கவேண்டும் தன்னை மீறி எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற எண்ணமும், பழிவாங்கலும் அவ்வப்போது ஜெயலலிதாவிடம் இருந்து அப்பட்டமாக வெளிப்படும் ஒரு குணம். அதுவே அவருடைய பலவீனமும் கூட.

அகல்
17.09.2014

Monday, 1 September 2014

தமிழக மாணவர்களும் ஈழ வியாபாரமும் - ஒரு அனுபவம்

தமிழ் மீனவர் உரிமை, தனித் தமிழீழம் போன்ற கோரிக்கையை முன்வைத்து, லயோலா கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் என தீயாய்ப் பரவிக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது ஹைதராபாத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னோடு தங்கி இருந்த இரண்டு கல்லூரி நண்பர்களின் துணையோடு, தமிழகத்தில் மாணவர்கள் நடத்திக் கொண்டிருந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக ஹைதராபாத்தில் ஒரு போராட்டத்தை முகநூல் வழியாக அறிவித்தோம்.

தமிழன் என்ற எண்ணத்தைத் தாண்டி, மனிதன் என்ற உணர்வோடு அங்கே எதிர்பாராத அளவிற்கு இளைஞர்கள் கலந்துகொண்டார்கள். சில நெருக்கடிகளோடு போராட்டம் நன்றாக நடந்து முடிந்தது. சில தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளிலும் இந்தப் போராட்டம் பதிவு செய்தது.

இந்தப் போராட்டம் முடிந்தவுடன், அடுத்த கட்ட போராட்டத்தைப் பற்றி நாங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், சென்னையில் உள்ள ஒரு தமிழர் அமைப்பிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நீங்கள் திடீரென அறிவித்து நடத்திய போராட்டம் எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது, செய்திகளைப் பார்த்தே தெரிந்துகொண்டோம். இதுபற்றி முன்பே தெரிந்திருந்தால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அரசியல் முதுகலை பிரிவை எடுத்துப் படித்துக் கொண்டிருக்கும் தமிழ் மாணவர்களை உங்களது போராட்டத்தில் கலந்துகொள்ள வைத்திருப்போம். அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். போராட்டத்தை ஒருங்கிணைக்க அவர்களும் சரியான இளைஞர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.

அதோடு, தனித் தெலுங்கானாவிற்காக போராடிக் கொண்டிருந்த ஒரு பல்கலைக் கழக மாணவர்களையும், தமிழ் மாணவர்கள் போராட்டத்திற்காக அழைத்து வருவார்கள் என்றார் தொலைபேசியில் என்னோடு உரையாடிய அந்தப் பெண். அடுத்த கட்ட போராட்டம் இன்னும் வலுவாக இருக்க வேண்டும் என்று கருதியதால், அவர் கூறிய யோசனையை ஒப்புக்கொண்டேன். அந்த தமிழ் மாணவர்களோடு பேசலாம் என்று நானும் எனது நண்பனும் தீர்மானித்தோம்.

சில முறை கைபேசி உரையாடல்களுக்குப் பிறகு, அந்த தமிழ் மாணவர்கள் எங்களை நேரில் சந்தித்து போராட்ட வடிவம் பற்றி பேச அழைத்தார்கள். நாங்கள் இருவரும் அவர்களின் கல்லூரி வளாகத்திற்கு அன்றிரவு போனோம். அன்று அவர்களது கல்லூரி ஆண்டுவிழா வெகு விமர்சியாக நடந்துகொண்டிருந்தது. அவர்களோடு பேசினோம். அரசியல் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அவர்கள். நல்ல அரசியல் அறிவு இருந்ததை உணர முடிந்தது.

இரண்டு மணிநேர உரையாடல். அடுத்த கட்ட போராட்டத்திற்கு குறைந்தது 3000 மாணவர்களை நாங்கள் அழைத்து வருகிறோம். இந்தியா மிகவும் அறிந்த எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அருந்ததிராயை போராட்டத்திற்கு அழைக்கிறோம். அவர் எங்களுக்கு நல்ல பழக்கமானவர். நாங்கள் அழைத்தால் வருவார் என்று அந்த மாணவர்கள் கூறினார்கள். போராட்டத்திற்கு மாணவர்களைத் திரட்டுவது எங்களது பொறுப்பு, ஒருகிணைப்பை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.

3000 மாணவர்கள், அருந்ததிராய் என்றெல்லாம் அவர்கள் கூறியபோதே அவர்கள் மேலிருந்த நம்பிக்கை சற்று குறைய ஆரம்பித்தது. இருந்தாலும் இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று புரிந்துகொள்ள அவர்களோடு இன்னும் சற்றுநேரம் நேரத்தைக் கழிக்க முடிவு செய்தோம். எங்களது சந்தேகத்திற்கு வலுச்சேர்க்கும்விதமாக அவர்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அமைந்தது.

அது பல்கலைக்கழக ஆண்டுவிழா. அந்த நிகழ்ச்சி ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, யாரும் இல்லாத மைதானத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். சாப்பாடு வரவழைத்து சாப்பிட்டுக்கொண்டே, நீண்ட நேரம் பேசினோம். தங்கள் கல்லூரி, அதன் கலாச்சாரம் என்று பேச ஆரம்பித்தவர்கள், மது வாங்கி வந்து குடித்துக் கொண்டே, அங்குள்ள பெண்களைப் பற்றி கேவலமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். போதையில் அவர்கள் பேசியதை கேட்கும்போது அவர்கள் கஞ்சா போன்ற மற்ற போதைப் பொருட்களை உபயோகிப்பவர்கள் என்று வெளிப்படையாகவே தெரிந்தது.

குடித்துக் கொண்டிருந்த மது தீர்ந்துவிடவே, மது வாங்க எனது வண்டியைக் கேட்டார்கள். மணி எப்படியும் குறைந்தது இரவு பன்னிரண்டு இருக்கும். குடித்திருக்கும் ஒருவனிடம் எனது வண்டியை அந்த நேரத்தில் கொடுக்க எனக்கு உடன்பாடில்லை. அதனால், நானே அவர்களோடு போனேன். மூடி இருந்த மதுக்கடையின் பின்வாசல் வழியாக எனது பணத்தையும் போட்டு, மது வாங்கிக் கொடுக்கவேண்டிய சூழ்நிலையெல்லாம் உருவானது. திரும்பி வந்தபிறகு எனது நண்பனிடம் நடந்தவற்றைக் கூறினேன். உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறுவது என்று தீர்மானித்தோம்.

அவர்களோடு பேசியதில் எங்களால் ஒன்றைத் தெளிவாக புரிந்ததுகொள்ள முடிந்தது. அவர்களுக்கு ஈழ அரசியல் வரலாறு தெரியும். ஆனால் அவர்கள் படும் வழிகளைப் பற்றிக் கவலையில்லை. அவர்கள் உதவித்தொகையில் படிக்கும் மாணவர்கள் என்பதால், IT யில் வேலை செய்து கொண்டிருக்கும் எங்களைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களை முன்னிறுத்திக் கொள்ள நினைத்தார்கள். அதன்மூலம் விளம்பரம் தேடவோ அல்லது அவர்களுக்கு கொடுத்த ப்ரொஜெக்டை முடிக்க வேண்டும் என்பதோ அவர்களின் எண்ணமாக இருந்தது.

அவர்களின் வார்த்தையில் மனிதாபிமானமோ, இது செத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கான போராட்டம் என்ற குறைந்த பட்ச அக்கறையோ இருந்ததாகத் தெரியவில்லை. தமிழக அரசியல் கட்சிகளுக்கும் இந்த மாணவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பது தெளிவாகப் புரிந்தது. அன்று இரவு அவர்களோடு தங்கச் சொல்லி எங்களை வற்புறுதினார்கள். போராட்டத்தைப் பற்றி பிறகு பேசலாம் என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தைவிட்டு வெளியேறினோம்.

அடுத்த ஒரு வாரத்திற்கு அந்த மாணவர்களும் இருந்து மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்பு, நான் எடுக்கவில்லை. சென்னையில் இருக்கும் அந்த தமிழர் அமைப்பு என்னை மீண்டும் அழைத்து அவர்களிடம் பேசினீர்களா என்று கேட்டார்கள். இந்த மாணவர்கள் எப்படியானவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாதா, இல்லை பரஸ்பர ஒப்பந்தத்தோடு விளம்பரத்திற்காக அவர்கள் வேலை செய்தார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. அதனால் அந்த தமிழர் அமைப்பிடம் இந்த மாணவர்களின் எண்ணங்களைப் பற்றி எதுவும் பேசாமல் வேறுசில காரணங்களைச் சொல்லிவிட்டு அவர்களது வட்டத்திற்கும் இருந்து வெளியேறினோம். ஆனால் தமிழர்களுக்கு முதல் எதிரி தமிழன் தான் என்று வரலாறு நமக்குச் சொல்லித் தந்ததை இவர்கள் மீண்டும் ஞாயபகப்படுத்தினார்கள்.

நாங்கள் நடத்திய முதல் போராட்டத்தில் ஆயிரக்காணக்கான மக்கள் கலந்துகொள்ளவில்லை என்றாலும், அது மிகவும் கண்ணியமாக, உணர்வுப் பூர்வமாக நடந்த ஒன்று. இவர்களை அழைத்து, அடுத்த போராட்டத்தை நடத்தி, அப்பாவி ஆத்மாக்களை நாங்கள் கொச்சை
ப்படுத்த விரும்பவில்லை. அதனால் தவிர்த்து விட்டோம். இந்த சம்பவத்தைப் பற்றி அப்போது நான் எழுதவுமில்லை. 

அப்போதே எழுதவேண்டியதானே ? இப்போது எதற்கு இந்த கட்டுரை என்று நீங்கள் கேட்கலாம். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக, பல தமிழ் மாணவர்கள் உயிரின் விளிம்புவரை சென்று போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில், இப்படி ஒரு கட்டுரை எழுதினால் தமிழ் மாணவர்கள் சமுதாயத்தையும் அவர்கள் நடத்தும் போராட்டத்தையும் தவறான கண்ணோட்டத்தில் காட்டும் என்ற ஐயம் எனக்குள் இருந்ததால், சூழ்நிலை கருதி அப்போது தவிர்த்துவிட்டேன்.

ஆனால் இதை எழுதாமல் விட்டுவிட்டால், தமிழ் நாட்டில் ஈழ வியாபாரம் செய்ய, இப்படி ஒரு மாணவர் சமுதாயமும் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்யாமல் போய்விடும் என்ற எண்ணத்தால் இப்போது பதிவு செய்கிறேன். நன்றி !

அகல்

1.9.2014

Friday, 26 April 2013

எழுத்தாளர் ஞானியின் முகநூல் ஸ்டேடஸும் எனது கேள்வியும்

IPL இல் சன் ரைசர் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் இலங்கை கிரிகெட் வீரர் குமர சங்ககராவை சென்னையில் நேற்று நடைபெற்ற IPL போட்டியில் விளையாட அனுமதிக்காததற்கு இன்று காலை எழுத்தாளர் ஞானி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டார். அதைப் பற்றிய எனது பார்வையே இந்த கட்டுரைக்குக் காரணம். வாருங்கள் அது என்னவென்று பார்ப்போம்.




ஞானியின் முகநூல் ஸ்டேடஸ்....

இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ‘தமிழர்கள்’ என்று சொல்லிக் கொள்வோரின் ஆர்ப்பாட்டம் அறிந்து வருத்தப்படுகிறேன். 1983 இனக்கலவரத்தின்போது சங்ககாரா ஆறு வயது சிறுவன். அவரது தந்தையும் வழக்கறிஞருமான சிக்சானந்த சங்ககாரா தன் வீட்டில் 35 தமிழர்களுக்கு ( குறிப்பாக பல சிறுவர்களுக்கு) அடைக்கலம் கொடுத்து கலவர காலம் முழுவதும் அவர்களைக் காப்பாற்றியவர். ஈழத் தமிழர்களின் இன்றைய அசல் எதிரிகள், இங்கே சிங்களவர்களுக்கு எதிராக அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் செய்வோர்தான் என்ற என் கருத்து வலுப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

எனது கருத்தும் கேள்வியும்...

உங்களை நல்ல எழுத்தாளர் என்று சொல்லும் பலரிடம், நீங்கள் சூழலுக்கேற்ப பேசும் அரசியல் தந்திரவாதி, என்று சொல்லிய என் கருத்தும் இப்போது வலுப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஞானி அவர்களே ஒன்றை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இந்தத் தடை சங்ககராவிற்கு மட்டுமான தடையல்ல. ஒட்டுமொத்த இலங்கை வீரர்களுக்கான தடை. இலங்கை என்ற நாட்டிற்கான தடை. இந்தத் தடையால் இதுவரை என்ன நடந்துவிட்டது ? என்று நீங்கள் கேட்கலாம்.

இதுவரை தமிழக மாணவர்கள் எதற்காக போராடுகிறார்கள் என்ற காரணத்தை தமிழகம் தாண்டி வேறெந்த மாநில மக்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. இலங்கையில் 1,40,000+ தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. வெளிமாநிலத்திலும் நாடுகளிலும் வாழும் என்னைப் போன்ற தமிழ் இளைஞர்கள் அதற்கு சாட்சி.

இந்தத் தடைமூலம், மற்ற மாநில இளைஞர்கள் அதன் காரணத்தை தெரிந்துகொள்ள முற்படுகின்றனர். சக தமிழ் நண்பர்களிடம் கேட்கிறார்கள். இதைப் பற்றிய செய்தியும், தமிழர்களின் இனப்படுகொலையை செய்யப்பட்டதின் பின்னணியும் மற்றவருக்கும் புரியும்படியான ஒரு துருப்புச் சீட்டாக இது அமைகிறது. ஒரு வகையில் இது இலங்கை மீது சர்வதேச அழுத்தம் தேவை என்ற கருத்தை வலுப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கையாக இருக்கிறது.  

அதோடு உங்கள் ஸ்டேடஸ் பார்க்கையில் எனக்கு சில கேள்விகள் மனதில் உதிக்கிறது. முடிந்தால் பதில் அளிக்க முயற்சிக்கவும்.

1. இது சங்ககராவிற்கு மட்டுமேயான தடை இல்லை என்பது உங்களுக்கும் தெரியும். சங்ககராவை நாங்கள் கெட்டவன் என்றும் சொல்லவில்லை. இருந்தும், ஒரு தகப்பன் நல்லவன் என்பதால் அவனுக்கு பிறக்கும் மகனும் நல்லவனாகவே இருப்பான் என்று நீங்கள் நினைப்பது மிகவும் குழந்தைத் தனமாகவே இருக்கிறது. நல்ல தந்தைக்கு பிறந்த மகன்கள் பலர் சுயநல வாதியாக, ஊதாரியாக, சமூகப் பொறுப்பில்லாமல் திரிவதை உங்கள் வீடு எனது வீட்டின் பக்கத்திலேயே பார்க்கலாம்.

உங்கள் கூற்றுப்படி, சக்ககரா நல்ல தந்தைக்குப் பிறந்ததால் நல்லவர், அவருக்கு தடைவிதிக்கக் கூடாது என்றால், தவறான தந்தைக்குப் பிறந்த மகனும் தவறானவன் என்று சொல்வீர்களா ?

2. இதேபோல் இனப்படுகொலை, நிறவெறியில் ஈடுப்பட்ட பல நாடுகளை சர்வேதேச அரங்கம் நிராகரித்திருப்பதற்கு தேவைக்கு அதிகமாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளது. உதாரணமாக, தென் ஆப்பிரிக்கா அணியை 22 வருடங்கள் சர்வேதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதையை உலகம் அறியும்.

இப்போது தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை சங்ககராவிற்கு எதிரானதென்றால், தென் ஆப்பிரிக்காவிற்கு விதிக்கப்பட்ட தடை அந்த பதினோரு வீரர்களுக்கு மட்டுமே எதிரான தடை, நாட்டிற்கு எதிரானதல்ல என்பீர்களா ? இல்லை என்றால் உங்களின் நிலைப்பாடுதான் என்ன ?

3. தென் ஆபிரிக்க மக்கள் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள் அல்ல. இருந்தும் நிறவெறி பிடித்த அந்த நாட்டோடு இந்திய அணியை அந்த காலகட்டத்தில் விளையாட அனுமதிக்கவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியாதா ?

4. தமிழகத்தில் பல பிரச்சனைகள் இருக்கையில் ஈழப் பிரச்னையை இங்கு பேச வேண்டியதில்லை என்ற கண்ணோட்டத்தில் உங்களது கமெண்ட் பார்த்தேன். அப்படியானால் நீங்கள் இதுவரை எழுதியது தமிழகத்தைப் பற்றி மட்டும் தானா ? வேறு நாடுகளைப் பற்றி எழுதியதே இல்லையா ? சூழலுக்கேற்ற வேடம் ஏன் ?

5. மற்ற இலங்கை வீரகளுக்கான தடையைப் பற்றி வாய்திறக்காத நீங்கள், சன் ரைசர் சங்ககராவைப் பற்றிமட்டும் பேசுவது ஏன் ? (அவரின் அப்பா நல்லவர் என்பதாலா ? இல்லை சன் ரைசர் என்பதாலா ?). இதில் பெருத்த உள்நோக்கம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பெருமளவில் புதைந்து கிடக்கின்றன.

6. சில விதமான தடைகள் மூலமே, ஒரு நாட்டிற்கு அழுத்தம் கொடுத்து சர்வதேச அரங்கம் அடிபணிய வைக்க முடியும் என்பதை பாமரனும் அறிவான், இனபடுகொலை செய்த அரசை அடிபணியவைக்க இது துளியேனும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியாதா ?

7. ஈழத்தமிழர்களுக்காக போராடும் தமிழர்கள்தான் அவர்களுக்கு அசல் எதிரி என்றால், அவர்களுக்காக போராடாத நண்பர் நீங்கள் என்னத்தை வாரி வாரி நல்லது செய்துவிட்டீர்கள் ? அவர்களுக்கு எதிராக எழுதுவதா ? இல்லை உணர்வுகளை கொச்சைப் படுத்துவதா ?

8. ஈழத்தில் என்ன வேண்டும் என்பதை ஈழத்தமிழர்களே முடிவு செய்ய வேண்டும் தமிழர்கள் அல்ல என்று சொல்லும் நீங்கள், எத்தனை ஈழத்தமிழர்களின் கருத்துக்களை கேட்டிருக்கிறீர்கள் ? வெளிநாடுகளில் தனி ஈழம் வேண்டும் என்று போராடும் ஈழத்தமிழர்கள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ? இல்லை அவர்களின் வாசகம் உங்களுக்கு புரியவில்லையா ?

9. இலங்கையில் எங்களுக்கு சாப்பிட மட்டுமே வாய்திறக்க அனுமதி உண்டு எனச் சொல்லும் ஈழத்தமிழர்களை உங்களுக்கு தெரியுமா ? எங்களுக்குத் தெரியும். வெட்டி வசனம் பேசுவதை விட்டுவிட்டு அவர்களோடு பேசிப்பாருங்கள், உங்களுக்கும் தெரியும்.

முறைப்படி இந்தியா முழுவதும் இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க போராடி இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தடை கோரியது தமிழர்கள் செய்த தவறு என்று இப்போது எனக்குப்படுகிறது.

பல ஆண்டுகளாக எழுதும் நீங்கள், சற்று அடிப்படையை ஆராய்ந்து எழுதுங்கள். அரசியல் விமர்சகர் என்றால் எதை வேண்டுமானாலும் எழுதலாம், இஷ்டத்திற்கு விமர்சிக்கலாம் என்பதல்ல. இனியேனும் உங்கள் உள்நோக்கத்தை ஓரம் கட்டிவிட்டு உண்மையை எழுத முயற்சி செய்யுங்கள்.

நன்றி ! 

அன்புடன்,
அகல் 

Monday, 8 April 2013

ஈழமும் பா.விஜயின் சுயநலவாதமும்

ஈழம்...


இது வெறும் வார்த்தையல்ல. எலும்புக் கூடுகளும், மண்டை ஓடுகளும் இடைவெளிகள் இன்றி நிறைந்து, மயானமாய் மாறிப்போன மாகாணம். விளைந்த பயிர்களிலும் ரத்தக்கறை வீசும் குட்டி தேசம். உலக வரைபடத்தில் சாத்தான் கைகளில் சிக்கித் தவிக்கும் புண்ணிய பூமிகளுள் ஒன்று. ஊமையைப் போன ஒரு இனத்தின் ஒட்டுமொத்த உணர்வு.

இப்படியான இனத்திற்கு விடுதலைவேண்டி, ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி மாணவர்கள் வரை அந்த உணர்வின் ஆழத்தையும், விவரிக்க இயலாத வலியையும் உள்ளூர புரிந்துகொண்டு, தன்னலமற்ற போராட்டத்தை அரசியல் சாயங்கள் பூசப்படமால் தமிழகத்தில் முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் இத்தகைய எழுச்சியை இந்திய வரலாறு ஒரு சில முறையே கண்டிருக்கும்.

மாணவர்களோடு சேர்ந்து, ஓவியம், இசை, கவிதைகளின் வாயிலாக இந்த விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாகவும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும் பலர் பங்களித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியான பங்களிப்பில் பாடலாசிரியர் பா.விஜயும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆம், ஆட்டோகிராப் படத்தில் வரும் "ஒவ்வொரு பூக்களுமே" என்ற உணர்ச்சி மயமான பாடலை எழுதி தேசிய விருதை தட்டிச் சென்ற கவிதை நாயகன். அந்த பாடலுக்குப் பிறகு அவர் எழுதிய உணர்ச்சிமிகு கவிதை தான் "ரத்தக் காட்டேரி ராஜபக்சே". அருமையான கவிதை. ராஜபக்சே, கொத்தயா போன்ற தமிழின எதிரிகளை\ ஒரு தமிழனாக, ஒரு மனிதனாக கொலை வெறியோடு எழுதி தனது கணீர் குரலில் சாடி இருப்பார்.

அந்த கவிதையின் காணொளி இங்கே



சோனியா காந்தி முதல் புலிகளின் துரோகி கருணா வரை, துரோகம் செய்த அனைவரையும் கோபத்தின் உச்சத்திற்கே சென்று கூர்மையான வார்த்தைகளை அம்பாய்த் தொடுத்து குறி வைத்து தாக்கி இருப்பார். இந்தக் கவிதை ஒரு இனத்தின் ஒட்டுமொத்த கோபமாக ஒலித்தது. கண்களில் நீரை வரவழைத்தது. கவிஞர்கள் பெரும்பாலும் நேரடியான கெட்டவார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் ஆதங்கத்தில் அதையும் பயன்படுத்தி இருப்பார் பா.விஜய்.

இது ஒரு உணர்ச்சி பூர்வமான வரிகளின் தொகுப்பு. உறங்கிக் கிடந்த தமிழர்களின் உணர்வுகளை கட்டாயம் தட்டி எழுப்பியிருக்கும். இக்கவிதையை படித்துவிட்டு முகநூல் போன்ற வலை சமூக தளங்களில் ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் பகிர்ந்து கொண்டனர். நானும் படித்து பகிர்ந்துவிட்டு, சில நிமிடங்கள் கழித்து சிந்தித்தேன்.

அது உணர்ச்சி மிகு உண்மை வரிகள் தான். ஆனால் நமது அறிவை மழுங்கச் செய்யும் படியாக எழுதப்பட்டிருக்கிறது. ஆம், நமது தமிழ் கவிஞர்களால் நாம் ரசிக்கும் வரிகள் மட்டுமல்ல, உணர்ச்சிமிக்க வரிகளை எழுதி நமது அறிவின் மீது ஏறி அமர்ந்துகொண்டு சிந்திக்க விடாமல் சாவரி செய்யவும் முடியும் என்பதற்கு ஒரு அத்தாச்சியாக அவரது கவிதை எனக்கு தெரிந்தது.

அப்படி என்ன அந்த கவிதையில் சொல்லப்பட்டிருக்கிறது ?. சொல்லப் படவேண்டியது சொல்லப் படவில்லை என்பதே என் வேதனை. இந்த கட்டுரை முளைக்கக் காரணம்.

நான் முன்பே கூறியதுபோல், சோனியா காந்தி முதல் புலிகளின் துரோகி கருணா வரை அவர்களின் துரோகத்தை சுட்டிக்காட்டிய திரு பா.விஜய் அவர்களுக்கு, தமிழினத்தலைவர் கலைஞர் மட்டும் கண்ணில் படாமல் போனது மிகவும் வியப்பாகவே இருக்கிறது. தேடித்தேடிப் பார்த்தும் அவரைப் பற்றி ஒரு வார்த்தையேனும் அந்தக் கவிதையில் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஈழத்தமிழர்களின் அழிவிற்கு ஈழத்தமிழர்கள் செய்த துரோகத்தைவிட, இந்திய அரசு செய்த துரோகத்தைவிட, உலக நாடுகள் செய்த துரோகத்தைவிட, இந்த தமிழினத் தலைவர் செய்த துரோகம்தான் கொடியது என்பதை நேற்று பால்க்குடி மறந்த பிள்ளையும் அறிந்திருக்கும். ஆனால் யார் யாரையோ சாடிய பா.விஜய், தமிழினத் தலைவரை மட்டும் கவிதையில் இருந்து தப்பிக்க வைத்துவிட்டார். இதற்கு என்ன காரணம் ?

கலைஞரின் வசனத்தில் இன்னுமொரு "இளைஞன்" படத்தில் கதாநாயகனாக முடியாது என்ற பயமா ? அரசியல் மிரட்டல் வரும் என்ற அச்சமா ? கலைஞர் மீது கொண்ட காதலா ? பா.விஜய் அமைதியாக இருந்துவிட்டாரே என்று தமிழர்கள் சொல்லிவிடுவார்கள் என்ற ஆதங்கமா ? கலைஞர் கையால் "வித்தகக் கவிஞர்" பட்டம் போல் இன்னொரு பட்டம் கிடைக்காது என்ற சுயநலவாதமா ? எது தடுத்தது ?

சுயநலமின்றி நடுநிலையாக எழுத இயலாத நீங்கள் கவிதை எழுதவில்லை என்று எந்த ஈழத்தமிழன் அழுதான் ? ஒரு பானை பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் பால் முழுதும் விஷமாகும்போது, தமிழினத்தின் துரோகியை மறைக்க முயலும் நீங்களும் துரோகி இல்லையா ? சுயநலவாதி இல்லையா ? சோற்றில் முழுப் பூசணிக்காயை மட்டுமல்ல, துரோகிகளையும் மறைக்க இயலாது என்பது பா.விஜய்க்கு தெரியாதா ?

பா.விஜயை தனது கலையுலக வாரிசு என்று அறிவித்தவர் காப்பியக் கவிஞர் வாலி. வாலி கூட கலைஞரின் பிரியர் தான் என்றாலும், ஈழத்தைப் பற்றி அவர் எழுதிய கவிதையில், தமிழகம் செய்த துரோகத்தை இவ்வாறு இலைமறைக் காயாய் சொல்லி இருப்பார்.

"அங்கே முள் வேலிக்குள் கிடக்கிறான் ஈழத்தமிழன்
இங்கு கள் வேலிக்குள் கிடக்கிறான் சோழத்தமிழன்
இது இமாலயப் பிழை
இல்லை இதற்கிணையாய் இங்கே இன்னொரு பிழை
அட அச்சுப் பிழையானால் அதை திருத்தலாம்
இது அச்சப்பிலை. யார் இதை திருத்துவது ?"


அவரின் சிஷ்யன், தமிழகத்தை மட்டும் விட்டு விட்டு எங்கொங்கோ ஓடி துரோகத்தை தேடிப்பிடித்து ஈழத்தமிழர் மீது நீங்கள் காட்டிய பரிவு வேதனையளிக்கிறது. பல கவிஞர்கள் நடு நிலை வகிக்க முடியாது என்கிற காரணத்தினாலோ என்னவோ ஈழத்தைப் பற்றி எதையும் எழுதாமல் அமைதியாக இருக்கிறார்கள். உண்மையை மறைப்பதற்கு பதிலாக அவ்வாறு இருந்து விடுவதே உத்தமம்.

பா.விஜய் அவர்களே, கலைஞர் ஒரு தமிழ் இலக்கிய மாமேதை என்பதை உங்களைப் போல் நாங்களும் ஒத்துக் கொள்கிறோம். அதேபோல், அவர் தமிழ் இனத்தின் துரோகி என்பதை சுயநலமில்லாமல் எங்களைப் போல் நீங்களும் ஒத்துக் கொள்ள முயற்சியுங்கள். இல்லை என்றால், மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல், உங்கள் சுயநலவாதக் கவிதைகளை நீங்களே எழுதி படித்துக்கொள்ளுங்கள். அதே வேளையில், அதை வெளியிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தமிழர்களின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு பிரபலத்தை விமர்சித்து பெயர் தேடிக்கொள்ளும் நோக்கில் இதை எழுதியதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். பிரபலங்கள் உண்மையாக எழுதுவதாய் பார்க்கப்படும் எழுத்துக்களில் உள்ள உண்மை நிலையை சுட்டிக் காட்டும் படியாகவே எழுதியுள்ளேன்.

நன்றி !

அன்புடன்,
அகல்

Wednesday, 3 April 2013

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல, தீவிரவாதிகள் !

வணக்கம் !

இந்திய இறையாண்மைக்கும், இந்திய நாட்டு நலனுக்கும் எதிராக செயல்படுபவர்கள் தமிழ் மக்கள் என்ற தவறான பிம்பத்தை வட இந்திய ஊடகங்கள் தொடர்ந்து மக்களிடையே புகுத்திக் கொண்டு வரும் நிலையில், தமிழக காங்கிரசைச் சார்ந்த சில பயங்கரவாதிகள் ஈழப் பிரச்சனை தமிழக மக்களிடையே ஒரு விஸ்பரூபம் அடைந்ததை தாங்கிக் கொள்ள இயலாமல், மாணவர்களை தாக்குவது, நடுநிலை ஊடகங்களை மிரட்டுவது போன்ற பல அத்துமீறல் நிறைந்த அடக்குமுறையை நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

மீனவர் பிரச்சனை, கூடங்குளம் பிரச்சனை. ஈழத்தமிழர்களுக்கான வாழ்வாதார பிரச்சனை என அனைத்திலும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் மத்திய அரசு, தமிழர்கள் இந்தியர்கள் அல்ல எனும் போக்கை கடைபிடித்து மாற்றான் தாய் மனப்பான்மையை காட்டுவதை யாவரும் அறிந்ததே. இந்த நிலைப்பாட்டையே ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் கொண்டுள்ளது என்பதே இன்றைய கால எதார்த்த நிலவரம். பெரும்பாலும் அதை வாய்திறந்து சொல்லாமல் செயலில் காட்டுவார்கள். ஆனால் வாய்திறந்தே ஒருவர் சொல்லிவிட்டார். அதைப்பற்றி சற்று ஆராய்வோம்.

சென்ற சனிக்கிழமை (30.3.13) அன்று புதியதலைமுறை தொலைக்கட்சியில் ஒளிபரப்பான அக்னிப் பரிச்சை நிகழ்ச்சியில் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு, தனி ஈழத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள், காங்கிரசின் நிலைப்பாடுபற்றி பேட்டியளித்தார். அதில் தமிழர்களை இந்தியர்கள் அல்ல என்றும், தீவிரவாதிகள் என்றும் மறைமுகமாக சொல்லியதோடு, ஈழத்தைப் பற்றிய தனது அரை வேக்கட்டுத்து தனத்தையும் பதிவு செய்தார். காங்கிரசாருக்கு இது புதிதல்ல என்றாலும் அந்த நிகழ்வுகளைப் பதியாமல் விட எனக்கு மனம் வரவில்லை.

அவர் பேசிய அரை வேக்காட்டு வாசகங்களையும் அதன் மீதான எனது பார்வையையும் இங்கு பதிவிடுகிறேன்.



1. ஈழத்தமிழர்களை காப்பதே காங்கிரசாரின் தலையாய கடமை என்பது போல் பேசிய அழகிரி, பேட்டி ஆரம்பித்தது முதல் முடியும் வரை இலங்கையில் வாழும் கோடிக்கான தமிழர்களை பாதுகாப்போம் வாழ்வுரிமைக்காகவும் தொடந்து போராடுவோம் என்று குறைந்தது நான்கு முறை கூக்குரல் இட்டார்.

இந்த வாசகம், அழகிரிக்கு ஈழத்தின் வரலாறும் அங்கு வாழும் தமிழ் மக்களின் எண்ணிக்கையும், அவர்களின் வாழ்வியல் நிலையம் எந்த அளவிற்கு தெரியும் என்ற அடி முட்டாள் தனத்தையே காட்டுகிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், கொழும்பு போன்ற தெற்குப்பகுதி, முஸ்லிம் தமிழர்கள், மலைவாழ் தமிழர்கள் என ஒட்டு மொத்தமாக கணக்கில் கொண்டாலும், 45-50 லட்சம் தமிழர்களுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. ஏன் நாடு கடந்த தமிழீழ மக்களை கணக்கில் கொண்டாலும், ஒரு கோடியை எட்டுவதே மிக அரிது என்பதே உண்மை.

2. இப்போது தமிழகத்தில் உருப் பெற்றிருக்கும் தனித்தமிழீழ நிலைப்பாடு தமிழர்களின் நிலைப்பாடே தவிர ஈழத்தமிழர்கள் தனித் தமிழீழம் கேட்கவில்லை என்றதோடு மட்டுமல்லாமல், நாடு கடந்த தமிழீழ மக்கள் வெளிநாடுகள் தரும் உதவித் தொகையோடு நன்றாக வாழ்கிறார்கள் அவர்களுக்கு தனி ஈழம் என்ற எண்ணமோ தாய்நாடு திரும்பவேண்டும் என்ற எண்ணமோ இல்லை என்னும் நோக்கில் மிகவும் கீத்தரமாக ஈழத்தமிழர்களை சித்தரித்தார்.

ஆரம்பம் முதல் புலிகள் தனித் தமிழீழம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், தமிழரின் சம உரிமை என்று போராடிய தந்தை செல்வாவே ஒரு காலகட்டத்தில் தனிதமிழ் ஈழம் என்ற நிலைபாட்டிற்கு வந்தார் என்பதை உலகம் அறியும். அதோடு மட்டுமல்லாமல், எந்த கருத்துக் கணிப்பின் அடிப்படையில் வாய்க்கு வந்தபடி இவர் உளறுகிறார் என்பது தெரியவில்லை. நாடு கடந்த தமிழீழ மக்களை கீழ்த்தரமாக சித்தரித்த இவரை வன்மையாக கண்டிக்கிறேன்.

3. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளை தீர்மானிக்கும்போது பலவற்றை கணக்கில் கொள்ளவேண்டும் என்று தொடர்ந்த அழகிரி, பாகிஸ்தானில் இந்தியர்கள் வாழ்கிறார்கள், பங்களாதேசத்தில் இந்தியர்கள் வாழ்கிறார்கள். சிங்கப்பூர், மலேசியாவில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று அவரது நிலைப்பாட்டை பதிவு செய்தார்.

நாம் சாதாரமாக பார்த்தால், இந்த வாசகத்தில் பெரிதாக ஏதும் தெரியாது. ஆனால் சற்று கூர்ந்து நோக்கினால், பாகிஸ்தானில், பங்களாதேசத்தில் வாழ்வோர் அனைவரும் இந்தியர் என்றும், சிங்கப்பூர் மலேசியாவில் வாழ்வோர் தமிழர் என்றும் கூறினால், தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று தானே பொருள் ? சிங்கப்பூர், மலேசியாவில் வாழ்வோரை தமிழர் என்று குறிப்பிடுவோர், மற்ற நாடுகளில் வாழ்வோரை ஏன் அவர்களின் மாநிலத்தைச் சொல்லி குறிப்பிடவில்லை ?

4. காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னையைப் பற்றி பேசும்போது, காவிரிப் பிரச்சனை வந்தால் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். முல்லைப் பெரியாறு பிரச்சனை வந்தால் கேரளா டீக்கடை நாயர்கள் தமிழக தீவிரவாதிகளால் தாக்கப்படுகிறார்கள் என்று குறிபிட்டார்.

தமிழ்நாட்டில், கர்நாடக மக்களோ, கேரளா மக்களோ தாக்கப்படுவது தவறு தான். நானும் அதை கண்டிக்கிறேன். ஆனால் இந்த அறிவு ஜீவி சொல்வதை கவனித்தீர்களானால், கர்நாடகாவில் தமிழனை தாக்குவோர், சாதாரண மனிதர் என்றும், தமிழகத்தில் மலையாளிகளைத் தாக்குவோர் தீவிரவாதி என்றும் முத்திரை குத்தி இருப்பார். மாணவர்களைத் தாக்குவது, ஊடகங்களை மிரட்டுவது என இந்த காங்கிரஸ் அயோக்கியர்கள் செய்யும் தீவிரவாதம் நாடறியும் என்பதை இந்த அறிவிலி அறியவில்லை போலும்.

இது மட்டுமல்லாது, 2009 போருக்குப் முன், இலங்கை அரசிற்கு எதிராக போரிட்ட புலிகள், போரில் தொடர்ந்து வெற்றி பெற்றதால் தமிழர்கள் சந்தோசப்பட்டர்கள். இப்போது தோற்றதால் கண்ணீர்விட்டு பெரிதாக்குகிறார்கள் என்ற லட்ச கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களை மறந்துவிட்டு தனது கேவலாமான எண்ணத்தைப் பதிவு செய்தார்.

எனது நேரத்தை செலவு செய்து, கீழ்த்தரமான காங்கிரஸ் அரசியல் வாதிகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி அவர்களை விமர்சிப்பதில் எனக்கும் விருப்பமில்லை தான். ஆனால் ஈழத் தமிழர்களை கீழ்த்தரமாகவும், தமிழர்களை தீவிரவாதிகள், இந்தியர்கள் அல்ல என்ற பார்வையில் பேசியதையும் சுட்டிக் காட்டாமல் விட மனதில்லை. அரசியல் மற்றும் சுயநலத்திற்காக, தமிழ் மக்களைப் பழிவாங்கும், அப்பாவி மக்களை அழித்துக் கொண்டிருக்கும் இந்த அயோக்கியர்களை ஒழிக்கும்வரை தமிழர்களுக்கு  விடிவு பிறக்காது.


காணொளி:

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=MIeTx0W-dBU

நன்றி !

அன்புடன்,
அகல்

Monday, 11 March 2013

நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் !

நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள். கட்டாயம் படிக்க வேண்டுகிறேன் !

ஈழப்பிரச்சனை தொடர்பான பதிவுகள் மற்றும் ஏனைய சமூகம் அவலங்களைப் பற்றிய பதிவுகளை உண்மையான உணர்வுகளோடு பகிர்ந்துகொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் முதலில் எனது நன்றிகள் !

எவன் எவனோ சம்பாதிக்கும் திரைப்படங்கள் சபலத்தை உண்டாக்கும் நடிகையின் புகைப்படங்கள் என எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் நம்மில் பலர், பெரும்பாலும் ஏனோ சமூக பிரச்சனைகள் சம்மந்தமான பதிவுகளை பகிர்வதும் இல்லை அதை எதிர்த்து குரல் கொடுப்பதில்லை. கண்டும் காணாமலும் ஒதுங்கிக் கொள்கிறோம். நமக்கு வரும்வரை அந்த பிரச்சனையின் ஆழமும், அதன் பின்னணியில் ஆயிரக்கணக்கில் மக்கள்படும் துயரமும் அதன் வலியும் நம்மில் பலருக்குத் தெரிவதுமில்லை. அப்படியாகவே பெரும்பாலோனோர் இந்த ஈழப் பிரச்சனையையும் பார்கிறார்கள்.

ஈழம் சார்ந்த தமிழ்ப்பதிவுகளை என் முகநூளில் பகிரையில், நான் ஒரு தமிழ் இனவெறி பிடித்தவன் என்ற வகையில் எனது நண்பர்கள் வட்டாரத்திலேயே பார்த்ததை கண்கூடாக கவனித்திருக்கிறேன். சிலர் சொன்னார்கள் பலர் சொல்லவில்லை. தாய்மொழியை மறப்பதும் தாயை மறப்பதும் ஒன்றுதான் ஆகையால் அவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஏன் இந்தப் பக்கத்திலேயே நான் எழுதும் காதல் கவிதைகள் பகிரப்படும் அளவிற்கு சமூக அவலங்களைச் சொல்லும் கவிதைகள், கட்டுரைகள் பகிரப்படுவதில்லை.

நமது தங்கையை, மனைவியை ஒருவன் கேலி செய்தாலே பொறுத்துக்கொள்ள இயலாத நம்மில் பலர், அங்கே மிருகங்கள்போல் கற்பழிக்கப்பட்டு, இறந்த உடல்களில் மார்பை அறுத்து சூறையாடும் இனவெறி மனிதர்களை தட்டிகேட்க மனமற்றவர்களாக இருப்பது வேதைனையைத் தருகிறது. நாம் ஏன் இப்படி இருக்கிறோம், சுயநலவாதமா ? இதை எப்படி வரையறுப்பது ? இதைப் பார்க்கையில், மனதிற்குள் ஆயிரம் ஆயுதப்போராட்டம்.

எனது அறிவுக்கு எட்டியவரை, என்று ஒரு மொழியும் மொழி சார்ந்த மக்களும் நசுக்கப்படுகிறார்களோ அன்றிலிருந்தே அந்த மக்களின் அடையாளங்கள், பண்பாடு, பழக்கவழக்கங்கள் அழிவுக்கு உட்படுத்தப்படுகிறது. அங்கே கற்பழித்து கொல்லப்பட்டது தமிழர்கள் அல்ல, தமிழ்.

இவ்வாறு கருவருக்கப்படும் ஈழத் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி தேவை என்ற நோக்கில் போராடும் மாணவர்களை ஆதரிக்க, களத்திற்கு செல்ல இயலாவிட்டாலும், குறைந்தபட்சம் அது சார்பான பதிவுகளை பகிர்ந்துகொள்ளுங்கள். அது இன்னும் பத்துபேருக்கு விழிப்புணர்வையாவது ஏற்படுத்தும். இப்போது களத்தில் போராடும் மாணவர்கள் அவர்களுக்காக போராடவில்லை.

மாறாக அவர்களின் போராட்டம் நமக்கானது, நமது இனத்திற்கானது, மொழிக்கானது, தொப்புள்கொடி உறவுகளுக்கானது, வருங்கால சந்ததிக்களுக்கானது என்பதை தயவு செய்து மனதில் வையுங்கள். அப்படி நாம் செய்யத்தவறினால், நமது சந்ததிகளும் வரலாறும் நம்மை இழிவாகப் பேசலாம்.

எதையும் அறியாத எறும்புதானே என்று நசுகிப்பாருங்கள். அது சாகும்வரை எதிர்த்துப் போராடியே சாகும். நாம் அன்பு, பாசம், கோபம், இறக்கம், பற்று என எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கிய மனிதர்கள். நம்மால் இயன்றதை இயன்றபோது செய்யாமல், நல்லது வேண்டி கடவுளின் சன்னதியில் காத்துக்கிடப்பதில் புண்ணியமில்லை.

மாணவர் சக்தி மகத்தானது. அது ஒரு முறை ஒடுக்கப்பட்டு மறுமுறை எழுந்துள்ளது. மீண்டும் நசுக்க இடம் தராதீர்கள். இது நமக்கான போராட்டம். ஈழ மக்களின் நீதிக்கான போராட்டம், அவர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம். இந்த போராட்டத்திற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆதரவு திரட்டுங்கள்.

நன்றி !

அன்புடன்,
அகல்


Monday, 24 December 2012

சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள்

நண்பர்களே வணக்கம். இங்கே நான் எழுதியிருப்பது பெரியரைப்பற்றியல்ல. சில உண்மைச் சம்பவங்களைப்பற்றி .!


சமூக சீர்திருத்தம் செய்தல், சாதிமுறைப் பிரிவினைகளை முற்றிலுமாக ஒழித்தல், மூட நம்பிக்கைகளை களைதல், பெண்விடுதலைக்காக பாடுபடுதல் என்ற மிகபெரும் கொள்கைகளோடு வாழ்ந்து, மூட நம்பிக்கைகளின் மேல் மிகப்பெரும் புரட்சியை உலகிற்கு அறிமுகம் செய்த வைக்கம் வீரர் ஐயா ஈ. வெ. இராமசாமி அவர்களின் நினைவு நாளான இன்று (24/12/12) "சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்" என்ற தலைப்பில் நான் இந்த கட்டுரை எழுதுவது சிலருக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். பலர் இந்த தலைப்பை ஆதரிக்கவும் செய்யலாம். தலைப்பிற்குள் போகும்முன் முதலில் ஐயா ஈ.வெ.ரா மற்றும் புரட்சித்தலைவர் எம். ஜி . ராமச்சந்திரன் அவர்களுக்கு எனது நினைவு அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.



எதற்காக இந்த பதிவு


மதுரை மாவட்டம் சின்னப்பட்டியைச் சேர்ந்த சிதம்பரம் என்ற முடிதிருத்தும் முதியவர், தனது முதுமையின் காரணமாக அந்த தொழிலை செய்ய இயலாததால் அந்த ஊர் தலைவர் மற்றும் சிலரால் ஊரைவிட்டே ஒதுக்கி வைத்த செய்தியை "புதியதலைமுறை" தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. அதோடு நிற்காமல் சுமார் பத்துநாட்களுக்கு முன் அதைப்பற்றிய விவாதத்தை "நேர்பட பேசு" என்ற அவர்களின் நிகழ்ச்சியில் ஒரு விவாதமும் நடத்தினர்.
அதற்கு சிறப்பு விருந்தினராக கோயம்பத்தூர் சாதிச் சங்கத்தைச்(கட்சி) சேர்ந்த ஒருவர் கலந்துகொண்டார்.

ஆரம்பம் முதல் இறுதிவரை மேற்போக்காக சாதிக் கலவரம் கூடாது என்று அவர் கூறினாலும், மேல் சாதிக் காரர்கள் எந்த தவறையும் செய்வதில்லை, கீழ் சாதிக்காரர்களை யாரும் ஒடுக்குவதுமில்லை என்று அவரது வார்த்தைகள் யாவும் சாதியை ஆதரிப்பதாகவே இருந்தது. இதோடு நிறுத்தி இருந்தால் இந்த பதிவை நான் எழுதுவதற்கான தேவையும் வந்திருக்காது என நினைக்கிறேன்.

ஆனால் அவர் ஒரு வரியை மேற்கோள் கட்டினார் "எந்த கிராமத்திலாவது ஒரு கீழ் சாதிக்காரன் ஒடுக்கப்படுகிறான் என்று யாரையாவது சொல்லச் சொல்லுங்கள், ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்". யாரும் அப்படி செய்வதில்லை என அப்பட்டமாக தனது வாதத்தை வைத்தார். எனது சொந்த ஊர் ஒரு சிறு கிராமம் என்பதால், ஏசி அறையில் அமர்ந்து கொண்டு வெறும் வாய் பேசும் இது போன்ற சாதியவாதிகளுக்கு எனது கிராமத்தில் நடந்த சில நிகழ்வுகளை மேற்கோள்காட்டி பதிலடி தரவே இந்த பதிவை எழுதுகிறேன்.


அப்படி என்ன நடந்தது ..?


எனது சொந்த ஊர் திருச்சி மாவட்டத்துல உள்ள ஒரு கிராமம். நான் பொறியியல் முடித்துவிட்டு கடைசி அஞ்சு வருசமா வெளியூர்ல வேல செய்யறதால அப்பப்ப வீட்டுக்கு போறப்ப ஊர்ல என்ன நடந்ததுன்னு என் அம்மாட்ட கேட்டு தெரிஞ்சுக்குவேன். அதில சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


எங்க ஊர்ல ஒரு சில கீழ்சாதி குடும்பங்கள் இருந்தது(கீழ்சாதி என்று சொல்லப்படுகின்ற) அதுல சில குடும்பங்கள் காலப்போக்கில் வெளியூர்ல போயி நிரந்தரமாக தங்கிட்டாங்க. ஒரு குடும்பம் மட்டும் இருந்தது. அதுல ஒரு பையன். ரொம்ப நல்லா படிப்பான். அவனுக்கு என்ன கெட்ட காலமோ, ஒரு பொண்ணோட பழக்கம். அந்த பெண் மேல்சாதி (மேல்சாதி என்று சொல்லப்படுகின்ற) பழக்கத்தோட இருந்தா பரவாயில்ல. ரெண்டு பெரும் எல்லை மீறிட்டாங்க.

ஆனா இந்த தவறுக்கு ஏதோ அந்த பையன் மட்டும் தான் காரணம் என்கிற முறையில், அவனை அந்த பெண்ணின் சாதிக்காரர்கள் சேர்ந்து அடி பிரித்துவிட்டனர். ஊரை விட்டு விரட்டினர். அந்த பையன் குடுப்பம் காவல்நிலையம் போனதால், ஒருவழியாக ஏதோ செய்து சரிகட்டி இந்த விவகாரம் முற்றுப்பெற்றது. இப்ப அந்த குடும்பம் பக்கத்து ஊர்ல இருகாங்க. 


சமீபத்தில்,  அதே கிராமத்துல நாங்க ஒரு வீடு கட்டி பால் காச்சினோம். அதற்கு அந்த பையனோட சித்தப்பா வந்திருந்தார். சாப்ட்டு முடிஞ்சு வாறவங்களுக்கு  ஒரு தட்டில் 
வெத்தள பாக்கு வைத்து நான் கொடுத்துக்கொண்டு இருந்தேன். அப்போது அவர் வந்தார். அவரிடமும் தட்டை நீட்டினேன். அவர் "இல்ல தம்பி நீங்களே எடுத்து கொண்டுங்கனு" சொன்னேர். இல்ல நீங்களே எடுதுக்கங்கனு  சொன்னேன். நீங்க பண்றது உங்களுக்கு வேணும்னா சரியா இருக்கலாம். இங்க யாரும் ஏத்துக்க மாட்டங்க என்றார். மனம் வருந்தினேன்.


அதேபோல் ஒருமுறை எங்க ஊர்ல இருந்து வெளியூர் போன மேல்சாதி பையன் ஒருத்தன், கீழ் சாதிப்பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்தான். அவன்ட யாரும் பேசல. அவங்க வீட்டுக்கும் யாரும் போறதுல்ல. இதனால அவன் மறுபடியும் மனைவிய கூட்டிகிட்டு வெளியூர் போயிட்டான். அவனோட அப்பா இறந்ததுக்கு அவன் வந்தான். கிராமத்து கலாச்சாரம் தெரிந்தவங்களுக்கு ஒன்னு தெரிஞ்சிருக்கும். இறந்தவங்க வீட்டின் முன், அந்த வீட்டு ஆண்கள்/பங்காளிகள் நின்று வருவோருடன் கை தழுவுதல் வழக்கம். ஆனா சொந்த அப்பா இறந்ததர்க்கே அவனை யாரும் நிற்க விடல. அத்தனை சாதி வெறி. இப்போது அவன் ஊருக்கே வருவதில்லை.

இப்படி மேல்சாதி ஆண்கள் கீழ்சாதி பொண்ண திருமணம்செஞ்சா, அதிகபட்சம் நான் மேல சொன்ன மாதிரி நடக்கும். ஆனா இதையே ஒரு மேல்சாதி பொண்ணு செஞ்சா அவ்ளோ தான். என்ன நடக்கும் தெரியுமா .? அவள எப்படியும் கண்டுபிடிச்சு கட்டின தாலிய பிடிகிட்டு மேல்சாதி பையனுக்கே கல்யாணம் பண்ணி வைப்பாங்க (இதுமாதிரி நடக்குறப்ப, ரொம்பநாளா பொண்ணே கெடைக்காத ஒருத்தனுக்கு எப்படியும் கல்யாணம் ஆகிடும்). அதே போல் 
எனது பள்ளி பருவத்தில், கீழ் சாதி மனிதர்களுக்காக தனியா தேனீர் கடைகளில் தேநீர் தர அலுமினிய பாத்திரம் தந்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.


அதோடு கிராமத்திற்குள் கீழ்சாதி மக்கள் வரும்போது தங்களின் காலணிகளை கலட்டி கையில் பிடித்துக்கொண்டு வெறும் காலுடன் வருவது வழக்கம். நான் பொறியியல் முடிக்கும் வரை இதை அறிவேன். அதற்கு பிறகு வேலைக்காக வெளியூர் வந்ததால் இந்த நடைமுறை இன்னும் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.   


எங்க கிராமமும் பக்கத்து கிராமமும் சேர்ந்து மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழா நடத்துவாங்க. கோவில் இருப்பது பக்கத்து ஊர்ல. அந்த கோவில் திருவிழா மூணு வருசமா நடக்கல. காரணம் என்ன தெரியுமா .? கோவில் பூசாரியோட பொண்ணு, மேலே சொன்ன ஒரு சாதிக்கார பையன கல்யாணம் பண்ணிகிட்டா. இதுக்கெல்லாம் கோவில் திருவிழாவ நிறுத்துவாங்கலானு நீங்க கேக்கலாம். ஆனா நிறுத்தினாங்க. சில பஞ்சாயத்துக்கப்பறம் திருவிழா நடந்தது.

இந்த உதாரணங்களை வைத்து, எனது ஊர் ஒரு அடிமட்ட கிராமம் இதைவிட கேவலமா யாரும் செய்யமாட்டங்கனு முடிவுக்கு வரவேண்டாம். ஏன்னா இதவிட பின்தங்கிய மோசமான நிகழ்வுகள் தமிழகத்தின் பல கிராமங்களில் நடந்துகொண்டு தான் இருக்கிறது. சாதிகளின் பேரில். இவற்றை வைத்து பல சாதிக்கட்சிகளும் சாதிச்சங்கங்களும் குளிர் காய்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எனக்கு ஞாபகத்தில் இருந்த சில நிகழ்வுகளை மட்டுமே இங்கே மேற்கோள் காட்டினேன்.

இத்தனை நிகழ்வுகளை நான் கூறியதால், இவன் கீழ்சாதிக்காரனாக இருப்பான் அதனால் தான் இத்தனை குறைகளைக் கூறுகிறான் என்று எனக்கு பட்டம் கொடுக்கவும் ஒரு கூட்டம் இருக்கும். ஆனால், இங்கே மேல்சாதி என்றுயாரைச் சுட்டிக் காட்டினேனோ அதே சமூகத்தில் இருந்து வந்தவன்தான் நான். "புதியதலைமுறை" தொலைக்கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த பெரியவரின் சமூகத்தைச் சேர்ந்தவன் (மனிதம் தவிர எதிலும் நம்பிக்கை இல்லாத, சாதிய முறைகளில் முற்றிலும் உடன்பாடு கொள்ளாத இளைஞன். ஆனால் சில உண்மைகளை மேற்கோள் காட்டவே இங்கு அதைக் குறிப்பிடும் படியாக ஆனது. மன்னிக்கவும்).

நான் மேலே சொன்னதுபோல், தொலைக்கட்சியில் வாதம் செய்த அந்த மேல்சாதியைச் சேர்ந்தவர், ஒரு கிராமத்தில் நடந்த ஒரே ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டச்சொன்னர். நான் பல நிகழ்வுகளை மேற்கோள் காட்டினேன்.

இது சாதி கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். 
நீங்கள் சொகுசாக வாழ "சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்" என்ற எண்ணத்தோடு தொலைக்கட்சியில் பேசுவதை காதுகொடுத்து கேட்டுவிட்டு, சரி என்று மனதில் ஏற்றிக்கொண்டு உங்கள் பின்னால் திரிய நாங்கள் மண்ணைத் தின்னும் மடையர்கள் அல்ல. இந்த தலைமுறை இளைஞர் பட்டாளாம் உங்களை நம்பும் ஈனப் பிறவியுமல்ல. காலம் கடந்து கொண்டிருக்கிறது. உங்கள் சாதியையும் சாதி வெறிகளையும் எலும்பொடித்து முடமாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. எச்சரிக்கையாக இருங்கள். எமன் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.


நன்றி..!


அன்புடன்,
அகல்

Friday, 23 November 2012

கசாப் தூக்கிலிடப்பட்டதால் தீவிரவாதம் அழிந்துவிடுமா..!?

வணக்கம் நண்பர்களே..!


தீவிரவாதி கசாப் தூக்கிலிடப்பட்டதை பல ஊடகங்கள், இணையதளங்களில் விவாதிக்கப் பட்டிருந்தாலும் இந்த மரணதண்டனையைப் பற்றிய எனது பார்வையைப் பதிவு செய்வது மட்டுமே இந்த கட்டுரையின் நோக்கம். தங்களது கருத்துக்கள் மாற்றுக் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்க வேண்டுகிறேன்.


அஜ்மல் கசாப்



லஷ்கர்-ஏ-தொய்பா என்ற பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் 2008 இல் மும்பையில் நடத்தி தோராயமாக 156 (மொத்தம் 166 - தீவிரவாதிகளையும் சேர்த்து) அப்பாவி மக்களின் உயிரைக்குடித்த தீவிரவாத தாக்குதலில் பங்கெடுத்த 11 தீவிரவாதிகளில் உயிரோடு பிடிக்கப்பட்ட ஒரே ஒருவன் அஜ்மல் கசாப். பாகிஸ்தானின் பஞ்சாப் மாவட்டத்தில் உள்ள பரீத்கோட் என்ற கிராமத்தில் 1987 ஜூலை மாதம் பிறந்தவன். 2005 க்கு பிறகு லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு அதற்காக பயிற்சி பெற்று பணியாற்றியவன். தாக்குதலில் பிடிபட்ட கசாப் மீது 80 குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவற்றில் பல நிரூபிக்கப்பட்டு, அவனது 25 ஆம் வயதில், 2012 ஆம் வருடம் நவம்பர் மாதம் 21 ம் தேதி காலை 7.30 மணியளவில் புனே நகரில் உள்ள எரவாடா மத்தியச் சிறைச்சாலை தூக்கிலிடப்பட்டான்.


2005 இல் இஸ்லாமின் புனித ஈகை திருநாளன்று அவன் தந்தையிடம் கசாப் புதுத்துணி வாங்கித்தர கோரியதாகவும், அவரால் வாங்கித்தர இயலாததால் சண்டையிட்டுக்கொண்டு வீட்டைவிட்டு கசாப் வெளியேறியதாக சொல்லப்படுகிறது. தனது குடும்ப பணத்தேவைக்காக லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தில் சேர்ந்து செயல்பட கசாப்பின் தந்தையே கூறியதாக மற்றொரு கருத்தும் உண்டு. தனது நண்பருடன் சேந்து பல குற்றங்களை புரிந்தபின் லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தில் இணைந்துள்ளான் கசாப்.


கசாப்பிர்க்கு தூக்கு தேவையா..?


இந்த கேள்விக்கு இல்லை என்று நான் பதிலளிக்கும் பட்சத்தில் என்னை தண்டிக்க துடிக்கும் நண்பர்களின் பட்டியல் மிக நீளமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதில் தவறேதுமில்லை. ஆனால் இயற்கையாக படைக்கப்பட்ட உயிர் அவ்வாறே பிரியவேண்டும் என்பது என்பார்வை. தண்டனைக்காக ஒருவன் தூக்கிலிடப்பட்டால் அதுவும் திட்டமிட்ட படுகொலையே. இதில் தீவிரவாதிகளுக்கும் சட்டத்திற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. தண்டிப்பதற்காக தண்டனையல்ல அது திருத்துவதற்காக மட்டுமே.


இங்கு கசாப்பின் தீவிரவாத செயலை நியாயப்படுத்துவது என் நோக்கமல்ல. எந்த சூழ்நிலையிலும் கசாப் செய்தது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம், அவன் தண்டனைக்கு உரியவன். ஆனால் மரணதண்டனையா என்பதே கேள்வி. அதே நேரம், சட்டங்கள் கடுமையாக இல்லாத வேளையில் குற்றங்கள் குறையாது என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் சட்டங்கள் கடுமையாக இருந்தும் குற்றங்கள் குறைவதற்கு மாறாக அதிகரித்து வருவதைப் பார்த்தால், குற்றங்கள் குறைய சட்டங்களைத் தாண்டியும் பல சமூக சீர்திருத்தங்கள் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவே எனக்குப்படுகிறது. குற்றமற்ற பலர், எதிரிகளின் சதிவேளைகளால் தாங்கள் குற்றமற்றவர் என்று நிரூபிக்க விடாமலே தூக்கிலிடப்பட்ட வழக்குகளை நமது வரலாறு அறியும். ஆகையால் இது போன்ற சட்டங்களால் பல தவறுகளும் நேரிடுகிறது.


கசாப்பின் தண்டனை குறைக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்..?


கசாப்பிர்க்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு அவன் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் பல விளைவுகளைச் சந்திக்க நேரிட்டிருக்கும். நான்கு வருடங்களுக்கு 50 கோடி செலவில் 1000 போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டவன் இன்னும் பல நூறு கோடி செலவுசெய்து பாதுகாப்பை தொடர நேரிட்டிருக்கும். அப்படியே ஆயுள் தண்டனை முடியும் காலகட்டத்தில் அவன் விடுவிக்கப்பட்டாலும், தாக்குதலில் ஈடுபட்ட பலரைக் காட்டிக்கொடுத்த கசாப்பை, லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு எப்படியும் உயிரோடு விட்டுவைத்திருக்காது. அப்படியான ஒரு தீர்ப்பின் மீது மக்களின் எதிர்ப்பு வலுத்திருக்கும். பல போராட்டங்கள் நடந்திருக்கும் பொதுச் சொத்துகள் வீணடிக்கப்பட்டிருக்கும். ஆகையால் மரண தண்டனைக்கு எதிராக நான் கருத்து தெரிவித்தாலும் கசாப்பின் வழக்கில் அதைத் தவிர வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை.


இந்திய அரசு செய்வது சரியா..?


கசாப்பிர்க்கு கொடுக்கப்பட்டது சரியான தீர்ப்பே என்று கருதினாலும் இந்திய அரசு 1.4 லட்சம் மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து விருந்தளிப்பது, கேரள மீனவர்களைக் கொன்ற இத்தாலி அரசு, பல நூறு தமிழ் மீனவர்களைக் கொன்ற இலங்கை அரசு என யாவரையும் கண்டுகொள்ளாமல் இருப்பதைப் பார்த்தால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொன்றால் மட்டுமே உயிர் மற்றவர்கள் கொள்ளும்பட்சத்தில் அது துச்சமான வெறும் பிண்டம் எனும் பாணியில் அரசு பொறுப்பின்றி இருப்பதாக தோன்றுகிறது. மிகவும் வருந்தச் செய்கிறது.


பல ஆயிரம் மக்களின் உயிர்களைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு, சமீபத்தில் சீனாவில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களுக்காக மட்டும் போராடி ஆயுள் தண்டனையாக குறைத்தது ஒருதலை பட்சமான சுயநல போக்கைக் காட்டுகிறது. சட்டம் அனைவருக்கும் சமம் என்ற போக்கை கடைபிடிப்பதாகவும் தெரியவில்லை.


கசாப் தூக்கிலிடப்பட்டதால் தீவிரவாதம் அழிந்துவிடுமா..!?


ஏதார்த்தத்தைச் சொன்னால், தீவிரவாதம் எப்போதுமே அழிக்க முடியாத ஒரு  வைரஸ் கிருமி. அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்கலாம் ஆனால் ஒட்டு மொத்தமாக ஒழிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே எனக்குப்படுகிறது. கசாப் போன்ற இளைஞர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தீவிரவாத இயக்கங்களை வேரோடு அழிக்கும்வரை இது போன்ற தூக்குதண்டனைகளிலும் பெரிதாக எந்த மாற்றமும் வரப்போவதில்லை.


சொல்லப்போனால் கசாப் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்காக செயல்படும் பல இளைஞர்கள் அப்பாவிகளே.. காரணம்., சிறு வயதிலேயே அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி தீவிரவாத இயக்கங்களில் சேர்த்துகொண்டு தாங்கள் செய்வது மட்டும் தான் சரி என்ற மனநிலையில் இருந்து வெளியேறவிடாமல் பல இயக்கங்கள் அவர்களுக்கு போதிக்கிறது. நல்லது கெட்டதை பிரித்தறியும் சூழ்நிலைக்கு போகவிடாமல் அவர்களை மூழ்கடிக்கிறது. இந்த இயக்கங்களிடம் பல இளைஞர்கள் சிக்கிக்கொண்டு அப்பாவி மக்களை இரக்கமின்றி அழிப்பது மட்டுமின்றி தங்களையும் அழித்துக்கொள்வதை நினைத்தால் வேதனையளிக்கிறது.


கசாப் தூக்கிலிடப்பட்டதில் நாம் மகிழ்ந்தாலும், அதன் பின்விளைவுகளில் இருந்து அப்பாவி இந்திய மக்களை காப்பாற்றும் கட்டாயத்தில் உள்ளோம் என்பதையும் மறுக்க முடியாது. இதுவரை பாகிஸ்தானுக்குள் மட்டுமே தீவிரவாத செயல்களில் ஈடுபட் டலஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புடன் நெருங்கிய உறவு கொண்ட தலிபான் அமைப்பு, கசாப்பின் மரணத்திற்கு எதிராக இந்திய மக்களின்மீது உலகின் பல முனைகளில் தாக்குதல் நடத்தி அழிப்போம். அவர்களின் உடல்களையும் தரமாட்டோம் என திமிராக தரும் பேட்டிகள் இதற்கான ஒரு சான்று.


கசாப்பின் தூக்கு தீவிரவாதத்தை துளியும் அழித்து விடப்போவதில்லை. ஏனென்றால் அழிக்கப்பட்டது அம்பைத்தான் எய்தவனை அல்ல..!