Showing posts with label குறுங்கவிதை. Show all posts
Showing posts with label குறுங்கவிதை. Show all posts

Sunday, 21 September 2014

காதலறிந்த கடலலை

கடற்கரை
மணலில்

உன்னை
விருப்புகிறேன்
என்று எழுதுகிறேன்
நான்

உன்னை
வெறுக்கிறேன்
என்று எழுதுகிறாய்
நீ

கணநேர
மௌனத்திற்குப்
பிறகு

நீ எழுதியதைச்
சட்டென்று
அழித்துவிட்டுச்
செல்கிறது
கடலலை !


- அகல் 

சிறை

அந்திவானம்
இளம் தென்றல்
பூக்கள்
பறவைகள்
பட்டாம் பூச்சிகள்
மேகம்
மழை
நிலவு
நட்சத்திரங்கள்
மழலையின் சிரிப்பு
பருவப்பெண்கள்
யாவரும்

காலம் காலமாக
சிறைபட்டுக்
கிடக்கிறார்கள்
கவிஞர்களின்
பேனா நுனியில் !


 - அகல்

பொய்காரன்

எனது
ரயில் பயணத்தில்

அந்த ரயிலையும்
உன் நினைவுகளையும்
அன்றி
யாரையும்
நான் துணைக்கு
அழைத்து வரவில்லை
என்று சொல்லும்
என்னைப் பார்த்து

நீ ஒரு
உலகமாக
பொய்காரன்
என்கிறது

அந்த
ஜன்னல் வழி
இடைவெளியில்
மடிவிரித்துத்
தாலாட்டிய நிலவு !


- அகல்

Monday, 4 August 2014

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 26


***

உடல் நிலை
குன்றிய நிலையில் 
குளிர் பிரதேசத்தில் நான்

உள்மனதில்
அன்றொருநாள்
அம்மா சமைத்து
ஊட்டிய
சமையலின் வாசம்

***

அங்கே நீ
இங்கே நான்
இரு போர்வை
ஈருறக்கம்
கனவுகள் மட்டும்
ஒன்றாய்

***

நுணல் தன்
துணைதேடும்
மழைநாள்

வயல்வெளி
திருவிழாவாகிறது

***

ஒரு
மெழுகுவர்த்தியின்
முனையில்
உயிரை
மாய்த்துக்கொள்கிறது

உனக்காக
இதுவரை எழுதிய
எனது காதல்
கடிதங்கள்

***

உன்
பட்டுப் பாவடையில்
வண்ணத்துப் பூச்சி
இருக்கவும் முடியாமல்
பறக்கவும் முடியாமல்

***

இன்னும்
எழவில்லை
சூரியன்

எதிர்பார்த்துக்
காத்திருக்கிறது
சூரியகாந்தி

***

எதற்கு நீ
என்னைச் சுற்றுகிறாய்
என்று காரணம்
கேட்டபோதெல்லாம்

பூமி எதற்கு
தன்னைச் சுற்றுகிறது
என்று காரணம்
கேட்டவன் நீ

***

ஏக்கத்தோடு கூவும்
என் வீட்டு
வேப்பமரத்துக்
குயிலின் குரல்
அமெரிக்காவரை
கேட்கிறது

அம்மாவின்
கைபேசி வழியாக

***

கண்கள்
அறிந்திராத காதல்
காற்றுவழி
மகரந்தச் சேர்க்கை

***

உன் வீட்டு
ஜன்னல்
கதவுகளைச்
சாத்தி வைக்காதே

தென்றலாவது
தீண்டிவிட்டுப்
போகட்டும்

***

Thursday, 21 November 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 25

***

நிலவின் பிரிவில்
தவிக்கும் இரவு
அமாவாசை !

***

இழவுவீடு
அறியாத உறவு
இருந்தும் அழுகிறது
பறை !

***

உனக்காக நான் என்னை
மாற்றிக் கொள்கிறேன்
என்று நீ சொல்லும்போதெல்லாம்
உனக்காக நான் என்னை
மாற்றிக் கொள்கிறேன் !
 

***

இன்னும்
அதிகாலைச் சோம்பல்
களையவில்லை நீ
உனை ஒளிந்து நின்று
வேடிக்கை பார்க்கிறது
ஜன்னலோரச் சூரியன் !

***

மழை பெய்கிறது
உள்ளே வா 
என்கிறாள் அம்மா
அவள்
கரையான் கூட்டிற்கு
குடைபிடித்துக்
கொண்டிருக்கிறாள் !

***

கீழ்சாதிக்காரன்
நுழைய அனுமதி
இல்லாத கோவில்
உச்சியில் எச்சில்
உமிழ்கிறது காகம் !
 

***

ஒரு கவிதை
எழுதிவிட நினைத்து
காத்திருந்த இரவு
எழுதாமல் நகர்ந்து
கொண்டிருக்கையில்

செல்போன்
வாயிலாக
ஹலோ என்கிறது
ஒரு கவிதை !

***

அந்த நள்ளிரவு நேரத்தில்
என் நெற்றியில்
ஒற்றை முத்தமிட்டுவிட்டு
யாரும் பார்க்கவில்லை
என்று சொல்லி 
புண்முறுவலிடுகிறாய் நீ

வெளிச்சத்தை
அணைத்துவிட்டு
தனது இருப்பை
உறுதி செய்கிறது
மின்சாரவிளக்கு !

***

ஒரு அகதிக்கு
பின்வீட்டை
சுத்தம் செய்து 
கொடுத்தாள் அம்மா

அகதியானது
பல கரப்பான்
பூச்சிகள் !


***

உன்னோடு 
செலவு செய்த
மணித்துளிகளெல்லாம்
கவிதையாகிறது

கவிதையின் தலைப்பாய்
நீயாகிறாய் !

***

Tuesday, 8 October 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 24

***

பூங்காவின் மையத்தில்
கொஞ்சம் இடைவெளிவிட்டு
அமர்ந்திருக்கிறோம் நாம்


அந்த இடைவெளியில்
நமது குழந்தையைப்போல்
அமர்ந்திருக்கிறது காற்று !

***


எனது விரல்கள்
உன்னையும் 
உனது விரல்கள்
என்னையும்
தொட்டுவிடக் கூடாது
என்று கவனமாக 
நடந்து கொண்டிருக்கிறோம்

தோள்கள் இரண்டும்
உரசிக்கொண்டிருக்கிறது !


***

எனது வீட்டிற்கும்

தூக்கணாம் குருவிக் 
கூட்டிற்கும்
ஒரு வித்தியாசம்தான்

எனக்கு
வீட்டினுள் ஊஞ்சல்
அதற்கு
ஊஞ்சலில் வீடு !


***


அனாதைத்
தேனீக்கள்

பூக்களை மார்பாக்கி
பாலூட்டுகிறது 

பூச்செடிகள் !

***

நெற்றியில்
முத்தமிடுவதிலும்
முந்தானையில்
முகம் துடைப்பதிலும்
அன்பின் ஆழம்
என்னவென்று
அறியவைத்தவள் நீ !


***


அழகு ததும்பிய
நிலா மகளை
ஒளித்து வைக்கும்
முயற்சியில்
ஓடிக்கொண்டே
இருக்கிறது மேகம் !


***

இதுவரை அம்மா
இல்லா
 வருத்தம்
இன்று முதல்
இல்லை என்கிறாள்

என் தோளில் சாய்ந்தபடி !


***

ஐந்து வருடங்களுக்குப்
பிறகும் இதே அன்போடு
இருக்க வேண்டும்
என்கிறாள் அவள்

அறுபது வயதிற்குப்
பிறகும் இதே அன்போடு
இருக்க வேண்டும்
என்கிறேன் நான் !


***

கருவேலங்கட்டிற்குள்
கதறிக் கொண்டிருக்கிறது
சில்வண்டு

அதைக்

கண்டுகொள்ளாமல்
கடந்துவருகிறது
காற்று !


***


உன்னைப்
புரிந்துகொள்ள
ஆசைப்பட்டு
மௌனத்தின் மொழியை
மொழிபெயர்த்துக்
கொண்டிருக்கிறேன் !


***

அன்புடன்,
அகல்

Saturday, 24 August 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 23

***

என் வீட்டு ஜன்னலுக்கும்
உன் வீட்டு ஜன்னலுக்கும்
ஓடிப்பிடித்து விளையாடுகிறது காற்று
உனக்கும் எனக்கும் தெரியாமல்

***

என்னதான்
சொல்கிறதோ
காற்று

தலை
அசைத்துக்கொண்டே
இருக்கிறது
ஆவாரம்பூ

***

இரண்டு ரோஜா
இதழ்களுக்கு இடையே
சில மல்லிகை இதழ்கள்
அவளது பற்கள்

***

மூங்கில் இலையில்
தூங்குகிறது
மழைத்துளி

தாலாட்டுப்
பாடுகிறது 
கருங்குயில்

***

நள்ளிரவு நகர்ந்து
கொண்டிருக்கிறது

என்வீட்டு
ஜன்னல் கம்பியும்
பிறைநிலவும்
ஏதோ பேசிக்
கொண்டிருக்கிறார்கள்

***

சிதைந்துபோன
வார்த்தைகளில் 
அழகாகிறது
மழலை மொழி 

***

நெற்றிவழியே 
நடந்து வந்த
வியர்வைத்துளி
ஓய்வு எடுத்துக்
கொண்டிருக்கிறது 
உன் கன்னக் குழியில்

***

பூ வைக்க ஆளில்லை 
பறிக்கப்படாமல் இருக்கிறது 
ரோஜா மலர்கள் 
அமெரிக்க வீதிகளில்

***

இப்படியெல்லாம்
இருப்பது எனக்குப் பிடிக்கும்
என்று சொல்லும் முன்னே
இப்படி இருக்கத்தான்
பிடிக்கும் என்று சொல்லிவிடுகிறாய்

***

படம் முடிந்தவுடம்
போடப்படும் "சுபம்"
போலாகிவிடுகிறது

பேசி முடிக்கும்போது
உனது சில நொடி
சினுங்கல் 

***

அன்புடன்,
அகல் 

Wednesday, 10 July 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 22

***

வரப்பில் மெலிந்த உடல்கள்
பிரதி எடுத்துக் காட்டுகிறது
வயலில் தேங்கிய நீர்

***

குடிசைக்குள் மழை
குடையாகிறது பாத்திரங்கள்

***

கிளி கொத்திய
கோவைப்பழம்
அதிகாலையில்
அவள் இதழ்கள்

***

அந்த ஜன்னலோரச் சாரலில்
உனது விழிகளும் எனது விழிகளும்
உரக்கப் பேசிக்கொண்டிருக்கையில்
மௌனித்துப் போனது மழை

***

அடர்ந்த இருளின் மடியில்

உன் மூக்குத்தி ஒளி
அதனோடு உறவாட வருகிறது
மின்மினிப்பூச்சி

***


நிறை குறைகளைப்
பார்த்துவிட்டது 
பிறை நிலவு

***

அடர்ந்த

இருளின் விலாசம்
உன் மூக்குத்தி ஒளியில்

***


நீ கடிதம் எழுதி
உன் காதலைச்
சொல்லவில்லை

நானும் அதைப்பற்றி

ஒரு வார்த்தையும்
பேசவில்லை

நீ அதை எப்படிப்
புரிந்து கொண்டாயோ
நானும் அப்படியே
புரிந்து கொண்டேன்


***


உன் வெட்கம் சரியும் நேரத்தில்
உன் மேலாடையும் சரிகிறது


***

உன் மூக்குத்தி ஒளி 
முனகலில் நிலா

***
அகல் 

Saturday, 6 July 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 21

***

பூக்களுக்கிடையே நீ
உன்மீது வண்ணத்துப்பூச்சி

***

என்ன தவறோ ?
சத்தம்போடுகிறது வானம்
அழுகிறது மேகம்

***


காஸ்டிலியான
ஷாப்பிங் மாலிர்க்குள்
இலவசமாகக் கிடைகிறது
குட்டிக் குழந்தைகளின் புன்னகை

***

கள்ளிச் செடியிலும்
கோவில் சிலையிலும் பால்
ஒன்று, கொல்வதற்காவது
பயன்படுகிறது

***

நாம் இருவர்
தங்கும்விடுதியில் கிடைத்தது
ஒருவருக்கான கட்டில்
சௌகரியமாய் இருந்தது உறக்கம்

***

நீ வெட்கப்படும் நேரங்களில்
உன் விரல்களுக்கும்
இதழ்களுக்குமிடையே
சிக்கித் தவிக்கிறது பாசிமணி

***

என் சட்டைப் பையுக்குள்
பல சாகசங்களைச் செய்கிறது
உன் பள்ளிப்பருவப் புகைப்படம்

***

வீரர்களின் தியாகம்
நியாபகப் படுத்துகிறது
குண்டுகள் துளைக்கப்பட்ட சுவர்

***

மழைகாலம்
நசுக்கப்படும் நத்தைகள்
அறியாத பாதங்கள்

***

கள்ளிப்பாலும்
அரளிவிதையும் விஷம்
அதன் பூக்களில் தேன்,
சேகரிக்கிறது வண்டுகள்

***
அன்புடன்,
அகல்