Saturday, 24 August 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 23

***

என் வீட்டு ஜன்னலுக்கும்
உன் வீட்டு ஜன்னலுக்கும்
ஓடிப்பிடித்து விளையாடுகிறது காற்று
உனக்கும் எனக்கும் தெரியாமல்

***

என்னதான்
சொல்கிறதோ
காற்று

தலை
அசைத்துக்கொண்டே
இருக்கிறது
ஆவாரம்பூ

***

இரண்டு ரோஜா
இதழ்களுக்கு இடையே
சில மல்லிகை இதழ்கள்
அவளது பற்கள்

***

மூங்கில் இலையில்
தூங்குகிறது
மழைத்துளி

தாலாட்டுப்
பாடுகிறது 
கருங்குயில்

***

நள்ளிரவு நகர்ந்து
கொண்டிருக்கிறது

என்வீட்டு
ஜன்னல் கம்பியும்
பிறைநிலவும்
ஏதோ பேசிக்
கொண்டிருக்கிறார்கள்

***

சிதைந்துபோன
வார்த்தைகளில் 
அழகாகிறது
மழலை மொழி 

***

நெற்றிவழியே 
நடந்து வந்த
வியர்வைத்துளி
ஓய்வு எடுத்துக்
கொண்டிருக்கிறது 
உன் கன்னக் குழியில்

***

பூ வைக்க ஆளில்லை 
பறிக்கப்படாமல் இருக்கிறது 
ரோஜா மலர்கள் 
அமெரிக்க வீதிகளில்

***

இப்படியெல்லாம்
இருப்பது எனக்குப் பிடிக்கும்
என்று சொல்லும் முன்னே
இப்படி இருக்கத்தான்
பிடிக்கும் என்று சொல்லிவிடுகிறாய்

***

படம் முடிந்தவுடம்
போடப்படும் "சுபம்"
போலாகிவிடுகிறது

பேசி முடிக்கும்போது
உனது சில நொடி
சினுங்கல் 

***

அன்புடன்,
அகல் 

11 comments:

  1. கற்பனை கொடி கட்டி பறக்கிறது.
    அபாரம். தொடரவும்.
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஷ்ரவாணி மேடம்...

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி குமார் சார்..

      Delete
  3. #நெற்றிவழியே
    நடந்து வந்த
    வியர்வைத்துளி
    ஓய்வு எடுத்துக்
    கொண்டிருக்கிறது
    உன் கன்னக் குழியில் #
    agal எனக்கு உண்மை தெரியணும்...கன்னக் குழியில் வியர்வை தேங்கும் அளவிற்கு நீங்க என்ன சேட்டை செஞ்சிங்க ?

    ReplyDelete
    Replies
    1. என் சார் இப்படி ? :)

      Delete
  4. வணக்கம் அகல்...
    வலைச்சரத்தில் தங்களைப் பற்றி தெரிவித்துள்ளேன்... நேரமிருப்பின் கீழிருக்கும் இணைப்பின் வழியாக வலைச்சரம் வந்து பாருங்கள்...

    நன்றி...

    http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_3.html

    ReplyDelete
    Replies
    1. வலைச் சரத்தில் மீண்டும் ஒருமுறை அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி குமார் சார்... அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள் பல ..

      Delete