61. பிடித்தவர்களிடம் பிடிக்காததைக் கண்டுகொள்ளாததும் பிடிக்காதவரிடம் பிடித்ததைக் கண்டுகொள்ளாததும் மானுட இயல்பு.
62. ஒரு விவாதத்தின் மீதான நமது கருத்தும் நிலைப்பாடும் சிலமுறை தவறாக இருக்கும். அது தவறு என்று புரிந்துகொள்ள தேவைப்படும் சூழ்நிலை அமைய, சில நாட்களோ, மாதங்களோ, வருடங்களோ ஆகலாம்.
63. பெரும்பாலும், மகன்களின் மனதிற்கு மிக நெருக்கமான இடத்தில் தாய் இருப்பார். ஆனால் அதைவிட நெருக்கமான இடத்தில் சிலருக்கு தந்தையும் இருக்கிறார்கள்.
64. அளவுக்கு மிஞ்சினால் அமுதமட்டுமல்ல அன்புகூட நஞ்சுதான்.
65. நாம் இதுவரை செய்யாத வேலையைக் கொடுத்து, உனது திறமை மீது எனக்கு நம்பிக்கை உண்டு உன்னால் இந்த வேலையைச் செய்ய முடியும் என்று சொல்வதும், அந்த வேலையை நாம் கற்றுக் கொண்டு தட்டுத் தடுமாறி முடித்தபிறகு, அதேபோல் மற்றொரு வேலை வரும்போது உனக்கு மட்டுமே இந்த வேலையில் முன்னனுபவம் இருப்பதால் உன்னால் மட்டுமே செய்ய முடியும் என்று சொல்வதும், பெரும்பாலான மேலாளர்கள்/முதலாளிகள் பயன்படுத்தும் பொதுவான சூத்திரங்கள்.
66. மனிதன், எத்தனை அழகாக மாறுவேடம் போட்டாலும், காலமும் சூழ்நிலையும் அவனது இயல்பு குணத்தைக் காட்டிக் கொடுத்துவிடும்.
67. திறமைகள் இன்றி அதிஷ்டத்தால் ஜெயித்தவர்களும் இருக்கிறார்கள். திறமை இருந்தும் தொடர்ச்சியாக தோற்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இந்த நிலை இருவருக்கும் நிலையல்ல.
68. கோபம் என்பது வெறுப்பின் ஒட்டுமொத்த அடையாளமல்ல. இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள் அதிகம்
69. இவர்கள் எனது தொண்டர்கள் என்று சொல்லும் எந்த ஒரு தலைவனும், அவர்களை தன்னைக் காட்டிலும் தாழ்ந்தவனாகவே பார்க்கிறான். இவர்கள் எனது தோழர்கள் என்று சொல்லும் எந்த ஒரு தலைவனும் அவர்களை தனக்கு நிகராகவே பார்க்கிறான்.
70. உனக்காக யாரோ ஒருவர் மனம் வருந்தி அழுகிறார் என்றால், அவரை ஒருமுறையாவது நீ மனம்விட்டு சிரிக்க/ரசிக்க வைத்திருப்பாய் - தெரிந்தோ தெரியாமலோ.
முந்தைய பாகம் : அகல் மொழி பத்து - பாகம் 6
~ அகல்
51. பெரும்பாலான நேரங்களில், ஒரு கருத்தை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அந்த கருத்தின் ஆழத்திற்காக இல்லாமல், அதைச் சொன்னவரின் மீதுள்ள விருப்பு வெறுப்பின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது.
52. நம்பிக்கையில்லை என்பதும் ஒரு நம்பிக்கையே.
53. அறப் போராட்டமா ? ஆயுதப் போராட்டமா ? என்பதை ஒரு போராட்டத் தலைவன் தீர்மானிப்பதில்லை. போராட்டக்களம் தீர்மானிக்கிறது.
54. எதுவும் தெரியாது என்று சொல்பவனைவிட எல்லாம் தெரியும் என்று சொல்பவன் மிகவும் ஆபத்தானவன்.
55. அவலங்களை எதிர்த்துப் பேசாத சமூகம் அடிபட்டே சாகும்.
56. தனிமனித விமர்சனம் தவறல்ல. ஆனால் அது தவறு என்று தெரிந்த பின்னும் சரி என்று வாதாடுவது சரியல்ல.
57. உனக்காக அத்தனையும் விட்டுக் கொடுப்பேன் என்று சொல்லும் பெரும்பாலானோர், சிலமுறை குறைந்தபட்ச நியாயத்தைக்கூட விட்டுக் கொடுப்பதில்லை.
58. இங்கே நியாயங்கள் பேசப்படுவதில்லை, இடத்திற்கு தகுந்தாற்போல் கூறுபோட்டு விற்கப்படுகிறது.
59. நீங்கள் எதிர்கொண்ட நல்ல தருணங்களை அசைபோடுங்கள், அது இன்பத்தைத் தரும். கெட்ட தருணங்களுக்கு நன்றி சொல்லுங்கள். அது வாழ்வில் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கும்.
60. நாம் பேசியது தவறு என்று தெரிந்த பின்னும், அதை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்த முயற்சிப்பதை விட, பேசியது தவறே இல்லை என்று சொல்லி விடலாம். காலப்போக்கில் அது மறக்கப்பட்டுவிடும்.
முந்தைய பாகம் : அகல் மொழி பத்து - பாகம் 5
மொழியும் புகைப்படமும்,
அகல்
41. என்னைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்களைக் கண்டு எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால் அவர்களைப் பற்றி யாரேனும் பேசிக் கொண்டிருப்பார்கள்
42. தெரியாமல் கூட தவறுகள் செய்யாமல் இருந்தால் அது அழகாக வடிவமைக்கப்பட்ட இயந்திரமாகவே இருக்க முடியும். நான் மனிதன்.
43. விதியை மதியால் வென்றாலும் அதுவும் விதியே.
44. ஒரு தவறை சுட்டிக்காட்டுவதற்கும் குத்திக்காட்டுவதற்கும் வேறுபாடுகள் உண்டு. இதில் சரியான ஒன்றைப் பயன்படுத்துதல் அவசியம்.
45. அடிமைத் தனத்தை எதிர்க்கும் தொழிலாளிகளைப் பிடித்துப்போன முதலாளிகள் எவருமில்லை.
46. உதவ முடியும் தருணங்களில் காட்டப்படும் வெறும் அனுதாபம் என்பது அர்த்தமற்றது.
47. எவரையும் எனது போட்டியாளனாகப் பார்க்கவில்லை. எனக்கென்று ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். பாதை புதிது என்பதால், அதில் சில தடைகள் இருக்கலாம் அல்லது நான் வழி தவறிப் போகலாம். அதைத் திருத்திக்கொண்டு பயணிப்பது என் கடமை.
48. உங்கள்மேல் வெறுப்பாகப் பேசுபவர்களை நீங்கள் வெல்ல வேண்டுமானால் அவர்கள் பேசும்போது அமைதியாக இருந்துவிடுங்கள்.
49. உறவுகளைத் தாண்டி ஒவ்வொருவரின் வாழ்விலும் மனத்திற்கு மிக நெருக்கமான இடத்தில் வைத்து அன்பு பாராட்ட ஒரே ஒருவர்தான் கிடைப்பார்கள். அப்படி கிடைப்பவர்களும் நம்மோடு தொடர்ந்து பயணிக்க முடியாத இடத்திலேயே இருப்பார்கள்.
50. சிலமுறை, ஒருவர் சொல்லும் வாக்கியத்தை அவரவர் இருக்கும் மனநிலைக்கு உகந்தாற்போல் புரிந்துகொள்வது உளவியல் நியதி. அந்த புரிதலின் அடிப்படையில் ஆங்காங்கே வீசப்படும் தனிமனித விமர்சனங்களும் இயல்பு. அதே மனநிலைகளில் இருப்பவர்கள் ஒன்று சேர்வதும் தவிர்க்க இயலாத ஒன்று. இதற்கான தீர்வு, ஒவ்வொரு விடயமும் அதக்கு மிகச் சரியான வடிவில் (எழுத்து, பேச்சு) விவாதிப்பதாகவே இருக்கமுடியும்.
முந்தைய பாகம் : அகல் மொழி பத்து - பாகம் 4
மொழியும் புகைப்படமும்,
அகல்
31. ஒரு சமூகப் பிரச்சனைக்கு பதியம் போடுவது மேல் வர்க்கம், அதனால் வரும் விளைவுகளை தூரம் நின்று வேடிக்கை மட்டும் பார்ப்பது நடுத்தர வர்க்கம், எதிர்த்து நின்று போராடிச்சாவது கீழ் வர்க்கம். இவ்வுலகின் எழுதப்படாத விதி இது.
32. எனது மதமும் அதன் கொள்கைகளும் மட்டுமே சிறந்தது அதை மட்டுமே கடைபிடிப்பேன் என்று கூறும் ஒரு இந்துவோ, முஸ்லிமோ, கிறிஸ்தவரோ ஆபத்து என்றவுடன் ரத்த வங்கிகளில் ஒரு யூனிட் இந்து ரத்தம் கொடுங்கள், இரண்டு யூனிட் முஸ்லிம் ரத்தம் கொடுங்கள் என்று கேட்பதில்லை. O நெகடிவ் கொடுங்கள், B பாசிட்டிவ் கொடுங்கள் என்று ரத்த வகைகளையே கேட்கிறார்கள். இப்படியாக மனிதன்.
33. தெரியாமல் நாம் செய்த ஒரு தவறை நியாயப்படுத்த முயற்சிக்கும்போது அந்தத் தவறை இரண்டாவது முறை செய்கிறோம்.
34. நல்ல கருத்துக்களைச் சரியான நேரத்தில் சரியான நபரிடம் சொல்லுங்கள். காதிற்குள் புகுந்து கவனிக்கப்பட வேண்டிய கருத்துக்கள், வெறும் காற்றில் கரைவதில் எந்தப் பயனுமில்லை.
35. நமது கூட வருபவர்களை சந்தோசத்தின் போதும், கூடவே வருபவர்களைத் துக்கத்தின் போதும் தெரிந்துகொள்ளலாம்.
36. திருமண வாழ்க்கைக்கு புற அழகுமட்டும் போதாது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் அதையே முதல் தகுதியாக வைத்திருக்கிறோம்.
37. வாழ்வில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் எந்த நிலையையும் அடையலாம். அதனால் எவரையும் இப்போதுள்ள நிலையை வைத்து எடை போடக்கூடாது.
38. சுவற்றில் எறியப்பட்ட பந்தும் ஒடுக்கப்பட்ட இனமும் எதிர்த்தே தீரும்.
39. உலகில் எங்கெங்கு மனித அழிவுகள் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் அழிக்கப்படுபவர்கள் சாதி, மதம், இனம், மொழி என்ற ஏதோ ஒன்றில் சிறுபான்மையினராகவே இருப்பார்கள்.
40. இவ்வுலகில் சரி, தவறு என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு செயலும் அது செய்யப்பட்ட காரணத்திற்கும் அது உட்பட்ட சூழ்நிலைக்கும் ஏற்றவாறே வரையறுக்க வேண்டியதாய் உள்ளது.
முந்தைய பாகம் : அகல் மொழி பத்து - பாகம் 3
மொழியும் புகைப்படமும்,
அகல்
21. என்னை எவரோடும் ஒப்பிடுவதை நான் விரும்புவதில்லை. ஏனென்றால் இவ்வுலகில் என்னைப்போல் நான் மட்டும் தான்.
22. ஒரு சிலர் நம்மோடு ஓரிரு வார்த்தைகள் பேசினாலே அத்தனை துன்பங்களும் மறந்துபோகும். ஆனால் அது போன்ற உறவுகள் நீண்டகாலம் நிலைப்பதில்லை.
23. சொல்வது நியாயம் என்றால் சொன்னது குழந்தையானாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
24. நமக்குப் பிடித்தோர் பேசாமல் இருப்பதைவிட வேண்டா வெறுப்பாகப் பேசுவது அதிகமான வலியைத்தரும்.
25. உங்களைப் பற்றி முழுமையாக எவரிடமும் சொல்லாதீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்பட அதுவே காரணமாக அமையலாம்.
26. நடந்து கொண்டுவரும் மனித அழிவிற்கு பலநூறு காரணங்களை நாம் பட்டியலிடலாம். ஆனால் மூல காரணம் மனிதன் மட்டும் தான்.
27. நமது நோயைக் குணப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனையில் உள்ள ஒவ்வொரு மருந்துப் பொருட்களிலும், அதை சோதனை செய்ய இந்த உலகின் ஏதேனும் ஒரு மூலையில், திரைமறைவில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மனிதர்களின் ரத்தக்கறை படிந்திருக்கும். அவர்களும் ஏழைகளாகவே இருப்பார்கள்.
28. நமது நாட்டில் நல்ல தொண்டர்களுக்குப் பஞ்சமில்லை. தலைவர்களுக்கு மட்டுமே.
29. எவனொருவன் சாதி, மத அடையாளங்களைத் தாண்டி மனிதனுக்காக மட்டும் போராடுகிறானோ அவனோடு கைகோர்க்க எனது விரல்கள் காத்துக்கொண்டிருக்கும்.
30. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பாதுகாக்கப்படும் உறவுகள் யாவும் நீண்டகாலம் நீடிக்கும்.
முந்தய பாகம் அகல் மொழி பத்து - பாகம் 2
மொழியும் புகைப்படமும்,
அகல்
11. தலையா ? தன்மானமா ? என்ற நிலை வந்தால், தலையை இழக்கலாம், தன்மானத்தையல்ல.
12. உங்களைவிட்டு எளிதில் விலகிச்செல்ல நினைப்போரை எளிதில் நண்பராக்கிக் கொள்ளாதீர்கள்.
13. ஒரு ஆணின் உணர்வுகளையோ அல்லது ஒரு பெண்ணின் உணர்வுகளையோ புரிந்துகொள்ள, நாம் அந்தப் பாலினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த நிலையில் நாம் இருந்தால் என்ன மனநிலையில் இருப்போம் என்ற அடிப்படையை புரிந்துகொள்ள முயன்றாலே போதும்.
14. பள்ளி, கல்லூரிகளில் பெரும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை. அது ஒட்டுமொத்தத் திறமையல்ல.
15. மாறுபட்ட சிந்தனை உடையவர்கள் நண்பர்கள் ஆவதில்லை. அப்படியே ஆனாலும் அது நீண்டகாலம் நிலைப்பதில்லை.
16. சில விடயங்களைப் பேசித் தீர்ப்பது நல்லது. சிலவற்றை பேசாமல் இருப்பது நல்லது.
17. உங்களை மிகைப் படுத்திக்கொள்ள மற்றவருடன் நீங்கள் உயர்ந்தவர்களும் அல்ல. உங்களைத் தாழ்த்திக்கொள்ள அவர்களைவிட நீங்கள் தாழ்ந்தவர்களும் அல்ல.
18. நீங்கள் ஒரு பிரபலமாக இருந்தாலே போதும், உங்களின் கருத்துக்கள் 90 சதவீத மக்களைச் சென்றடைந்துவிடும். மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே அந்த கருத்தின் மதிப்பிற்காகச் சென்றடையும்.
19. பள்ளி, கல்லூரிகளில் வாங்கும் மதிப்பெண்கள் மட்டுமே ஒரு மாணவனின் ஒட்டு மொத்த அறிவு/திறமை என்று எண்ணும் நமது சமுதாயமே, அறியாமையின் உச்சகட்ட அளவுகோள்.
20. சில தருணங்களில், ஒருவருடைய இயலாமை அவர்களின் பொறாமையாக வெளிப்படுகிறது.
முந்தய பாகம் அகல் மொழி பத்து - பாகம் 1
புகைப்படம் & பொன்மொழிகள்,
அகல்
1. உங்களைப் பற்றி முழுமையாக எவரிடமும் சொல்லாதீர்கள். சிலர் உங்களது பலவீனத்தை அவர்களது பலமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
2. பள்ளி, கல்லூரிகளில் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவனைப் பார்த்து முட்டாள் என்று சொல்லும் ஆசிரியரே முதல் முட்டாளாக இருப்பார்.
3. உங்களை விட்டு விலகிப்போவதால் நன்மை நிகழும் என்று சிலர் கருதினால், அவர்கள் விலகும் முன் நீங்கள் விலகிவிடுங்கள். உங்களுக்கு நன்மை நிகழும்.
4. நாகரீக வளர்ச்சி என்பது ஆடையின் அளவைக் குறைத்துக் கொள்வதல்ல. சிந்தனையின் அளவை வளர்த்துக் கொள்வது.
5. உண்மையாக வாழ்ந்து பாருங்கள். சிலருக்குப் பிடிக்கும், பலருக்குப் பிடிக்காது.
6. உங்கள் மேல் ஒருவர் ஆளுமை செலுத்த ஒரு முறையும் அனுமதிக்காதீர்கள். இல்லையேல் அதுவே அவர்களுக்கு வழக்கமாகிவிடும்.
7. உங்கள் குழந்தையை பணக்காரனாக வளருங்கள், தவறில்லை. ஆனால் ஏழையை புரிந்துகொள்ளும் படியாக வளர்க்காவிட்டால் இந்த சமுதாயம் தவறாகிவிடும்.
8. முதுமை காலத்து கொடுமையையும், மழலை காலத்து சந்தோசத்தையும் ஒருவனா(ளா)ல் கொடுக்க முடியுமென்றால், அவனே(ளே) உங்களுக்கு உற்ற துணை.
9. உங்கள் எழுத்திற்கு எதிர்ப்பு அதிகமென்றால் அதன் பலம் அதிகமென்றே பொருள்.
10. தியாகத்திற்காக சிறை சென்று திரும்பியோர் குற்றவாளிகளாகக் பார்க்கப்பட்டனர் அன்று. குற்றத்திற்காக சிறை சென்று திரும்புவோர் தியாகிகளாகக் பார்க்கப் படுகின்றனர் இன்று.
அன்புடன்,
அகல்