Tuesday, 15 April 2014

அகல் மொழி பத்து - பாகம் 7

61. பிடித்தவர்களிடம் பிடிக்காததைக் கண்டுகொள்ளாததும் பிடிக்காதவரிடம் பிடித்ததைக் கண்டுகொள்ளாததும் மானுட இயல்பு.

62. ஒரு விவாதத்தின் மீதான நமது கருத்தும் நிலைப்பாடும் சிலமுறை தவறாக இருக்கும். அது தவறு என்று புரிந்துகொள்ள தேவைப்படும் சூழ்நிலை அமைய, சில நாட்களோ, மாதங்களோ, வருடங்களோ ஆகலாம்.

63. பெரும்பாலும், மகன்களின் மனதிற்கு மிக நெருக்கமான இடத்தில் தாய் இருப்பார். ஆனால் அதைவிட நெருக்கமான இடத்தில் சிலருக்கு தந்தையும் இருக்கிறார்கள்.

64. அளவுக்கு மிஞ்சினால் அமுதமட்டுமல்ல அன்புகூட நஞ்சுதான்.

65. நாம் இதுவரை செய்யாத வேலையைக் கொடுத்து, உனது திறமை மீது எனக்கு நம்பிக்கை உண்டு உன்னால் இந்த வேலையைச் செய்ய முடியும் என்று சொல்வதும், அந்த வேலையை நாம் கற்றுக் கொண்டு தட்டுத் தடுமாறி முடித்தபிறகு, அதேபோல் மற்றொரு வேலை வரும்போது உனக்கு மட்டுமே இந்த வேலையில் முன்னனுபவம் இருப்பதால் உன்னால் மட்டுமே செய்ய முடியும் என்று சொல்வதும், பெரும்பாலான மேலாளர்கள்/முதலாளிகள் பயன்படுத்தும் பொதுவான சூத்திரங்கள்.

66. மனிதன், எத்தனை அழகாக மாறுவேடம் போட்டாலும், காலமும் சூழ்நிலையும் அவனது இயல்பு குணத்தைக் காட்டிக் கொடுத்துவிடும்.

67. திறமைகள் இன்றி அதிஷ்டத்தால் ஜெயித்தவர்களும் இருக்கிறார்கள். திறமை இருந்தும் தொடர்ச்சியாக தோற்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இந்த நிலை இருவருக்கும் நிலையல்ல.

68. கோபம் என்பது வெறுப்பின் ஒட்டுமொத்த அடையாளமல்ல. இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள் அதிகம்

69. இவர்கள் எனது தொண்டர்கள் என்று சொல்லும் எந்த ஒரு தலைவனும், அவர்களை தன்னைக் காட்டிலும் தாழ்ந்தவனாகவே பார்க்கிறான். இவர்கள் எனது தோழர்கள் என்று சொல்லும் எந்த ஒரு தலைவனும் அவர்களை தனக்கு நிகராகவே பார்க்கிறான்.

70. உனக்காக யாரோ ஒருவர் மனம் வருந்தி அழுகிறார் என்றால், அவரை ஒருமுறையாவது நீ மனம்விட்டு சிரிக்க/ரசிக்க வைத்திருப்பாய் - தெரிந்தோ தெரியாமலோ.


முந்தைய பாகம் : அகல் மொழி பத்து - பாகம் 6

~ அகல்

4 comments:

  1. அருமையான மொழிகள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. அருமையான அகல் மொழிகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் குமார் சார்...

      Delete