சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்: சில உண்மைச் சம்பவங்கள்
நண்பர்களே வணக்கம். இங்கே நான் எழுதியிருப்பது பெரியரைப்பற்றியல்ல. சில உண்மைச் சம்பவங்களைப்பற்றி .!
சமூக சீர்திருத்தம் செய்தல், சாதிமுறைப் பிரிவினைகளை முற்றிலுமாக ஒழித்தல், மூட நம்பிக்கைகளை களைதல், பெண்விடுதலைக்காக பாடுபடுதல் என்ற மிகபெரும் கொள்கைகளோடு வாழ்ந்து, மூட நம்பிக்கைகளின் மேல் மிகப்பெரும் புரட்சியை உலகிற்கு அறிமுகம் செய்த வைக்கம் வீரர் ஐயா ஈ. வெ. இராமசாமி அவர்களின் நினைவு நாளான இன்று (24/12/12) "சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்" என்ற தலைப்பில் நான் இந்த கட்டுரை எழுதுவது சிலருக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். பலர் இந்த தலைப்பை ஆதரிக்கவும் செய்யலாம். தலைப்பிற்குள் போகும்முன் முதலில் ஐயா ஈ.வெ.ரா மற்றும் புரட்சித்தலைவர் எம். ஜி . ராமச்சந்திரன் அவர்களுக்கு எனது நினைவு அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
எதற்காக இந்த பதிவு
மதுரை மாவட்டம் சின்னப்பட்டியைச் சேர்ந்த சிதம்பரம் என்ற முடிதிருத்தும் முதியவர், தனது முதுமையின் காரணமாக அந்த தொழிலை செய்ய இயலாததால் அந்த ஊர் தலைவர் மற்றும் சிலரால் ஊரைவிட்டே ஒதுக்கி வைத்த செய்தியை "புதியதலைமுறை" தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. அதோடு நிற்காமல் சுமார் பத்துநாட்களுக்கு முன் அதைப்பற்றிய விவாதத்தை "நேர்பட பேசு" என்ற அவர்களின் நிகழ்ச்சியில் ஒரு விவாதமும் நடத்தினர்.
அதற்கு சிறப்பு விருந்தினராக கோயம்பத்தூர் சாதிச் சங்கத்தைச்(கட்சி) சேர்ந்த ஒருவர் கலந்துகொண்டார்.
ஆரம்பம் முதல் இறுதிவரை மேற்போக்காக சாதிக் கலவரம் கூடாது என்று அவர் கூறினாலும், மேல் சாதிக் காரர்கள் எந்த தவறையும் செய்வதில்லை, கீழ் சாதிக்காரர்களை யாரும் ஒடுக்குவதுமில்லை என்று அவரது வார்த்தைகள் யாவும் சாதியை ஆதரிப்பதாகவே இருந்தது. இதோடு நிறுத்தி இருந்தால் இந்த பதிவை நான் எழுதுவதற்கான தேவையும் வந்திருக்காது என நினைக்கிறேன்.
ஆனால் அவர் ஒரு வரியை மேற்கோள் கட்டினார் "எந்த கிராமத்திலாவது ஒரு கீழ் சாதிக்காரன் ஒடுக்கப்படுகிறான் என்று யாரையாவது சொல்லச் சொல்லுங்கள், ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்". யாரும் அப்படி செய்வதில்லை என அப்பட்டமாக தனது வாதத்தை வைத்தார். எனது சொந்த ஊர் ஒரு சிறு கிராமம் என்பதால், ஏசி அறையில் அமர்ந்து கொண்டு வெறும் வாய் பேசும் இது போன்ற சாதியவாதிகளுக்கு எனது கிராமத்தில் நடந்த சில நிகழ்வுகளை மேற்கோள்காட்டி பதிலடி தரவே இந்த பதிவை எழுதுகிறேன்.
அப்படி என்ன நடந்தது ..?
எனது சொந்த ஊர் திருச்சி மாவட்டத்துல உள்ள ஒரு கிராமம். நான் பொறியியல் முடித்துவிட்டு கடைசி அஞ்சு வருசமா வெளியூர்ல வேல செய்யறதால அப்பப்ப வீட்டுக்கு போறப்ப ஊர்ல என்ன நடந்ததுன்னு என் அம்மாட்ட கேட்டு தெரிஞ்சுக்குவேன். அதில சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
எங்க ஊர்ல ஒரு சில கீழ்சாதி குடும்பங்கள் இருந்தது(கீழ்சாதி என்று சொல்லப்படுகின்ற) அதுல சில குடும்பங்கள் காலப்போக்கில் வெளியூர்ல போயி நிரந்தரமாக தங்கிட்டாங்க. ஒரு குடும்பம் மட்டும் இருந்தது. அதுல ஒரு பையன். ரொம்ப நல்லா படிப்பான். அவனுக்கு என்ன கெட்ட காலமோ, ஒரு பொண்ணோட பழக்கம். அந்த பெண் மேல்சாதி (மேல்சாதி என்று சொல்லப்படுகின்ற) பழக்கத்தோட இருந்தா பரவாயில்ல. ரெண்டு பெரும் எல்லை மீறிட்டாங்க.
ஆனா இந்த தவறுக்கு ஏதோ அந்த பையன் மட்டும் தான் காரணம் என்கிற முறையில், அவனை அந்த பெண்ணின் சாதிக்காரர்கள் சேர்ந்து அடி பிரித்துவிட்டனர். ஊரை விட்டு விரட்டினர். அந்த பையன் குடுப்பம் காவல்நிலையம் போனதால், ஒருவழியாக ஏதோ செய்து சரிகட்டி இந்த விவகாரம் முற்றுப்பெற்றது. இப்ப அந்த குடும்பம் பக்கத்து ஊர்ல இருகாங்க.
சமீபத்தில், அதே கிராமத்துல நாங்க ஒரு வீடு கட்டி பால் காச்சினோம். அதற்கு அந்த பையனோட சித்தப்பா வந்திருந்தார். சாப்ட்டு முடிஞ்சு வாறவங்களுக்கு ஒரு தட்டில் வெத்தள பாக்கு வைத்து நான் கொடுத்துக்கொண்டு இருந்தேன். அப்போது அவர் வந்தார். அவரிடமும் தட்டை நீட்டினேன். அவர் "இல்ல தம்பி நீங்களே எடுத்து கொண்டுங்கனு" சொன்னேர். இல்ல நீங்களே எடுதுக்கங்கனு சொன்னேன். நீங்க பண்றது உங்களுக்கு வேணும்னா சரியா இருக்கலாம். இங்க யாரும் ஏத்துக்க மாட்டங்க என்றார். மனம் வருந்தினேன்.
அதேபோல் ஒருமுறை எங்க ஊர்ல இருந்து வெளியூர் போன மேல்சாதி பையன் ஒருத்தன், கீழ் சாதிப்பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்தான். அவன்ட யாரும் பேசல. அவங்க வீட்டுக்கும் யாரும் போறதுல்ல. இதனால அவன் மறுபடியும் மனைவிய கூட்டிகிட்டு வெளியூர் போயிட்டான். அவனோட அப்பா இறந்ததுக்கு அவன் வந்தான். கிராமத்து கலாச்சாரம் தெரிந்தவங்களுக்கு ஒன்னு தெரிஞ்சிருக்கும். இறந்தவங்க வீட்டின் முன், அந்த வீட்டு ஆண்கள்/பங்காளிகள் நின்று வருவோருடன் கை தழுவுதல் வழக்கம். ஆனா சொந்த அப்பா இறந்ததர்க்கே அவனை யாரும் நிற்க விடல. அத்தனை சாதி வெறி. இப்போது அவன் ஊருக்கே வருவதில்லை.
இப்படி மேல்சாதி ஆண்கள் கீழ்சாதி பொண்ண திருமணம்செஞ்சா, அதிகபட்சம் நான் மேல சொன்ன மாதிரி நடக்கும். ஆனா இதையே ஒரு மேல்சாதி பொண்ணு செஞ்சா அவ்ளோ தான். என்ன நடக்கும் தெரியுமா .? அவள எப்படியும் கண்டுபிடிச்சு கட்டின தாலிய பிடிகிட்டு மேல்சாதி பையனுக்கே கல்யாணம் பண்ணி வைப்பாங்க (இதுமாதிரி நடக்குறப்ப, ரொம்பநாளா பொண்ணே கெடைக்காத ஒருத்தனுக்கு எப்படியும் கல்யாணம் ஆகிடும்). அதே போல் எனது பள்ளி பருவத்தில், கீழ் சாதி மனிதர்களுக்காக தனியா தேனீர் கடைகளில் தேநீர் தர அலுமினிய பாத்திரம் தந்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.
அதோடு கிராமத்திற்குள் கீழ்சாதி மக்கள் வரும்போது தங்களின் காலணிகளை கலட்டி கையில் பிடித்துக்கொண்டு வெறும் காலுடன் வருவது வழக்கம். நான் பொறியியல் முடிக்கும் வரை இதை அறிவேன். அதற்கு பிறகு வேலைக்காக வெளியூர் வந்ததால் இந்த நடைமுறை இன்னும் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.
எங்க கிராமமும் பக்கத்து கிராமமும் சேர்ந்து மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழா நடத்துவாங்க. கோவில் இருப்பது பக்கத்து ஊர்ல. அந்த கோவில் திருவிழா மூணு வருசமா நடக்கல. காரணம் என்ன தெரியுமா .? கோவில் பூசாரியோட பொண்ணு, மேலே சொன்ன ஒரு சாதிக்கார பையன கல்யாணம் பண்ணிகிட்டா. இதுக்கெல்லாம் கோவில் திருவிழாவ நிறுத்துவாங்கலானு நீங்க கேக்கலாம். ஆனா நிறுத்தினாங்க. சில பஞ்சாயத்துக்கப்பறம் திருவிழா நடந்தது.
இந்த உதாரணங்களை வைத்து, எனது ஊர் ஒரு அடிமட்ட கிராமம் இதைவிட கேவலமா யாரும் செய்யமாட்டங்கனு முடிவுக்கு வரவேண்டாம். ஏன்னா இதவிட பின்தங்கிய மோசமான நிகழ்வுகள் தமிழகத்தின் பல கிராமங்களில் நடந்துகொண்டு தான் இருக்கிறது. சாதிகளின் பேரில். இவற்றை வைத்து பல சாதிக்கட்சிகளும் சாதிச்சங்கங்களும் குளிர் காய்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எனக்கு ஞாபகத்தில் இருந்த சில நிகழ்வுகளை மட்டுமே இங்கே மேற்கோள் காட்டினேன்.
இத்தனை நிகழ்வுகளை நான் கூறியதால், இவன் கீழ்சாதிக்காரனாக இருப்பான் அதனால் தான் இத்தனை குறைகளைக் கூறுகிறான் என்று எனக்கு பட்டம் கொடுக்கவும் ஒரு கூட்டம் இருக்கும். ஆனால், இங்கே மேல்சாதி என்றுயாரைச் சுட்டிக் காட்டினேனோ அதே சமூகத்தில் இருந்து வந்தவன்தான் நான். "புதியதலைமுறை" தொலைக்கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த பெரியவரின் சமூகத்தைச் சேர்ந்தவன் (மனிதம் தவிர எதிலும் நம்பிக்கை இல்லாத, சாதிய முறைகளில் முற்றிலும் உடன்பாடு கொள்ளாத இளைஞன். ஆனால் சில உண்மைகளை மேற்கோள் காட்டவே இங்கு அதைக் குறிப்பிடும் படியாக ஆனது. மன்னிக்கவும்).
நான் மேலே சொன்னதுபோல், தொலைக்கட்சியில் வாதம் செய்த அந்த மேல்சாதியைச் சேர்ந்தவர், ஒரு கிராமத்தில் நடந்த ஒரே ஒரு நிகழ்வை மேற்கோள் காட்டச்சொன்னர். நான் பல நிகழ்வுகளை மேற்கோள் காட்டினேன்.
இது சாதி கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். நீங்கள் சொகுசாக வாழ "சாதிமுறைப் பிரிவுகள் கட்டாயம் வேண்டும்" என்ற எண்ணத்தோடு தொலைக்கட்சியில் பேசுவதை காதுகொடுத்து கேட்டுவிட்டு, சரி என்று மனதில் ஏற்றிக்கொண்டு உங்கள் பின்னால் திரிய நாங்கள் மண்ணைத் தின்னும் மடையர்கள் அல்ல. இந்த தலைமுறை இளைஞர் பட்டாளாம் உங்களை நம்பும் ஈனப் பிறவியுமல்ல. காலம் கடந்து கொண்டிருக்கிறது. உங்கள் சாதியையும் சாதி வெறிகளையும் எலும்பொடித்து முடமாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. எச்சரிக்கையாக இருங்கள். எமன் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
நன்றி..!
அன்புடன்,
அகல்
இந்த சாதி வெறி எப்பதான் முடியப் போகுதோ..:(
ReplyDeleteஆண் ஜாதி பெண் ஜாதி என்ற இரண்டும் இருந்தால் பொதும் ஏனைய ஜாதிகள் வேண்டாம்.
இன்றைய இளைஞர்கள் பெறியவர்களின் ஜாதி தொடர்பான கருத்துக்கலை வழுவிழக்கச் செய்யும் செயற்பாடுகளை செய்வதற்கு முன்வந்தால் நல்லது..
இந்த சாதிவெறி எப்போதுதான் முடியப்போகிறது என்ற கேள்விக்கு பதில் அழிப்பது சற்று கடினம் தான்.. இருந்தாலும் நீங்கள் சொன்னதுப்போல் இளைய தலைமுறை மனது வைத்தால் சில மாற்றம் வரலாம்.. நன்றி நண்பரே சிட்டுக்குருவி..
Deleteஒரு மாற்றமும் வராது என்றுதான் நினைக்கிறேன், இப்போதுதான் ஜாதி கட்சியை வளர்க்க நிறைய கட்சி தலைவர்கள் மறைமுகமாக வளர்த்துவருகிரார்கள்.
Deleteஉண்மைதான் நண்பரே :)
Deleteநல்ல பதிவு அகல்.
ReplyDeleteமிக்க நன்றி முரளி சார்..
Deleteகீழ் சாதிகாரர்கள் பொரும்பான்பையான பகுதியில் மேல் சாதியினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று தெரியுமா? கிளுகிளுபான ஆடையை அணிவித்து செய்திகள் சொல்ல வைத்து தமிழகத்துக்கு புதிய கலாசாரத்தை தொடங்கிவைத்திருக்கும் ஆர்வக்கோலார் உள்ள புதிய தலைமுறை சேனலெல்லாம் இருக்கும் போது எல்லோரும் அடிமைபட்டு கிடக்கிறார் என்ற மாயை எத்தனைகாலம் சொல்லிக்கொண்டிருப்பீர்.மனிதன் உருவானது முதல் ஒருவரை ஒருவர் அடிமை படுத்துவது இயல்பான ஒன்று இந்த நாகரீகாலத்தில் மற்றவற்களுக்கு இணையாக முன்னேற கற்றுக்கொடும்.அது இல்லாமல் இப்படி சாதிய உணர்தூண்டாதேயும்,
ReplyDeleteகருத்திற்கு மிக்க நன்றிகள் சோழன். இங்கே பதிந்திருக்கும் செய்திகள் திரித்துவிட்டோ சாதிய உணர்வுகளை தூண்டும் படியாகவோ சொல்லப்படவில்லை. நான் சிறுவயது முதல் எனது கிராமத்தில் சக மனிதர்களிடம் பார்த்து பழகி என் மனதில் பதிந்த ஒன்று. அடிமைபடுத்துதல் இயல்பான ஒன்று என இயல்பாக சொல்கிறீர்கள். ஆனால் அடிமைப்படு பவனுக்குதான் அதன் வலி புரியும் (நம்மில் ஒருவரை கோவிலுக்குள் போகாதே, நீ தகுதி இல்லாதவன் என ஒருவன் சொல்லும் போது அதன் வலி தெரியும்). முதலில் அடிமைப்படுதுதலை நிறுத்தினால் இணையான முன்னேற்றம் தானாக நடக்கும். அதை கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து.
Deleteagayal thaan kamarajar romba siramapattu sathi vazhi kalviyai olithar avar illayendral neengal yaarudanum palagi iruka mattirgal enbathu thaan unmai.
Deleteநல்ல பதிவு நண்பரே! கலக்கல்
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆகாஷ் ..
DeleteA different view !
ReplyDeleteThanks boss ..
Deleteநண்பரே! நீங்கள் சொல்வதில் எதுவும் மிகை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. காரணம் இதை விட மோசமான நிகழ்வுகளை கடலூர் அருகிலிருக்கும் கிராமங்களில் சில பல வருடங்களுக்கு முன்னால் பார்த்தவன். இப்போது உள்ள நிலைமை எனக்கு தெரியவில்லை. அந்த சமயத்தில் சில நேரங்களில் பாதிக்கப்பட்ட அந்த இனத்தவரின் மேல் உள்ள இரக்கம் அதிகமாகி என் உறவினர்களின் மேல் அடங்க இயலா கோபம் வரும். ஆனால் அவர்களோ ஏதோ நாலு எழுத்து படிச்சிட்டா எல்லாந் தெரிஞ்ச மாதிரி வந்திடுறான் மயி....ன் என்று ஒரேயடியாக நம்மை ஒண்ணுந் தெரியாத மடையனாக ஆக்கி ஒதுக்கி விடுவார்கள்.
ReplyDeleteம்..ம்.. என்று தணியும் எங்கள் சமத்துவ தாகம் என்று மடியும் எங்கள் ஆதிக்க மோகம் என்று பாடிக்கொண்டே போக வேண்டியத்தான்
இதைப்பற்றி படித்தவன் கிராமத்தில் பேசினால், எல்லா கிராமக்களிலும் இருந்து வரும் பதில் நீங்கள் கூறியது தான் நண்பரே.. அப்படியே வருத்ததோடு வழிமொழிகிறேன்... வருகைக்கு நன்றி நண்பரே..
Deleteவணக்கம் சகோ ,
ReplyDeleteஅருமையான பதிவு.சாதி ஒடுக்குமுறை என்பதும் கால ஓட்டத்தில் மாறும். பல வேடம் போடும். இபோதைய சாதி வெறியர்கள் பேச்சில் சாதிவெறி காட்ட மாட்டார்கள்,வெளியில் தெரியாமல் செயலில் மட்டுமே!!.
பேச்சில் சாதிவெறி,மேட்டிமை காட்டுவது தவறு என உணர்ந்தது மட்டும் போதாது,செயலில் காட்டுவதை அம்பலப்ப்டுத்தினால் மட்டுமே நிலை மாறும்!!.
அதில் உங்கள் பதிவின் பகிர்வுகள் அருமை!!இதுதான் எதார்த்த கிராமிய சூழல். நக்ரத்தில் கலப்புத் திருமணம் இயல்பாக ஏற்கப்படுவது இல்லை!! அது வேறு!!
இப்படி பலரும் சாதிக் கொடுமை செய்வோரை அம்பலப் படுத்தினால் சாதிவெறி காணாமல் போய் விடும்.!!
மிக்க நன்றி
வருகைக்கும் உங்கள் ஆழமான பார்வைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..
Deleteநல்ல பதிவு நண்பரே..
ReplyDeleteஅமர்க்களம் கருத்துக்களம்
http://www.amarkkalam.net/
மிக்க நன்றி நண்பா ..
Deleteஅண்ணா நீங்க எழுதியது சரியே.....
ReplyDeleteMikka nandri nanbare...
Deletearumai.....jathi pirivinai adutha thalaimuraiku thodarathu entu nambukiren....even i dont know about my friends caste and all..so hope sooo
ReplyDeleteMikka nandri Jans...
Delete