சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும்
நாம எந்த ஒரு காரியம் செஞ்சாலும் அதற்கான ஆதரவும் எதிர்ப்பும் மக்களிடையே பெரும்பாலும் இருக்கும். இது எதார்த்தம். அப்படியாக நான் செய்த ஒரு செயலுக்கு பெருத்த ஆதரவு இருந்தாலும் அதற்காக நான் வருத்தப் பட்டதும், சிலர் என்னை வருத்தப்பட வைத்ததும் கொஞ்சம் அதிகம் தான். நான் என்ன அப்படி செஞ்சேன். எதுக்காக இந்த வருத்தம். வாங்க பாப்போம்.
ரத்ததானம்
ரத்தம். இது வெறும் வார்த்தையல்ல. விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியிலும் மனிதனால் உருவாக்க இயலாத ஒன்று. இயற்கை மனிதனுக்கு விடும் சாவலில் இதன் ஆக்கமும் ஒன்று. பணம் படைக்காத சாமானியனாலும் ஒரு உயிரை காக்க முடியுமானால், அது இந்த ரத்த தானத்தில் சிலமுறை சாத்தியமாகும். இதன் ஓட்டம் நிற்கும் வேலையில் மனிதனில் ஓட்டமும் நின்று போகிறது.
இப்படியான ஒப்பற்ற தானத்தை செய்ய முன்வருவோர் என்னவோ வெகு சிலர்தான். அதனால் தேவையற்ற உயிரிழப்புகளின் எண்ணிகையும் ரத்த தானத்தின் தேவையும் மிக அதிகம். காரணம், பெரும்பாலும் எந்த ஒரு உயிரைக்காக்கும் அறுவைச் சிகிச்சையும் மிகுதியான ரத்தம் இன்றி நடப்பதில்லை. இதைப் பலரும் அறிவர். நானும் நன்கு அறிவேன். ஆகையால் bharatmatrimony யின் சமூக தளமான www.bharatbloodbank.com லும்,சில மருத்துவமனைகளிலும் 2008 முதல் என்னை இணைத்துக் கொண்டுஇந்த தானத்தை தேவைப்படும் போதெல்லாம் செய்து கொண்டு வருகிறேன்.
மிகவும் படித்து பண்புற்றவர்கள் ஆனாலும், பலருக்கு இன்னும் இந்த ரத்த தானத்தைப் பற்றிய பயம் இருக்கத்தான் செய்கிறது. அதில் சிலர், அவர்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறந்து தானம் செய்ய மனமின்றி சுயநலமாக வாழ்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இது ஒருபுறம் இருக்க, மறு புறம் இதற்கான விழிப்புணர்ச்சியும் சற்று குறைவாக இருப்பது ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு மற்றும் ஒரு காரணம். அதோடு தங்களுடைய ரத்தம் சற்று இலகுவாக கிடைக்காத பிரிவாக இருக்கும் பட்சத்தில் பலர் அதை தானம் செய்ய முன்வருவதில்லை.
எனது ரத்தம் O நெகடிவ். நெகடிவ் வகை ரத்தம் உள்ள மனிதர்களின் எண்ணிக்கை வெகு குறைவு என்பதை பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள். தெரியாத பட்சத்தில், இந்திய மக்கள் தொகையில் குறிப்பிட்ட ரத்த பிரிவைச் சார்ந்த மக்களின் சதவீதம் கீழே.
0 பாசிடிவ் - 36.5%
A பாசிடிவ் - 22.1%,
B பாசிடிவ் - 30.9%,
AB பாசிடிவ் - 6.4%
O நெகடிவ் 2.0%
A நெகடிவ் - 0.8%
B நெகடிவ் -1.1%
AB நெகடிவ் -0.2%
விழிப்புணர்ச்சிக்காக எனது முயற்சி
ரத்த தானத்தைப் பற்றி ஒரு தனிமனிதனால் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இயலுமா ..? என்றால், ஆம் ஒரு சிலருக்காவது ஏற்படுத்த இயலும் என்ற நம்பிக்கையோடு எனது வண்டியின் பின்னே இவ்வாறு எழுதினேன்.
என்னால் அதிகமான நண்பர்களிடம் இதைப்பற்றி பேச முடியாவிட்டாலும் இந்த வாசகம் நான் போகும் இடங்களில் பார்க்கும் ஒருவருக்காவது ரத்த தானத்தைப் பற்றி உணர்த்தும் என்ற நம்பிக்கையோடு, கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக இதை எனது வண்டியில் வைத்துள்ளேன். அதற்கான பலனையும் நேரடியாக கண்டேன்.
இணயதளங்களிலும், செய்தித் தாள்களிலும்
எனது வலைப்பூவை தொடரும், படிக்கும் நண்பர்களுக்கு நான் புகைப்படம் எடுப்பதில் அதிக நாட்டம் கொண்டவன் என்பது தெரிந்திருக்கும். அப்படியாக மேலே உள்ள எனது வண்டியை இந்த வாசகத்துடன் புகைப்படம் எடுத்து எதார்த்தமாக எனது முகநூளில் பதிவிட்டிருந்தேன். பதிவிட்ட சில மாதங்களுக்கு பிறகு, எதிர்பாராமல் முகநூளில் பல ஆயிரம் பேர் இந்த புகைப்படத்தைப் பகிரவே, தினமலர், விகடன், மற்று ஒரு தெலுங்கு செய்தித்தாளிலும் இது பிரசுரமானது எனக்கு தெரிய வந்தது. அதன் தினமலர் பதிவு கீழே.
நான் பட்ட பாடு
எனது தொலைபேசி எண் இந்த படத்தில் இருப்பதால், பல பெரிய மனிதர்களும், நண்பர்களும் உலகின் பலமுனைகளில் இருந்தும், இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களில் இருந்தும் எனக்கு வாழ்த்து அழைப்புகள் செய்துகொண்டு இருந்தனர். அதில் பல இளைஞர்கள், பயனுள்ள இந்த முயற்சியை தாங்களும் தங்கள் வண்டிகளில் பயன்படுத்துகிறோம் என்று கூறியதில் மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் இந்தப் படம் இப்படி பரவும் என்றோ மக்கள் இப்படி தொலைபேசி அழைப்புகள் தருவார்கள் என்றோ நான் துளியும் எதிர்பார்க்கவில்லை. காரணம் நான் இதை எனது சுய விளம்பரத்திற்காக செய்யவில்லை.
ஒருபுறம் இதைப் பாராட்டி நண்பர்கள் அழைத்தாலும், மறுபுறம் நான் மிகவும் வருந்தத்தக்க செயலும் நடந்து கொண்டிருந்தது. சிலர் இந்த எண் சரியானதா என்பதை அறிய missed call களை இரவுபகல் பாராது கொடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் குடித்துவிட்டு நான் இப்போது இந்த இடத்தில் இருக்கிறேன் எனக்கு உனது ரத்தம் அவசரமாக வேண்டும் என்றார்கள். சிலர் தங்களது பொழுதுபோக்கிற்காக அழைத்து கேலிக்காக ரத்தம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சில விலை மாதுக்களிடம் இந்த எண் சிக்கிவிடவே அவர்களின் அழைப்பும் மிகவும் வருந்த வைத்தது.
இந்த புகைப்படம் முகநூளில் அதிகம் பரவியதால், இந்த தவறான தொலைபேசி அழைப்புகளை தவிர்க்க வேண்டி இவ்வாறு எனது முகநூல் பக்கத்தில் நான் செய்தி வெளியிடவும் நேர்ந்தது. அந்த பதிவு கீழே.
https://www.facebook.com/photo.php?fbid=505375432816262&set=a.419334081420398.91579.419268418093631&type=1&theater
இதெல்லாம் பார்க்கையில் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது ஒன்றுதான். "கெட்டதிலும் ஒரு நல்லது நடந்தது என்பார்கள். ஆனால் எனக்கு நல்லதில் தான் சில கெட்ட விடயங்கள் நடந்தது". இருந்தாலும் இதைப் பொருட்படுத்தாது எனது பயணத்தைத் தொடர்கிறேன். நன்றி.
உங்கள் செயல் பாராட்டுக்குரியது.நல்லது செய்வதையும் கிண்டல் கேலி செய்யும் உலகம் இது.அவர்களுக்கு துன்பம் நேரும்போதுதான் உணர்வார்கள்
ReplyDeleteஉண்மைதான் முரளி சார்.. தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி..
Deleteஉண்மையில் பாராட்டுக்குரிய செயல் தொடருங்கள்.
ReplyDeleteதங்களது ஆதரவுக்கு நன்றிகள் சசிகலா மேடம்..
Deleteநல்ல செயல்கள் விமர்சனங்களை பெறவே செய்யும்! நல்லதொரு முயற்சி தொடருங்கள்! நன்றி!
ReplyDeleteஉண்மைதான்.. தங்கள் கருத்திற்கு நன்றிகள் சுரேஷ்...
Deleteநல்ல முயற்சி !
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...
நன்றி நண்பரே ..
Deleteஅழகான முயற்சி என்னுடைய நண்பர்களும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டதை அவதானித்தேன் அது உங்களுடையது என்பதில் பெருனைப்படுகிறேன்...
ReplyDeleteஎன்ன செய்வது எமது சமூகத்தில் கேளிக்கைக்கும் வீணான செயல்களுக்கும் நிறையப் பேர் இருக்கிறார்களே..
வலைப்பக்கம் அழகாக இருக்கிறது
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பா... நேத்தைக்குத்தான் வலைப்பூவை கொஞ்சம் மாத்துனேன் :)..
Delete
ReplyDeleteகவலைப் படாது தங்கள் பணி தொடரட்டும்! வாழ்த்துக்கள்!
கண்டிப்பாக ஐயா.. தங்களின் வருகைக்கு நன்றி..
Deleteஉண்மைதான். சில சமயம் இப்படி நாம் எதிர்பார்க்காத தலைவலிகளும் வரும். இதையும் தாண்டி வரும் பாராட்டுகளும், உங்கள் செயலை பின் தொடர்வதாக பலர் சொன்னதுதான் இறுதியான லாபம்.
ReplyDeleteஇந்த தலைவலி விரைவில் மறையலாம். வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..
Deleteஉபகாரம் செய்யப்போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொள்வது மனிதனுக்கு வாடிக்கைதானே.
ReplyDeleteஉங்கள் நற்பணி நல்ல முறையில் தொடர வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெயந்தியம்மா..
Deletenenka kasta patalum athil sila nanmaium nadanthirukum ila sir...so atha ninachu santhosa padunka..(i know its too late wishes)but antway keep on doing good things to this society sir.
ReplyDelete