Friday, 5 July 2013

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

திவ்யாவின் காதல் கணவன் தர்மபுரி இளவரசனின் இறப்பு யாவரும் அறிந்த ஒரு விடயம். இந்த சம்பவத்திற்கு சாதிவெறி முக்கிய காரணம் என்றாலும் ஊடகங்களுக்கும் அதில் பக்கு உண்டு. இதற்கிடையே சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது இளவரசனின் இறப்பு கொலையா ? தற்கொலையா ? என்ற ஒரு பெரிய கேள்வி மனதில் குடிகொள்ள காரணங்கள் கண்முன்னே கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் அதைப் பற்றிய எனது பார்வையை மட்டும் பதிவு செய்ய கனத்த மனதுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.
1. நீதிமன்ற விசாரணையின் போது இளவரசன் தன்னை வற்புறுத்தி கூட்டிச் சென்றார், மிரட்டினார், கடத்தினார் என்ற எந்த பழியையும் இளவரசன் மீது திவ்யா போடவில்லை. இரண்டு தினங்களுக்கு முன், எனது தாயாரின் நலன் கருதி அவருடன் வாழ்வேன், இளவரசனுடன் இனி வாழப்போவதில்லை என்று நீதி மன்றத்தில் திவ்யா கூறினார். ஆனால் இளவரசனை வெறுத்து விலகியதாகக் கூறவில்லை. திவ்யா தன்னை முற்றிலும் வெறுத்திருக்கும் பட்சத்தில் இளவரசன் தற்கொலை முயற்சி செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் திவ்யா தன்னுடன் வாழப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிய பிறகும் அவர் எனக்குக் கிடைப்பார், நம்பிக்கை இருக்கிறது. திவ்யாவைச் சுற்றி இருப்போர் அவரை சுயமாக முடிவெடுக்க விடாமல் தடுக்கிறார்கள் என்று சலமில்லாமல் தனது கடைசிப் பேட்டியில் சொல்லி இருக்கிறார். 
2. இளவரசனின் முந்தய பேட்டிகளைப் பார்த்தல் அவரின் தெளிவும், தைரியம் நமக்குத் தெரியும். அதோடு திவ்யாவை விட்டுவிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள இளவரசனுக்கு திவ்யா வெறும் காதலியல்ல, மனைவி. தனக்குச் சொந்தமானவள். திவ்யா வார்த்தையளவில் வேண்டாம் என்று கூறியிருந்தாலும், அவள் தனது மனைவி என்பதால் சட்டம் இருக்கிறது எப்படியும் சேரமுடியும் என்ற நம்பிக்கை இளவரசனுக்கு இருந்திருக்கும்.
3. அப்படியே திவ்யாவின் வார்த்தைகளால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக வைத்துக் கொண்டாலும், புகைப்படங்களில் காணப்படும் இளவரசனின் உடல், ரயில்முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவில்லை. காரணம், அவ்வளவு வேகமாக வரும் ரயிலின்முன் விழுந்து தற்கொலை செய்துகொள்பரின் உடல் இவ்வாறு சில காயங்களுடன் தப்பி இருக்க வாய்ப்பில்லை. ஒரு பக்க முகமும், தலையும் மட்டும் காயம் அடைந்திருக்கிறது, சட்டைகூட பெரிதாக கசங்கவில்லை என்று செய்திகளில் படிக்க முடிகிறது. ரயில் விபத்தில் பெருத்த காயங்கள் இல்லாமல், சட்டை கசங்காமல் தலையில் மட்டும் காயங்களுடன் சாவது பெரும் ஆச்சர்யத்திற்குரியது.
4. சாதிய சக்திகள் ஒன்றுகூடி இளவரசனுடன் வாழபோவதில்லை என்று திவ்யாவைக் கூற வைத்த பிறகு, அவர்களின் அடுத்த நோக்கம் தங்களது சாதியைச் சேர்ந்த ஒரு ஆணிற்கு அந்தப் பெண்ணை கூடியவிரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இளவரசன்-திவ்யாவின் திருமணம் நாடறிந்தது. அதற்கான ஆதாரங்கள் இருப்பதால் அது சட்டப்படி செல்லக்கூடிய திருமணம்.
மறுமணம் செய்து வைக்க வேண்டுமானால் விவாகரத்துப் பெறவேண்டும். அதற்கு அந்தப் பெண்ணை ஒத்துக் கொள்ளவைத்தாலும், இளவரசன் இருந்த நிலைப்பாட்டில் அவர் திவ்யாவைப் பிரிய ஒத்துக் கொண்டிருக்க மாட்டார். அப்படியே ஒத்துகொண்டாலும் குறைந்தது ஒருவருடம் விவாகரத்திற்காக காத்திருக்கவேண்டும். அதற்குள் திவ்யா மீண்டும் தனது மனதை மாற்றிக்கொண்டு இளவரசனுடன் போனால் இதுவரை தங்கள் சாதியைக் காக்க செய்த போராட்டங்கள் வீணாகிவிடும் என்று அவர்கள் கருதி இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. இளவரசன் இறந்துவிட்டால் உடனடி மறுமணம் சாத்தியம் என்ற எண்ணம் தலைதூக்கி இருக்கலாம். அதனால் இந்த அவலமும் அரங்கேற்றப் பட்டிருக்கலாம்.
திவ்யா தனது தாயுடன் போக மிக முக்கியமான காரணம் அவர் தந்தையின் இறப்பு. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் என்பது அவரது பேச்சில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அந்த ஒரு காரணத்தை வைத்தே சாதிய சக்திகள் திவ்யாவை உணர்வுப் பூர்வமாக அணுகி, அவரது சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கி இருப்பார்கள். இளவரசனோடு போனால் நானும் இறந்துவிடுவேன் என்று அவரது தாயும் பயமுறுத்தி இருப்பார். என்ன செய்வதென்று தெரியாத பேதையாய், மன அழுத்தம், சாதிய நிர்பந்தம் இவற்றிற்கிடையே வேறு வழியில்லாமல் திவ்யா இளவரசனுடன் இனி வாழப்போவதில்லை என்று வார்த்தையளவில் மட்டுமே சொல்லி இருக்க வேண்டும்.
இதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா ? இல்லை இது தற்கொலையானால் அதற்கான சரியான காரணங்கள் என்ன என்பதை சாதிய/அரசியல் ஈடுபாடில்லாத, முறையான விசாரணை நடத்தப்பட்டால் வெளிச்சத்திற்கு வரும் என்று நம்புகிறேன். அப்படி நடக்குமா என்பதும், அப்படியே நடத்தாலும் விசாரணையை முடிக்க எத்தனை வருடங்கள் இழுப்பார்கள் என்பதும் பெரும் கேள்விக்குறியே !
"சாதி வெறியால் இளம் காதலர்களை இந்த நிலைக்குத் தள்ளிய நமது சமூகத்தை நினைத்து, ஒரு தமிழனாய் வெட்கித் தலை குனிகிறேன்"

அகல்

6 comments:

  1. நேத்திலிருந்து மனசை என்னமோ பண்ணுது. இனி திவ்யாவின் கதி?! பொம்பளைங்களே இப்படித்தான். சேலை மாத்தும்போதே ஆளை மாத்துவாங்கன்னு சொல்லி சொல்லியே அந்த சின்ன பொண்ணை சாகடிக்காம விட மாட்டாங்க.

    ReplyDelete
    Replies
    1. அந்த பெண் மீது குறை சொல்ல எதுவுமில்லை என்பதுதான் எனது கருத்து ராஜி... அவள் சுயமாக முடிவு எடுக்கமுடியாமல் சாத்திய சக்திகள் நெருக்கி இருக்கும்... இப்போது அந்தப் பெண்ணின் நிலையை நினைத்தால் மிகப் பரிதாபமாக இருக்கிறது...

      Delete
  2. "சாதி வெறியால் இளம் காதலர்களை இந்த நிலைக்குத் தள்ளிய நமது சமூகத்தை நினைத்து, ஒரு தமிழனாய் வெட்கித் தலை குனிகிறேன்"

    ஜாதியால் சாய்ந்த காதல்களில் இன்னும் ஒண்ணு கூடியிருக்கு... மரணித்த இளவரசனின் தாயின் நிலையும் மரணத்திற்கு காரணமானவள் என்று சொல்லப்படும் அந்தப் பெண்ணின் நிலையும்.... நினைக்கவே வருத்தமாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. // ஜாதியால் சாய்ந்த காதல்களில் இன்னும் ஒண்ணு கூடியிருக்கு... மரணித்த இளவரசனின் தாயின் நிலையும் மரணத்திற்கு காரணமானவள் என்று சொல்லப்படும் அந்தப் பெண்ணின் நிலையும்.... நினைக்கவே வருத்தமாய் இருக்கிறது // முற்றிலும் உண்மை தோழர்...

      Delete
  3. நானும் இளவரசனுக்கு நடந்த கொடுமைக்கு வெட்கி தமிழனாய் வெறுத்து போய் உங்களுடன் தலை குனிகிறேன்.
    பதிவுக்கு நன்றி நண்பர்.

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்ய நண்பரே... இன்னும் எத்தனை பாரதி, பெரியார் வந்தாலும் இந்த சாதிய அரசியல் உள்ளவரை பெரிய மாற்றத்தை நோக்கி நமது சமுதாயம் நகரப்போவதில்லை என்பதுதான் நிதர்சனம்...

      Delete