Tuesday, 8 October 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 24

***

பூங்காவின் மையத்தில்
கொஞ்சம் இடைவெளிவிட்டு
அமர்ந்திருக்கிறோம் நாம்


அந்த இடைவெளியில்
நமது குழந்தையைப்போல்
அமர்ந்திருக்கிறது காற்று !

***


எனது விரல்கள்
உன்னையும் 
உனது விரல்கள்
என்னையும்
தொட்டுவிடக் கூடாது
என்று கவனமாக 
நடந்து கொண்டிருக்கிறோம்

தோள்கள் இரண்டும்
உரசிக்கொண்டிருக்கிறது !


***

எனது வீட்டிற்கும்

தூக்கணாம் குருவிக் 
கூட்டிற்கும்
ஒரு வித்தியாசம்தான்

எனக்கு
வீட்டினுள் ஊஞ்சல்
அதற்கு
ஊஞ்சலில் வீடு !


***


அனாதைத்
தேனீக்கள்

பூக்களை மார்பாக்கி
பாலூட்டுகிறது 

பூச்செடிகள் !

***

நெற்றியில்
முத்தமிடுவதிலும்
முந்தானையில்
முகம் துடைப்பதிலும்
அன்பின் ஆழம்
என்னவென்று
அறியவைத்தவள் நீ !


***


அழகு ததும்பிய
நிலா மகளை
ஒளித்து வைக்கும்
முயற்சியில்
ஓடிக்கொண்டே
இருக்கிறது மேகம் !


***

இதுவரை அம்மா
இல்லா
 வருத்தம்
இன்று முதல்
இல்லை என்கிறாள்

என் தோளில் சாய்ந்தபடி !


***

ஐந்து வருடங்களுக்குப்
பிறகும் இதே அன்போடு
இருக்க வேண்டும்
என்கிறாள் அவள்

அறுபது வயதிற்குப்
பிறகும் இதே அன்போடு
இருக்க வேண்டும்
என்கிறேன் நான் !


***

கருவேலங்கட்டிற்குள்
கதறிக் கொண்டிருக்கிறது
சில்வண்டு

அதைக்

கண்டுகொள்ளாமல்
கடந்துவருகிறது
காற்று !


***


உன்னைப்
புரிந்துகொள்ள
ஆசைப்பட்டு
மௌனத்தின் மொழியை
மொழிபெயர்த்துக்
கொண்டிருக்கிறேன் !


***

அன்புடன்,
அகல்

18 comments:


  1. #அந்த இடைவெளியில்
    நமது குழந்தையைப்போல்
    அமர்ந்திருக்கிறது காற்று ! #-
    காற்றுக்கென்ன வேலி என்பார்கள் ...இங்கே அதுவே இடை வேலி ஆகிவிட்டதோ ?
    அருமை அகல் !
    தொடருங்கள் ,தொடர்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா கருத்திற்கு நன்றிகள் நண்பரே..

      Delete
  2. வழக்கமாக காதலியைப் பார்த்துத் தான் எனக்கு தாயில்லாக் குறையை தீர்த்து வைத்தாய் என்பார்கள்.நீங்கள் காதலனையே தாயாக்கி விட்டீர்களே.பூஞ்செடி மற்றும் மேகம் பற்றிய கவிதைகள் நன்றாக இருந்தன.

    ReplyDelete
  3. ஐந்து வருடங்களுக்குப்
    பிறகும் இதே அன்போடு
    இருக்க வேண்டும்
    என்கிறாள் அவள்

    அறுபது வயதிற்குப்
    பிறகும் இதே அன்போடு
    இருக்க வேண்டும்
    என்கிறேன் நான் !

    இந்த கவிதைக்கு மேலே உள்ளவை அனைத்தும் அருமை ....இதற்கு கீழே உள்ளவை ஓகே....இந்த கவிதை உங்களுக்கானதல்ல....என்னைய மாதிரி புது பசங்க எழுதுற மாதிரியானது......வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றிகள் நண்பரே :)..

      Delete
  4. அருமை... வாழ்த்துக்கள்... நன்றி;;;

    அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தனபாலன் சார்..

      Delete
  5. அனைத்து கவிதைகளும் சிறப்பு! தேனி கவிதையும், தோள் உரசிய கவிதையும் மிகவும் ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
  6. பூக்களைக்கூட பால்கொடுக்க வைத்து விட்டீர்கள். ரசித்தேன்.

    ReplyDelete
  7. அனைத்துக் கவிதைகளும் அருமை அகல்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அருணா செல்வம் :)..

      Delete
  8. அழகழகான துளிப்பாக்கள்...

    ReplyDelete