Sunday, 17 August 2014

அன்புள்ள அண்ணனுக்கு தம்பி எழுதுவது...

அண்ணா...
எப்படி இருகிறாய்..?

பார்த்துப் பேசி மூன்று
வருடங்கள் ஆகிப்போனது
நலமாக இருக்கிறாயா..?

சொர்க்கம், நரகம்
என்றெல்லாம்
சொல்கிறார்களே
நீ எங்கு இருகிறாய்..?

ஊருக்கே நல்லவனாயிற்றே
நீ எப்படி நரகத்தில் இருப்பாய்..!?

எத்தனை மருந்திட்டாலும்
எதையும் மறக்க முடியவில்லை
அண்ணா...

உன்னோடு நான் பிறந்த ஊர்
நம் இருவரையும் பெற்றெடுத்த தாய்
இருவரும் சேர்ந்து உணவு 
உட்கொண்ட வட்டில்
நாம் ஒன்றாக ஊர்சுற்றிய நாட்கள்

பள்ளிப் பருவத்தில்
நடந்து என் கால் வலிக்கும் நேரம்,
குதிரையாய் மாறிய நீ
பொதியாய் மாறிய நான்

எனக்கு உடல் நிலை
சரியில்லையாயின்
துடித்துப் போகும்
உன் மனது

எனக்காக மற்றவர்களிடம்
நீ சண்டையிட்ட தருணங்கள்

நாம் இருவரும் போட்டுக் 
கொண்ட ஒரு நாள் சண்டை

அதன் விளைவாக
என் உடலோடு இன்றும் 
ஒட்டிகொண்டிருக்கும்
ஒற்றைத் தழும்பு 

இவ்வுலகில் 
நினைவிழந்து நீ வாழ்ந்த
இரண்டு நாட்கள்

உன் உயிர்(என் உயிர்) இந்த உலகைப்
பிரிந்த அந்த கொடிய நொடிப் பொழுது

விறகின் மேல் வீற்றிருந்த நீ
உனது நெற்றியில்
நான் கொடுத்த கடைசி முத்தம்

உன் உடல் நெருப்பிற்கு
இரையான வேளையில்
நான் உருண்டு புரண்ட 
அந்த மயானக் காடு

உனைப் பிரிந்த இரவுகளில்
எனது ஓலங்கள்

உனது நினைவுகள் மட்டுமே 
நிறைந்து கிடக்கும் நமது வீடு

எதையும் மறக்க
முடியவில்லை அண்ணா..

ஊமையின் கனவுகளாய்
அத்தனையும் என் நினைவுகளில்..

சிலமுறை காற்றோடு 
தேடித் பார்க்கிறேன்
கைகளுக்கு அகப்படுவாயென..

அந்த கோர விபத்து
நமது வாழ்கையின் 
திசைகளைத்
திருப்பிப் போட்டது

அது ஆயிரம் விடயங்களை
எனக்கு கற்றும் கொடுத்தது

இவ்வுலகில் விபத்திற்கு
ஏதும் விபத்து வராதா..?

நீ விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து
விமான நிலையம் நோக்கி ஓடிய எனக்கு
திருவிழாக் கூட்டமாய் இருந்த அந்த இடம்
ஏனோ மேகமில்லா வானமாய்
வெறிச்சோடித்தான் தெரிந்தது

வாழ்க்கையில் இத்தனை 
மணிப் பொழுதுகள்
எதற்காகவும் என் கண்ணீர்த்
துளிகள் கரைந்ததாய்
எனக்கு ஞாபகம் இல்லை..

இருந்தும்...

எப்படியும் உனைக் காப்பாற்ற 
முடியும் என்ற நம்பிக்கையில்
விமானம் ஏறி அமர்ந்துவிட்டு
அதை இன்னும் வேகமாகச் செல்லச் 
சொல்லி மனம் பரிதவித்தது...

தட்டுத் தடுமாறி 
உன்னை அடைந்தேன்..

ஆனால், 
நீ என்னைப் பார்க்கமுடியவில்லை
நான் உன்னோடு பேசமுடியவில்லை

நடப்பதறியாது
மற்றவரோடு பேசாது
வாழ்நாளில் நீ
மௌனம் காத்த நாட்கள்
அந்த இரண்டு நாட்களாகத்தான்
இருக்கும்...

இவ்வுலகில்
தாங்க முடியாத வலிகளில் ஒன்று
உயிராய் நேசிப்பவரின் உயிர்
நேசிப்பவர் கண்முன்னே பிரிவது

அந்த கொடிய வலியையும்
எனக்கு கொடுத்து விட்டாய்..!

உனை
இந்த மண் எடுத்துக்கொண்ட நாளில்
இனி வாழ்ந்து பயனேது என்றெண்ணி

தற்கொலை முயற்சிக்கும்
தயாரானேன் - இருந்தும்
தவிர்த்து விட்டேன்

என்ன செய்வது...

இன்று நீ இல்லை
நம்மைப் பெற்றோருக்கு
என்னை விட்டால்
வேறு நாதி இல்லை

27 ஆண்டுகள்
உன்னோடு வாழ்ந்த வீட்டில்
இன்று 27 நிமிடங்களும்
இமயமாய்ப் போனது

உனைப் பிரிந்த நாட்களில்
சிரிக்கப் பழகிக் கொண்டேன்

சொல்லப் போனால்
உண்மையை மறைக்கப் 
பழகிக் கொண்டேன்..

என்னைத் தவிக்க விட்டுப் போனாய்
பரவாயில்லை...
ஒரு பெண்ணையும் தவிக்க 
விட்டுப் போனாயே..!

நிரந்தரமாகப் பிரிவைக் கொடுத்து 
விட்டோம் என்று - நீ
நினைத்துக் கொள்ளாதே

என் நாடித் துடிப்பின்
கடைசி நொடிப் பொழுதும்
உன் நினைவுகளில் நானிருப்பேன்
என் நிழலிலும் நீ இருப்பாய்

உயிர் பிரிந்த பின்னும்
என் ஆன்மா உன் நினைவுகளை
அசை போட்டிக் கொண்டிருக்கும்..

மறு ஜென்மம் இருப்பது
உண்மையானால்

நீ இப்போதே பிறந்து விடாதே
முதலில் நான் இறந்து விடுகிறேன்

பின்பு
அதே வயிற்றில்
மீண்டும் பிறப்போம்

நீ அண்ணனாக
நான் தம்பியாக..!

உன் நினைவுகளோடு,
தம்பி

இன்று ஆகஸ்ட் 18 - எனது வாழ்வில் மிகப்பெரும் பேரிழப்பைச் சந்தித்த நாள். பிரிவின் வலி என்னவென்று எனக்கு உணத்திய நாள். என் அன்பு அண்ணனின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள்.

1 comment:

  1. வேதனைகளால் உச்சம் பெற்றிருக்கும் தங்களுக்கு என்ன ஆறுதல்
    வார்த்தைகளை அளிக்க முடியும் சகோதரா :( உள்ளத்தின் உணர்வுகளை
    உள்ளபடியே உரைத்த கண்ணீர்க் காவியம் எமது கண்களையும் மறைத்து
    நிற்கிறதே ! துன்பங்களைத் துயரங்களை விட்டு விடுங்கள் சகோதரா தங்களின் அண்ணன் தூரதேசம் சென்றுள்ளான் என்று அமைதி கொள்ளுங்கள் .இதேபோன்ற இழப்பின் வேதனையை அனுபவித்தவள் நானும் ஆதலால் தான் சொல்கின்றேன் தங்களின் பெற்றோர்களுக்கு தாங்களே ஆறுதல் அளிக்க வேண்டிய காலம் இது எனவே முடிந்தவரை மன அமைதி கொள்ளுங்கள் .

    ReplyDelete