இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள்
வணக்கம் நண்பர்களே...
இன்று இந்த அனுபவத்தை பெரும் மனச்சுமையோடு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். படித்துப்பார்க்கவும் வேண்டுகிறேன்.
ஹைதராபாத் பிரயாணி
தற்போது நான் ஹைதராபாத்தில் வசிப்பது வருகிறேன். ஹைதராபாத்தின் சிறப்பு அங்கு கிடைக்கும் பிரியாணி என்பதை யாவரும் அறிவோம். ஆனால் இப்போதைய நிலை அப்படியல்ல. வெளியூர் உணவங்களில் கிடைக்கும் ஹைதராபாத் பிரியாணியைவிட இங்கு கிடைக்கும் பிரியாணி தரம்/ருசி குறைந்தவைகளாகவே காணப்படுகின்றன. ஆனாலும் மற்ற பிரபலமான உணவகங்களை ஒப்பிடுகையில் கச்சிபோவ்லி(Gachibowli) என்னுமிடத்தில் இருக்கும் கிரீன் பாவர்ஜி(Green Bawarchi) என்னும் உணவகத்தில் பிரியாணி சற்று சிறப்பாகவே இருக்கும். நானும் எனது நண்பரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் அங்கு தவறாமல் செல்வது வழக்கம். அப்படிதான் இன்று(04/11/2012) மதியம் ஒரு மணியளவில் அங்குசென்றோம்.
அந்த உணவகம் இருக்குமிடம் மக்கள் நெருக்கம் அதிகம் நிறைந்த மும்பை நெடுஞ்சாலை. சாலையின் இரண்டு புறங்களிலும் பேருந்து நிற்கும் இடங்களும் உண்டு. நாங்கள் உணவகத்தை அடைவதற்கு 200 மீட்டருக்கு முன்பாக வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அந்த இடத்திலிருந்து 10 மீட்டர் தொலைவில் பேருந்து நிற்குமிடம் இருப்பதால் நெரிசல் இன்று அதிகம் என்று நான் என் நண்பனிடம் சொல்லிக்கொண்டே பைக்கை ஓட்டிக்கொண்டு போனேன். ஆனால் சாலையின் வலது புறம் சற்று கவனித்த என் நண்பர், ஏதோ விபத்து நிகழ்ந்ததாக சொல்லவே நானும் அதை கவனித்தேன். ஒரு இளம் பெண்ணின் கால் மட்டும் அந்த நெரிசலின் சந்தில் என் கண்களுக்கு தென்பட்டது. உடனே வண்டியை இடது புறம் நிறுத்திவிட்டு ஓடிப்போய் பார்த்தோம்.
உதவியிருக்க வாய்ப்பில்லை
அங்கு போனதும் ஒரு ஆணும் அந்த இடத்தில் கிடப்பது தெரியவந்தது. இருவரும் ஒரே பைக்கில்(ஸ்கூட்டி) பயணம் செய்த 30 வயதிற்கும் குறைவானவர்கள். இளம் தம்பதிகளாகவே இருக்கவேண்டுமென நினைக்கிறேன். இரத்தகாயங்கள், ரத்த சேதம் என்று பெரிதாக எதுவும் தென்படவில்லை. பின்தலையில் பலத்த அடியாகவே இருக்கவேண்டும். அவர்கள் கிடப்பதைப் பார்த்ததும் மனம் படபடத்தது. பைக்கின் மேல் ஒரு காலுடன் அந்த ஆணும் அவனருகே அந்த பெண்ணும் நடு சாலையில் கிடந்தனர். பைக்கில் பின்புறம் ARMY என்று எழுதப்பட்டிருந்தது. எனக்கு தெரிந்தவரை அவர்களைச் சுற்றி இருந்த யாரும் பெரிதாக அவர்களுக்கு முதலுதவி செய்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.
காரணம், முதலுதவி அளித்திருந்தால் குறைந்த பட்சம் அவர்களில் முகத்தில் நீரை இறைக்க/தண்ணீர் கொடுக்க அவர்களைத் தூக்கி இருக்கவேண்டும். அவர்களின் முகங்களை திருப்பி இருக்க வேண்டும். சாலையின் ஓரத்திற்கு அவர்களைத் தூக்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அங்கு பார்த்தபோது அவர்கள் விழுந்த இடத்தை விட்டு சற்றும் நகர்த்தப்படவில்லை. முகம் தரையை நோக்கி இருக்க, நடு சாலையிலேயே கிடந்தனர். மனதில் கோடாரியை வைத்து வெட்டிய அளவிற்கு காயமும் கோபமும் அந்த காட்சியைக் காண்கையில் ஏற்பட்டது. இந்த விபத்து, நாங்கள் அந்த இடத்தை அடைந்த 15 நிமிடங்களுக்கு முன்பே நடந்திருக்கிறது.
அவர்களுக்கு உதவ எண்ணி நெருங்கும் பட்சத்தில், உடல்களை துணியால் மூடினர் சிலர். அந்த இருவரும் இறந்து போனது அப்போதே எங்களுக்குத் தெரியவந்தது. மனம் மிகவும் சஞ்சலத்திற்கு உள்ளானது. முற்றிலும் அமைதியை இழந்தது. இதுவரை இப்படியாக ஒரு தலை சுற்றல் எனக்கு வந்ததில்லை. அதை நண்பனிடம் கூறவே, என்னைத் தாங்கிக் கொண்டு சாலையைக் கடக்க வைத்து தண்ணீர் வாங்கி முகம் கழுவவைத்து குடிக்க வைத்தார். மனதில் ரணம் சற்றும் குறையவில்லை. நண்பரும் மிகவும் வருத்தமுற்று என்னையும் தேற்றினார்.
திறந்த வண்டியில் உடல்கள்
சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால் ஏதோ காரணத்தால் அவர்களை ஏற்றாமல் அது திரும்பிப் போகவே, சில நிமிடங்களில் மற்றொரு வண்டியில் அவர்களை ஏற்றினார்கள். அது 407 போன்ற திறந்த டெம்போ வண்டி. மழை சற்று தூறிக்கொண்டிருக்கும் அந்த வேளையில், திறந்த நிலையில் இருக்கும் அந்த வண்டியில் அவர்களை ஏற்றிச் செல்வதைப் பார்க்கையில் இன்னும் மனம் கனத்துப் போனது. கொடுமையாகவும் இருந்தது.
அப்போது, ஒருதாயின் தோளில் இருந்த சிறுகுழந்தை எனைப் பார்த்து சிரித்தது. இது போன்ற சோகமான சூழ்நிலைகளில், இந்த குழந்தையைப் போல் நடப்பது அறியாமல் இருந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே, அது சிந்திய புண் சிரிப்பை என் சிந்தனையில் சேகரித்துக் கொண்டேன். சற்று ஆறுதலாக இருந்தது.
மக்களும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். சாலை பழைய நிலையை சிறிது நேரத்தில் எட்டியது. அந்த இருவர் மற்றும் அவர்கள் குடும்பத்தார்களின் கனவுகள் சில நிமிடங்களில் முற்றிலுமாக தகர்க்கப்பட்டது.
செய்தித்தாள்களில் இதுபோன்ற செய்திகள் படிக்கும்போது அது வெறும் செய்தியாகவே நம்மை அடைகிறது. அதையே நேரில் காணும்போது மிகப்பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்று புரிந்துகொண்டே நாங்களும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.
கலையிலும் உணவு உட்கொள்ளாததால், வயிறு சற்று வம்பு பிடிக்கவே, எப்போதும் போகும் ஹோட்டலுக்கு போக மனமில்லாமல் அருகிலிருந்த உணவகத்தில், தக்காளி சதத்தோடு எங்கள் மதிய உணவை முடித்துக் கொண்டோம். தலை சுற்றல் அதிகமாக இருக்கவே, என் நண்பர் வண்டியை ஓட்டினார். சற்று நேரத்தில் வீட்டை வந்து சேர்ந்தோம்.
கவனிக்க வேண்டிய சிலவிடயங்கள்
1. அக்கம் பக்கத்தில் என் நண்பர் விசாரித்ததில் இந்த விபத்திற்கு காரணம், பின்புறமாக வந்து ஒரு truck அவர்களை மோதியதே.மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுவிட்டான் அந்த ஓட்டுனர். ஏனோ தெரியவில்லை... மணல், தண்ணீர் லாரி ஒட்டுனர்களில் பெரும்பாலானோர் கண்மூடித்தனமாக வண்டி ஓட்டுகிறார்கள். அது பல இழப்புகளுக்கு தொடர்ந்து வழிகோலுகிறது. truck ஓட்டுனர்கள் தயவு செய்து சற்று பொறுமையைக் கடைபிடிக்கவும். இது போன்ற உயிரிழப்புகளுக்கு நீங்கள் காரணமாக வேண்டாம்.
2. வண்டியில் பயணம் செய்த இருவருக்கும் அடி தலையில் மட்டுமே. கை கால் முறிவோ, ரத்தமோ வீணாகவில்லை. வண்டி ஓட்டிவந்த நாபரோ அந்த பெண்ணோ ஹெல்மெட் அணியவில்லை. இந்த உயிரிழப்பிற்கு காரணம் அவர்கள் தலையில் பட்ட அடி தான் என்றால், ஹெல்மெட் அணிந்திருக்கும் பட்சத்தில், உயிர்ச்சேதம் இன்றி சிறு காயங்களுடன் அவர்கள் காப்பாற்றப் பட்டிருக்கலாம். வாகனத்தில் செல்வோர் தயவு செய்து இதை கவனத்தில் கொள்ளுங்கள். மறக்காமல் ஹெல்மெட் அணியவும்.
3. நான் முன்பே கூறியது போல் அவர்களுக்கு முதலுதவி செய்ததற்கான எந்த முகாந்திரம் எனக்குத் தென்படவில்லை. சொல்லப்போனால் அவர்களை யாரும் நெருங்கக்கூட இல்லை. குறைந்தது மூன்று அடி தள்ளியே நின்றனர். முதலுதவி செய்திருந்தால், ஏதேனும் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். தயவு செய்து யார் அடிப்பட்டாலும் போலீஸ் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமே என்ற சிந்தனையை மனதிலிருந்து தூக்கி எரிந்துவிட்டு உதவ முன்வரவும். உதவி செய்யாது விலகிச் செல்லும் வேளையில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமக்குத் தெரியாது "அதே உதவி நமக்கு எப்போது தேவைப்படும் என்று".
கனத்த மனதுடன் இந்த அனுபவத்தை முடித்துக் கொள்கிறேன். நன்றி..
பல விபத்துகளில் உயிரிழப்பு உடனடி கவனிப் பின்மையால் ஏற்படுகிறது என்று நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
ReplyDeleteவேடிக்கை பார்ப்பவர்கள் மனம் வைத்திருந்தால் ஒருவேளை யாரேனும் ஒருவரேனும் பிழைத்திருக்க வாய்ப்பு உண்டு.
ஆம் நண்பரே... அத்தனை நெரிசலிலும் யாரும் கண்டுகொள்ளாமல் அவர்கள் கிடந்தது மனதை மிகவும் பாதித்தது..
Deleteசொல்றதுக்கு ஒண்ணுமில்லை. கீழே விழுந்திருப்பது நமது கூடப்பிறந்தவர்கள்'ன்னு மட்டும் நினைத்தாலே போதும், அடுத்து செய்ய வேண்டியதை நாம் தானாகவே செய்துவிடுவோம்.
ReplyDeleteஆம் உண்மைதான் நண்பரே.. சரியாகச் சொன்னீர்கள் ராஜேஷ்..
Deleteஅதிர்ச்சி தரக்கூடிய ஒரு அனுபவத்தை பகிர்ந்திருக்கிறீர்கள், மனது படிக்கையில் கணத்துப்போகிறது மனித உயிர் மதிப்பற்று வீதியில் கிடந்த கோலத்தை சொல்லியிருக்கிறீர், இறுதி பத்தியில் சொன்னது போல் ஏதேனும் முதலுதவிகள் கொடுத்திருந்தால் மாறுதல்கள் நிகழ்ந்திருக்குமோ என்னவோ?...எப்படியோ கனவுகளோடு பயணமான இருவரின் பயணமும் இறுதிபயணத்தில் முடிந்தது அவர்கள் விதிகளை சரியாய் பின்பற்றதால் வந்த விதி என்பது நீங்கள் குறிப்பிட்ட வரிகளில் தெரிகிறது, ஏனோ எம் இன்றைய தலைமுறைக்கு ஒரு அசட்டு தைரியம், எமக்கு எதுவும் நடக்காது என்பது போல் அவர்கள் கெட்டு கூட இருக்கும் பலரின் கனவுகளையும் கூண்டோடு அழிக்கின்றன்ர்... தலைக்கவசம் உயிர்கவசம் என்று தெரியாமலா சொல்கிறார்கள் நமக்கே நம் உயிர் மீது மதிப்பில்லாத காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நினைக்கையில் எனக்கே தலைசுற்றுகிறது... வரி வரியாய் உங்களின் பதிவில் மனிதம் அறிந்தேன்... உங்களின் மனதிற்கு வாழ்த்துகளை சொல்லமட்டும் தான் வாய் வருகிறது... வாழ்த்துகள் சகோ
ReplyDeleteமிக்க நன்றிகள் சகோ ரேவா... மனதை வேறுதிசையில் செலுத்த முயற்சிக்கிறேன்..
Deleteஹெல்மட் அணிவது மிகவும் முக்கியம். விபத்து நடந்தபின் உதவாமல் வேடிக்கை பார்த்ததுதான் வருத்தம் தருகின்றது.
ReplyDeleteஉண்மை தாங்க மாதேவி..
ReplyDeleteஉண்மை
ReplyDeleteவலிகளைச் சுமந்த பதிவு.
ReplyDeleteஎன்னதான் மரணத்துக்கு காரணங்களை அடுக்கிக் கொண்டு போனாலும் விதி என்ற ஒன்றை விஞ்சிவிட முடியாது. :(
உண்மைதான் சிட்டுக்குருவி... எனக்கும் மாற்றுக் கருத்து ஏதுமில்லை..
Delete