Friday, 5 April 2013

வீட்டோடு மனைவியும் அவளுக்கான கேள்வியும்

அலாரத்திற்கு முன்னெழுந்து
அதிகாலை காப்பி போட்டு
காலை மதியம் உணவு சமைத்து
அவசரச் சமயலறையில் சூடு வாங்கி
குழந்தையைக் குளிப்பாட்டி


குளியலறைக்குள் கத்தும் கணவருக்கு
துண்டை எடுத்துக் கொடுத்து
உணவு பரிமாறி
உப்புக் கூட சரியாயில்லை
என்ற விமர்சனம் கேட்டு

சட்டை எடுத்துக் கொடுத்து
கணவரை அலுவலகம் அனுப்பி
குழந்தையை பள்ளிக்கு அனுப்பி
வீட்டைப் பெருக்கி,
சமையலறையை சுத்தம் செய்து

குழந்தையின் துணி,
கணவரின் கைகுட்டை முதல்
கப்படிக்கும் சாக்சூ வரை துவைத்து
அதிகாலை உணவை மறந்து
அவரசமாய் குளித்து

அரைகுறை மதிய உணவு உண்டு
துணியை அயன் பண்ணி
பள்ளி முடிந்து வந்த குழந்தைக்கு
உணவூட்டி
வீட்டுப் பாடம் எழுதவைத்து

முடியாத உடலோடும்
அவைகளோடு சற்று விளையாடி
அலுவலகத்தில் இருந்து வரும் கணவருக்கு
அடுத்த காப்பி போட்டுக் கொடுத்து

இரவு உணவு சமைத்து
குழந்தைக்கு ஊட்டி தூங்க வைத்து
காலையில உப்பில்ல இப்ப காரமில்ல
என்ற அடுத்த விமர்சனத்தை
அன்புக் கணவரிடம் கேட்டு

அசதியான எனக்கு
அருகிலுள்ள கடையில்
ஒரு அமர்தாஞ்சன் வாங்கித் சொல்லி
அடுத்தடுத்து கேட்டால்

"வீட்ல சும்மாதான இருந்த
இதக்கூட வாங்கி வைக்க மாட்டியா ?"
என்கிறார் கணவர்....

மட்டைபந்து விளையாட்டை
பார்த்துக் கொண்டே !

12 comments:

  1. பெண்களுக்கு எவ்வளவு சவால்கள் இருக்கிறது என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள். ஒரு வாரமாவது ஆண்கள் வீட்டு வேலைகள் செய்து விட்டு வேலைக்கு போனால் தெரியும்..பெண்கள் எவ்வளவு கிரேட்..ன்னு. பெண்கள் சார்பாக உங்களுக்கு சல்யூட்!

    ReplyDelete
  2. இன்னும் பழைய காலத்திலேயே இருக்கீறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா... சரி இந்த புதியகாலத்தில் இதையெல்லாம் ஆண்கள் செய்கிறார்கள் என்கிறீர்களா ? நகரத்தின் ஒரு புறம் புதிதாகத் தெரிந்தால், ஒட்டு மொத்த நாடே மாறிவிட்டதென்று பொருள் இல்லை பாஸ் :)...

      Delete
  3. அருமை.யதார்த்த வாழ்வை
    உணரும்படி சொல்லிப்போனவிதம் அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ரமணி ஐயா....

      Delete
  4. சில விடயங்களைப் பிறர் அறிந்து கொள்வதே இல்லை . ப க்கத்தில் நடப்பது புரியாது எங்கோ நடக்கும் விடயங்களுக்கு நியாயம் சொல்வார்கள் . இது ஒரு புறம் இருக்க இவ்வளவு வேலைகளும் செய்து வேலைக்கும் போகும் பெண்களின் நிலை சொல்லவே தேவை இல்லை

    ReplyDelete
    Replies
    1. வருகை மற்றும் கருத்திற்கு நன்றிகள் சந்திரகௌரி...

      Delete
  5. அத்தனையும் உண்மை !!!

    வீட்டுலே அவ சும்மாத்தான் இருக்காள்!!! லேடி ஆஃப் த லீஷர்!!!

    ஷீ இஸ் ஹேவிங் ஆல் த டைம் இன் த வொர்ல்ட்!!!!

    ரொம்பவும் கேட்டாச்சுப்பா:(

    ReplyDelete
    Replies
    1. வருகை மற்றும் கருத்திற்கு நன்றிகள் துளசி கோபால்...

      Delete