Thursday, 9 May 2013

இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)



"இன்னைக்கு பொண்ணுப் பாக்குறப்ப இவன பொண்ணுட்ட பேசவே விடக்கூடாது, எதையோ பேசுறான் அப்பறம் எனக்கு பிடிக்கலங்குறான்" என்று சரவணின் தாய் அவனது அண்ணியிடம் சொல்லியது பக்கத்து அறையில் இருந்த அவனுக்குக் கேட்டுவிட்டது.

இதுவரை மூன்று பெண்கள் பார்த்தாகிவிட்டது, எதுவும் அமையவில்லை. சரவணன் 6.2 அடி உயரம். முதல் பெண்ணை போட்டோவில் பார்த்து சரி என்று சொல்லிவிட்டு நேரில் போய்ப் பார்த்தான். ஐந்து அடிக்கே ஒரு அங்குலம் தேவைப்படும் அளவிற்கு உயரம். அப்பா அம்மாவிற்கு குடும்பம், பெண் பிடித்திருந்தாலும், வேண்டாம் என்று அடம்பிடித்தான்.

இரண்டாவது பார்த்த பெண்ணிற்கு ஏதோ ஒரு காரணத்தினால் சரவணனைப் பிடிக்கவில்லை. மூன்றாவது பெண்ணிடம் சிறிது நேரம் பேசியவுடனே, அவளுக்கு இருந்த ஆடம்பர வாழ்க்கை எண்ணம் தனது நடுத்தர குடும்பத்திற்கு ஒத்துவராது என்று சரவணன் முடிவு செய்துவிட்டான்.

இன்று பார்க்கப் போவது நாலாவது பெண்.

சரவணின் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணனின் குழந்தை மற்றும் தாத்தாவோடு வாடகைக்கு வரவழைக்கப் பட்ட இன்னோவா காரில் கிளம்பினான் சரவணன். அரைமணி நேரத்திற்கு பிறகு கார் அம்மன் கோவிலைக் கடந்து அடுத்த சந்தில் இடதுபுறமுள்ள பெண் வீட்டின் முன் நின்றது.

பெண்ணின் தந்தையும் தாயும் வாசலில் நின்று மகிழ்ச்சியாக வரவேற்றார்கள்.

காரிலிருந்து கடைசியாக இறங்கிய சரவணன், அண்ணி சுமதியின் கையைத் தட்டினான். சுமதி திரும்பினாள்.

"அண்ணி என்ன மட்டும் பொண்ணுட்ட பேசவிடல, கண்டிப்பா நான் கல்யாணாத்துக்கு ஒத்துக்க மாட்டேன். பொண்ணுப் பாக்கவும் வரமாட்டேன்" என்றான் சரவணன்.. அமைதியான குரலில் கம்பீரமாக..

"நான் இருக்கேன்ல சரவணா... வா பாத்துக்கலாம்" என்றாள் சுமதி. புருவங்களைச் சுருக்கி..

"அண்ணி உங்கள நம்பித்தான் உள்ள வாரேன், நீங்க தான் எப்டியாச்சும் பொண்ணோட பேச ஏற்பாடு பண்ணனும்" என்றான் சரவணன். இந்தமுறை அப்பாவியாக...

வீட்டிற்குள் நுழைந்தவுடன், இரண்டு சிறிய தனி சோபாவில் எதிரெதிராக சரவணனையும் தாத்தாவையும் அமர வைத்துவிட்டு, பெரிய சோபாவில் அவனது அண்ணன், அம்மா, அப்பா அமர்ந்தனர். எதிர் மூலையில் அண்ணனுடன் அமரப்போகும் அண்ணியை, தான் இருக்கும் சோபாவின் முனையில் அம்மாவோடு அமரும்படி கண்களால் சைகை கட்டினான் சரவணன். அதைப் புரிந்துகொண்ட சுமதி தலையை அசைத்தபடி வந்து அமர்ந்துகொண்டாள்.

சிறிது நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு பெண்ணை வரச்சொன்னார்கள். அறைக்குள் இருந்த கலைவாணி காபி தட்டை ஏந்திக்கொண்டு சற்று தலையைக் குனிந்துகொண்டே வந்தாள். சிவந்த நிறம், அளவான கூந்தல், அல்லிவாறிப் பூசப்படாதா மேக்கப், சாயம் தீட்டப்படாத இயல்பான இதழ்கள். போதுமான வளையல், கலை நயமிக்க சேலை என்று அவளது தோற்றம் உருவகப் படுத்தப்படாமால் உள்ளது உள்ளபடி இருந்தது.

பிஞ்சுக் குரலில் "ஐ சித்தி நல்லாருக்கு" என்றாள் சுமதியின் ஐந்து வயது மகள். கூடி இருந்தோர் அனைவரும் சிரித்தனர். "ஏய் சும்மா இரு" என்று அதட்டினாள் சுமதி.

மற்றவர்களுக்கு காபி கொடுத்துவிட்டு கடைசியாக சரவணனிடம் காபியைக் நீட்டினாள் கலைவாணி. சரவணன் அவளது விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தான். ஏதோ ஒன்று அவளிடம் சிறப்பாக இருப்பதாக அவன் உணர்ந்தான். அது ஒட்டுமொத்தமாக சரவணனை அவளது பக்கம் இழுத்தது. அவளால் சரவணனின் பார்வைக்கு ஈடுகொடுக்க முடியாமல் உடனே தனது அறைக்குத் திரும்பினாள்.

ஒரு புறம் பலகாரமும் மற்றொரு புறம் குடும்ப வரலாறும் பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தது. அரை மணி நேரம் ஆயிருக்கும். சரவணன் மூன்றாவது முறையாக அண்ணியின் காதோரம் சொன்னான்.

"அண்ணி பொண்ணுட்ட பையன் பேசணும்னு சொல்லுங்க அண்ணி..."

ஆனால் பெரியவர்களுக்கு முன் இவ்வாறு சொல்ல அவளாலும் இயலவில்லை. சரவணன் வெறுப்படைந்தான். ஜன்னலின் வழியாக அவனை ஒரு முறைப் பார்த்தாள் கலைவாணி.

"சரி நல்லது.. போயிட்டு வாரமுங்க" என்று பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் எழுந்து விடை பெற்றனர். சரவணன் கோபமாக எழுந்தான்.

"கொஞ்சம் நில்லுங்க.. நான் பொண்ணுட்ட பேசணும்" என்றான் சரவணன். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் இப்படிச் சொல்லுவோம் என்று சரவணனும் எதிர்பார்க்கவில்லை. பெரியவர்களுக்கு இந்தச் சூழலில் என்ன பேசுவதென்று தெரியவில்லை. தவறாக நினைக்க மாட்டார்களா என்று சரவணனும் சற்றும் யோசிக்கவில்லை.

சில நொடி மௌனத்தை உடைத்த பெண்ணின் மாமா, தாராளமா பேசுங்க தம்பி என்றார் சிரித்துக்கொண்டே.

எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் நண்பர்களிடம் கலகலப்பாக பேசும் சரவணின் கோபம் சற்று தணிந்தது. சிறிய புன்னகையோடு விறுவிறுப்பாக கலைவாணி இருந்த அறைக்குள் சென்று கதவை சாத்தினான். அவள் சற்று பயத்தை உணர்ந்தாள்.

உள்ளே நுழைந்து ஒரு நிமிடம் அமைதி காத்தான் சரவணன்.

"எனக்கு என்ன தோணுதோ அதப் பேசுவேன்.. தப்பா நெனச்சுக்காதிங்க" என்று சொல்லிய சரவணன்

"உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா ?" என்றான்.

"ஹ்ம்ம்" என்றாள்..

"உண்மைய சொல்லுங்க. எதோ நான் கேக்குறேங்கரதுக்காக சொல்லவேண்டாம்" என்று சொல்லி சிறிய புன்னகையை தவழவிட்டான்.

"பிடிச்சிருக்கு" என்றாள்..

உண்மையில், இரண்டு நிமிடம் அவன் எதார்த்தமாகப் பேசியது அவளுக்குப் பிடித்திருந்தது.

பர்ஸில் இருந்து ஒரு பிஸினெஸ் கார்டை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
"இந்தாங்க இத வச்சுக்கோங்க"

அதில் "சரவணன், சீனியர் எஞ்சினியர்" என்று கம்பனி பெயர், மொபைல் எண்ணுடன் அச்சிடப் பட்டிருந்தது. 

கார்டைக் கொடுத்தவுடன், அறையை விட்டு வெளியே நகர்ந்தான். மாப்பிள்ளை வீட்டார் வீட்டை விட்டு நகர்ந்தனர்.

இரண்டு நாட்கள் கழித்து சற்று அச்சத்துடன் அப்பாவிடம் பெண் வீட்டார் என்ன சொன்னார்கள் என்று கேட்டான்.

"ஜாதகம் சரி இல்லைன்னு சொல்றாங்கடா, அவங்க பேசறதப்பாத்த அவங்களுக்கு பொண்ண கொடுக்க விருப்பமில்ல போல தெரியுது" மேலோட்டமாகப் பேசினார்.

"அதுக்கு..." என்றான் சரவணன்.

"ஊர்ல என்ன பொண்ணா இல்ல.. இன்னைக்கு ரெண்டு பொண்ணு தரகர் பாத்து சொன்னார். நல்ல குடும்பம், நீ பெங்களூர் போயிட்டு பத்துநாள் கழிச்சு வா, ஒரு பொண்ணு சென்னையில இருந்து வருதாம், பாத்துட்டு போவ" என்றார்...

சரவணனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தப் பெண் தான் வேண்டும் என்று அம்மா, அண்ணியிடம் சொல்லிவிட்டு பெங்களூர் சென்று விட்டான்.

"அவங்களுக்கு பிடிக்கலேனா நாம எப்படிப்பா வற்புறுத்த முடியும்" என்று அவனது அம்மா தொலைபேசியில் சொல்லி அவன் மனதை மாற்ற முயற்சித்தாள். இரண்டு மாதங்களாக மற்ற பெண்ணைப் பார்க்க அவனது அப்பா அழைத்தும், வேலைப் பளு, வரமுடியாது என்று தட்டிக் கழித்தான். 

தன்னோடு விடுதியில் தங்கி இருந்த கார்த்திக் மற்றும் ஆண்டனியிடம் நடந்ததைச் சொல்ல, அறையே அதிரும் அளவிற்கு இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சரவணன் புண் முறுவலோடு "டே போதும் நிறுத்துங்கடா" என்றான்.

அவனது கலையான கருப்பு முகமும் வெண் பற்களும், அந்த ஜன்னலில் இருந்த கண்ணாடி வழியாக பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

"மச்சி... மச்சி... தாங்கலடா.. உன் தைரியத்த பரட்டுறதா இல்ல உன் காதலைப் பாரட்டுறதா.. என்ன ஒரு காதல்... என்ன ஒரு காதல்... இதுநாளதான் ரெண்டு மாசமா மந்திருச்சு விட்ட மாதிரி இருக்கியா ?" என்று கார்த்திக் சொல்ல, மீண்டும் ஆண்டனியும் கார்த்திக்கும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.

"டே கடுபேத்தாதிங்கடா, சொல்லவே கூடாதுன்னு நெனச்சேன்.. ஆனா உளறி கொட்டிட்டேன்" என்று சொல்லிகொண்டே சிரித்த சரவணின் செல்போன் மணி அடித்தது.

"மச்சி.. உன் காதலி கலைவாணியாத்தான் இருக்கும் மச்சி... ஹ்ம்ம் போயிப் பேசு டா... பேசு.." என்று கேலி பேசினான் கார்த்திக்.. சிரிப்பொலி இன்னும் அறையை அதிரவைத்துக் கொண்டிருந்தது... 

அறையிலிருந்து வெளியே வந்து மொபைலில் பச்சை பட்டனை அழுத்தி "ஹலோ" என்றான் சரவணன்.

எதிர் முனையில் அமைதியே பதிலானது.

மீண்டும் "ஹலோ... யார் பேசுறது" என்றான். 

சில நொடிகளுக்குப் பிறகு,

"ஹலோ நான் கலைவாணி பேசுறேன்" என்று மெல்லிய அந்த பெண் குரல் கேட்டது.

"இப்படியும் காதல் வரும்..." தொடரும்...

கதையின் அடுத்த பாகம் இங்கே: பாகம் - 2

அன்புடன்,
அகல்

17 comments:

  1. kathai viriviruppa pora nerathula thodarum pottuttingale..



    super

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா நன்றி நண்பரே... அடுத்த பாகத்த படிக்க நண்பர்கள் வரணும்னா இப்படி எதாச்சும் பண்ணித்தான் ஆகணும்...

      Delete
  2. yana boss..... serial mathiri nenkalum nala sceen la thodarum potitenkalae......but oru chinna doubt iruku.... ithu oruuuuuuu velzaaaaaa unka kathaiya irukumooooo nuuuuu than....sekiram climax a potirunka boss....plzzzz

    ReplyDelete
  3. Hai Sir Very Nice Plz sekiram remaing kathaiya anupuga

    ReplyDelete
    Replies
    1. thank viji.... posted the second part... you can read...

      Delete
  4. pathilaye nipatetengale sekaram adutha part ah podunga....

    ReplyDelete
    Replies
    1. போட்டாச்சு பாஸ்.... படிங்க...

      Delete
  5. enaku kuda doubt ah tha sir iruku oruvela idhu unga story ah irukumo nu..but story interest ah pogum podhu ipdi thodarumunu sollitengaley :-(
    remaining ah sekaram update panunga sir :-)

    ReplyDelete
    Replies
    1. ha ha.... updated the next part madam. poyi padinga...

      Delete
  6. Kadhala serthuvechirnga ♥ ♥ ♥

    ReplyDelete
  7. அருமை!

    ReplyDelete
  8. Excellent... Keep going..

    ReplyDelete