Sunday, 10 March 2013

என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !

ஆடுமேய்க்கப் போனவளே
அழுதுக்கிட்டே வந்தவளே
எதுக்காக அழுவுறியோ
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

பல்லாங்குழி விளையாண்டு
பசங்களோட சண்டபோட்டு
ஆத்துப்பக்கம் அடிச்சுக்கிட்டு
அதுக்காக அழுவுறியோ ?

மலையில மூனுஆடு மேஞ்சுபுட்டா
லஞ்சமா மூத்தஆட்ட கேப்பான் வாச்சர்
எதயாச்சும் புடிச்சிட்டானா
எதுக்காக அழுவுறியோ
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

அரவயிறு கஞ்சியோட
ஆடுமேய்க்கப் போனதால
பசிதாங்க முடியாம
பாதகத்தி அழுவுறியோ ?

குடிகாரப் பயமவளே
கொப்பன் ஏதுஞ்சொன்னானா
என் உயிர எடுக்காம
உண்மையத்தான் சொல்லேண்டி

அடி ஒட்டுப்போட்ட உன்சட்ட
ஒருபக்கம் கிழிஞ்சிருக்கு
ஒதட்டுமேல காயப்பட்டு
ரத்தம் கொஞ்சம் வடிஞ்சிருக்கு
என்ன நடந்ததுன்னு

கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

கெழட்டுப் பய ஒருத்தன்
கெடுத்தான்னு சொல்லுறியே
அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

பத்துவயசு பாதியில
பாவிமக சமஞ்சுபுட்ட
நீ குத்தவச்ச குடிசகளச்சே
கொஞ்சநாளே ஆச்சுதடி

இது பணக்காரபுள்ளநாலும்
பாலுஞ்ஜனம் மதிக்காதே
நமக்கு இருந்ததே மானம் மட்டும்
அதையும் எழந்துட்டியே

அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

உன் அக்காவ கரசேக்க
உக்காந்து போனாலும்
உன்ன கரசேக்க ஓடா தேயிரனே

போலீஸு படியேறி
போராடி நீதி கேக்க
கத்தயா காசுமில்ல
கால்பவுனு நகயுமில்ல

அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

ஈனப்பயமவளே
எனக்காக ஒன்னு செய்யி
இது ஊருக்குத் தெரியாம
ஒனக்குள்ளே பொதச்சுப்புடு

உன் பாவாட நனயுதானு
பாத்திருப்போம் முப்பதுநாள்
அப்படிஏதும் நடக்கலேனா
என்ன செய்ய தெரியலடி

அரளிவெத அரச்சு வப்பம்
நம்ம ஆவிக்கொரு நாள் குறிப்போம்
இதத்தவிர நானும்இப்ப
வேறவழி அறியலடி !


குறிப்பு: மானம், இயலாமை இதுபோன்றே காரணங்களால் மறைக்கப்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் ஏராளம். அவர்ளுக்காக எனது சமர்ப்பணம் !


அன்புடன்,

அகல்

4 comments:

  1. சே... இந்தக் கொடுமை மாற வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஆண்கள் முழுமையாக தங்களை சீர்படுத்திக் கொள்ளும் வரை இந்த அவல நிலை தொடரத்தான் செய்யும்... வருகைக்கு நன்றிகள் தனபாலன்..

      Delete
  2. வலி நிறைந்த கவிதை வ(லி )ரிகள்
    வாசிக்கும் போதே கண்கள் குளமானது .
    பெண்ணினத்துக்கு நேரும் அவலங்களில்
    மிகவும் கொடுமையானதும் இதுவே !..
    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே ..

      Delete